Featured Image

மழை பெய்து கொண்டிருந்தது. ஈரத்தில் தொப்பறையாய் நனைந்துபோன புங்கைமரம், கீழே நிறுத்தியிருந்த கருப்பு பேஷன் ப்ரோவுக்கு சல்லடை நீரூற்றிக் குளிப்பாட்டியது. கருப்பு பேஷன் ப்ரோ குளித்துவிட்டு இன்னும் கருப்பானது. தன்னியல்பு துறக்கா பேஷன் ப்ரோ!

துரு பிடித்திருந்த அஞ்சல்பெட்டி மழையில்பட்டு ஈரச் சிவப்பானது… மக்களின் சேவைக்காக மழையில் நனையும் சேவகன்! துரு பிடித்திருந்தாலும், ஒடுங்கி வளைந்திருந்தாலும் உழைக்கும். கொஞ்சம் ஒடுங்கி நெளிந்தச் சோத்து டப்பாவும் சோறு பிடிக்கும்; பசியாற்றும்.

அடர்மழையில் முந்தானையைத் தலைமேல் போட்டுக்கொண்டு வந்தாள் முதியவள். ஈர முந்தானையை அலுவலகத் திண்ணையிலேயே பிழிந்தாள். முகத்தையும் கைகால்களின் ஈரத்தையும் அதே முந்தானையில் துடைத்துவிட்டு, மீண்டும் பிழிந்துவிட்டு உதறினாள்.

அவள் கண்களைச் சுற்றிக் கொஞ்சம் சுருங்கிய தோலோடு, கொஞ்சம் உப்பிய வீக்கம் இருந்தது. பார்த்ததும் கண்டுகொள்ளும்படி பலவீனமாக இருந்தாள். 

‘பணம் எடுக்கணும் கொஞ்சம்’, அவளை மீறி வளைந்து விழுந்த சொற்களை நீட்டிப்பிடித்துச் சொன்னாள்.

‘எப்பமா வேணும்?’ உடனே வேலை செய்யாது, தர்பன். ஆஃபீஸில் சிக்னல் கிடைக்காது. அந்த மழைக்கு வெளியில் சென்று, அவசரத்துக்கு அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

‘இப்ப வேணும்’, இயலாமையோடே.

‘இப்பயேவா… ஏதாச்சும் அவசரமா?’ அவசரமென்றால் வித்ட்ராவல் படிவத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, தன் கையில் இருக்கும் பணத்தை அவளுக்கு கொடுத்துவிடுவான். அடுத்தநாள், அவள் கணக்கில் இருந்து அந்தப் பணத்தை அவன் எடுத்துக்கொள்வான்.

‘ஆமா. ஆஸ்பத்திரி போவணும்’

‘எவ்ளோ பணம் எடுக்கணும்?’ படிவத்தில் நிரப்பக் கேட்டான்.

‘ஆயிரம் குடேன்’

நல்லவேளை, கையில் அவன் சொந்தப் பணம் ஆயிரத்தைநூறு இருந்தது.

‘பாட்டி, கையெழுத்து போடுவீங்களா?’

‘ஆஹன், கைநாட்டுத்தான்’

வழக்கமாக ட்ராவருக்குள் வைக்கும் இடத்தில் ஸ்டாம்ப் பேட் இல்லை. மகாதான் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். தன்னுடைய பொருளை எடுத்துவர மறந்துவிட்டு, அவசரத்துக்கு அலுவலகப் பொருளைச் சொல்லாமல்  எடுத்துச்செல்வது அவ்வப்போது நடக்கும்.

கடிதம் கொடுக்கப்போனவள், மழை வந்ததால், ஏதோவொரு வீட்டில் ஒதுங்கியிருப்பாள். அவள் வரும்வரை பொருத்தாக வேண்டும்.

‘போஸ்ட் குடுக்க பாப்பா வெளிய போயிருக்கு மா. மை பாப்பா கையிலதான் இருக்கு. உக்காருங்க கொஞ்சம் நேரம். மழ வேற பெய்யுதுல்ல. பாப்பா வந்ததும் போயிரலாம்’, அவள் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்.

‘சேரி’, தலையாட்டினாள். பணத்தை வாங்கிக்கொண்டவள், கையில் சுருட்டி வைத்துக்கொண்டாள்.

மழை உடனே ஓயவில்லை. பாட்டி ஸ்டூலில் அமர்ந்திருக்க, அவன் வேலையைத் தொடர்ந்தான். அந்நாளுக்கான கணக்கை முடித்துக் கொண்டிருந்தான்‌.

ஜன்னலில் கரையான் காரையை அரித்துவந்த மண், மழையில் அடித்துக்கொண்டு அலுவலகத் தரைவரை நனைத்திருந்தது. அதில் பிரவீன் கால்வரை தண்ணீர் வந்துவிட்டது. அவன் செருப்பிலும் மண் ஒட்டிக்கொண்டிருந்தது. காலில் அணிந்திருந்த இரு செருப்புகளையும் தேய்த்து, ஒட்டியிருந்த மண்ணை உதிர்த்தான். உதிர்ந்த மண்ணால் மேசைக்கடியில் குப்பையாகிவிட்டது.

நாளைதான் மீண்டும் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு குனிந்த தலையை நிமிர்த்தினான்.

நிமிர்ந்ததும், பார்வை பாட்டியைத் தொலைத்திருந்தது. பாட்டியைக் காணவில்லை. பிரவீனுக்கு ‘திடுக்’ அதிர்ச்சி.

முதியவளின் பெயர் தெரியவில்லை. தன் பாஸ் புத்தகம் மேசையில் இருந்ததை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், கையோடு எடுத்துச் சென்றுவிட்டிருக்கிறாள். சொல்லாமலே கொட்டும் மழையில் காணாமல் போய்விட்டாள். இடக்கை பெருவிரல் ரேகை இன்னும் உருட்டப்படவில்லை. வித்ட்ராவல் படிவத்தில் பெயர் எழுதப்படவில்லை. ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது.

எத்தனை நஷ்டம்! முடிச்சாகிப் போனது பிரவீனுடைய நெஞ்சம். இறுகிக்கொண்டே போனது இதயம். அலுவலகத்துக்கு வெளியே வந்து, இடமும் வலமும் பார்த்தான். கண் தெரிந்த தூரம்வரை அவள் இல்லை. எப்போதுதான் நழுவினாள்? வேலையில் மூழ்கிவிட்டிருந்தான். கவனத்தில் இல்லை. இருக்கையில் மீண்டும் வந்தமர்ந்தான். மழைநேரம். எங்குப்போய்த் தேடுவதென்றும் தெரியவில்லை. குழப்பம் உலுக்கியது.

மீண்டும் ஈர முந்தானையைத் தலையில் போட்டபடி முதியவள் வந்தாள். பிழியாமல் திண்ணையில் வெறுமனே உதறினாள்.

அவன் நெஞ்சில் முடிச்சு இளகியது.

‘எங்க பாட்டி சொல்லாமலே போயிட்டீங்க?’

‘ஒன்னுக்கிருக்கப் போனன்’, இயலாமை அவளை நீங்காமல் இருந்தது. 

மீண்டும் அவள் ஸ்டூலில் அமர்ந்துகொண்டாள், மகா வரும் வரை காத்திருக்க.

திக் நிமிடங்கள் முதியவளை கணநேரத்தில்  திருடியாக்கிவிட்டது. பாழாய்ப் போன நெஞ்சம். 

மகா வந்ததும், ஸ்டாம்ப் பேடின் நீல மையில் இடக்கைப் பெருவிரல் ரேகையை உருட்டி முறைப்படி ஆயிரம் ரூபாயை தன்னுடைய பணம் ஆக்கிக்கொண்டாள்.

சோவென பெய்துவிட்டபின், வானம் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மழையால் அன்று கொடுக்க முடியாமல்போன மீதிக் கடிதங்களைக் கொடுத்துவிட்டு, கூடவே கேன்வாசிங் செய்வதற்காக பிரவீனும் மகாவுடன் போயிருந்தான். மாதா கெபி வரை கேன்வாசிங் நடை. மகா கடிதம் கொடுக்கும் வீடுகளிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் பிரவீனுக்கு கேன்வாசிங் பணி.

‘ஏன் சார்…’, விசாரிக்க ஆரம்பித்த வீதியின் வாசல் மனிதர்கள் கணக்கு துவங்காமல் கேள்வியால்மட்டும் துளைத்தெடுத்தனர்.

‘ஓ, அஞ்சு வருஷத்துக்கா ஆர்.டி? அதுக்குக் கீழ கெடையாதா — எங்க சார் அவ்ளோ வருஷம்?’ ஒரு வாசலில்.

‘போஸ்ட் ஆஃபீஸ்ல ஏன் வட்டியெல்லாம் கம்மியா இருக்கு? வெளிய உட்டாலே ஒர்ரூவா ரெண்ரூவா வட்டி வருது. கவர்மெண்ட்ல தந்தா என்ன?’ இன்னொரு வாசலில்.

வாசல்களில் பதில்சொல்லி வருவதற்கிடையில், மகா வெகுதூரம் கடந்து போயிருந்தாள். இராட்சத சிவப்பு கேட் கொண்ட வீட்டில் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, கேட்டின்முன் இருந்த சரிவில் நின்று பேசிக்கொண்டிருந்தாள். பிரவீன் இடையில் வந்து இணைந்து கொண்டான். 

வீட்டின் முன்றிலில் சாய் நாற்காலியில் சாய்ந்தபடி, மர ஸ்டூலில் கால் போட்டுக்கொண்டு, அவள் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். ஆங்கிலத்தில் ஏதோ கதை புத்தகம். கத்திரி நிறத்தில் இருந்தது புத்தக அட்டை. புத்தகத்தின் பெயர் பிரவீன் கண்களுக்குத் தெரியவில்லை. 

வாயிலில் அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு சத்தம், அவள் படிப்பதற்குத் தடையாயில்லை. நிசப்தம் மட்டுமே அவளை நிறைத்திருந்தது. காதில் விழாத சப்தம், அவள் கவனத்தை சிதறடிக்கவில்லை. தனக்குத் தானே படித்துக்கொள்ள அவளுக்கு பேச்சு வராதது தடையல்ல.

அவள் சாய்ந்திருந்த நாற்காலியின் டைல்ஸ் சுவரில், மெரூன் பலகையில் ‘பால்ராஜ் எம்ஏ., எல்ஐசி.’ என்று குடும்பத்தலைவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் பிரவீனுடைய புருவம் உயர்ந்தது.

உயர்ந்த புருவத்தோடு மகாவின் பக்கம் திரும்பிக் கேட்டான். 

‘இவங்களயா சொன்ன?’ சத்தம் குறைத்துப் பேச எந்த முயற்சியும் இல்லாமல். 

ஆம், இல்லை என்று எதுவும் சொல்லாமல் மகாவின் இடமறிந்த தற்காப்பு பார்வையே பதிலானது.

‘என்னதுபா?’ தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதறிந்து, அது என்னவென்பதறியாமல் கேட்டார், பால்ராஜ் மனைவி. 

‘இந்தப் பாப்பாவ திட்டி அனுப்ச்சிட்டாங்களாமே — அது நீங்களா?’ வீசிய எரிவளைதடு வீட்டுக்கே வந்து வீசியது நீயா என்று கேட்பதுபோல்.

‘திட்டலாம் இல்லப்பா. சும்மாதான் கேட்டன்’, ஒரு அடி பின் வைத்தார்.

‘அக்கவுண்ட் போடச் சொல்லித்தான கேட்ருக்கு அந்தப் பாப்பா. அதுல என்ன ஒழுங்கு இல்ல? ஊர்ல அவேர்னெஸ் குடுத்து அக்கவுண்ட் ஆரம்பிக்கிறதும் எங்க வேலதான?’ நியாயம் கேட்டது பிரவீனுடைய கோபம்.

பசங்களை விரட்டும் அரசுப் பள்ளி டீச்சர், அந்த நேரம் அமைதியாய் இருந்தார்.

‘உங்க பொண்ணு மேல அக்கற இருந்தா, நீங்க யாராச்சும்தான ஆஃபீஸ் வரணும். இன்ன காரணத்தால வேல ஆகல, ஆஃபீஸ்ல பிரச்சனனு நாங்க சொல்லி அனுப்பனும்ல. அவங்கள அனுப்ச்சா எப்படி ஒழுங்கா சொல்லி அனுப்ப முடியும்?’ நிற்காமல் தொடர் கேள்விகள்.

‘நீங்கதான் புது போஸ்ட்மாஸ்டரா?’ அரசுப் பள்ளி டீச்சர், சங்கடத்தோடு.

‘ம்ம்’, சங்கடத்தைக் குறைக்க ஆட்டும் தலையோடு.

‘நீங்க புது ஆளு மாறுனதே தெரியாம கேட்டுட்டன்பா’, சங்கடம் குறையாமல். ‘முன்ன இருந்தவங்க மேல வந்த கோவம்… சாரி!’

டீச்சரைத் தொடர்ந்து பேசவிட்டான்.

‘என் மகளுக்கு அக்கவுண்ட் இல்ல. அன்னக்கி அவ எடுத்துட்டு வந்தது அவங்க அப்பாவோட புக்கு… நீங்க இல்லனு சொல்லிப் பழைய போஸ்ட் மாஸ்டர் பொண்டாட்டி திருப்பி அனுப்பி விட்ருக்கு’, இரண்டாம் முறை அலுவலகம் வந்துபோன விஷயம், டீச்சர் சொல்லித்தான் பிரவீனுக்குத் தெரியும்.

‘ட்ரெய்னிங்ல இருந்தப்ப வந்துருப்பாங்க. முன்னயே சொல்லாம திடீர்னு ட்ரெய்னிங் போட்டுட்டாங்க — அதான். இல்லனா முன்னயே டைம் ஆகும்னு சொல்லியிருப்பேன்’, தன் பக்கக் கோளாறுக்கு வருத்தம் தெரிவித்தான்.

‘பரவால்ல. என் பொண்ணு பேர்லதான் ஒரு அக்கவுண்ட் போட்டுவிடுங்களேன்’.

எதிர்பாராமல் குழியில் விழுந்தது கேரம் காய். குறி வைக்காத ஸ்ட்ரைக்கருக்கு விழுந்தது பரிசு.

முதல் வெற்றி அக்கவுண்ட். எதிர்பாராமல் கிடைத்தது. ‘பிகின்னர்ஸ் லக்!’ பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் திரு. மனோ மதிவாணன் சொல்வது. பட் டூ லேட் ஃபார் எ பிகின்னர்!

‘எங்கிட்ட இப்படிலாம் பேசலண்ணா… உங்ககிட்ட மட்டும் சைலண்ட் ஆயிட்டாங்க. என்ன திட்டிட்டு, நீங்க கேக்கும்போது உங்களுக்கு மட்டும் அக்கவுண்ட் போடுறாங்க’, மகாவுக்குத் தான் வாங்கியே திட்டே பரவாயில்லை. பிரவீனிடம் டீச்சர் பணிந்து போனதுதான் தொண்டையிலிருந்து இறங்காமல், வழியிலேயே நின்றது.

Leave a Reply