பணி விலகல் கடிதத்தை எழுதி முடித்து, காக்கி உறைக்குள் வைத்து ஒட்டினான். ஐந்து ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி, அஞ்சல் தலையில் அஞ்சல் முத்திரை பதியும்படி ஒரு குத்து. ரெஜிஸ்டர் லெட்டருக்கு எக்ஸ்ட்ரா பதினேழு ரூபாய். ஒரு வேளை, சப்-போஸ்ட்மாஸ்டர்வழி டிபார்ட்மெண்ட் லெட்டராகவே அனுப்பினால் பைசா செலவில்லை.

வந்த முதல் நாளே தெரியும். வருபவர்கள் எல்லாம் புகைப்படம் போல் அலுவலகத்தின் பட்டியில் கொஞ்சம் நாளைக்கு இருந்துவிட்டுச் செல்பவர்கள்தான் என்று. ஏதோ ஒரு நாள் அதில் பிரவீன் புகைப்படமும் கழன்று வேறொருவருடையது வந்திடத்தான் வேண்டும். இதெல்லாம் நடக்கும் நாள் எதுவென்பது மட்டும்தான் தெரியாமல் இருந்தது. மணல் கடிகாரத்தில் மணல் இறங்கி முடியப் போகிறது. அந்தக் கடிதம் அனுப்பியதும், அடுத்த மூன்று நாட்களில்… 

நேற்று முளைத்த காளான், மேலும் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க போவதில்லை.

மன நலத்தில் பட்டிருந்த சிகரெட் தீயின் ஓட்டை மெல்ல மூடிவிட்டிருந்தது. ஆனால், உள்ளுணர்வின் ஈரப் பாசிகள் பிணமாய் மிதந்து கொண்டிருந்தன.

இலை சருகுகளின்மேல் பாய்ச்சும் சுடுநீர் பற்றிய புகார்கள், இரு சுவர்களுக்கிடையிலேயே மறைத்துவிடப்படும்.

மூடப்படாமல் திறந்திருந்த ஜன்னல்கள், பிரவீனுக்கு காய்ந்த இலைச் சருகுகளின் அவலங்களைக் காட்டியிருந்தது.

அவை

காய்ந்த இலைச் சருகுகள்;

வேண்டப்படாதவை.

அவற்றால் பயனில்லை.

பச்சையம் பழுப்பாகிவிட்டது.

அவை

தன் சொந்த மரத்தால்

கைவிடப்பட்ட அனாதைகள்.

அந்தக் குலுக்கல் பையனின் அறியாமை உடைந்துவிட்டது. இனியும் அவன் அந்த லஞ்ச் டப்பாவுக்காக ஓடப்போவதில்லை.

காக்கை தடைகளின்றி வானத்தில் உயர பறந்துகொண்டிருந்தது. வெய்யிலின் வெம்மையில் பறந்தாலும், தனக்கென தனி அடையாளம் தேடி பறந்தது. புங்கைமரத்தின் நிழலில் இல்லை. அதனுடைய நிழல் யாருக்கேனும் குளிரலாம். காக்கை கருப்புதான். அதன் நிழலின் கருப்பில் வெம்மை அகலும். 

பறக்க முடிந்தவன், பறக்க வேண்டும்!

மேசை மின்விசிறியைத் துடைத்து அட்டைப்பெட்டியில் எடுத்து வைத்தான். அவனுடைய சொந்த மின்விசிறி அது. பழங்காலத்து மாதிரியில் ‘சின்னி’ கருப்பு மின்விசிறி.

மகாவின் விடுப்பு விண்ணப்பம் மேசையில் இருந்தது.

பாராத நேரத்தில், அமலூரு பாட்டி வாசலில் தோன்றினாள். அவள் சத்துக்குத் தூக்க முடியாமல், கனமான மஞ்சள் பையைக் கையில் தொங்கவிட்டபடி நின்றிருந்தாள்.

அவளுடைய தினுசுக்கு அவன் எப்போதும் அடிமை. 

அவனே ஆரம்பித்தான். ‘என்ன பாட்டிக் கைல?’

‘உனக்குத்தான்… மாங்கா கொண்டாந்தேன்,’ இயல்பைவிட பொலிவு குறைந்திருந்தாள்.

‘என்ன இதெல்லாம் புதுசா… எதுக்கு?’

‘வெச்சிக்கோ’, கம்மும் மழலையில்‌.

‘என்ன பாட்டி? விசேஷமா?’ திரும்ப கேட்டான்.

‘ஏன்யா… நீ வேலைய உட்டுப்போறியா?’ எலிமுகத்தோடு அமைதியாய்.

‘ஒடனே இல்ல பாட்டி. இன்னும் கொஞ்சம் நாள்ல’

‘நீ போயிட்டா யாருய்யா எங்களுக்கு காசு குடுப்பாங்க?’ துளி நம்பிக்கை இல்லாமல்.

‘நான் இல்லாட்டியும் குடுப்பாங்க பாட்டி,’ தேற்றினான்.

‘வேணாம்யா. இங்கியே இருய்யா. இதே ஊர்ல… இந்தா — மாங்கா எடுத்து வெச்சிக்கோ!’

‘வர்றவங்களும் குடுப்பாங்க பாட்டி’ பற்றாத சமாதானம் அது. 

‘வேணாம்யா. நீ போவாதய்யா. நான் சாவுற வரைக்கும் நீயே குடுயா. உன் கைலியே வாங்கிக்கிறோம்,’ நெஞ்சில் கைகூப்பினாள் கண்ணீரோடு. 

Leave a Reply