தர்பன் இல்லாமல் அஞ்சலகக் கணக்குகள் முடிக்கக்கூடாது. மக்களிடம் பணம் வாங்கக்கூடாது. கணக்குப் புத்தகங்களில் பணம் போடவோ எடுக்கவோ முடியாது. அஞ்சல்துறை மேலிடத்திலிருந்து ஆணை. மூன்று நாட்கள் பொறுக்க வேண்டும். தர்பன் வந்துவிடும். இதுவரை கணக்கு, கையால் எழுதி முடித்தது போல் இனி இல்லை. புது பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்களுக்கு தர்பன் பயிற்சி இதோ கொடுத்துவிடுவார்கள்! இதோ வந்துவிடும் தர்பன். 

மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை. அலுவலகத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு, அலுவலகச் சிறப்பு நாற்காலியில் அமர்ந்தான், பிரவீன். நாற்காலியில் வெள்ளை ஒயரின் பின்னல் தளர்ந்திருந்தது. உட்கார்ந்ததும் தொங்கி கீழே போகும் இறுக்கமில்லாத வெள்ளை ஒயர்களைக் கொண்ட தளர்வான நாற்காலி அது. பிளாக் ஹோலுக்குச் சவாலான ஒயிட் ஹோல்! கழுத்தாடும் முத்திரை தாத்தாவைத் தூக்கி வருகைப் பதிவேட்டில் ஒரு குத்து. தாத்தாவின் கழுத்தைக் கண்டு பயந்து இடம்-வலம், வலம்-இடம் திருப்பிக் கழுத்துப் பயிற்சி செய்தது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு எடுத்து வந்திருந்த மேசை விசிறி. எலக்டிரிஷியன் களவாடிய அலுவலக விசிறிக்குப் பதிலாக, மேசை விசிறி டெம்ப்ரவரி காற்றாடி பணியைச் செய்துவந்தது. 

பழுப்புநிற மேசையின் ட்ராவரில் கிடந்த தேவையற்ற கரடா தாள்களைப் பொறுக்கிப் போட்டு, சுத்தம் செய்துக்கொண்டிருந்தான். பழைய பிய்ந்த ரப்பர் பேண்டுகள்; ட்ராவரோடு ஒட்டிக்கொண்டிருந்த பிசுபிசு ரப்பர் பேண்டுகள்; வளைந்துகிடந்த ஸ்டாப்ளர் பின்கள்; வின்சி அக்கா பெட்டிக்கடையில் வாங்கிவந்து கசிந்திருந்த நீல நிற லிக்விட் கம்; கருநீல மையின் ஸ்டாம்ப் பேட்; கருப்பு கைப்பிடி கத்திரிக்கோல்; ‘டேக்’ கயிறுகள்… எல்லாவற்றையும் அவையவை இருக்க வேண்டிய இடங்களில் வைத்து முறைப்படுத்தினான். 

அப்போது, அலுவலக வாசலின் வெளிர்மஞ்சள் ஒளிமறைக்கும் உருவம் தெரிந்து நிமிர்ந்தான். அவள் சிரித்தாள். இளமையின் உருவில் சிரித்தாள். வெள்ளைப் பூக்கள் போட்ட சிவப்பு நைட்டியில் அவள் நின்றிருந்தாள். 

‘சொல்லுங்கம்மா…’ 

அவள் இன்னமும் சிரித்தாள். அவள் முகம் முழுவதும் சிரிப்பு மூடிக்கொண்டது. 

‘சொல்லுங்க…’, மென்மையாய் இன்னொரு முறை. 

அவள் தொண்டை ஏதோ பேசியது. வாய் அசைந்தது. ஒலி அதிர்வுகள் வெளியாயின. பிரவீனுக்கு அவளுடைய மொழி புரியவில்லை. எந்த வேலைக்கு அவள் வந்திருந்தாலும், அந்த மூன்று நாட்கள் எந்தப் பணப்பரிமாற்ற வேலையும் செய்ய முடியாத நாட்கள். 

‘மா. மூணு நாள் கழிச்சு வாங்க. புதன்கெழம போல. யாரையாச்சும் கூட கூட்டிட்டு வாங்க’, அவளின் புரியாத மொழிக்கு, அவனால் அந்த பொது பதிலைத்தான் தர முடிந்தது. 

‘யான்ன்?’ கேட்டவள், உதட்டையே கவனித்தாள். அவனுடைய உதட்டின் மௌன அசைவுகளில், அவளுக்கு அரைகுறை புரிதல் மட்டுமே கிடைத்தது. அந்தப்   புரிதலுடன் அவள் அலுவலகத்தைவிட்டு நகர்ந்துவிட்டாள்… 

சுவர் கடிகாரத்தில் மணி பதினொன்று பத்து. மகாலட்சுமி அத்திப்பாக்கத்திலிருந்து வரவில்லை. மேலிடம் அளித்திருந்த நேரக் கணக்குப்படி, மெயில் பேக் பத்தரை மணிக்கெல்லாம் மடத்திற்கு வந்திருக்க வேண்டும். பத்தே முக்காலுக்கெல்லாம் ஏ.பி.பி.எம் மெயில் பேக்கைப் பிரித்து எடுத்துக்கொண்டு, கடிதங்களைக் கொடுக்க ‘லைனு’க்கு சென்றிருக்க வேண்டும். புதிய சப்-போஸ்ட்மாஸ்டர் வந்ததிலிருந்து தாமதமெல்லாம் வழக்கமாகிப் போனது. 

சப்-போஸ்ட்மாஸ்டர் சைமனிடமிருந்து ஃபோன் அழைப்பு வந்தது. 

‘பிரவீனு, உனக்கு இன்னும் தர்பன் வரலல்ல… என்ன வேல அப்றம்? டெய்லி அக்கவுண்ட் ஃபில் பண்ணி திவாகரன் கைல குடுத்து உடு’

‘லெட்டர்லாம் எப்படி சார் குடுக்குறது, மெயில் பேக் வராம?’ 

‘அதெல்லாம் நாளக்கி குடுத்துக்கலாம், நாளைக்கி பைல கட்டி அனுப்புறேன்’

கடிதங்களைக் கொடுப்பதற்கும் சப்-போஸ்ட்மாஸ்டருக்கு கமிஷன் கொடுத்திருந்தால் வேலை சரியாக நடந்திருக்கும். கமிஷன் இல்லாததால் வேலை மெதுவாகத்தான் நடக்கும். 

தினம் வரும் கடிதங்களை அன்றன்றே கொடுத்து விடுவதுதான் நல்லது. அதுதான் முறையும். தாமதமான கடிதத்தால் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வுகளை தவறவிட்டவர்கள் பலர்.

‘லெட்டர் மட்டும் கொஞ்சம் கட்டி அனுப்பிடுங்களேன் சார்’, நயமான குரலில் நாசூக்காய்… உதைக்கும் மாட்டிடம் பாதுகாப்பாக பால் கறப்பது போல. 

‘சொல்றத செய், புரிதா? டெய்லி அக்கவுண்ட் அனுப்பிவிடுன்னா, அனுப்பிவிடணும். சும்மா வாதம் பண்ணிட்ருக்க கூடாது’, உதைத்துவிட்டது மாடு. 

சொல்லாமலே துண்டிக்கப்பட்டது ஃபோன் கால். 

அவமதித்த ஃபோன் கால் துண்டிப்பின் ஆவி அடங்குவதற்குள், மகாலட்சுமி அழைத்தாள். 

‘அண்ணா. இன்னக்கி மெயில் பேக் வரல. சைமன் சார் சொன்னாரு. உங்ககிட்ட பேசிட்டாரா?’ அவளுடைய உடனடி அதிகாரிக்கு உடனே தெரிவிக்கும் பொறுப்பு. 

‘சொன்னாரு மகா. நீ எங்க இருக்க?’ 

‘இப்போ அத்திப்பாக்கத்துல இருக்கண்ணா.’ 

‘அத்திப்பாக்கத்துக்கு மெயில் பேக் வந்துச்சா?’ துப்பு துலக்கும் தூரிகையின் முதல் வருடல். 

‘இல்லண்ணா. இங்கயும் வரல’ 

இழைக்கப்பட்ட அநீதியில் சமத்துவம். இரண்டு கிளை அஞ்சல் கண்களுக்குமே சுண்ணாம்பு.

‘ஏன் வரல?’ தூரிகையின் இரண்டாம் வருடல். 

‘சப்-போஸ்ட்மாஸ்டர் சார் லேட்டாதான் ஆஃபீஸ் வந்தாராம் — மதியம் ஊருக்குக் கெளம்புறார் — ஏதோ வேல இருக்காம்’, உதைத்த மாட்டுக்குச் சொந்த வேலை அவசரம். 

‘நீ ஏன் இன்னும் ஆஃபீஸ்க்கு வரல?’ 

‘அப்றம்தான் மெயில் பேக் வரலயே ணா. எனக்கு என்ன வேல?’ காகிதம் மடிய ஆரம்பித்தது. 

‘பேக் வரலனா என்ன? கேன்வாசிங் போய்ட்டு வரலாம்ல?’ 

‘சப்-போஸ்ட்மாஸ்டர் சார்ட சொல்லிட்டேன். கோவிலுக்குப் போறோம்ணா… அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க. நான் அத்திப்பாக்கத்துல இருந்து அப்டியே கெளம்பிட்றேன்’, மடிந்த காகிதம் ராக்கெட் ரூபத்துக்கு வந்துவிட்டது. 

‘அப்போ. நீ ஆஃபீஸ்க்கு வர்றலையா?’ 

‘இல்லணா. நீங்க வேணும்னா கேன்வாசிங் போயிட்டுவாங்க. நான் மன்டே வரேன்’ 

குண்டு விளையாட வந்திருந்த சிறுவர்களில் சிலர், அலுவலக ஜன்னல்வழி எட்டிப்பார்த்தனர். அவர்கள் அஞ்சல் தோட்டத்தில் பூத்த ஜன்னல் பூக்கள்! 

‘அது என்னதுணா?’ ஆர்வத்தில் கேட்டது ஒரு பூ. 

‘வெளக்குடா தம்பி’ 

‘வெளக்கு எதுக்கு போஸ்ட் ஆஃபீஸ்ல?’ 

‘பை கட்டி அரக்கு வெக்கணும். அதுக்கு உருக்குறதுக்கு.’ 

‘எங்க — அரக்கு எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டுங்க’, இன்னொரு பூ. 

பிரவீன் எடுத்துக்காட்டினான். 

‘என்ன கருப்பா இருக்கு?’ இரண்டாம் பூவுக்கு அதிர்ச்சி. 

‘மெழுகு தான்டா வெள்ளையா இருக்கும். அரக்குக் கருப்பா இருக்கும்’, ஒரு கார்டூன் வில்லன் குரலில் பிரவீனின் விளக்கம். 

‘அது என்னது?’ முதல் பூ, மீண்டும். 

‘ஏ! அது எனக்குத் தெரியும். நான் பாத்ருக்கன். அத வெச்சி டொம் டொம்னு குத்துவாங்க, இல்லண்ண்ணா?’ பிரவீனைக் கேட்டுக் கொண்டது இரண்டாம் பூ. 

கேள்விக்கு சரிதான் என்று தலையாட்டினார் முத்திரைத் தாத்தா. 

மிச்ச சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த குண்டாட்டத்தில், ஒரு சிறுவன் அடித்த குண்டு போய் அரிசியில் விழுந்தது. 

‘தூரப் போயி குண்டடிங்கடா’, அரிசியிலிருந்து குண்டை எடுத்து தூரம் போட்டுவிட்டுக் கத்தினாள் பாட்டி. 

குரல்கேட்டு ஜன்னல்வழி பிரவீன் எட்டிப்பார்த்தான். ரேஷன் கடையின் கூரை நிழலில், சந்தோஷம்மாள் பாட்டி! கடையின் முன்னே இறைந்துகிடக்கும் அரிசிமணிகளை, ஒட்டிய மண்ணோடு கலந்தள்ளி, அதை முறத்தில்போட்டு புடைத்துக் கொண்டிருந்தாள். புடைத்தும், பொறுக்கியும் எடுக்கும்போது அவசர உதவியிடத்தின் குப்பைகளிலிருந்து சுருண்டு வந்திருந்த மயிர் உருண்டைகள், அரிசிமணிகளிலிருந்து தூரப்போய்விடும். 

அவள், அரிசி மணிகளை நெகிழிப்பையில் நிரப்பிக் கொண்டிருந்தாள். பிரவீன் நாற்காலியை விட்டெழுந்து, அவளருகே சென்றான். 

‘பாட்டி, உங்க பாஸ் புத்தகம் சீக்கிரம் வாங்கித் தந்துடுறேன்’

அவனே சொல்லிவிட்டால், அவள் நம்பிக்கை இழக்கமாட்டாள். 

‘ஆமாம் சாமி, சீக்கிரம… அன்னக்கி போட்டன் பாரு — என் பேருல நூறு. என் புருஷன் பேருல நூறு. சந்தோஷம்மா. இஞ்ஞாசிமுத்து.’ 

‘நெனப்பிருக்குப் பாட்டி’. 

‘என் புக்குல பணம் போட்டு குடுத்துட்ட. எங்க புருஷன் புக்குக்குத்தான் புது புக் போட்டுத் தரேனு சொன்ன.’ 

இஞ்ஞாசிமுத்து பெயரில் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம். தாள்கள் நிறைந்து புத்தகம் முடிந்திருந்ததால், புது புத்தகம் வேண்டி சப்-ஆஃபீஸ்க்கு ஆறு நாட்கள் முன்பு அனுப்பப்பட்டிருந்தது. நேற்று அனுப்புகிறேன் என்றார், முந்தைய நாள். இன்று அனுப்புகிறேன் என்றார், நேற்று. மெயில் பேக்கில் கட்டிவரும் புதிய கணக்குப் புத்தகம்… அன்று மெயில் பேக்கும் இல்லை. புதிய கணக்குப் புத்தகமும் இல்லை. அடுத்தநாள் வரும். ஞாயிற்றுக் கிழமையானாலும் பரவாயில்லை. நாளை வரும்! 

எழுந்துவந்த சிறப்பு நாற்காலியில் ‘வொயிட் ஹோல்’, உட்கார்ந்திருந்த தடயத்தின் துப்பாக அப்படியே இருந்தது.

Leave a Reply