சுற்றமும் புங்கைமரமும் (ஒப்பம் நாவல், அதி. 1)

oppam-novella-tamil-2021

ஊர் பொதுமக்கள் வந்துகூடும் இடமாக இருந்தது, புங்கைமரமும் அதைச் சுற்றியுள்ள இடமும். அங்குத்தான் முக்கிய அரசு அலுவலகங்கள் இருந்தன. அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள், உச்சி வெய்யிலில் நிழலுக்காக ஒதுங்குவது அந்த புங்கைமரத்தடிதான். 

புங்கைமர காற்று கபடமற்று வீசும். அதில், கிராம மக்களின் வாசமும் கலந்தே வீசும். மளிகைக்கடை சரக்கு வாசம், ஏரிவேலைக்குச் சென்றுவரும் பெண்களின் வியர்வை வாசம், அருகில் இருப்பவர்கள் மீது அக்கறையின்றி ஊதித்தள்ளப்படும் சுருட்டுப்புகை வாசம், அண்டை வீட்டாரின் மீதான அக்கறை வாசம், ஆள்பார்த்து தள்ளிவைக்கும் தீட்டு வாசம், பிரேமா அக்கா வீட்டு மீன் குழம்பு வாசம், ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் முதல் மேஜர்கள் வரையிலானோரின் கௌரவ வாசம், ‘அந்த ஆளு படிக்கல. அதான் மிலிட்ரிக்கு ஓடிட்டான்’ என்று அக்கம்பக்கத்தினர் அடிக்கடிப் பேசும் வசை வாசம் — இப்படி புங்கைமரக் காற்றில் வீசும் வாசங்கள், வீடுவீடாய் அமர்ந்து ஊரையே சுற்றிவரும் வீடில்லாத லூர்துமரி பாட்டி போல.  

காற்றாடும் புங்கைமரத்தின் கீழ், மண்ணில் சிறு பள்ளம் பறிக்கப்பட்டிருக்கும். பிஞ்சு விரல்களிலிருந்து பறக்கும் குண்டுகள், அந்தப் பள்ளங்களில் புரண்டு எழுந்தோடும். பள்ளிக்கூடச் சிறுவர்கள் மாலைகளிலும், விடுமுறை தினங்களிலும் குண்டு விளையாடும் இடம் அது. அருகிலேயே ஒற்றைமாட்டு வண்டி உழைத்து கழித்த இளமையின் நினைவில், கிழவனைப் போல ஓய்வாய் சாய்ந்திருக்கும்.  

இன்னொரு புங்கைமரமும் அங்கிருந்து பத்தடி தூரத்திலேயே இருந்தது. அந்த மரத்தின் அடியில் இறுகிய மண்ணில் தாயக்கட்டம் வரைந்திருக்கும். முதியோர் கூடும் விளையாட்டுத் திடலாய் இருந்தது, அந்த மரம். தீக்ஷா பாப்பாவுக்குச் சோறூட்டும் இடமும் அது. தீக்ஷாவின் வெள்ளை நாய்க்குட்டி டாலர் கட்டப்படும் இடமும் அதுவே. குட்டிநாய் அந்த மரத்தைச் சுற்றித்தான் சுற்றுலா செல்லும். சுற்றிச்சுற்றி இதுவரை பல ஊர்களுக்குப் போய் வந்திருக்கிறது. ஊர்மக்களின் பேச்சைக் கேட்கமுடியாமல் போகும் தனியான நேரங்களில், மரங்கள் இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும். இந்த இரண்டு புங்கைமரங்களுக்குத்தான் ஊர்மக்களோடு அதிக தொடர்பு!  

இந்த மரங்களின் அருகில்தான் கிராமத்தின் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. தீக்ஷா பாப்பா வீட்டுப்பக்கம் இருந்து தண்ணீர் டேங்க் பக்கமாக, இடமிருந்து வலம் சொன்னால், முதலில் இருப்பது கிராம நிர்வாகியின் அலுவலகம். இரண்டாவது, கிராமப் பஞ்சாயத்து அலுவலகம். மூன்றாவது, அஞ்சல் அலுவலகம். கடைசியாக, நியாய விலைக் கடை. முதல் அலுவலகம் தனிக் கட்டடம். இரண்டாம் அலுலகமும் மூன்றாம் அலுவலகமும் ஒரு கட்டடத்தில் ஒட்டி அமைந்திருந்தன. நான்காம் அலுவலகம் மூன்றாம் அலுவலகத்திலிருந்து சற்றே இடைவெளி விட்டுத் தனியாக இருந்தது. அந்த இடைவெளிதான் அவசர உதவிக்காக விடப்பட்டிருந்த இடம்.  

கிராம நிர்வாக அலுவலரைக் காண வருபவர்கள், அவர் ‘சர்வே’வுக்கு போயிருக்கிறார்… போயிருக்கிறார்… என்று போய்விடுவார்கள்.  

கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் இருந்தது. அதன் சுவரில் ஏரி, குளங்களின் எண்ணிக்கை பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது. பெரும்பான்மை நேரம் அலுவலக கதவில் பூட்டு தொங்கியிருந்தது. அவ்வப்போது, கிராம நிர்வாகியின் அலுவலகத்திலும், பஞ்சாயத்து அலுவலகத்திலும் விழாவுக்கு வரும் கூட்டம்போல் கோலாகலமாய் மக்களைக் கூட்டம் திரட்டி, வேலை நடந்ததற்கான சாட்சிக்குப் புகைப்படங்கள் எடுத்துகொள்ளப்படும்! 

அஞ்சலக மேசையில் சேமிப்பு கணக்குப் புத்தகங்கள் மண்டிக் கிடக்கும். அலுவல் நேரத்தைவிட அலுவல் முடியும் நேரத்தில் இறுதிநேரத்து ஈக்கள் கூட்டமாய் வந்து குவிவார்கள் மக்கள்.  

நியாய விலைக் கடைக்கு மட்டும்தான் வரிசையில் ஒழுங்கு இருக்கும். அந்த  வரிசைக்குத்தான் அஞ்சலகத்துக்கு அருகில் இருந்த அவசர உதவிக்கான இடைவெளி அதிகம் உழைத்தது. 

அலுவலக கட்டடங்களின் வெளிப்புறத்தில் கருப்பு புகைவந்து அப்பியிருக்கும், அங்கும் இங்கும் திட்டுத் திட்டாய். அதோடு, நான்காறு இடங்களில் கட்டடங்களில் விரிசல்… வெளிச்சுவரில் பூத்திருக்கும் கருப்பு பூஞ்சை பூக்களே சுவரெங்கும் படர்ந்து, பல வருடமாக அடிக்காமல்விட்ட நிறப்பூச்சு பணியை நிரம்ப செய்தன. ஓரம்பாரம் உடைந்துபோன மூன்று அஞ்சலக படிக்கட்டுகளும், பொக்கைப் பல்லோடு சிரிக்கும்.  


ஐயப்பந்தாங்கலில் வந்து நின்ற சென்னை மாநகரப் பேருந்து, தான் உண்ட பயணிகளில் மூவரை வெளியே கழித்தது. அதில் ஒருவர் ஹேண்ட்பேக் மாட்டியிருந்தார். பின் மாலைப்பொழுதின் அரைகுறை வெளிச்சத்திலும், கருப்பு துணியால் முகத்தை மூடியிருந்தார். தன் காலின் கட்டை விரல்களையே பார்க்கும் குனிந்த தலையோடு, வேகவேகமாய் பேருந்து கிளம்பிச்செல்லும் திசையில் அவரும் புறப்பட்டார். இன்னொருவர் தடி ஊன்றிய வெள்ளை, வெள்ளை, வெள்ளைத் தாத்தா. தலைமுடி, இமைகள், மீசைதாடி வெள்ளை. போட்டிருந்த கதர்சட்டை வெள்ளை. கட்டியிருந்த கதர்வேட்டி வெள்ளை. மனமும்கூட அப்படியே இருக்கலாம். தெரியவில்லை! மூன்றாவதாய், ஒருவன் வேகமாய் படிக்கட்டிலிருந்து இறங்கி, அதே வேகத்தோடு கொஞ்சம் தூரம் நடந்தான். எப்போதும் அவன் தன் அண்ணனோடு அருந்தும் தேநீர் கடை அவனுக்காக காத்திருந்தது. தேநீர் பாய்லரின் ஆவியும் பாய்லரிலிருந்து பிரிந்து ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு மெல்ல மெல்ல பாம்புபோல் வாலாட்டி மேகத்தோடு சேர்ந்துகொண்டது. அந்தக் கடை, அவனுடைய நடை தன் பக்கம் ஒதுங்காததைக் கண்டு ஏமாந்து, பின் நன்றாக நுரையீரல் நிரம்பும்படி ஒருமுறை மூச்சிழுத்துவிட்டுக் கொண்டது.

அவன் சாலையின் ஒரு ஓரம்போய் நின்றுகொண்டான். சட்டென்று வந்த ஷேர் ஆட்டோ, பேருந்து நிறுத்தத்துக்குள் ஒரு வட்டம்போட்டுச் சுற்றிவந்தது. ஆட்டோவின் வருகையை எதிர்பார்த்திருந்த மற்ற ஆட்களும், அவனும் வண்டியில் ஏறிக்கொண்டனர். ‘சரி, புறப்படலாம்’, ஏறியமர்ந்துகொண்ட அனைவரின் ஒத்த குரலும் ஷேர் ஆட்டோகாரரின் காதுகளில் ஒலிப்பெருக்கி வைத்து உரத்து ஒலித்தது. அவர் தன் ஷேர் ஆட்டோ உப்பாமல் இருப்பதால் காத்திருந்தார். அவருக்கு அந்த ஆட்டோ ஊதிப்பெருக்க வேண்டும். புள்ளத்தாச்சிப் போல. ஒருவேளை உப்பி உருண்டையாய் வண்டி பந்துபோல் ஆகிவிட்டால், அவர் வண்டியை எளிதாக உருட்டிக்கொண்டு போய்விடுவார். பெட்ரோல்-டீசல் விலை அப்படி!

அரசாங்கத்துக்கு தெரியும் இந்த நாட்டின் போக்குவரத்துச் சிக்கனம்தான் சூழலியல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்பது. அதிக எரிபொருள் விலை – கம்மி ஆட்டோ டிரிப் – நிறைந்த பயணிகள் – குறைந்த புகை – அதிக நன்மை!

வண்டி உருள ஆரம்பித்தது. ஈ.வி.பி.பிரபு அவென்யு வரை உருண்டு வந்துவிட்டது. மூச்சை விடமுடியாமல் இருக்கும் வண்டியின் மூக்கில் ஆட்டோகாரர் சின்ன குச்சியை விட்டார். சத்தமாய் வண்டி தும்மியது. அவன் தன் நிறுத்தத்தில் விழுந்துவிட்டான்… கரும்பச்சை நிற வீடு. இடப்பக்கமாய் இரண்டாம் வீடு. முதல் மாடி! படிக்கட்டு ஏறியதும் இடப்புறம் வீடு. வலப்பக்கம் வேறு ஒரு குடும்பம் இருந்தது. உள்ளே சின்னது – பெரியது, குள்ளம் – உயரம் போல் நிறைய அளவுகளும், சிரிப்பு – உம்மூஞ்சு, கருப்பு – சிவப்பு, ஆண் – பெண், மகன் – மகள், கணவன் – மனைவி, மாமனார் – மாமியார், தாத்தா – பாட்டி, ஒரு சின்ன சைக்கிள், வீட்டின் வெளியே சின்ன குன்றுபோல் காலணிகள் என்று செழிப்பாய், வளமாய் அது பெரிய குடும்பம்… இடப்புறம் இவன் வீட்டில் கருப்புமில்லாமல், சிவப்புமில்லாமல் இருவர் மட்டும். அண்ணன் – தம்பி மட்டும். இரண்டே ஜோடி செருப்புகள் மட்டும். ஒரு ஜோடி ஷூ மட்டும். அண்ணன் கம்பெனியில் ஷூ கட்டாயம். உள்ளே நுழைந்தவன் – ஆட்டோ தும்மியவன் — சின்னவன் – தம்பி பிரவீன்… அவன் அண்ணன் பிரதீப்.

‘அப்பா கால் பண்ணாரு,’ நின்றபடி தண்ணீர் குடித்துகொண்டே பிரதீப் சொன்னான். ‘வேல முடிஞ்சு நீ வீட்டுக்கு வந்துட்டியானு தெரியாம எனக்கு கால் பண்ணாரு. வந்ததும் உன்ன கால் பண்ணச் சொன்னாரு.’ ‘என்ன விஷயமாம்?’ அணிந்துவந்த தோள்பையைக் கழற்றி அறையின் மூலையில், சுவரில் சாய்த்து வைத்துவிட்டு பிரவீன் கேட்டான்.

‘சாருக்கு… கவர்மெண்ட் ஆஃபிசர் ஆவ இன்டர்வியூக்கு கால் லெட்டர் வந்திருக்காம்,’ சின்ன அன்பு கேலியோடு பிரதீப்… ‘எனக்கு மெயில், மெசேஜ் எதுவுமே வரலையே!’ இன்னமும் அரசாங்க வேலைகள் தபால் வழிதான் வேலைக்கும், வேலை சம்பந்தமான அறிவிப்புகளுக்கும் தொடர்பு கொள்கிறது என்பது தெரியாமல் கேட்டான்.

இரண்டு மாதங்களுக்கு முன் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்காக பிரவீன் விண்ணப்பித்திருந்தான். பிரவீன் அப்பாதான் வாட்சாப்பில் லிங்க் அனுப்பி விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார். அரசாங்க வேலை அப்பாவின் ஆகப்பெரிய ஆசை, விருப்பம், எல்லாம்… எல்லா அப்பாக்களைப் போலவும்! அம்மாவுக்கும் பக்கத்திலேயே இருந்து வேலை பார்த்தால் போதுமென்று தோன்றியது… மேனகா மட்டுமே அந்த வேலையில் விருப்பம் காட்டவில்லை.

‘ஹே, நீ கண்டிப்பா இந்த வேலக்கி போகணுமா? இங்கயே இருந்து கன்டென்ட் ரைட்டிங் வேலக்கி நீ முன்னசொன்ன மாதிரிலாம் போவக்கூடாதா? ரைட்டிங்தான உன் பேஷன்?,’ உடைந்த மனதோடு ஏக்கமாய் கேட்டாள் மேனகா. அவள் கண்ணாடி மென்சிரிப்பின் உடைந்த துகள்கள் அவள் உதடுகளில் குத்தியிருந்தன…

ஒரேயொரு நிபந்தனையோடு அந்த வேலைக்கு பிரவீன் போகலாம் என்று சம்மதித்தாள். மனமில்லாமலும், வேறு வழியில்லாமலும். அம்மாவின் நலனுக்காக மட்டும்! ‘இப்போ சென்னைலயே இருக்க. அப்பப்ப என்ன பாக்க வர. கொஞ்சம் நேரந்தான். ஆனா அட்லீஸ்ட் பாத்துக்குறோம். நீ அங்க போயிட்டா அதுகூட இருக்காதுல்ல… நீ மாசம் ரெண்டு வாட்டியாச்சம் பாக்க வரியா? ப்ளீஸ்… ப்ளீஸ். ப்ளீஸ்.’ ‘ப்ளீஸ்ஸ்…’ என்று அழுத்தி, கெஞ்சிக் கேட்டாள். கதிரொளிக் கண்ணில் படுவதுபோல கண்களைச் சுருக்கி இமைவழி புன்முறுவல் செய்து கேட்டாள்.

‘வேல நேரம் கம்மி! நாலஞ்சு மணிநேரம் தான்… சம்பளம் இப்ப வாங்குறதவிட அதிகம். ‘என் கூடயே தங்கிக்கணும்னு கெளம்பி வந்த அம்மா, வெயில் தாங்கலனு துருகத்துக்கே திரும்பி போயிட்டாங்க — உனக்கே தெரியும் ஒடம்பு சரியில்லாதவங்க — வீட்டுக்கும் விரும்பிப் போவல. வேற வழியில்லாம போயிருக்காங்க. இந்த வேலக்கிப் போயிட்டா, என் கூடயே தங்க வச்சிப்பேன் — கிராமத்துப் பக்கம் வெயிலும் கம்மி. அவங்களுக்கு அலர்ஜி ஆகாது… அப்பா பிரச்சினையும் அம்மாவுக்குக் கொறையும். ‘கொஞ்ச நேரந்தான் வேல. மிச்சநேரம் நான் நெனச்சத படிக்க முடியும். எழுத முடியும் — மாசத்துக்குக் கொறஞ்சது ஒருமுற வர்றேன். இங்கயவிட அங்க செலவு கம்மிதான். மாசாமாசம் உனக்கு பணம் அனுப்ப முடியும். ‘நீ பெயின்ட், பிரஷ், கலர் பேப்பர், டிராயிங் புக்லாம் வாங்கி வரஞ்சா போதும். அத செய்யி…’

மேனகா, தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பல் மருத்துவம் மூன்றாம் ஆண்டு துளி விருப்பமுமில்லாமல் படித்துவந்தாள். மருத்துவ படிப்பு அவள் அப்பாவின் ஆகப் பெரிய ஆசை, விருப்பம், எல்லாம்… எல்லா அப்பாக்களைப் போலவும்! அவளுக்கு என்னவோ ஓவியத்தில்தான் ஆர்வம் இருந்தது.

Leave a Reply