புங்கைமரத்தின் மெல்லிய கரும்பழுப்பு கிளையில் அமர்ந்திருந்த காகத்தின் கூர் பார்வைக்குத்தான் பிரவீன் முதலில் தெரிந்தான். கருப்பாய் பிறந்ததை எண்ணி, வெளிர்மஞ்சள் வெய்யிலில் காகம் நொந்துகொண்டிருந்த நேரம் அது.

பறக்கும் வாய்ப்பு இருந்ததால், குழந்தைகள்போல் மஞ்சள் பேருந்துக்குக்காக  காத்திராமல் பறந்த காகம், திருக்கோவிலூர் பள்ளியின் ஜன்னலில் உட்கார்ந்து ஒருநாள் பாடம் கேட்டபோது, வாத்தியார் நடத்திய பாடத்தில் ‘கருப்பு நிறம் வெப்பத்தை அதிகம் ஏற்கும்’ என்று சொல்லித் தந்தது அதன் நினைவுக்கு வந்தது. வாத்தியாருக்கு நேர்முரணாக பெட்டிக் கடை வின்சி அக்கா, தன் மகன் குட்டி ஆலனிடம் சொன்னதும் கூடவே நினைவுக்கு வந்தது: ‘இப்படியே வெயில்ல ஊர்சுத்தி, ஊர்சுத்திக் கறுத்துப்போயிட்ட. வெயில்ல சுத்தாதனா கேக்குறியா?’ காகத்தின் குழப்பம் தலை முழுக்க நிறைந்து வெளியே சொட்டியது… ‘தான் கருப்பாக இருப்பதால், மொத்த வெய்யிலும் தன்னைச் சுடுகிறதா, இல்லை வெய்யிலில் சுற்றுவதால் கறுத்துவிட்டோமா?’, காகத்துக்கு புரியவில்லை!

போஸ்ட் ஆஃபீஸ் எதிர்வீட்டுப் பிரேமா அக்காவுக்கும் இதே கேள்விதான். ‘தான் வறுமையாய் இருப்பதால் ஏமாற்றப்படுகிறோமா? இல்லை, ஏமாறுவதால் வறுமையாகவே இருக்கிறோமா?’ இந்தக் கேள்விக்கு பதிலில்லாமல்தான் பிரேமா அக்கா தவிக்கிறாள். 

குழப்பத்தின் சொட்டுகள் காக்கையின் தலையிலிருந்து தரையில் சொட்டிக் காய்ந்திருந்த நேரத்தில்தான் வீதியின் இறுதியில், வளைவில் தோன்றியது, ஒரு கருப்பு நிற பேஷன் ப்ரோ பைக்! காக்கைக்கு ஒப்பான கருப்பு நிறம். நாற்பத்தி இரண்டு கிலோமீட்டர்கள் வெய்யிலில் கடந்துவந்திருந்த பைக். காகம் இரண்டுமுறை கண்கள் இமைத்து பார்த்தது. இமைகள் கருப்பு. கண்களும் கருப்பு. கொக்குபோல் அழகாக வெள்ளையாய் இல்லாவிட்டாலும், அங்கங்காவது கொஞ்சம் வெள்ளை நிறம் இருந்திருக்கலாம். தன் இனமே ஒரு கறுப்பினம். வெஞ்சூரிய வெயிலின் வெறுப்பினம். 

காக்கைக்கு, மற்றும் சில கேள்விகள் இருந்தன. தன் கருப்புநிறம் தன்னுடைய நிழலிலும் ஒட்டியிருப்பதைக் காக்கையால் ஏற்றுகொள்ள முடிந்தது. ஆனால், ஏன் பலநிற கட்டிடங்களும், கட்டைவண்டியும், பச்சை புங்கைமரமும்கூட கருப்பு நிழலையே கொண்டிருக்கிறது? ஒருவேளை, உடம்புக்குள் ஊடுருவிவிட்ட சூரிய வெளிச்சம் உள்ளிருக்கும் கருப்புநிறத்தை வெளியே தள்ளிவிடுமோ? உள்ளே எல்லோரும் கருப்போ? — வெயிலை அதிகம் ஈர்க்கும் நிறம் கருப்பு. ஆனால், கருப்பு நிழலில் வெப்பம் இல்லை. ஏன் இல்லை?  அதிகம் யோசித்து தலைவலித்த நேரத்தில் எல்லாம் காக்கை நிற பைக், புங்கைமர நிழலில் வந்து நிறுத்தப்பட்டிருந்தது. அதை ஓட்டிவந்த பிரவீனை ஊரிலேயே முதலில் பார்த்தது காகம்தான். புங்கைமரக் கிளையில் அமர்ந்தபடி, பிரவீனை மிக அருகிலேயே பார்த்தது. 

அஞ்சலக பொக்கை படிக்கட்டுகளின் உடைந்த செங்கல், வெற்றிலைப் பாக்கு போட்ட பொக்கைவாய் பாட்டியாய்ப் பிரவீனைப் பார்த்து சிரித்தது. பதிலுக்கு, பாட்டிக்கு சிறு புன்னகை பூத்தான். அவனுடைய இயல்பில்… அவன் அம்மாவின் சாயலில் வந்த புன்னகை அது. மௌனிக்குப் பிறந்த குரலாய்… அவன். அவனுடைய புன்னகை பாட்டிக்குப் பிடித்துவிட்டது. 

காக்கை ஒருமுறை தலையைச் சிலிர்த்துகொண்டு, மரத்தின் கிளையிலிருந்து எங்கேயோ பறந்துவிட்டது. சுதந்திரமாய் வானத்துக்கு… கிளையிலிருந்து பறந்த காகத்தின் நிழல், புங்கைமரத்திலிருந்து பிரிந்து தனக்கான தனி அடையாளத்தைத் தேடியது. 

பொக்கைப் பல்லை மிதிக்காமல், பிரவீன் பத்திரமாய் ஏறியதும் வலதுபக்கம் அலுவலகம். இனி அடிக்கடிப் பார்த்தாக வேண்டிய காட்சி. ஒரு புகைப்பட காட்சிபோல். புகைப்பட பட்டிபோல் அலுவலகம். அதில் சில புகைப்பட உருவங்கள், அந்தந்த காலங்களில் அலுவலர்களாய்… அலுவலகத்தின் காதில் ஒருபக்க சிவப்பு கம்மலாய், அஞ்சல் பெட்டி. குடிகாரக் கணவனிடம் அறைவாங்கிய ஏழைப்பெண்ணின் ஒடுங்கிய கம்மல்போல். 

அலுவலகத்துக்குள் பழங்காலத்து பெரிய, உறுதியான மரமேசை… அதில் குனிந்த தலையோடு, கையில் பேனாவோடு சிறப்பு நாற்காலியில் அமர்ந்து, குட்டி வெள்ளைத் தாள்களில் ஒரு பெண்மணி எழுதிக்கொண்டிருந்தார். மேசை விளக்காய் சூரிய ஒளிக்கற்றைகள் ஜன்னல்வழியே அவர் கையிலும், காகிதத்திலும், மேசையிலும்பட்டு வெளிச்சம் காட்டின. அந்தப் பெண்மணிக்கு நேரெதிராய், வாசலில் நிற்கும் பிரவீனுக்கு முன், இளம்பச்சை ஜாக்கெட்டில்  வெள்ளை புடவையில் மஞ்சள் பூக்கள் போட்ட முந்தானையோடு, சாக்கலேட் பின்முதுகு தெரியும்படி, ஸ்டூலில் அதிக வெள்ளை – கொஞ்சம் கருப்பு முடி கலந்த ஆயா உட்கார்ந்திருந்தார். சாக்கலேட் ஆயா! 

ஒளியை மறைக்கும் வாசலின் இருட்டுருவத்தைச் சிறப்பு நாற்காலியின் பெண்மணி கண்டுகொண்டார். அவர்தான் அப்போதைய மடம் அஞ்சல் கிளை அலுவலர். ‘வாங்க… சொல்லுங்க’, புதிதாய் நியமனம் ஆகவிருக்கும் அஞ்சல் அலுவலர் இவர்தானோ என்கிற ஐயத்தோடு பெண்மணி பேசினார். 

ஸ்டூலில் அமர்ந்திருந்த ஆயாவின் சாக்கலேட் முகமும் திரும்பியது. கொஞ்சம் வயதான ரேகைகள் பதிந்திருந்த சாக்கலேட் முகம் அது. 

‘இந்த ஊருக்குத்தான் பி.பி.எம்மா போஸ்டிங் போட்ருக்காங்க. நாளு நாள் ட்ரெய்னிங்க்கு அனுப்பியிருக்காங்க’ 

‘குருமூர்த்தி சார் சொன்னாரு. வாங்க… உக்காருங்க’, முகமலர்ச்சியுடன் பணிவான குரல். குருமூர்த்தி சார் மணம்பூண்டியின் துணை அஞ்சல் அலுவலர். 

இரண்டே இருக்கைகள்மட்டும் இருந்ததால், பிரவீன் அவரைத் தடுத்தும்கூட, சாக்கலேட் ஆயா எழுந்துபோய் அறையின் ஓரத்தில் சுவரை ஒட்டியிருந்த பெரிய மரப்பெட்டியில் அமர்ந்துகொண்டார். ஆயாவின் அதே சாக்கலேட் நிறத்தில், ஸ்டூலின் அதே உயரத்தில் மரப்பெட்டி இருந்தது. 

‘நீங்க பிரவீன், இல்லையா?’ முன்பே அறிந்து வைத்திருந்தார் மலர்ந்த முக பெண்மணி. 

‘ஆமா… நீங்க?’ 

‘நான் தீபா — டெம்ப்ரவரி பி.பி.எம். அத்திப்பாக்கம் சொந்த ஊரு’ 

‘இவங்க எக்ஸ் பி.பி.எம் சாரோட வொய்ஃப். இதே ஊர்தான் இவங்க. ஊரப் பத்தி நல்லா தெரியும். ஏதாச்சும் சந்தேகம்னா இவங்கட்டயே நீங்க கேட்டுக்கலாம்’, சாக்கலேட் ஆயாவுக்கும் சேர்த்தே அறிமுகம் கொடுத்தார். 

‘என்ன படிச்சி இருக்க?’ ஆயாவின் குரல் சாக்கலேட் போல் இல்லை. ஆண் குரல் கலந்த முதுமையின் பெண் குரல். 

‘பிளஸ் டூ மா’ 

‘ஏன் மேல ஒன்னும் படிக்கலையா?’ 

‘ஒரு வருஷம் காலேஜ் போனேன். பிறகு நின்னுட்டேன்.’ ஆயா என்பதால் காலேஜ் போதும், என்ன படிப்பு என்பதெல்லாம் தேவையில்லை என்று குறைந்த விளக்கத்தோடு நிறுத்திக்கொண்டான். 

‘வேல கெடச்சதால வந்துட்டீங்க. அதானே?’ வெளியே அப்பட்டமாய் தெரிந்துவிடாத சின்ன நக்கலோடு. 

பதிலும் தெரிந்தே கேட்பவர்கள் விடையை எதிர்பார்ப்பதில்லை என்பதால், ‘ஆமா’ என்பதோடு நிறுத்திக்கொண்டான். குறைந்த சொற்கள் குறைந்த வம்போடு நிறுத்திவிடும்.

‘என் பேத்தியும் செம்ம மார்க்கு’, அழுத்திச்சொன்னாள். ‘வாயேன்டி ஊர் பக்கம். பி.பி.எம் போஸ்டுல ஊர்ல இருந்தே வேல பண்ணலாம்னு கூப்டேன்… 

‘வாயமூடு ஆயா! நான் படிக்கிற படிப்பென்ன? அந்த வேலையென்ன?  அதெல்ல்ல்லாம் எனக்க்கு ஆவாத்துனு ஸ்டிக்கா சொல்லிட்டா’ சொல்லும்போது பெருமை, அருவருப்பு, நக்கல் என்று பல ரசமும் சாக்கலேட் முகத்தில் வந்துபோனது. 

பதிலுக்கு பிரவீன் புன்னகை பூத்தான். அதில் அர்த்தம் உண்டு. புரிந்தவர்களுக்கு மட்டும்! அந்த நேரத்திலெல்லாம் காக்கை தடைகளின்றி வானத்தில் உயர பறந்துகொண்டிருந்தது. வெய்யிலின் வெம்மையில் பறந்தாலும் தனக்கென தனி அடையாளம் தேடி பறக்கிறது. புங்கைமரத்தின் நிழலில் இல்லை. தரையின் அருகே வரும்போதெல்லாம் தன்னுடைய நிழலைக் காண்கிறது. தன்னுடைய நிழல் யாருக்கேனும் குளிரலாம். தான் கருப்புதான். தன் நிழலின் கருப்பில் வெம்மை அகலும். 

ஆதிகாலத்து மிதிவண்டியை மிதித்துவந்தார் சிவப்பு தொப்பிக்காரர். போஸ்ட் ஆஃபீஸ் முன்வந்ததும், சட்டென்று சைக்கிளையும் அதன் நிழலையும் ஓரிடத்தில் ஸ்டாண்டு போட்டு நிறுத்தினார். மெல்ல நடந்து போஸ்ட் ஆஃபீசுக்கு வந்து, ஒரு சல்யூட் வகை வணக்கம் வைத்தார். 

‘சார் தான் எக்ஸ் பி.பி.எம்’, வாசலில் நின்ற சல்யூட் காரரைக் காட்டி தீபா சொன்னார். 

பிரவீன் ‘வணக்கம்’ வைத்தான்.  மஃப்(ளர்) வகை போலீஸ்கார மீசையோடு புன்முறுவல் செய்தார், எக்ஸ் பி.பி.எம். 

‘தம்பிதான் புது பி.பி.எம் ஆ?’, பழைய காலத்துக் குரல் கேட்டது. தெளிவில்லாமல் எச்சிலோடு அல்லல் படும் குரல். நம் செவிகள்தான் அந்தச் சொற்களின் ஒலியைச் சரியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

எக்ஸ் பி.பி.எம் கேள்விக்கு மூவரும் ஒன்றாக ‘ஆமாம்’ என்றார்கள். 

‘எங்க? அம்மா அப்பாலாம் வர்றலையா?’, கேட்டுக்கொண்டே தொப்பியைக் கழற்றி பழங்கால மேசையில் வைத்தார். ஜன்னல்வழி ஒளிக்கற்றைகள் படாமல் வைக்கப்பட்டது கருஞ்சிவப்புத் தொப்பி. 

‘இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க. டைம் ஆயிடுச்சினு மொதல்ல நான் வந்துட்டன்.’ 

‘உங்களுக்கு ஏ.பி.பி.எம் அப்பாயிண்ட் ஆகுற வரைக்கும், சாரோட வொய்ஃப் தான் ஏ.பி.பி.எம் ட்யூட்டி பாப்பாங்க’, கரெண்ட் பி.பி.எம் தீபா சொன்னார். 

கிராம அஞ்சல் ஊழியர் பணியில் சிறப்பம்சங்கள் சில உண்டு. அதில் ஒன்று, கிளை அஞ்சல் அலுவலர் வீட்டிலேயே அலுவலகம் அமைத்துக்கொள்ளும்  உரிமை. இரண்டு, மத்திய அரசின் மற்ற பணிகள் போலில்லாமல், இந்தப் பணியில் ஓய்வுபெறுவதற்கான உச்ச வயது வரம்பு அறுபத்தைந்து. அதனால்தான், ஓய்வுபெற்ற கிளை அஞ்சல் அலுவலர் ஜோசப்பின் கையெழுத்து அலுவலக ஏடுகளில் செல்லாமல்போன பின்பும், தற்காலிக பணியாளராக பேச்சியம்மாவின் கையெழுத்து செல்லுபடி ஆகிறது. பிரவீனுக்கு அலுவல் துணையாய் பேச்சியம்மாள். அலுவல் செய்ய பேச்சியம்மாவுக்கு அனுபவத்துணையாய் ஜோசஃப் சார். 

மின்விசிறியே இல்லாமல் அனலில் வெந்தது அலுவலகம். பழுதுபார்க்க சில மாதங்களுக்கு முன் எலெக்ட்ரிஷியனிடம் கொடுத்து அனுப்பியிருந்த விசிறி, திரும்பிவராமலே போய்விட்டது. தீபா சொல்லித் தந்த கிராம அஞ்சல் அலுவலர்    பணிக்கான முன் அறிமுகங்களை அறிந்துகொண்டு, சின்ன அறைக்குள் வீசும் அனலில் இருக்க முடியாமல், வெளியே வந்து நின்றான் பிரவீன். 

புங்கைமரம் முதன்முதலாக பிரவீனிடம் ஏதோ பேசியது. இலைகள் உரசிக் கிளுகிளுத்தது. தீக்ஷா பாப்பாவைக் கொஞ்சி விளையாட சில நேரங்களில் கிளுகிளுக்கும். இப்போது, புங்கைமரத்துக்குப் பிரவீனும் குழந்தையாய்… 

அந்த மர நிழலில் நிறுத்தப்பட்டிருந்த காக்கைநிற கருப்பு பைக்கில் சாய்ந்தபடி, தன் முகத்தை வண்டிக் கண்ணாடியில் பார்த்தான். முகம் வியர்வை வழிந்து காய்ந்திருந்தது. அந்த நேரத்தில் பிரேமா அக்கா வீட்டுக்கு வெளியில் யாருமே இல்லை. துணி காயப்போடும் கொடியும், ஈரமான தரையில் ஒரு அலுமினிய அன்னக்கூடை தண்ணீரும் மட்டும் இருந்தன. கொஞ்சம் முன்பாக வேலை முடித்து பிரேமா அக்கா உள்ளே சென்றிருக்கலாம். 

மடம் அஞ்சல் கிளை அலுவலகத்தின் கீழ் மூன்று ஊர்கள்: மடம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு.

‘இந்த டேட்ஸ்டாம்ப் ரொம்ப முக்கியம்’, அஞ்சல் முத்திரையைக் காட்டி சொல்லித் தந்திருந்தார், தீபா. 

அலுவலகம் திறந்ததும் முதலில் மாற்றப்பட வேண்டியது அஞ்சல் முத்திரையின் தேதிதான். மடம் பி.ஓ என்று வட்ட முத்திரையில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். தவறான தேதியில் முத்திரையின் அச்சு விழுந்துவிட்டால் பெரிய வம்பாகிப் போகும். அலுவலகத்தின் மிக முக்கிய சொத்து, அந்த இரும்பு முத்திரை. அரசாங்கத்தின் அத்தனைக் குத்தையும் தாங்கி மக்களுக்காக உழைத்து கழுத்தாடும் தாத்தாவாய் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறது. 

எக்ஸ் பி.பி.எம் ரப்பர் அட்டை வைக்காமல், தரையிலேயே கடிதங்கள் வைத்து முத்திரையால் குத்திக் குத்தி, இரும்பு முத்திரையின் அச்சு கூர்மழுங்கிப் போனது. சிறு அலுவலர்களை உயரதிகாரிகள் குத்திக் குத்தி கூர்மழுங்கடிப்பது போல. அதிகாரிகளை அரசாங்கம் குத்திக் குத்தி கூர்மழுங்கடிப்பது போல… அஞ்சல்துறையின் கடைநிலை ஊழியருக்கு குத்த ஆளில்லாதக் காரணத்தால், அவர் முத்திரையைக் குத்தி கூரை மழுங்கடித்து இருக்கலாம்… 

அலுவலகத்தை ஆய்வுசெய்ய வரும் அதிகாரிகள், ‘என்ன டேட் ஸ்டாம்ப் இது? எண்ண போட்டு ஸ்டாம்ப நல்லா தொடச்சி வைங்க,’ என்று ஒவ்வொரு முறையும் மழுங்கிய முத்திரைக்காக குறை எழுதுவார்களேயன்றி, முத்திரையை மாற்ற மாட்டார்கள். காலாவதியான முத்திரைக்கு குளுக்கோஸ் போட்டு வேலைசெய்ய வைக்க வேண்டும். 

ஜன்னலின் துரு கம்பிகள் வழிகாணும் பதினைந்தடி தூரத்தில், கொக்குநிற வெள்ளைக் கார் திமிருக்கும், பெருமைக்கும் இடையிலான வேகத்தில் அலுவலகத்தின்முன் வந்துநின்றது. கிராமத்தை விலைக்கு வாங்க வந்திருக்கும் பேன்ட்டு அணிந்த மிராசுதார், காரின் வலப்பக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே இறங்கிவந்தார். மறுபக்க கதவைத் திறந்து, மெல்ல மூடிவிட்டு, முந்தானையை முன்னிழுத்து கையில் பிடித்தவாறு, கூந்தல் பின்னலின் சிறு முடிகள் எதிர்காற்றில் பறக்க, வறண்ட கீழுதட்டை நாதடவி ஈரப்படுத்திக்கொண்டு மிராசுதாரின் மனைவியும் கூடவே வந்தார். 

சாக்கலேட் ஆயா, தலையில் அமர்த்தியிருந்த கூலிங் கண்ணாடியை நுனிவிரலால் இறக்கிவிட்டுக்கொண்டு, கணநேரத்தில் பேச்சியம்மாவாக மாறினார். அவ்வளவுநேரம் பேசியிருந்தும் அவர் தலையிலிருந்த கூலிங் கண்ணாடியை பிரவீன் பார்க்கவே இல்லை. அவர் அணிந்திருந்தது, பவர் வித் கூலிங் கிளாஸ். 

‘ஏன்பா வெளியவே நிக்குற?’, மிராசுதாரின் குரல். 

‘சும்மா இப்பதான் வெளிய வந்தன்’ 

‘ஒரு கெத்த்தா இருக்கானா பாரு’, மிராசுதாரின் கௌரவம் அவர் மனைவியிடம் வருத்தப்பட்டுக் கொண்டது. 

‘ஏன்டீ இவன் இப்படி இருக்கான்? கையிலயே ஒரு பைய வேற அசிங்கமா தூக்கிப்பான். ஒரு ஆஃபீசர் மாதிரி இருக்கானா?’ அவர் கௌரவம் எரிச்சல் பட்டுக்கொண்டது. 

பேசிக்கொண்டே பாட்டியின் சிவந்த பொக்கைப் பல்லில் கால் வைத்து வலிக்கும்படி மிதித்து ஏறிப்போனார். தீபாவுக்கும், கூலிங் கண்ணாடி பேச்சியம்மாவுக்கும் ஒரு ஆஃபீசர் வகை சல்யூட் அடித்தார். முதுகால் தன்னை மறைத்திருந்த மிராசுதார் தள்ளி நின்றதும், தன்னுடைய வணக்கப் புன்னகையைப் பூத்தாள் மிராசுதார் மனைவி — பிரவீனின் அம்மா. கொஞ்சம் தலையை அசைத்து வந்தது இளகிய புன்னகை. அவளுடைய இயல்பான  புன்னகை. 

‘உங்க ஆஃபீஸ்க்கு பி.பி.எம் வந்துருக்கார். பாத்தீங்களா?’ தன்னுடைய இயல்பிலேயே பிரவீனுக்கு எலுமிச்சையின் முழு புளிப்பையும் தந்தார். அடிக்கடி எலுமிச்சையைத் தின்றுப் பழகிய முகம், சுளிப்பை வெளிக்காட்டாமலே இருந்தது. பிரவீன் அம்மா அவன் முகத்தைப் பார்த்தாள். பிரவீன் பதிலுக்குப் பார்த்தான். 

‘என்னப்பா பாத்துக்கிட்டியா? ஊரெல்லாம் ஓகேவா?’ மகனின் விருப்பம் அறிய கேட்டார் மிராசுதார் அப்பா. 

‘அதெல்லாம் நான் பாத்துக்குவேன். ஓகே தான்’, தலையசைத்தான். 

‘வாயத் தொறந்து எல்லார்கிட்டயும் பேசு. மசமசனு நிக்காத’ டடடன்னுடிட்டாட. தந்தைப் போட்ட தாளம், பிரவீன் காதில் தனியாய்க் கேட்டது. இந்த தாளத்தைக் கேட்காமலே, மஃப் மீசைக்காரத் தாத்தா, பிரவீன் வெளியே நின்றிருந்த நேரத்திலெல்லாம், தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தார். 

‘நீங்க என்ன ஊரு?’ குப்பைத் தொட்டியில் போடப்போகும் காகிதத்தை ஒருமுறை படித்துப் பார்த்து ‘என்ன காகிதம்?’ என்று அறிந்துகொண்டு போடும் கேள்வி. 

‘நான் அத்திப்பாக்கம் சார்’ தீபா சொன்னார். 

‘ஓஹ்… அங்க! — வர்ற வழியில… அங்கயும் ஒரு போஸ்ட் ஆஃபீஸ் இருக்கும்ல?’ அவருக்கு எல்லாமே தெரியும்! தெரியாவிட்டிருந்தால் கொக்குநிற வெள்ளைக் கார் வாங்குவதெல்லாம் எப்படி சாத்தியமாகியிருக்கும்? அது லேசுப்பட்ட காரியமா என்ன? 

‘ஆமாஆன்…’ இழுத்துச் சொன்னார், ‘இந்த ஆஃபீஸ்ல எப்படி வேல செய்யறது? பக்கத்துலயே மூத்துர சந்தும் நாத்தமும்… நாலுப் பேர் வந்தா போட ச்சேர் கூட இல்ல’, துர்நாற்றத்தில் சுருங்கிய முகமாய். 

‘ஆமான்ம். ஆமான்ம்,’ உடன்பாட்டோடு, ‘மொதல்ல எங்க வீட்ல தாங்க இருந்துச்சி… அம்ம்பத்உஉ வருஷமா இருந்துச்சி. எங்க வீட்டுக்காரரு முப்ப்பத்தி அஞ்ஞ்சிஇ வருஷமா இந்த வேலய பாத்தாரு — எங்க மாமனாரு ஒரு பதினஞ்சு வருஷம். இவருக்கு முன்ன’, ஐம்பது வருட அஞ்சல் துறை — அரை நூற்றாண்டு அரசாங்கம், தன் வீட்டில் நடந்ததை அம்பலப்படுத்தினாள் பேச்சியம்மா. 

‘அங்கலாம் நீட்டா வெச்சியிருந்தோம். ஜனங்கள உள்ளயே விட மாட்டோம். ஜன்னல் வழியாவே க்ளீரா வேலய முடிப்போம் — வந்த ஜனம் வெளியவே திண்ணைல உக்காரணும்… இங்கலாம் கசகசனு ஊர்ல இருக்கவளுகலாம் வந்து ஒக்காந்து சத்தம் போட்டுக் கத அடிக்கிறாளுங்க’, ஐம்பது வருட அலுவலகப் பின்னணியின் ஒழுக்கம் பேசியது. 

‘ஆமாம்மா… ரெண்டு பேர உள்ள வச்சிக்கணும் — மிச்சமெல்லாம் வெளிய உக்காருங்கனு சொல்லிரணும்’, கொஞ்சம் நிறுத்தி, ‘ச்சேர் வாங்கிப் போட்ரணும் — வேல ஆவுற வரைக்கும் உக்காருங்க ப்ளீஸ்னு’, மிராசுதார் பக்க கருத்து.

‘ஹான்ன்…?’ குரலை ஒடித்தாள், ‘எதுக்க்குச் ச்சேரு? — வெளிய உக்காரும்ங்க அதெல்லாம்’, கருத்தை மறுத்து, ‘இப்படியெல்லாம் பழக்கப்படுத்தாதீங்க… நம்மளயே பிறவு திமிரா கேள்வி கேக்கும்ங்க’, சத்தமில்லாமல் ஊரைப் பற்றி குறை சத்தக் குரலில் சொல்லிக்கொடுத்தாள். 

‘அது அது அந்தந்த ஊர் காரங்களுக்குத் தான் தெரியும்’ என்று பாடத்தை உள்வாங்கிக் கொண்ட மிராசுதார் கேட்டார்: ‘எப்படீ! ஆஃபீஸ்லாம் வீட்டுக்கே மாத்திக்கலாம்லங்க?’ 

‘எப்படீ? — எங்க மாத்திப்பீங்க? — வீடெல்லாம் பாத்துட்டீங்களா?’ கிராமத்தையே வாங்க வந்த மிராசுதாரிடம் வீடு பார்த்தாகிவிட்டதா என்று கேட்டார் பேச்சியம்மா. 

‘இனிமே தான் — நீங்கதான் பாத்து வைக்கணும்! — உங்கள நம்பித்தான் இருக்கோம்’, சட்டென்று ஒரு சொல்லடியில் தனக்கான திடீர் உறவைப் பேச்சியம்மாவோடு உருவாக்கிக் கொண்டார், எல்லாம் அறிந்தவர்

‘பாத்துருவோம்’, சம்மந்தத்துக்கு தட்டை மாற்றிக்கொண்டாள் பேச்சியம்மா. 

அலுவலகத்தை மூடும் நேரம் வந்துவிட்டது. அலுவலகத்தைப் பூட்டிவிட்டு பேசிக்கொண்டே கார் பக்கம் சென்றார்கள். ஒரு சின்ன சைக்கிள் ரேஷன் கடை நிழலில் நின்றுகொண்டிருந்தது. அதில் வீட்டுக்கு கிளம்பிவிடுவதாகச் சொல்லி, தீபா விடைபெற்றுக் கொண்டார். 

வாங்க கார்லயே ட்ராப் பண்ணிட்றோம். உக்காருங்க’, கொக்குநிற வெள்ளைக் கார் உரிமையாளர், சம்மந்தி பேச்சியம்மாவை அழைத்தார். 

‘இல்ல. வீடு பக்கத்துலதான் — நீங்க வாங்களேன் வீட்டுக்கு’, இப்படி சொல்லி காரில் ஏறிக் கொள்வதை மறுத்துவிட்டார். 

பின்னர், தன் பைக்கில் அமர்ந்துகொண்ட பேச்சியம்மாவோடு பிரவீன் முதலில் புறப்பட்டான். சாலையை ஒட்டி அமைந்திருந்தது, பேச்சியம்மாவின் வீடு. அஞ்சலகத்திலிருந்து கார் வரவேண்டியதும் அந்த சாலை வழிதான். இளம்பெண்ணின் நீண்ட கூந்தல் சாலை அது. மாறாத கருப்பு நிறச்சாலை. மேனாட்டுக் கவிஞனின் கற்பனை சாலை. 

கார் வந்ததும் அருகில் சென்று சாலையிலேயே பேசிக்கொண்டிருந்தார்கள். காருக்கு வெளியே பிரவீனும், பேச்சியம்மாவும். காருக்குள்ளே அம்மாவும், கார்காரருமாக. 

‘இதோ. கிட்டதாங்க வீடு. வீட்டுக்கு வாங்க’, பேச்சியம்மா அழைத்தாள். 

‘இன்னொரு நாள் நிச்சயமா வர்றோம்’, மறுத்துவிட்டார் மிராசுதார். ‘வெயில்ல நிக்காதீங்க. உள்ள உக்காருங்க’, காரின் உள்ளே பேச்சியம்மாவை அமர வைத்துக்கொண்டார். ‘எப்படீங்க? நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தர் இந்தப் பக்கம்லாம் நெறைய வீடு இருக்கும்னு சொன்னாரு. போய் பாக்கலாமா?’ காரிலிருந்தபடியே ஒரு தெரு பக்கம் கைகாட்டிக் கேட்டார். 

‘வேணான்… வேணாம். பூரா காலனிக்காரங்க. கெழக்குப் பக்கமே நமக்கு ஆவாது. நாம மேற்க பாத்துக்கலாம்.’ 

‘அது சரி’, தலையாட்டினார் சம்மந்தி. 

‘நம்ம ஜனம்லாம் எனக்கு கரைட்டா தெரியும்ங்க. பாத்தோடனே கண்டு புடிச்சிருவேன்’, தேவாலய அன்னையின் சாட்சியாக சத்தியம் பேசினாள் பேச்சியம்மா.

Leave a Reply