‘கவிதைகள்’ வகையினத்தில் இந்த வலைப்பக்கத்தில் இதுவரை தனித் தனியாக பல கவிதைகள் எழுதி வந்தேன். இந்தப் பதிவில் நான் ஏற்கனவே சில ஆண்டுகளாய் கவிதையாக்கிட முயற்சிக்காமல், எண்ணக் கசிவுகளாய் மட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களை எழுதிய தேதிகளோடுக் கூட்டாமல் குறைக்காமல், அவ்வப்போது எழுதிய படியே உங்களுடன் பகிர்கிறேன்.
என் தர்க்கத்தைப்
பேச வைத்து
வீண் செய்யும் மாந்தரிடம்
எனக்கு
மௌன வாள்வீச்சே
போர் உத்தி!
(1/09/2020)
விரும்பாத இருட்டு வந்து
அப்பிக் கொள்வதால்
கண்களில் உறக்கம்
ஒட்டிக்கொள்ளாது.
(15-08-2020)
சத்தமே இல்லாமல்
தனியாக அமர்ந்திருந்தும்
உணராதத் தனிமையெல்லாம்
தலையைச் சுற்றிப் பறந்த
கொசுவின் ‘கொய்ங்ங்’ சத்தம்
தந்த துணையில்
பரவத் தொடங்கியது.
(23-09-2019)
விடைத் தேடிட வேண்டியதில்லை
வழி தேடி நாட்கள் தேயட்டும்.
(16-12-2018)
வலிகள் இருப்பதாஉம் உண்மை
வழிகள் இருப்பதூஉம் உண்மை
(15-12-2018)
அழுகை நதிக்கரையில்
அமர்ந்து,
சாவகாசமாய் கல்வீசி
நீர்வளையத்தின் அழகை இரசிக்கும்
உயிர்களும் இங்குண்டு.
(09-12-2018)
தாளத்தின் தனிமையில்
திளைக்க முனையும்
நேரத்தில் எல்லாம்
பாதாளத்தின் பயம் வந்து
என்னை விரட்டும் வலியும்
புரிந்திடுமா?
(29-11-2018)
இருளிலேயே பல நாளாய்
வாழ்ந்துவிட்டதில்,
கண்கள் ஒளியை மறந்துவிட்டன.
இருளே உலகென்று பழகிவிட்டது.
திடீரென படுகிற கதிரொளியில்
கண்களில் பெரும் கூச்சம் –
சட்டெனத் திறக்க முடியவில்லை.
அதற்காக,
ஒளிப் பிடிக்கவில்லை
என்று நினைத்தலாகாது.
விடியலை விரட்டுவேனோ?
மாட்டேன்.
(14-10-2018)
பகலில்
என் நினைவிலிருந்து
இரக்கமின்றி விரட்டுகிறேன்
அவளை
இரவில்
விருப்பம் போல்
கனவுகளில் வந்து
காதல் நளி ஆடுகிறாள்
காதல் கனாக்களில்
உறை குளியலிட்டு
கண்விழிக்கும் நேரம்,
பொய்யென்றாகிறது –
அவளும் கனவும்.
(28-08-2018)
‘திரும்ப வருவாயென
தெரிந்தே
சுவரில் அடித்தேன் உன்னை’
என்று நியாயம் கூறுபவர்களுக்கு
சுவரில் அடித்த
பந்தின் வலி
புரிவதில்லை.
(25-08-2018)
ஓடி ஒளிந்தாலும்
தேடி அலைந்தாலும்
குடை ஒன்றின் கீழ்தான் –
மறவாதே!
(25-07-2018)
நிச்சயம் உங்களுக்கு இந்தத் துளிகள் பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன். கவிதைகள் மற்றும் என் எழுத்துக்களின் மீதான தங்களின் மேலான கருத்துக்களை உயிர் காகிதம் பக்கம் பேரன்போடு வரவேற்கிறது. நன்றிகள்!
இதுபோன்று, மேலும் பல படைப்புகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற, இந்த வலைப்பக்கத்தில் உங்கள் மெயில் ஐடியைத் தவறாமல் பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
மிகவும் அருமையான பதிவு?
நன்றிகள் ?❤️
மிக்க நன்றி அண்ணா
அனைத்தும் அருமை தம்பி