Featured Image

அக்டோபர் மாதம். அஞ்சல் பணியாளர்களுக்குச் சிறப்பு மாதம். இரட்டைச் சம்பள மாதம். தசரா போனஸ் மாதம். ஒரு மாதச் சம்பளம் போனஸாக மாறி, இனிப்பு வாங்கிவந்து பணியாளர்களைக் குஷிப்படுத்தும் மாதம். எங்கும் ‘போனஸ் ஏறிடுச்சா?’ விசாரணைகள் பெருகிவளர்ந்து வானவெளியில் வண்ணப் பட்டாசுகளாய் வெடிக்கும். கோலாகலத்தைக் கொண்டாடும், எல்லையற்ற வானம். எல்லையற்ற மகிழ்ச்சியோடு. அஞ்சல் வானத்தில் வண்ணக் கோலங்கள். நேற்று முளைத்த காளான்களுக்கு போனஸ் இல்லை. சீனியர்களின் வானவேடிக்கையை அன்னாந்து பார்க்கும் ஜுனியர்கள் அவர்கள். 

பிரவீன் அஞ்சல் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நகர்ந்திருந்தன. மூன்றாம் மாதத்தின் முதல் வாரம். கடந்த மாதத்தில் கட்டாமல் விட்டிருந்த அஞ்சல் கணக்குப் புத்தகங்களுக்கும், காப்பீட்டுப் புத்தகங்களுக்கும் சேர்த்து நடப்பு மாதத்தில் கட்டவேண்டிய மாதத் தவணைத் தொகையும், தாமதக் கட்டணமும் இருந்தது. தாமதக் கட்டணம், மொத்தம் எழுநூற்று இருபத்தி ஐந்து ரூபாய். கடந்த மாதம் ஏழு நாட்கள் கட்டமுடியாமல் போன மடம் கிளையின் அஞ்சல் கணக்குகளுக்கும், பாலிசிகளுக்கும் வந்திருந்த தாமதக் கட்டணம் அது. புது பிரான்ச் போஸ்ட்மாஸ்டர்தான் அந்தத் தொகைக்கும் பொறுப்பு. தாமதக் கட்டணத்தை, தன் சம்பளத்திலிருந்து எடுத்து கட்டவேண்டியதானது. 

‘ஏ! நீ ஏன்யா கட்டுற? தப்பு அவங்க பண்ணதுதான? அவங்களயே கட்டசொல்லு’, எரிச்சலோடு மேனகா. 

‘வந்ததுல இருந்து தொந்தரவா குடுத்தா எப்படி? மேலெடத்துல கம்ப்ளெய்ன் பண்ணிடு… மத்தவங்க பண்ண தப்புக்கு, நான் எப்படி தண்டம் கட்டமுடியும்னு கேளு,’ அம்மாவின் பொறுமையும் ரொம்ப காலம் நீரடியில் இருந்துவிட்டது.  கோபம், மூச்சுமுட்டித் தலையை வெளியில் எடுத்தது. 

‘இதெல்லாம் — எப்படிணா நீங்க கட்டுவீங்க? டிபார்ட்மெண்ட் மிஸ்டேக் தான?’, மகாலட்சுமிக்கும் இது சரியென்று படவில்லை. 

‘டிபார்ட்மெண்ட்ல பண்றதுக்குலாம் நாம பலிகெடாவா? நீ சொல்லிரு — இப்போ தாங்க டிவைஸ்(தர்பன்) வந்துச்சி. இவ்ளோ நாளா வரலனு’, அறிவுரை தந்தாள், பேச்சியம்மா. 

‘ஃபைன்க்கும் சேத்து ஜனங்ககிட்ட பணத்த வாங்கு. ஒத்துவராத ஒன்னு ரெண்டு பேருக்கு மட்டும் நீ கட்டு’, அவள் தந்த அறிவுரை உதவிக்கு, அவள் வீட்டுக் கணக்குகளுக்கும், பாலிசிகளுக்குமான தாமதக் கட்டணத்தை பிரவீன் தலையில் கட்டிவிட்டு, கழன்றுகொண்டாள் பேச்சியம்மா. 

எழுநூற்று இருபத்தி ஐந்தில், அவள் வீட்டுத் தாமதக் கட்டணம் மட்டும் எண்பத்தி நான்கு. மடத்தின் அஞ்சல் குடும்பத்து வாரிசுகள், அவர்கள் பெயரில் ஊருக்கு உதாரணமாய் பல திட்டங்களில் பணம் போட்டிருந்தார்கள். அரை நூற்றாண்டு அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களில், சிறந்தவை அனைத்திலும் குடும்ப நபர்களுக்கு கணக்குகளைத் துவங்கியிருந்தார்கள். 

கடந்த மாதத்தின் இறுதி மூன்று நாட்களும், நடப்பு மாதத்தின் முதல் மூன்று நாட்களும் தர்பன் கருவி பயன்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தன. பயிற்சி நாட்களுக்கு இரண்டு நாள் முன்பெல்லாம் தர்பன் பிரவீன் கைகளுக்கு வந்திருந்தது. ஆனால், உபயோகிக்க முடியவில்லை. கைரேகையைக் கொண்டு திறக்கும் கருவி, பிரவீன் கைரேகையை ஏற்கவில்லை; தொழில்நுட்பக் கோளாறு. 

அஞ்சல் தொழில்நுட்பத் துறை, ‘இதோ சரியாகிவிடும்’ என்றது. மாதத்தின் இறுதி நாட்கள். 

அஞ்சலகத்துக்கு வந்தவர்களை, ‘மூணு நாள் கழிச்சு வாங்க. புதன்கெழம போல’ என்று சொல்லி அனுப்பிவைத்திருந்த மூன்று நாட்கள் கழிந்திருந்தன. அன்று புதன்கிழமை. புது போஸ்ட்மாஸ்டரின் பதிலை நம்பிப் போயிருந்தவள், தொடர் வைப்புக் கணக்குப் புத்தகம் தன் வீட்டிலேயே இருந்ததைக் கண்டெடுத்திருந்தாள். சென்ற முறை, அப்புத்தகம் தீபாவிடம் கொடுத்தது, திரும்ப பெறாமலே அஞ்சலகத்தில் இருப்பதாய் நினைத்துவந்துவிட்டிருந்தாள்.

பிரவீனுக்கு முன்னிருந்த தற்காலிக போஸ்ட்மாஸ்டர் தீபா, தர்பன் கருவியில்தான் வேலைப் பார்த்துவந்தார். புது போஸ்ட் மாஸ்டர்களுக்குத்தான், ‘தர்பன் பயன்பாட்டு பயிற்சிக்குப் பின்தான் தர்பன் கருவி வழங்கப்படும். அதுவரை, கையால் கணக்கு எழுதிமுடிக்கும் பணப்பரிமாற்ற வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்’ போன்ற தொந்தரவுகள் எல்லாம். தர்பன் கருவி மடம் அஞ்சலகத்தில் வேலை செய்யாது; பிணங்கிக் கொள்ளும். அலுவலகத்துக்குள்ளும் வெளியிலும் சிக்னல் கிடைக்காது. பிணக்கத்துக்குத் தோதான காரணம். 

தீபா, அத்திப்பாக்கத்தில் இருந்து மடம் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தவள். தற்காலிகப் பணியாளர். வெறும், டெம்ரவரி! தன் வீட்டிலேயே அலுவலகம் அமைத்துக்கொள்ளும் உரிமை, ஒரு டெம்ப்ரவரி ஸ்டாஃப்புக்கு இல்லை. தன் வீட்டுக்கே மக்களின் கணக்கு புத்தகங்களையும், பணத்தையும் எடுத்துச் சென்று பணத்தை அவரவர் கணக்கில் ஏற்றி எடுத்து வருவாள். அதனால், அன்று வரும் வேலை அடுத்த நாள் கணக்கில் சேர்க்கப்படும். அலுவலகத்துக்கு வரும் முன்பே காலை நேரத்தில் வீட்டிலேயே பணப் பரிமாற்றங்களைச் செய்துவிட்டு வருவாள். எனவே, கொடுத்த கணக்குப் புத்தகம் உடனே மக்கள் கைகளுக்கு வந்ததில்லை. கணக்குத்தாரர் கொடுத்துச் சென்ற புத்தகத்தை, பிறகு வந்து வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேலைக்கு, இரண்டு நடை. சிக்னல் கிடைக்காத குறைக்கு மக்கள் நடந்தாக வேண்டும்… நடைமுறைக் கோளாறு! 

புது போஸ்ட் மாஸ்டர் வந்தச் செய்தி, அவளுக்குத் தெரியாது. சத்தமில்லாமல் வேலைக்கு வந்தார், புது போஸ்ட்மாஸ்டர்… அவளுக்குச் சத்தத்தோடு வந்திருந்தாலும் கேட்டிருக்காது என்பது தனி. அவள் தீபாவை எதிர்பார்த்துதான் வந்திருந்தாள். ஆனால், அலுவலகத்தில் இருந்தது பிரவீன். ஏமாற்றத்தைக் காட்டாத புன்சிரிப்பு அவளுடையது. இளமையின் உருவில். 

இந்தமுறை, புது போஸ்ட்மாஸ்டரை எதிர்பார்த்து வந்திருந்தாள்… அலுவலகத்தில் இருந்தது சாக்கலேட்டு பேச்சியம்மா. ஊரறிந்த சாக்கலேட்டு. கிராமத்துக்கு அலுத்துப்போன விருப்பமற்ற சாக்கலேட்டு – பிடிக்காமல், வாயில். துப்பிவிட முடியாமல். கடைவாய் பல்லில் அடைந்த சொத்தைப் பல் சாக்கலேட்டு. 

அலுவலகத்தில் பிரவீன் இல்லை. புது போஸ்ட்மாஸ்டர்களுக்கான தர்பன் பயிற்சி வகுப்புக்கு சென்றிருந்தான், பிரவீன். கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பயிற்சி. மடம் கிளையில் அலுவலர்கள் விடுமுறை எடுத்தால், மாற்று அலுவலராக பொறுப்பேற்பவர், சாக்கலேட்டு பேச்சியம்மா தான். அப்போதும், எப்போதும்! அவளுக்கு அலுவலகத் துணையாய் எக்ஸ் பிபிஎம் ஜோசப் சார். 

அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரிடம் இருந்து திடீரென வந்திருந்தது, அறிவிப்புக் கடிதம்… ஒரு வாரத்துக்கு தர்பன் பயிற்சி. முன்னமே தெரிந்திருந்தால், மூன்று நாட்கள் கழித்து வாருங்கள் என்ற பொது பதிலை எல்லோரிடமும் சொல்லியிருந்திருக்க மாட்டான். 

‘போஸ்ட்மாஸ்டர் இல்லை’, பேச்சியம்மாவிடமிருந்து பதில் வந்தது. 

அவள் திருப்பி அனுப்பப்பட்டாள். இரண்டாம் நடையிலும் ஏமாற்றம். 

‘யான்ன்?’ திருப்பிக் கேட்டாள். 

கேள்விக்கு கிடைத்த அசட்டைப் பதில்களால் வாடியது அவளின் புன்சிரிப்பு. வாடிய நடையோடு வீடுவரை அவள் போய்விட்டாள். 

‘சார். குட் மார்னிங் சார்.’ 

‘குட் மார்னிங் பா. சொல்லுங்க’, மென்மையாய். தலைமை அலுவலகத்தில் தன் அறையின் ட்யூப்லைட் சுவரை ஒட்டி, தளராத புது ஒயர் நாற்காலியில் உட்கார்ந்தபடி பேசினார். 

‘மடம் பி.பி.எம் பேசுறன் சார்’ 

‘சொல்லுங்க. என்ன விஷயம்?’ ஒரு துளி வெந்நீர் விழுந்தது. 

‘தர்பன் ட்ரெயினிங் போட்ருக்காங்க சார்… ஊர்ல ஆர்.டி, ஆர்.பி.எல்.ஐக்கு லாம் பணம் கட்டணும். இல்லனா ஃபைன் வந்துரும். என்ன சார் பண்ணலாம்?’ வழிவேண்டி இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் கரிகாலனுக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து பிரவீன் பேசினான். 

ஆர்.டி என்பது ரெக்கரிங் டெபாசிட்/ தொடர் வைப்புக் கணக்கு. ஆர்.பி.எல்.ஐ என்பது ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ்/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு. 

காலைநேர தர்பன் பயிற்சி இடைவேளையில், பயிற்சிக்கு வந்திருந்த சகப்பணியாளர்கள் டீக்கடையில் ஒரு கையில் டீ கிளாசும், மறு கையில் சுடுவடையுமாய் இருந்தார்கள். எண்ணெய்க் கொப்பரையில் நுரையோடு துள்ளின ஓட்டை வடைகள். கொஞ்சம் ஆறிய உருளைக் கிழங்கு போண்டாக்கள் பெரிய தாம்பாலத் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. சீவிவைத்த வாழைக்காய்கள், பஜ்ஜியாகிட காத்திருந்தன. பிரவீன், டீக்கடைக் கூட்டத்தின் சத்தத்திலிருந்து தள்ளிநின்று ஃபோன் பேசிக்கொண்டிருந்தான்… 

‘உங்க ஊருக்கு நீங்க தான்பா பாக்கணும்’, விறகடுப்பின் கொதிநீர் வாசம் அவர் பதிலில். ‘நான் என்ன பண்றது சொல்லுங்க?’

மௌனம் சாதிக்கும் என்றால் மௌனம் இருக்கட்டும். பிரவீன் கொதிநீரின் வாசம் மட்டும் நுகர்ந்துகொண்டான். பதில் பேசவில்லை.

‘அவசரம்னு வந்தாங்கனா போய் உங்க சப் ஆஃபீஸ்ல கட்டிக்கச் சொல்லுங்க. ஒரு மாசம் பொறுக்க மாட்டாங்களா?’ 

காதிலிருந்து ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தான் பிரவீன். 

மீண்டும் கன்னத்தில் ஃபோனை ஒட்டி, ‘சார் தப்பா நெனக்காதீங்க. ஊர்ல வயசானவங்கலாம் இருக்காங்க. பன்னண்டு கிலோமீட்டர் எப்படி சார் போய் கட்டுவாங்க?’ 

கடைசி நேரத்தில் பணப் பரிமாற்ற வேலையை நிறுத்திவிட்டு, மாத இறுதியில் முன் தகவலின்றி தர்பன் பயிற்சி நடத்தினால், மக்கள் பணம் செலுத்த முடியாமல், அவர்களுக்கு வரும் தாமதக் கட்டணத்துக்கு யார் பொறுப்பேற்பது? 

‘வேல செய்ய சொன்னா செய்றதில்ல. வாய்மட்டும் பேசுறீங்க. எத்தன அக்கவுண்ட் புடிச்சி இருக்கீங்க?’ அவருக்குத் தெரியும் ஊசி இறங்குமிடம்.

‘பதினஞ்சு இருக்கும் சார்.’ அத்தனையும் அலுவலகத்துக்கு தாமாக வந்து சொந்த விருப்பத்தில் துவங்கப்பட்ட கணக்குகள். 

‘தெரியும்ல? அக்கவுண்ட் டார்கெட் நானூத்தி அம்பது…’ நானூத்தி ஐம்பது அழுத்திச் சொன்னார். அவர் வைத்துள்ள ஏகே ஃபாட்டி செவனை நினைவு படுத்துவது போல. 

‘தெரியும் சார். இப்பதான் வந்துருக்கோம். ஊர் பழக்கம் வேணும். புடிச்சிடுறோம் சார்’ சுட்டுவிட வேண்டாம். உண்மையைச் சொல்லி விடுவான். 

‘எவ்ளோ நாள்பா குடுப்பாங்க உங்களுக்கு? அப்படியே உக்காந்தே இருக்கக் கூடாது. கேன்வாசிங் போய் கேட்டாதான் போடுவாங்க. காரணம் சொல்லாதீங்க’, நூற்றைம்பது டிகிரியில் அவரின் கொதிநீர். 

‘பண்ணிடுறோம் சார்’, எரியும் விறகை வெளியெடுத்துவிட வேண்டும். சூதுவாது அறியணும். 

‘அப்றம், ஃபைன்க்கு கொஞ்சம் வழி சொல்லுங்க சார்’, அவர் கொஞ்சமாக சொன்னால் போதும். அதிகாரி அவர். 

‘அர்ஜெண்ட் புக்லாம் உங்க ஏ.பி.பி.எம்ம எடுத்துட்டுப்போய், உங்க சப் ஆஃபீஸ்ல கட்டச்சொல்லுங்க.’ 

‘தேங்க்யூ சார்’, கெஞ்சாத குரலுக்கு, கேட்காத காதுகள் அதிகாரிகளுடையவை. கேட்டுவிட்ட காதுகளுக்கு நன்றிகள்… கொஞ்சம் சூடுப்பட்டாலும், வெந்து நொந்தாலும், தொண்டையில் வலியோடு வந்தாலும், தேங்க்யூவும் மௌனமும் காரியத்தைச் சாதித்துக்கொண்டன. 

கரிகாலன் திருக்கோவிலூரின் தற்காலிக அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளர். இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ். திருக்கோவிலூர் அஞ்சல் அலுவலகத்தில் நிரப்பப்படாமல் இருந்த அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளருக்கான காலியிடத்தை, தற்காலிகமாக நிரப்பிச் சிறப்பிக்க கரிகாலனைத் தேர்ந்தெடுத்தார், அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர். உண்மையில், கரிகாலன் ஒரு க்ளெரிகல் ஸ்டாஃப்.

ஒரு அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளருக்கு தற்காலிக கிளை அஞ்சல் அலுவலர்களைப் பணியமர்த்தும் அதிகாரம் உண்டு. அவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரமும் அவருடையதே. 

தேர்வில் தரம் பிரியும் இருவகை பிரிவினர் – மேல் தற்காலிகள், கீழ்த் தற்காலிகள். 

‘எவருக்கு எவர் மேலே, எவருக்கு எவர் கீழே’ என்கிற அறிதல்தான் உலக அனுபவம். சமமான பெடலோடு ஓடும் சைக்கிள்கள் ஏது? 

மேல் தற்காலிகள், தட்டுமாற்றி முறையே சம்மந்தம் செய்து வந்தவர்கள் — தட்சணையில் குறையில்லை. ஜாம் ஜாம் திருமணம். 

கீழ்த் தற்காலிகள் குறை கௌரவச் சம்மந்திகள் — தட்சணையில் குறை வைத்தப் பெண் வீட்டார். அடியும் இடியும் பட்டே ஆக வேண்டும். 

‘வேல இல்லாம எத்-தன பேரு இருக்காங்க? உங்களுக்கெல்லாம் என்ன? வேல வேணுங்கும்போது சார்-சார் பிளீஸ் சார்னு கெஞ்ச வேண்டியது — பாவமேனு வேலக்கிப் போட்டா, சொல்ற அக்கவுண்ட் வந்து சேருரதில்ல.

‘அடுத்த மாசம் மேளா இருக்கு. பெர்ஃபார்மென்ஸ் சரியில்லனா, வேலய விட்டுட்டுப் போயிட்டே இருக்கலாம்’ 

இப்படியெல்லாம் உருட்டி மிரட்டி பொறுப்பாக வேலை செய்வதால்தான், கோட்டக் கண்காணிப்பாளர், தற்காலிக உட்கோட்ட ஆய்வாளரின் அந்தஸ்தையும், சம்பள வெகுமதியையும் கரிகாலன் பெறும்படி உதவியிருக்கிறார். 

இப்படி அவர் கீழ்த் தற்காலிகளைச் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும்போது, நெடுங்கம்பட்டின் வீட்டுவாசல்களில் துள்ளிக் குதிக்கும் அதிகாலை நேரத்து ஈரத் தவளைகளின் ஆனந்தத்தில் குதூகலிக்கிறார்கள், மேல் தற்காலிகள். அவர்கள் மாற்றிய தட்சணைத் தட்டுகள், அவர்களை திட்டு விழாமல் பார்த்துக்கொள்ளும். 

‘அதிகாரிகளின் வார்த்தைகளில் அனல் வீசத்தான் செய்யும். ஆனால், வேலையின்மையின் அனல் உயிரையே உருக்கக்கூடியது. அதிகாரி அப்படித்தான் இருப்பார். அவர் இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். அனுசரித்துப் போக வேண்டும். வேண்டிய கணக்குகளைக் கொடுத்துவிட்டால், அதிகாரிக்கு ஏன் கோபம்?’ என்பது கீழ்த்தற்காலிகளின் கருத்து. 

கீழ்த் தற்காலிகள், உட்கோட்டத்தின் மொத்த அஞ்சல் கணக்குகளின் இலக்கையும் எட்ட தனித் தீவிரத்தோடு உழைக்க எதிர்பார்க்கப் படுபவர்கள். அஞ்சல் மேளாவில் திருக்கோவிலூர் உட்கோட்ட ஆய்வாளருக்கு இலக்கை அடைந்துவிட்டதற்கான ‘சாதனையாளர்’ கௌரவத்தை வாங்கித்தர பாடுபடுபவர்கள். 

தற்காலிகளின் வாழ்வை ஒடுக்கிவிட வந்தவர்கள்தான், புதிய கிராம அஞ்சல் ஊழியர்கள். அவர்கள் நிரந்தரப் பணியாளர்கள்… காலிப்பணியிடங்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு பிடித்துக் கொண்டவர்கள் — இசை நாற்காலிகள் விளையாட்டுப் போல. கொஞ்சமும் அக்கறையற்ற கூட்டம். பொறுப்பற்ற பெருங்கூட்டம். 

இந்திய அஞ்சல் துறையின் நேரடித் தேர்ந்தெடுப்பில் முளைத்த சமீபத்திய காளான்கள். 

தட்சணையில்லாமால் வந்த பிடிக்காதச் சம்பந்தம். 

‘உங்க வேலயவே செஞ்சிட்டு இருந்தா, இங்க இருக்க வேலய யார் பாப்பா?’ மறுத்துவிட்டார் சப்-போஸ்ட் மாஸ்டர். உதவியாவது, இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் ஆவது! 

‘சார். டிவைஸ் முன்னயே கைக்கு வராததால அப்படி ஆயிருச்சி. மாசக் கடைசி வேற. கொஞ்சம் பண்ணித்தாங்க சார்’, நயந்து கேட்டது பிரவீனின் ஃபோன் குரல். மாட்டைத் தடவிவிடும் விதத்தில். 

‘அவ்ளோ அர்ஜெண்ட்னா போய் ஹெட் போஸ்ட் ஆஃபீஸ்ல ஐபி கிட்டயே கட்டச் சொல்லு. நேரங்கெட்ட நேரத்துல ட்ரெயினிங்கு… டிவைசுனு… உயிர வாங்கிக்கிட்டு’. (ஐபி – இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ்) 

கோபத்தைக் கொட்டி முடித்துவிட்டு, ‘பூரா புக்கையும் மகா கிட்ட குடுத்து அனுப்பாத. அர்ஜெண்ட்க்கு அஞ்சு புக், பத்து புக் அனுப்பிவிடு. போட்டுத் தரேன்’ என்று சொன்னார். இறுதியாக இரண்டு படிக்கட்டுகள் இறங்கியது சப்-போஸ்ட் மாஸ்டர் மனம். 

வேறு பணியிட நியமனத்தை ரத்துசெய்துவிட்டு, சொந்த ஊருக்கே போஸ்டிங்கை கேட்டு வாங்கிக்கொண்டு வந்தவர், சப்-போஸ்ட்மாஸ்டர் சைமன். பணியிட மாற்றங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு, கடைசிவரை சொந்த ஊரிலேயே பணியில் இருக்க நினைப்பவர். பத்து வருட போஸ்ட்மேன் அனுபவத்தில், அவர் சேர்த்து வைக்காத ஆள் பலம் இல்லை. அதில் ஒரு ஆள் சூப்பரின்டென்டண்ட் — கோட்ட கண்காணிப்பாளர்! 

அவர் தயவில்தான் சைமனுக்குச் சொந்த ஊரிலேயே வேலை‌. அவர் தயவில்தான் கிளெரிக்கல் ஸ்டாஃப் கரிகாலனுக்கு, தற்காலிக ஐ.பியின் அனுகூலம். முப்புள்ளியில் அவர்களுக்குள் முக்கோண வடிவில் புரிதல். அவர்கள் பரிமாற்றிகள். பெரியவர்கள் ஊதும் இராசயன குமிழிகளைத் தங்களுக்குள் பரிமாற்றிக் கொள்பவர்கள். அது பெரியவர்கள் விளையாட்டு — ஆளை விழுங்கும் பெரிய பெரிய குமிழிகள்— சட்டென்று உடையாத பல வண்ணக் குமிழிகள். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சங்கள்…  

மகாலட்சுமி தந்த கணக்குப் புத்தகங்கள், நான்கைந்து நாட்களாக சப்-போஸ்ட்மாஸ்டர் சைமனின் மேசைக்கடியில், அவரின் அசட்டை நாற்காலியை பூத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தன. அவர் தரையில் வைத்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கக் குனியும்போதெல்லாம், அப்பா தூக்க வரும்போது கைகளை உயர்த்தும் குழந்தையைப் போல, தம் கைகளை உயர்த்திக் காட்டி ஏங்குகின்றன கணக்குப் புத்தகங்கள்… அப்பாவுக்குத் தாகம். தண்ணீர் குடிக்கக் குனிந்தார். புரிஞ்சிக்கோங்க புள்ளைங்களா! 

நான்கைந்து நாட்களில் மாத இறுதியும், தர்பன் பயிற்சியும் முடிந்திருந்தது.

பழுப்புநிற மேசை அதிர்ந்தது. அலுவலக மேசையில் வைப்ரேஷனோடு நகர்ந்துபோனது, மொபைல்ஃபோன். 

‘பிரவீனு! மாசக் கடைசி பாரு. ஆஃபீஸ்ல நெறய வேல வந்துபோச்சி. செய்-யவே முடியல உன் வேலய. ஃபைன் வேற வந்துருக்கும் பாரு. எப்படி நீ மடத்துலயே கட்டிக்றியா என்ன?’ சாதாரணக் குரலில். 

எழுநூற்று இருபத்தி ஐந்து ரூபாய் தாமதக் கட்டணம். பிரவீனின் சம்பளத்தில் இருபதில் ஒரு பங்குதான். பெரிய இழப்பில்லை. இருபது குமிழிகளில் ஒரு குமிழி, சொந்தக் கிளைக்காக இந்திய அஞ்சல் பெட்டிக்குள் போய் மறைந்தது.

Leave a Reply