அஞ்சல்மரமும், மக்களும்… (ஒப்பம் நாவல், அதி. 6)

Featured Image

வெக்கையான மதியநேரம். இறுதிநேரத்து ஈக்கள் கூட்டம் வந்து அலுவலகத்தை மொய்த்துக் கிளம்பியிருந்தது. 

அன்றைய நாளுக்கான கணக்குமுடிந்து, இந்திய அஞ்சல் சின்னம் பொறித்த கருநீல அஞ்சல்பையை எடுத்துக்கொண்டு, சைக்கிளில் மகா அத்திப்பாக்கத்துக்குச் சென்றிருந்த நேரம். 

பசியில் பிரவீன் வயிறு ‘குவாங். குவாங்…’ என்று கத்தியது. வெக்கையில் உதடுவெடித்த வாய்க்கு உணவு தந்தாக வேண்டும். 

தன் வேலை முடிந்தும் முடியாமலும் பேப்பர் ராக்கெட்டாய் எப்போதும் பறந்துவிடும் மகாலட்சுமி, அத்திப்பாக்கம் அலுவலகத்தில் தினமும் தரையிறங்கி, மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் அவள் வீட்டுக்கு பறப்பாள். 

அன்று கேன்வாசிங் வேலை இருந்தது. அத்திப்பாக்கத்திலிருந்து மீண்டும் அவள்  மடத்துக்கு வந்து வேலை முடித்தாக வேண்டும். பேப்பர் ராக்கெட், நூல்பிடித்திழுத்த பட்டமாய் வேலையில் சிக்கிக்கொண்டது. 

இடைப்பட்ட நேரத்தில், உணவருந்திவிடலாமென்று பிரவீன் வீட்டுக்குக் கிளம்பினான். அப்போது, தீக்ஷா பாப்பா பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் அன்று சாப்பாடு எடுத்துக்கொண்டு போகாததால், மதிய உணவுக்கு அவளை வீட்டுக்கு அழைத்துவந்து, அவளுடைய சின்ன ‘கின்னி’யில் சோறுபோட்டு, சின்ன ‘குவாங் குவாங்’ வயிற்றை நிரப்பி, அவிழ்ந்திருந்த அவள் சிவப்பு ரிப்பன்களை இழுத்துக்கட்டி, அவள் குட்டி ஷூக்களைப் போட்டுவிட்டுக் கிளப்பினாள், தீக்ஷா அம்மா. 

‘அண்ணா, எங்க போறீங்க? அத்திப்பாக்கம் போவீங்களா?’ பிரவீனிடம் தீக்ஷா அம்மா கேட்டாள். 

‘என்ன விஷயம் மா?’ திரும்ப கேட்டான். 

‘இல்லண்ணா, சாப்ட பாப்பாவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தாரு அவங்கப்பா… தோ வந்துர்றேனு எங்கையோ போனாரு. ஆளக் காணோம். கொஞ்சம் பாப்பாவ ஸ்கூல்ல உட்டுர்றீங்களா?’ 

வேக வேகமாய்க் கிளப்பி, தீக்ஷா முகத்தில் பவுடர் அப்பினார். ஒரு குள்ளப் பேய் வந்து மறைந்தாள். இரண்டு மணிப்பொழுதுகளுக்கு மட்டும்! அப்பிய பவுடரைத் தன் தோளில் போட்டிருந்த துண்டால் துடைத்து சரி செய்தாள், தீக்ஷா அம்மா. 

கருப்பு பேஷன் ப்ரோ, ‘முன்னாள் பவுடர் பூதம்’ வெள்ளை குள்ளப் பேய், பிரவீன் மூவரும் அத்திப்பாக்கம் பள்ளிக்குக் கிளம்பினார்கள். 

குள்ளப் பேய் இரவில் வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கும் ஆட்களின் நெஞ்சில் ஏறியமர்ந்து அழுத்துவதுபோல், பேஷன் ப்ரோவின் பெட்ரோல் டேங்கை அழுத்தினாள். மூச்சுத் திணறியது பேஷன் ப்ரோ! குள்ளப் பேயின் கண்கள் சிவந்து, பல் நீட்டிக் கொண்டது. கால் கட்டைவிரலைப் பிடித்து இழுத்தது. பேஷன் ப்ரோ, தன் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல வைத்திருக்கும் உண்மை பேய் கதை அது! 

குள்ளப் பேய் அமைதியாய் உட்கார்ந்து வந்தது அத்திப்பாக்கம் பள்ளி வளாகம் வரை. 

‘இங்கயே விட்றலாமா?’ பிரவீன் குள்ளப் பேய் காதில் கேட்டான். 

பதிலுக்கு பேய் மௌனம் பேசியது. 

பேஷன் ப்ரோவை நிறுத்தினான். 

‘உள்ள போய் விடு’, கோபித்துக்கொண்டு குள்ளப் பேய் முரைத்தது. 

வளாகத்தில் இருந்து அரை ஏக்கர் உள்ளே போக இடம் இருந்தது. 

‘அங்க போய் விடு,’ வகுப்பறை படிக்கட்டைக் காட்டியது. 

குள்ளப் பேய்க்கு ரொம்பத்தான்! 

பேஷன் ப்ரோ, கேட்டபடி படிக்கட்டில் போய்விட்டது. 

குள்ளப் பேய் டாடா-பைபை சொல்லாமல் தோள்பையை ஆட்டிக்கொண்டு போனது. தோள்பை சொன்னது டாடா-பைபை! 

உணவு முடிந்த மதியவேளை. கேன்வாசிங், மக்கள் தொடர்பின் முக்கிய அங்கம். அது கிராம மக்களுக்கான அஞ்சல் விழிப்புணர்வு நேரம். அஞ்சல்துறையின் வருமான நேரம். இந்தியாவின் கிராம மூலைமுடுக்குகள்வரை பாயும் அஞ்சல் வேர்கள், நீர் குடிக்கும் நேரம். அஞ்சல்மரத்தின் நிழலுக்காக, நீர் பாய்ச்சும் நேரம். 

பெரிய பாரம்பரியத்தைக் கொண்டது, அஞ்சல்மரம்; இந்திய குடிமக்கள் அனைவருக்கும் நிழலைத் தரக்கூடியது. அஞ்சல்மரத்தின் பழங்கள் அஞ்சல்மர  ஊழியர்களுக்கும், அஞ்சல் தோட்டக்காரர்களுக்குமானவை… 

இன்னமும் கேன்வாசிங் முரட்டுக் குதிரையை அடக்கத்தெரியாத இரண்டரை மாத அனுபவத்தின் புது கிளை அஞ்சல் அலுவலராக பிரவீனும், ஒன்றரை மாத அனுபவத்தின் புது கிளை அஞ்சல் அலுவலராக மகாலட்சுமியும் அனுபவக்குறைவோடு மதுரைவீரன் கோவில் தெருவுக்கு ‘கேன்வாசிங் நடை’யெடுத்தனர். 

குதிரையை அடக்கி, எப்படியாவது அதில் ஏறியே தீர வேண்டும். ஒரு மாத கேன்வாசிங் குதிரையேற்றத்தில், ஒரு குதிரைகூட அவர்களை ஏற விடவில்லை. ஒரு ஆளைக்கூட அவர்கள் கணக்கு துவங்கவைக்க முடியவில்லை. அலுவலகத்தில் தாமாக வந்து, தங்களின் விருப்பத்தில் துவங்கிய கணக்குகள் மட்டுமே அந்த வருடத்துக்கான இலக்கை அடைய உதவி புரிந்தன. அந்த வருடத்துக்கான இலக்குபடி, அடிப்படைச் சேமிப்பு வங்கிக் கணக்குகள், தொடர் வைப்புக் கணக்குகள், கால வைப்புக் கணக்குகள் எல்லாம் சேர்த்து மொத்தம் நானூற்றைம்பது கணக்குள் துவங்கவேண்டி இருந்தன. அதோடு, முந்தைய வருடம் அடையாமல்விட்ட இலக்கின் மீதிக் கணக்குகளும் சேர்ந்துகொண்டிருந்தன! 

‘அதெல்-லாம் ஒருகாலத்துல போஸ்ட் ஆஃபீஸ் சர்வீஸ் டிபார்ட்மெண்டா இருந்துச்சி… இப்போ பிசினஸ்தான். நாமளும் மத்தவங்களோட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணனும்… போட்டிப் போடணும்…’, யதார்த்தத்தில் புரண்டு எழுந்துவந்தன, இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் கரிகாலனின் ஊக்கச் சொற்கள். 

‘லெட்டர்லாம் அந்தக் காலம் வந்துச்சி. இப்போ எங்க வருது? போஸ்ட் ஆஃபீஸ் ரன் ஆகணும்ல? — பிஸ்னஸ் பண்ணுங்க… பி.எஸ்.என்.எல் மாதிரி நஷ்டத்துல போயிரும் இல்லைனா — சர்வீஸ் டிபார்ட்மெண்ட் இல்ல நாம இப்போ’, ரிட்டைர்மெண்ட் வயதில் தன் நாற்பதாண்டுகால அனுபவத்தோடு அறிவுரை சொல்வார், மெயில் ஓவர்சீயர் பாண்டு சார். 

அவர்களைப் பொருத்தவரையில் பிஸ்னஸ், சுயநலத்தின் வார்த்தை; சோகத்தின் வார்த்தை; சுமைதாங்கும் மூட்டைத் தொழிலாளிகளின் சிரமமிகு வார்த்தை; உயிர்பிழைத்தல் நியதியின் கடுமையேறிய பாரங்கல் வார்த்தை.

சேவை என்பதோ எளிமையின் வார்த்தை; உட்கார்ந்த நாற்காலிவிட்டு எழும்ப தேவைப்படாத அளவுக்கு எளிமைக்கான வார்த்தை; பணமிழத்தலின் அடையாள வார்த்தை. 

பிஸ்னஸ் சுயநலம், சர்வீஸ் சோம்பேறித்தனம்! 

அஞ்சல் அதிகாரிகளுக்கு, பிரவீனிடம் ஒரு திமிர் தெரிந்தது! 

அது என்ன திமிர்? 

சின்ன வேலையானாலும் அதிகம் படித்தவன் என்னும் படித்த திமிரா? 

இல்லை. 

பிரவீன் பன்னிரெண்டாங்கிளாஸ் பையன். 

டீ எடுத்துவரும் ஒரு பையன்போல, டீ கிளாஸ் கழுவிவைக்கும் ஒரு பையன்போல, பிரவீன் வெறும் ‘பன்னிரெண்டாங்கிளாஸ்’ பையன்! 

காசு அருமைதெரியாத சின்ன வயசுத் திமிரா? 

இருக்கலாம். 

வறுமைதெரிந்தும், தெரியாமலிருக்கும் காசின் அருமையில் ஒரு அறிவும் இருக்கலாம். 

அறிவில்லை, அது திமிர்தான்! 

ஒரு கூட்டம் எடுத்துவிடும் முடிவுகள், தனிமனித முடிவைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுபவை. ஒரு எம்.எல்.ஏ போல, ஒரு எம்.பி போல, ஒரு பிரதமர் போல. 

பெரும்பான்மை பெரும்பான்மைதான்.
சிறுபான்மை சிறுபான்மைதான். 

குறைந்த வாக்கோடு பிரவீனுக்குத் தோல்வி. 

திமிர்தான் அவனுக்கு! அந்த முடிவே வெற்றிபெற்றது!

அவன் திமிரு பிடித்தவன். 

ஊருக்கு யாராகினும், அவனுக்குள் அது திமிராக இல்லாமல், அறிவாக இருந்தது. அங்கு ஜனநாயகத் தேர்தல் இல்லை. 

அதிகாரத்துக்கு அடிப்பணியாத உரிமையாய் இருந்தது. 

அடிமைப்படுத்திவிட முடியாத அடிப்படையாய் இருந்தது. 

புளிக்காத நெஞ்சத்துக்கு பதநீராக இருந்தது. 

புளித்த நெஞ்சத்துக்கு கள்ளாக இருந்தது. 

மதுரைவீரன் கோவில் தெருவில் வீட்டுக்கு வெளியே கால்நீட்டிப்போட்டு கதையடித்துக் கொண்டிருந்த அக்காக்களிடம்தான் முதல் கேன்வாசிங் முயற்சி தொடங்கியது. மதுரைவீரனின் குதிரைபோல் அடக்கமுடியாமல் இருந்தது, கேன்வாசிங் முரட்டுக்குதிரை. 

வலுக்கட்டாயமாக நூல்பிடித்து இழுத்துப்போகும் பட்டமாய், மகாலட்சுமி வேண்டா வெறுப்பாகவே உடன் வந்தாள்; வேடிக்கைப் பார்க்க மட்டும்! மிச்சத்தை பிரவீன் பார்த்துக்கொள்வான். 

எப்படியோ ஒரே வாக்கியத்தில் தங்கள் மீதிருந்த அந்நிய பார்வையை போக்க வேண்டுமென்று பிரவீன் தொடங்கினான்.

‘அக்கா போஸ்ட் ஆஃபீஸ் பக்கம்லாம் வரீங்களா?’ 

இது என்ன புது பழக்கம்? போஸ்ட் ஆஃபீஸ்ல இருந்து வீடுவீடா வர்றாங்க… யாருக்கும் புரியவில்லை. 

வீட்டுக்கே வந்து அடிக்கும் அஞ்சல்துறையின் குளிர்காற்று, மக்களை நடுங்கச் செய்தது. 

தெரிந்தவன்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, ஆங்கொரு வீட்டில் திருடன் புகுந்து நகையைப் பறித்து ஓடியிருந்த சம்பவத்தின் மிரட்சி அடங்காதிருந்த நேரமது. 

கதையடித்துக் கொண்டிருந்த அக்காக்கள், பிரவீனை உறைந்தபடி பார்த்தார்கள். 

‘போஸ்ட் ஆஃபீஸ்லாம் வரர்தில்ல தம்பி. ஏன்?’, திருடர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளும்படியாக இருவரில் ஒரு அக்காவின் பதில். 

‘இல்ல கா. சேமிப்பு பழக்கம்லாம் உண்டா?’ 

‘என்ன சேமிக்கணும்?’ உடைத்துப் பேசினார். 

‘காசுதான் கா… வீட்டுக்காரர் என்ன செய்யுறாரு?’ 

‘வீட்டுக்காரர்லாம் எதுக்கு? ஏதும் கணக்கு கிணக்கு எடுக்க வந்தீங்களா?’

‘இல்ல கா. இங்கதான் போஸ்ட் ஆஃபீஸ்க்குப் புதுசா வந்துருக்கோம். நான் போஸ்ட்மாஸ்டர். அவங்க போஸ்ட்வுமன். லெட்டர்தர வரும்போது இந்தப் பொண்ண பாத்துருப்பீங்களே?’ 

‘இல்ல. பாக்கலையே! 

‘சரி. பணம் எதுனாலும் எங்க ஊட்டுக்காரர் வந்ததும் சொல்லி அனுப்புறேன். ஆபீஸ் வருவாரு போங்க’, இப்போதைக்கு ஆபத்தைத் தட்டிக் கழித்துவிட்டார்.

இன்னுமொரு அக்கா மிச்சமிருக்கிறாரே! எப்படி போவது? 

‘அக்கா நீங்க?’, பக்கத்து அக்காவுக்கு தூண்டில்.  

‘எங்கப்பா? எங்க ஊட்டுக்காரரே சீட்டு ஆடிக்கிட்டு சும்மா சுத்துது வேல இல்லாம. எங்களுக்கே மாமியார்தான் சோறுபோடுது. இதுக்கெல்லாம் பணம் கேட்டா செருப்பால அடிக்கும்’ தூண்டிலிலிருந்து நழுவிய மீன், சோகக் கடலின் மீன். 

ஊரில் அக்கவுண்ட் பிடிக்க ஏகப்பட்ட ஏஜென்ட்கள் உலவுவது பற்றியெல்லாம், அப்போது பிரவீனுக்கும் மகாலட்சுமிக்கும் தெரியாது. ஊர் முக்கியஸ்தர்களின் மனைவிகள், பள்ளி ஆசிரியர்களின் மனைவிகள், மளிகைக் கடைக்காரர்கள் எல்லாம் போஸ்ட் ஆஃபீஸ் ஏஜென்ட்கள். தண்ணீரே இல்லாத இடத்தில் போர் போடுவதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்துவைத்தவர்கள், ஏஜென்ட்கள்! 

Leave a Reply