Featured Image

ஓயாமல் வீசும் புங்கைமரத்தின் காற்றில் ஏதாவது குறை உண்டானதா? காற்றில் மாசு இருந்தாலும், தன் பங்குக்கு தூயக்காற்றை வெளியிட்டு, நல்ல நிழலைத் தானே அது தருகிறது. நான் செய்யும் வேலையில் நியாயமாக இருந்தேனென்று, ஏன் இந்தக் கிராமத்துப் போஸ்ட் மாஸ்டர் பணியில் இருக்கக்கூடாது?

இந்த வேலையை விட்டுவிடுவதால் மட்டும் விடிவு வந்துவிடுமா? நான் போய்விடுவதால் இங்கே மாற்றங்கள் வந்துவிடுமா? கடினமான காலத்தில் கசக்காத வாழ்க்கைத்தான் எங்கிருக்கிறது?

இப்படி பல கேள்விகளோடும், சமாதானங்களோடும் இரண்டு மாதங்கள் பக்கம் பறந்துவிட்டன.

ஏனோ சொந்த மனத்தின் போக்கு, அடங்க மறுத்து அடம் பிடித்தது!

எத்தனை இருட்டுக்குப்பின் விடியலாய் கிடைத்த வேலை… எத்தனை ஓட்டத்துக்குப்பின் கிடைத்த அம்மாவின் அமைதி!

இப்போதெல்லாம்,‘ஹெல்மெட் போடாம போயிட்டா, போஸ்டல் எம்ப்ளாயினு சொல்லு. ஃபைன் கேக்கமாட்டாங்க’ என்று சொல்லித் தருகிறார் திவாகரன் அண்ணா.

காவல்துறை உண்மையாகவே நண்பன்தான் என்று சொல்கிறார் சூப்பர் சீனியர். லோக்கல் போலீஸ் பயம் எல்லாம் வற்றிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன.

முதல் முறை, பிரவீனை ‘சார்’ ஆக்கிவிட்டது கிராமம். மக்கள் பணியின் பொறுப்புகளை அள்ளித் தந்துவிட்டது. அந்தக் கிராமத்தின் அப்பாவி தனத்தைத்தான் பிரவீன் அதிகம் நேசித்தான். அதே அளவுக்கு துரு பிடித்த இரும்பு இதயங்களை வெறுத்தான். 

———————————————————-

‘நான் 01.08.2019 அன்று முதல் மடம் அஞ்சல் கிளையின் கிளை அஞ்சல் அலுவலராய் கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, எனக்கு நியமிக்கப்பட்ட பணியை நல்ல முறையில் செய்து வருகிறேன்…’ பணி விலகல் கடிதத்தின் முதல் வரைவு உருவானது.

நேற்று வந்த காளான், விரைவில் தான் வாடிக் கருகப்போவதை, வரைந்துபார்த்த அஞ்சல் கடிதம் அது.

பணி விலகல் கடிதத்தை அனுப்புவதற்கு முன், அலைபேசி வாயிலாக மேலிடத்தில் ஒருமுறை கடிதம் அனுப்ப அனுமதி வாங்கிட சொல்லி, சீனியர் பாலுசாமி சார் அறிவுரை தந்தார்.

‘வேல இல்லாம இருக்கோமா நாங்க? வேல மெனக்கெட்டு போஸ்டிங் போடுவோம் — நீங்க வேணாம்ன்டு போவீங்க’, இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ், பணி விலகலை ஏற்க மறுத்துவிட்டார்.

உண்மை காரணங்கள் எதுவும் அவரிடம் சொல்லி எடுபடப்போவதில்லை.

‘படிக்கப் போறேன் சார். சென்னை கெளம்புறோம்’, ஒரு சமயோஜித பொய்.

‘ஏப்ரல் மன்த் போயிக்கலாம். மொதல்ல டார்கெட்ட முடிங்க. நானூத்தைம்பது அக்கவுண்டோட சேத்து போஸ்டல் இன்சூரன்ஸ் பத்து லட்சத்துக்கு புடிங்க’, சாதாரணமாக திணித்தார்.

ஏற்கெனவே கொடுத்த நூற்று எழுபத்தைந்து கணக்குகளே சூடாறாமல் இருந்தது. 

‘மார்ச்லயே ரிலீவ் பண்ணிட்டீங்கனா கொஞ்சம் ஈஸியா இருக்கும் சார்’

‘டைம் வேஸ்ட் பண்ட்டு இருக்க முடியாது… ஃபினான்ஷியல் இயர் என்ட்ல உங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் பாத்து ரிலீவ் பண்ட்டு இருக்கணுமா நாங்க? சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.’ அதிகாரம் முற்றி விட்டிருந்தது.

‘அப்போ எப்படி சார்? நான் லெட்டர் அனுப்பிட்றேன். நீங்க ரிலீவ் பண்றப்போ பண்ணுங்க’, குத்தும் இடம் அறிந்தவனாய்.

‘அதெல்லாம் அப்டி அனுப்பக்கூடாது! உங்க கிட்டயே வைங்க. சொல்லும்போது அனுப்பிக்கலாம்’, சறுக்கியது அதிகார பாவம்.

அக்கவுண்ட் குடு, வேலைய உடு. கைல காசு, வாய்ல தோச என்றார் இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ். 

ஏற்கெனவே கொடுத்து சூடாறாமல் கிடந்த நூற்று எழுபத்தைந்து கணக்குகளைப் பிடிப்பதற்கே ‘பெரிய ஸ்கெட்ச்’ போடப்பட்டிருந்தது…

அஞ்சல் விழிப்புணர்வை பெருக்கி கணக்குகளைத் திரட்ட, நோட்டீஸ் அடித்துக் கொடுத்தாலென்ன? பிரவீன் வரைந்திருந்த ரஃப் ஸ்கெட்ச் யோசனை.

மண்ணில் புரளவும், மழையில் நனையவும் வேண்டுமானால் நோட்டீஸ் சரிப்பட்டு வரும். வரைந்த கணத்திலே யோசனை அழிக்கப்பட்டுவிட்டது.

நீர் நிறைந்திருந்த இடங்களில் எல்லாம் முன்பாகவே போஸ்டல் ஏஜெண்ட்கள் ஆழ்துளை ஆச்சரியங்களை நிகழ்த்தியிருந்தார்கள் — அக்கவுண்ட்களை உறிஞ்சிவிட்டிருந்தார்கள். ஏஜெண்ட்கள் பிடித்துவரும் கணக்குப் புத்தகங்களுக்கு முன்னுரிமை தந்து வேலைகளை விரைவில் முடித்துக் கொடுத்தார், சப்-போஸ்ட்மாஸ்டர். சொந்த கிளையின் வேலைகள், மேசைக்கு அடியில் தண்ணீர் பாட்டிலெடுக்க அவர் குனியும் போதெல்லாம் கையுயர்த்திக்கொண்டு, ஆவலோடு வேடிக்கை மட்டுமே பார்த்தன.

பணத்துக்கு அல்லாடும் பாக்கெட்டுகள், வெறும் நோட்டீஸ் தரும் தகவலில் பணத்தைச் சேமிக்க அஞ்சலகம்வரை வர மாட்டார்கள்.

ஒரு ஏழை ஆணின் சட்டைப்பை, ஒரு நாளும் சேமிப்புக்கு ஒத்துழைக்காது. ஒரு ஏழைப் பெண்ணின் கையில் இருக்கும் பணம்தான், அவள் வீட்டின் சேமிப்புக்கு பங்கு தரும். அவளோடுதான் நாட்டின் கடைசி வேர்நுனி முடிகிறது. அவளுடைய பிரச்சினைதான் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினை. அவளுடைய கதைதான் கேட்கப்பட வேண்டிய கதை. அதிலிருந்துதான் ஏழைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்! 

பிரேமா அக்கா ஒன்றும் ஏழ்மையின் முழு பிடியில் இல்லை, அவள் வீட்டில் தையல் மெஷின் இருந்தது. அவ்வப்போது, தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்து விற்கும் மீன்களை வாங்கி சமைத்தாள். அவள்தான் பிரவீனுக்கு நன்கு பரிச்சயமானவள். அவளிடத்தில் இருந்து கேன்வாசிங் துவங்குவதுதான் சரியென்று பட்டது. அவள் தனக்குமட்டும் தைத்துக்கொள்ளும் சில துணிகளோடு, சின்ன லாபத்துக்கு மற்றவர்கள் துணியையும் தைத்துவந்தாள். ஊரில் பலர் அப்படி தைத்ததால், அவளால் அதை முழு தொழிலாக்கிக் கொள்ள முடியவில்லை.

அவள்வழி அறிந்திடும் கிராமம், கணக்குகளைச் சேர்க்க முழுவழி திறக்கும் என்று தோன்றியது… மக்கள் நிலவரம் புரிய அவளிடம் பிரவீன் பாடம் கேட்டான். பிரேமா அக்கா தன் தையல் மெஷினில் தைத்துக்கொண்டே பிரவீனிடம் பேசினாள்.

‘ஏன் சார்? சும்மாதான் கேக்குறேன்… நாங்க என்ன ஏழையா இருக்கோம்னு காசு வர மாட்டேங்குதா, இல்ல காசு வராததால ஏழையாவே இருக்கோமா?’

‘ஏன்மா அப்படிக் கேக்குறீங்க?’

‘இல்ல சார்… தையவேல வரமாட்டேங்குதேனு திருக்கோவிலூர்ல ஒருத்தன் கிட்ட வேலக்கிப் போனன் சார் — வேலக்கி ஆளு அதிகமா இருக்கு, வரவேணாம்னு நிறுத்திட்டான். ஆறுநாள் நான் தச்சதுக்குக்கூட கூலி குடுக்கல சார்… 

‘ஏன் சார்? எங்க மூஞ்சில ஏமாத்திட்டுப் போங்கனு எழுதி வெச்சிருக்கா, என்ன?’ ஏமாற்றத்தில் உடைந்துபோய், கோபம் கொப்பளிக்க பேசினாள்.

வெளியூரில், ஓட்டலில் வேலை செய்து அவள் கணவன் அனுப்பும் பணம், அவளுடைய மூன்று பெண் பிள்ளைகளின் படிப்புக்கு செலவாகி வந்தது. பெரிய மகள் கல்லூரியில் படித்து வந்தாள்.

ஆலயம், பள்ளிக்கூடம், மளிகை கடைகளில் பிரவீனின் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்தது… நூற்று எழுபத்தைந்து கணக்குகள் எளிதில் கிடைத்துவிடவில்லை.

பிரவீன் மற்றும் மகாவின் சாயங்காலங்கள் பல வீடுகளின் வாசல்களிலும், திண்ணைகளிலும், காம்பவுண்டுகளுக்குள்ளும் கழிந்து வந்தன.

பெரிய ஸ்கெட்ச் பெற்றுவந்த நூற்று எழுபத்தைந்து கணக்குகளின் துவக்கப் படிவங்களில் இருந்த கையொப்பங்களிலும், கைரேகைகளிலும் சாயங்கால வீடுகளின் திண்ணைக் கதைகளும், வாசல் வலிகளும் சேர்ந்தே ஒட்டியிருந்தது.  

பிரவீனின் பணி விலகலை மறுத்து, ஃபோன் அழைப்பைத் துண்டித்துவிட்டார் இன்ஸ்பெக்டர் போஸ்டல்… நூற்றெழுபத்தைந்து கணக்குகளையும் சில சில்லறை நாணயங்களாய் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார். அவர் சொன்னபடி, மீதிக் கணக்குகளைப் பிடித்தாக வேண்டும். 

கணக்கு வேட்டையின் அடுத்தச் சுற்றுக்கு, சுடச்சுட சுடும் வெயிலில் சுற்றுப்பயணம் தொடங்கியது. செருப்புகள் தேய்ந்தன. கதவுகள் தட்டியாகிவிட்டன. காலிங் பெல்கள் கத்தியாகிவிட்டன. 

கேன்வாசிங்-ன் பிற்பகல் நடையின்போது, எதிரில் குள்ளமாய், கைகளாட சுறுசுறுப்போடு வந்தாள், எலிப்பாட்டி அமலூரு. தூரத்திலிருந்தே அடையாளம் காணமுடியும் தினுசு, அவளுடைய நடையில்.

‘இந்த மாசம் முதுயோர் காசு கரைட்டா வந்துருச்சி’, அருகில் வந்ததும், அவள் ‘தன் போஸ்டைப்’ பார்த்துச் சிரிப்போடு கொறித்தாள்.

‘இந்த வெயில்ல எங்க?’, மீசை எலியின் மோப்பம்.

‘போஸ்ட் ஆஃபீஸ் புக்கு போட கேக்கப்போறோம்.’

பிரவீனின் புஜத்தைப் பிடித்து திருப்பினாள்.

‘இதோ, இந்தத் தெரு முக்குக்குப் போ! ஊர் தலீவர் ஊடு. கையில நெறியா காசு வச்சிருக்காங்க. போயி கேளு, போடுவாங்க’, நேரே போய்க் கொண்டிருந்தவனை வலப்பக்கம் திருப்பி, தெரு கடைசியைக் காட்டினாள்.

விசாலமான தெரு. இதற்குமுன் கேன்வாசிங் செய்யாமல் தவறவிட்ட தெருக்களில் ஒன்று அது. இரண்டு மூன்று வீடுகள் கட்டுமான பணியில் இருந்தன. தெரு ஓரங்களில் மணல் கொட்டி இருந்தது. மணல் மேட்டில் மணல் சல்லடைகள் சாய்த்துப் போடப்பட்டிருந்தன. தெரு கடைசியின் இடப்புறம் கேட் போட்ட காம்பவுண்ட் வீடு. வலப்புறம் ஒரு சின்ன கலர் சுண்ணாம்பு வீடு.

பிரவீன், மகா இருவரும் சேர்ந்து தேர்வுசெய்தது, கதவடைக்காமல் திறந்திருந்த கலர் சுண்ணாம்பு வீடு. ஒரு நடுத்தர வயது பெண்மணியும், இரண்டு சிறுமிகளும் மட்டும் அரசுத் தொலைக்காட்சியின் சின்னத் திரையில் கண்களும், சின்ன எவர் சில்வர் தட்டுக்களில் கைகளும் வைத்துக்கொண்டு படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலுக்கு வெளியில் நின்ற பிரவீனுக்கும் மகாவுக்கும் முழு சத்தத்துடன் படம் தெரிந்தது.

‘அக்கா…’ மகா கூப்பிட்டாள். கவனிக்காமல் இருந்தவளை மீண்டும் உரக்க கத்திக் கூப்பிட்டாள். ‘அக்கா…’

‘இரு. சாப்ட்டு முடிக்கட்டும்’, பிரவீன் முணுமுணுத்தது மகா செவியில் விழவில்லை.

சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி அவர்களைப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்மணியின் இடக் கன்னத்தைத் தள்ளி வாசலில் நிற்பவர்களைக் காண்பித்தாள். அந்தப் பெண்மணியின் தோற்றம், அந்தச் சிறுமிகளுக்கு தாய்போல் தெரியவில்லை. வயது சற்று அதிகமாகவும், முன் தலையில் கொஞ்சம் நரை முடியும் இருந்தது.

அவர்களைப் பார்த்ததும் அவள் வேகமாய் எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு வந்து வாசலில் நின்று, ‘என்ன விஷயம்? சொல்லுங்க’ என்னும் பொருள் படும்படி தலையசைத்தாள். அதை பவ்வியமாகச் செய்தாள்.

‘அக்கா, சாப்புட்ருந்தீங்களா? சாரி கா. டிஸ்டர்ப் பண்ணதுக்கு. நீங்க சாப்ட்டு வரீங்களா வெயிட் பண்றோம்?’ தெரியாததுபோல் யதார்த்தமாய்க் கேட்டாள்.

‘இல்ல. சொல்லுமா… சொல்லுங்க சார்!’

‘வீட்ல போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட் வச்சி இருக்கீங்களா?’ பிரவீன் கேட்டான்.

‘இருக்கு சார்’

‘யாரு பேருலமா இருக்கு?’

‘எங்க வீட்டுக்காரர் பேர்ல சார்’

‘உங்க பேர்ல ஒன்னு ஆரம்பிக்கலாம்ல?’

‘ஆரம்பிக்கலாம் சார். இப்ப வேணாமே’, தயக்கம் சுரந்தாள்.

‘ஏன்மா இப்ப வேணாம்?’

‘இல்ல சார். உலகமே அழியப் போவுது. இப்ப எதுக்கு? வேணாமே!’

‘ஏன்மா உலகம் அழியப் போகுது?’ பிரவீன் கேட்கும்போது மகாவின் அதிர்ச்சியும் இணைந்து வந்தது.

‘இல்ல சார். எங்க பைபிள்ல போட்ருக்கு. உலகம் அழியப்போகுது. கர்த்தர் திருப்பி வரப்போறார் சார்.’

அவள் அப்படி பேசியதும்தான், தொலைக்காட்சிக்கு மேல் சுவரில் மாட்டி வைத்திருந்த இயேசு கிறிஸ்து படம் போட்ட பெரிய நாளேட்டைக் கவனித்தான்.

‘ஆமாம் சார்… பாத்தீங்கள்ல இப்போ வெளிநாட்லலாம் தொத்துநோய் வருதுனு சொல்றாங்க. அது வந்து எல்லாத்தையும் அழிச்சிரும்… கர்த்தர் வருகைக்காகத்தான் நாங்கலாம் காத்துட்டு இருக்கோம்’, பைபிள் நம்பிக்கையில் உறுதியாகச் சொன்னாள்.

அந்தக் குழந்தைகள் எதையும் கவனிக்காமல் அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ புது படம்! பெயர் தெரியாத ஹீரோ…

பத்து நொடிகள் அமைதியாகிவிட்டு, பின் பேச்சைத் தொடர்ந்தான்.

‘அதெல்லாம் ஏதும் ஆகாது மா’.

அவனுடைய அறியாமையை நினைத்து, தனக்குத் தானே சிரித்தாள் அந்த பெண்மணி. ஏளனமின்றி அன்பு நிறைந்திருந்தது அந்தச் சிரிப்பில்.

‘நீங்களே பாக்கதான போறீங்க!’ அதே உறுதியோடு.

யார் நினைப்பது உண்மையானாலும், அப்போதைக்கு அஞ்சல் கணக்குத்தான் பிரவீனுக்கு கடவுள்.

‘ஓகே மா,’ ஒரு முடிவோடு தொடர்ந்தான். ‘நீங்க சொல்ற மாதிரி உலகம் அழிஞ்சுட்டா பணம் உங்க கையில இருந்தா என்ன, போஸ்ட ஆஃபீஸ்ல இருந்தா என்ன? ஆனா, ஒருவேள அழியலனா அப்போ உங்களுக்கு உங்க சேவிங்கஸ் யூஸ் ஆகும்ல… இப்ப அக்கவுண்ட் போடலாமே!’ 

கொஞ்சமும் நகராமல், அதே இடத்தில் சுற்றியது பம்பரம்.

அவள் பிரவீனுடைய கடவுளைப் புரிந்து கொண்டாள். ‘இப்ப என்ன அக்கௌன்ட் ஆரம்பிக்கணும், அவ்ளோதான? எனக்குப் பணம் ஒன்னும் பிரச்சன இல்ல… குடுத்துட்றேன்.’

அவள் பணம் கொடுத்துவிட்டாள். சேமிப்பு கணக்குக்கான துவக்கப் படிவம் பூர்த்தியாகிவிட்டது.

‘அடுத்து?’

இடப்பக்க காம்பவுண்ட் வீடு!

Leave a Reply