மணல் கடிகாரம் (ஒப்பம் நாவல், அதி. 13; பா. 1)

Featured Image

கடைசியாக வரைந்த ஊஞ்சலில் ஆடும் பெண், ஒரு பக்கக் கயிறில்லாமல், பலகையோடு அந்தரத்தில் பறந்துகொண்டிருக்கிறாள். வண்ணம் தீட்டப்படாத இலைகள் மரத்தில் துளிர்த்து இருக்கின்றன. அந்தரத்தில் பறப்பவளின் தலை, சூரிய ஒளிவட்டத்தைப் பொருத்திக் கொண்டிருக்கிறது. பூவரசம் கிளையில் கட்டிய ஊஞ்சலின்கீழ், பெரிய பட்டாம்பூச்சி பாதி வண்ணம் மட்டும் தீட்டப்பட்டு, அரை ஆள் அளவில் சவானா புல்லின் நுனியில் அமர்ந்திருக்கிறது. மேனகாவின் அக்ரிலிக் ஃபேய்ரி ஓவியம் முழுமையடையாமலே ஆர்வம் இழந்து கிடந்தது.

மாதத்துக்கு ஆயிரமென்று, நான்கு மாதத்தில் நான்காயிரம் ரூபாய் ஓவியங்களுக்காக மட்டும் நிதி அனுப்பிவிட்டான். ஆனால் குப்பிகளுக்குள்ளேயே அடைபட்டு, வண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. சிறகொடிந்த அவள் ஏக்கத்தோடு…

சென்னையின் சாலைகளில் நெரிசலும், புழுதியும் மட்டுமே தெரிகிறது. சாலையோரம் உடன் நடந்தவந்த பிரவீனின் தடங்கள் இப்போது புழுதியோடு கரைந்துவிட்டன. தேநீர் கடைகள் எல்லாம் அவனைத்தான் ஞாபகமூட்டுகிறது. வெறும் எட்டுமாதச் சென்னை வேலை ஏற்படுத்திக் கொடுத்த அடிக்கடி சந்திப்புகள், ஒரு வானொலி பாடல்போல் ஆரம்பித்த சற்று நேரத்தில் முடிந்துவிட்டது. மாதத்துக்குக் குறைந்தது ஒரு முறையாவது வந்து சந்திப்பேன் என்று சொல்லிச் சென்ற உறுதி, அலுவலக நெருக்கடியைக் காரணம் காட்டி, தள்ளிப் போடப்பட்டு வருகிறது. விரைவில்… விரைவில்… என்றே வெகுநாளாகிவிட்டது. மேனகா தவித்தாள். 

உடம்பு முடியாமல், இரண்டு நாள்மட்டும் பிரவீன் விடுப்பு எடுத்துக்கொண்ட போது, வழக்கம்போல பேச்சியம்மாதான் விடுப்பு நாளுக்கான பொறுப்பேற்றுக் கொண்டாள். அவள் பொறுப்பேற்றுக் கொண்டு கழிந்த விடுப்பெதுவும் எளிமையாய் கடந்ததில்லை.

விடுப்பு நாட்களுக்கு மட்டும் பொறுக்கும் பொட்டுக்கடலைச் சம்பளம், காலத்தின் சறுக்கல் விளையாட்டு. மாமனார் பதினைந்து வருடம், கணவன் முப்பத்தைந்து வருடம், போஸ்ட்மேன் அந்தோணி ஐயா ஓய்வுபெற்றதிலிருந்து, தீபாவுடன் தற்காலிக போஸ்ட்வுமனாகத் தானே ஒரு வருடம்… அந்தக் காலங்கள் எங்கே?

ஐம்பது வருட அரசு வாழ்வு மறைந்து, தற்போது பொறுக்கிவரும் விடுப்பு நாட்களின் பொட்டுக்கடலைச் சம்பளம், பறவையின் எச்சம் முகத்தில் விழுந்து வழிவதுபோல் இருக்கிறது. காலம் சறுக்கிக் கீழே விட்டுவிட்டது. நிரந்தர போஸ்ட்வுமன் இடத்தை நிரப்ப துணை கிளை அஞ்சல் அலுவலராய் மகாலட்சுமி வந்துவிட்டாள். ச்சேரி மூஞ்சியோடு! ஒல்லிச் சிரிக்கி.

‘வ்வவ்வவ்வவ்வா… பேச்சும் அவ மூஞ்சியும். மூஞ்சிய பாத்தா தெரியல?’ தன் எக்ஸ் போஸ்ட்மாஸ்டர் கணவனிடம் பழித்துக் காட்டினாள்.

தன் முகத்தில் பட்ட எச்சத்துக்குப் பழியாய், மஹாலட்சுமி மீது அவள் ஒட்டி வைத்துவிட்ட ச்சேரி அசிங்கம்!

‘பிரவீனு. அவ வேலைக்கெல்லாம் வந்தா கிட்டயே சேக்காத. கீழ உக்காரச் சொல்லு…

‘ஆஹன்’, யோசித்தார். ‘அவ உக்கார மாட்டா… படிச்சவ! பழைய போஸ்ட்மேன் அந்தோணி இல்ல? — அவன் கால்னி காரப்பயதான். ஆஃபீஸ் உள்ளயே ஒக்கார உடமாட்டன். போஸ்ட்மேன் புக்க தூக்கித் திண்ணைல போட்டு, அங்கயே வந்த லெட்டர குறிடா..ன்பேன். திண்ணைய தாண்டி வரக்கூடாது… புடிக்காது. எனக்க்கு…ப் புடிக்காது’, மனைவியின் ச்சேரி ஊகத்தைக் கொண்டு, எச்சில் தெறிக்க பிரவீனுக்கு அறிவுரை தந்தார்.

கணவனும் மனைவியும் மகாலட்சுமியின் பிறப்பைக் கூறாய்வு செய்துகொண்டிருந்த நாளின் முன்நேரத்தில், தன் மகள் நியமிக்கப்பட்டிருந்த  பணியிடத்தைப் பார்வையிட்டுச் செல்ல, மகளோடு வந்திருந்தார் மகாவின் தந்தை. பணி நியமனத் தேதிக்கு மூன்று நாள் முன்னதாகவே வந்திருந்தவர், மகளை புது போஸ்ட்மாஸ்டர் பிரவீனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

‘பொண்ணு ரொம்ப சின்னவ… கடக்குட்டி! அவ்ளோ வெவரம் தெரியாது. பத்தரமா பாத்துக்கங்க — ஏதாவதுனா ஒன்னுக்கு ரெண்டு வாட்டிச் சொல்லுங்க. சட்டுனு புரிஞ்சிப்பா’

‘ஏன் படிப்ப பாதில நிறுத்திட்டீங்க?’ பேச்சியம்மா இடையில் குறுக்கிட்டாள்.

‘இல்ல, வேல கெடைக்கிறதே கஷ்டம்… கவர்மெண்ட் வேலயாச்சே. சென்ட்ரல் கவர்மெண்ட் வேற…’ சின்ன புன்முறுவலோடு. ‘அதான்’.‘ஹேன்ன்… என் பேத்திக்கூட செம மார்க்கு — வர்ரவே மாட்டேன்டாலே. இந்த வேலக்கிக் கூப்டதுக்கு. என் படிப்பென்ன இந்த வேலையென்னனு ஸ்டிக்கா சொல்லிட்டா… ஏதோ நாங்க வயசாயிட்டு, டைம்பாஸா செஞ்சிட்டுக் கெடக்கலாம்’, அவளுடைய சாக்கலேட்டு பூசிய வார்த்தைகளில்…


டிசம்பர் மாதம் முதல் லூர்துமரி பாட்டியின் முதியோர் பணத்தை, அஞ்சலக வழியாய் வாங்க வசதிச் செய்து தரப்பட்டிருந்தது.

முதல் மாதப் பணத்தையே வாங்க முடியாமல் பேச்சியம்மாவிடம் அல்லல்பட்ட லூர்துமரி பாட்டி, அவள் வீட்டின் முன்பாகவே வீதியோரத்து கொய்யா மரத்தடியில் அமர்ந்துகொண்டாள். பணம் கிடைக்கும்வரை அவள் அப்புறப்படுவதாய் இல்லை.

எச்சில் துப்பவும், பாத்திரம் அலசிய தண்ணீர் ஊற்றவும் வீட்டுக்கு வெளியில் வந்த பேச்சியம்மா, அவளைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்து, தன் பாரம்பரிய வித்தையைக் காட்டினாள்.

வீட்டில் வேலையெல்லாம் முடித்துவந்து, திண்ணையில் அமர்ந்துகொண்ட பேச்சியம்மா, வெயிலில் காயும் கூன் கிழவியை கண்டு மனம் ஆறினாள்.

‘இந்தக் கெழவிக்கு பணம் ஒரு கேடு! ஊரு பூரா சுத்தி நல்லாதான வாங்கித் திண்ணுது? காசு பேர கேட்டா கரைக்டா மோப்பம் புடிச்சிக்கிட்டு வந்துருவா… எங்கருந்துன்னு மட்டும் தெரியாது’, வீதியில் ஏரிவேலை முடிந்து வீடு திரும்பிய ரோசி அக்காவிடம் பேசினாள், பேச்சியம்மா.

‘காத்தால பணம் கைக்கு அப்பதான் வந்துச்சி ரோசி… ஒடனே ஆஃபீசுக்கு மோப்பம் புடிச்சிட்டு மொத ஆளா வந்து நிக்குது… அதான் — நான் தர்ர்ரவே மாட்டனே. அலையட்டும்…’

பேச்சியம்மாவுக்கு கூன் கிழவியின் ஆயிரம் ரூபாயை சுருட்ட முடியாத கடுப்பு. மற்றவர்களிடம் போல ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு ஓ.ஏ.பி பணத்தைக் கொடுக்க, லூர்துமரி விஷயத்தில் மனமில்லை.

‘அதான் புள்ளைங்க பாத்துக்கலைல, அப்புறம் என்ன? யாருக்கு பணத்த வாங்கிப் பதுக்குறா இவ?’ பேச்சியம்மா தர்க்கத்தோடு பேசினாள்.

இரண்டு நாள் விடுப்பு முடிந்து பிரவீன் அலுவலகம் வந்தபோது, அலுவலகம் பெருக்காமலே கிடந்தது. தரையில் ஒட்டியிருந்த மண்ணில் செருப்பு அச்சுகள் இருந்தன. பெரிய பெரிய செருப்புகளின் அச்சுகள். அவை எக்ஸ் போஸ்ட் மாஸ்டர் ஜோசஃப் சாரின் செருப்பு அச்சுகள். அடுக்கப்படாமல் அவசரத்தில் சிதறிக் கிடந்தன, அலுவலக ஏடுகள். நாள்காட்டி தாள்கள் கிழிக்கப் படாமலே பழைய தேதியில் இருந்தது. பழுப்பு மேசையின் ட்ராவர் ஒழுங்குபட மூடவில்லை. அஞ்சல் முத்திரைக்கு ஊற்றும் கருப்பு மை மேசையில் ஊற்றி, தேய்த்து வைக்கப்பட்டிருந்தது.

ஒழுங்குசெய்து அமர்வதற்குள்ளேயே, அவன் பின்புறமிருந்து குரல் வந்தது.

‘ஏ! போஸ்டு…’ மழலை மாறாத பாட்டிக் குரல்.

அவன் திரும்பினான்.

வாயிலில் இருந்த பாட்டி, பிரவீன் நெஞ்சுக்கும் குள்ளமாக இருந்தாள். அவள் கோபம், பார்க்க, பொய்க் கோபம் போல் இருந்தது. சின்ன உருவம் அவளுடையது.

‘நேத்து ஆபீஸ்க்கு வந்தியா?’ மழலைக் கோபம்.

‘இல்லயே. நேத்து நான் லீவு’, அவனுடைய இயல்பான குரலே அவள் இருப்பில் சத்தமாய்க் கேட்டது.

‘உனக்கு எதுக்குச் சம்பளம் தராங்க? சம்பளத்த வாங்கிட்டு லீவு போடுறியா?’

‘ஏன் வேலைல இருக்கவங்க லீவு போடக்கூடாதா?’ செல்லமாய் பாட்டிக்கு பதிலளித்தான். விளையாட்டாய்.

‘எல்லாம் எனக்குத் தெரியும். அந்த ஜோசுப்பு பொண்டாட்டியும் நீயும் கூடிட்டுத்தான முதுயோர் காச ஏமாத்துறீங்க?’ விவரமாய்க் காட்டிக்கொள்ள அவள் போட்டு வைத்த கேள்வி. அவளுக்கும் உறுதியாய்த் தெரியாதது, அவள் எலி முகத்தில் தெரிந்தது.

‘கேஸ் குடுத்துருவன் பாத்துக்க’, கொரித்தாள்.

‘பேர் என்ன? சொல்லுங்க’

‘அமலூரு’

‘இருங்க. பாத்துச் சொல்றேன்’

முதியோர் பணம் பட்டியலில் பெயரில்லை.

‘உங்க பேரே இல்லமா’

‘எனக்கில்ல… எங்கக்காக்கு’

‘பேரென்ன?’

‘லூர்துமரி.’

திரும்ப தேடினான்.

‘மூணு லூர்துமரி இருக்கு. வீட்டுக்காரரு பேரு?’

‘சின்னப்பன். சின்னப்பன் லூர்துமரி’

‘ஆதார் கார்டு எங்க? உங்க அக்கா எங்க?’

‘வருது… நடந்து வருது. அதுதான் கார்டு வெச்சிருக்கு’, பொறுப்பாய் முந்தானை எடுத்து தொடையில் கையோடு வைத்து பொத்தி நின்றாள் எலிப் பாட்டி.

இரண்டு நிமிடத்தில் கூன் கிழவி லூர்துமரி வந்து நின்றாள்.

விரல் ரேகை பதித்துவிட்டு, உடனே தன் பணத்தைப் பெற்றுக்கொண்டாள். பலமில்லாத, முழுதாய் விரியாத சுருங்கிய இமைகளோடு பிரவீனைப் பார்த்து, கை நடுங்க கும்பிட்டுக்கொண்டாள்.

‘யக்கா… நீ இனிமே ஜோசுப் பொண்டாட்டி கிட்ட போவாத. சார் கிட்டியே கேளு.’

தன் அக்கா சென்றதும், எலிப் பாட்டி பிரவீன் அருகில் வந்தாள்.

‘தப்பா நெனச்சிக்காத சாமி. காசுத் தராம எல்லாம் ஏமாத்துறாங்க. அதான்,’ நெஞ்சில் கைகூப்பியபடி, வேகம் குறைந்து கம்மினாள்.

வங்கி முகவரின் கையிலிருந்து மாறிவிட்ட கூன் கிழவியின் விதி, பேச்சியம்மாவிடம் மாட்டிக்கொண்டு முழித்தது. அவளின் விதியோடு நாற்பது முதியோரின் ‘ஐம்பது’கள் கதியும் மோசம் போனது.

சிலர் மட்டுமே பிரவீனிடம் புகாருக்கு வந்தனர். பலர் அந்த கதிக்குப் பழகியிருந்தனர்.

ஓ.ஏ.பி பணம் தரவேண்டிய பொறுப்பு மகாவுடையது. ‘பேயிங் அத்தாரிட்டி’ இடத்தில் மகாதான் கையெழுத்திட வேண்டும்.   

‘உன்னோட வேலய அவங்ககிட்ட ஏன் விட்ட?’ பிரவீனின் தூரிகை முதலில் மகாவைத் துலக்கியது.

‘எனக்கு வீட்டுக்குப் போவ லேட் ஆயிடுச்சுணா. அதனால, அவங்க குடுத்துடுறேன்னு சொன்னாங்க… நான் வேணாம்னுதான் சொன்னேன். வலுக்கட்டாயமா வாங்கிட்டாங்கண்ணா’, முதல் துப்பு. மகாவுடையது.

அதே தூரிகையைச் சற்று நேரத்தில் சாக்கலேட்டில் நனைத்தான், ‘நேத்து ஏன்மா மகா ஒஏபி பணத்த தரல?’

‘அஞ்சாறு ஒஏபி அவதான்பா குடுத்தா… அப்றம், வீட்டுக்குப் போவ லேட் ஆயிடும்ணு எங்கள குடுத்துற சொல்லிக் கேட்டா. சைமன் சாரும் கால் பண்ணி, பாத்து மகாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கனு சொன்னாரு’, பேச்சியம்மாவிடமிருந்து இரண்டாம் துப்பு கிடைத்தது. 

ஒருவர் அறியாமல் ஒருவர் மாற்றிக்கொடுத்த துப்புகளில் ஏற்பட்ட முரண்… பிரவீனுக்குப் புரிந்துவிட்டது!

சப்-போஸ்ட்மாஸ்டர் நாற்காலியின் பின் ஒளிந்துகொண்டது, அவசரத்தில் பறந்த காகித ராக்கெட். பொட்டுக்கடலை டப்பாவுக்குள் பேச்சியம்மாவுக்கு மாட்டிக்கொண்டது சந்தர்ப்ப புதையல்!

அதிகாரத்தின் அடுத்த முக்கோணம்: மகா, பேச்சியம்மா, சப்-போஸ்ட்மாஸ்டர் சைமன் மூவரும் உருவாக்கியது. 

முதல் முக்கோணம்: விருத்தாச்சலம் கோட்ட கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் உட்கோட்ட ஆய்வாளர் கரிகாலன், மணம்பூண்டி சப்-போஸ்ட்மாஸ்டர் சைமன் மூவரும் உருவாக்கியது. 

அதிகாரத்தின் இரு முக்கோணங்களுக்கும் பொது புள்ளியில் சப்-போஸ்ட்மாஸ்டர் சைமன்.

ஒரு புள்ளியில் இணையும் இரு முக்கோணங்கள். செங்குத்தாய் நின்றால், பார்ப்பதற்கு கிட்டதட்ட ஒரு மணல் கடிகாரம் போல் இருக்கும்.

அந்த மணல் கடிகாரம் பிரவீனின் பழுப்புநிற அலுவலக மேசையில் இரகசியமாய் வந்து ஏறிக்கொண்டது.

மணல் இறங்க ஆரம்பித்தது… மணிநேர மணல் கடிகாரம்!

‘உன் வேலைய நீதான் செய்யணும். இன்னொரு தடவ இப்படி நடந்தா உன் பேர்ல கம்ப்ளெய்ன்ட் குடுத்துருவன்’, மகாவை பிரவீன் எச்சரித்தான்.

Leave a Reply