Featured Image

மணம்பூண்டிக்கோ, திருக்கோவிலூருக்கோ தானே சென்று கணக்கில் பணம் செலுத்தி வந்திருக்க முடியும் என்றால், இரண்டு மாதக் காலமாக தனக்கு வராமல் இருந்த முதியோர் ஓய்வூதியத்துக்கு, பிரவீன் சொன்ன அறிவுரைப்படி தாலுகா அலுவலகம் போய் புகார் அளித்திருப்பாள் கூன் கிழவி; நெடுங்கம்பட்டின் கூன் கிழவி, லூர்துமரி பாட்டி. மாதத்துக்கு ஆயிரமென்று அவளுக்கு வராமல் இருந்த இரண்டு மாத மொத்தத் தொகை ரூபாய் இரண்டாயிரம். அவளைத் தாலுகா அலுவலகம் அழைத்துச் செல்ல ஆளில்லை. அப்படியே புகார் அளித்துவிட்டாலும் துணைக்கு ஆள்வராத கூன் கிழவிக்கெல்லாம் நீதி கிடைக்குமா என்பது தெரியாது. அவளுக்கு வீடில்லை. கணவன் இறந்து முப்பது வருடம் ஆகிவிட்டிருந்தது. அவள் மகனுக்கு, அவளைத் தாண்டி வீட்டில் வைக்க நிறைய பொருள்கள் இருந்தன. காற்றில் தரைதொட்டு உருண்டோடும் காய்ந்த இலைச் சருகு அவள். 

‘பசிக்குது யா’ என்று பிரவீனிடம் அவ்வப்போது வந்து பார்த்து முனகுவாள். கொஞ்சம் நேரம் கழித்து எங்கேனும் வசைகளோடு கிடைக்கும் சோற்றைத் தின்றுவிட்டு, தடி ஊன்றிக்கொண்டு கிராமத்துக்குள்ளேயே புனிதச் சுற்றுப்பயணம் மேற்கொள்வாள். தீக்ஷாவின் குட்டி டாலர் கட்டிப்போட்ட இடத்திலேயே எத்தனையோ ஊர்களை சுற்றி வந்துவிட்டது. இன்னமும் சுற்றும். இன்னமும் இன்னமும். கட்டிய கயிரேதும் இல்லாமல் ஊரையே சுற்றி வருகிறாள், லூர்துமரி பாட்டி. முடிவில்லா தூரத்துக்குச் சுற்றுப்பயணம். முப்பது வருடத்துக்குமுன் தன் கணவன் கண்டடைந்த புனிதத் தலம், இன்னும் அவளுக்கு வரவில்லை. 

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்(ஐ.பி.பி.பி) சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அஞ்சல்துறை திட்டமிட்டிருந்த நேரம். சிறு, குறு வியாபாரிகளின் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு உதவிடும் வகையில் அந்த சேவை கொண்டுவரப்பட்டிருந்தது. அரசின் உதவித் தொகைகள் வரும் தளங்களில் எல்லாம் ஐ.பி.பி.பியின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதன்மூலம், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-இன் சேவைகளை விரிவுபடுத்த முடியும் என்கிற நோக்கில் கிராமத்தில் உள்ள ஓ.ஏ.பி(ஓல்ட் ஏஜ் பென்ஷன்) வாங்கும் முதியோர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் உதவித்தொகை பெறுபவர்கள், எம்.ஜி.என்.ஆர்.ஈ.ஜி.ஏ-வின்(மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்ளாய்மெண்ட் கேரண்டி ஆக்ட்) கீழ் வேலைக்குப் பெயர் பதித்து வைத்திருக்கும் ஏரிவேலை மக்கள் எல்லோரிடமும் கேன்வாசிங் செய்து ஐ.பி.பி.பி கணக்குகளைத் துவங்கவைக்க அஞ்சல்துறை முடிவு செய்திருந்தது. 

ஐ.பி.பி.பி கணக்குத் துவங்கி, அஞ்சலகவழி பணம் பெறுவதற்கு முன்புவரை, வங்கி ஏஜெண்ட்களின் வழியாகத்தான் முதியோர் பணத்தைப் பெற்று வந்தாள், லூர்துமரி பாட்டி. அதில் கடந்த இரண்டு மாதங்களின் பணம் அவள் கைகளுக்கு வந்து சேரவில்லை. 

‘ஒனக்கு பணமே வரல இந்த மாசம்’, ஏஜெண்ட் சொன்னாள். 

‘ஒழைக்காம வர கௌர்மெண்ட் பணம்தான? மாசாமாசம் ஓஏபி காச வாங்கித்தர ஆளுக்கு அம்பது தரதுக்கு மனசுவராத கெழடுங்க,’ ஏஜெண்ட்காரியின் மனசு முணுமுணுத்தது. 

கிழவியின் ஈன மனதுக்கு ஏஜெண்ட் கொடுத்த தண்டனை, கொடுக்கப்படாமல் மடக்கிக்கொண்ட வெறும் இரண்டு மாச ஓசி காஸ்! அது தெரியாமல், வராத பணத்துக்கு தாலுகா அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சொல்லியிருந்தான் பிரவீன்.


மெயில் ஓவர்சீயர் பாண்டு சாரின் அறிவுறுத்தல், பிரவீனுக்குள் அமிழாமல் மிதந்து மேலெழுந்தது. 

‘நூறு அக்கவுண்ட் வந்துரணும். காரணமே வேலைக்கு ஆகாது. போஸ்டல் வீக் வருது, தெரியும்ல?’ அக்டோபர் ஒன்பது முதல் பதினைந்து வரை அஞ்சல் வார விழா.

‘நூறா சார்?’ 

‘ஆமாம். நூறு… கரெக்டா வந்துர்ரணும்.’ 

புதிதாய் முளைத்த காளானிடம் நூறு கணக்குகளைச் சாத்தியமாக்கிடும் வழியை மெயில் ஓவர்சீயர் பகிரவில்லை. அது இரகசியம். ஒட்டுமொத்த அலுவலகங்களும் அறிந்துவைத்த இரகசியம். முதலிரவின் இரகசியம். என்ன நடக்குமென்று எல்லோரும் அறிந்திருந்தாலும், வெளியில் பேசிக்கொள்ளாத 

 முதலிரவின் இரகசியம். பெற்றோர்கள் சொல்லாமல் மறைத்தாலும், தனக்குத் தானே குழந்தை அறிந்துகொள்ளும் அந்த இரகசியத்தைப் போல. தன் பிள்ளைக்கும் தெரியும் என்பதறிந்தும் அதைச் சொல்லாமலே கடக்கும் பெற்றோர் பாதுக்காக்கும் ரகசியம் போல. பாண்டு சார் மறைத்து வைத்தது முதலிரவின் ரகசியம். 

பிரவீனுக்கும் தெரிந்துவிட்ட இரகசியம்தான். அவனவன் தனக்குத் தானே தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதை சொல்லிக் கொடுக்காமலே விட்டார், மெயில் ஓவர்சீயர் பாண்டு சார். 

ஒரு கணக்குதாரர் சேமிப்புக்கு அளித்த மொத்தப் பணத்தை சிறு தொகைகளாகப் பிரித்து, பத்து, இருபது, முப்பது புத்தகங்களாக போட்டு, கணக்குதாரர்களை அந்தப் புத்தகக்கட்டை சுமக்கவிடுவதுதான் அந்த ரகசியம். அவ்வாறு புத்தகக்கட்டை சுமக்க ஒப்புக்கொள்ளும் சில கணக்குதாரர்களோடு இணக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். மிக எளிமையாகிவிடும். கேட்ட கணக்குகளைக் கேட்ட நேரத்தில் சூடாகப் பரிமாறிவிடலாம்…

வேறொரு கிளையின் சீனியர் ஒருவர், அஞ்சல் மேளா ஒன்றில் இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸிடம் அக்கவுண்ட் பிரித்து போடுவதைப் பற்றி தெரியாமல் ஒரு கேள்வி கேட்டார். அதுவும் இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் கொடுத்திருந்த வாய்ப்பின்போது… 

‘ஏதாச்சும் சந்தேகம்னா கேளுங்க’, இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் கரிகாலன், கூடியிருந்த நூறு கிளை மற்றும் துணை கிளை அஞ்சல் அலுவலர்களுக்கு வாய்ப்பளித்தார்.

முழுக்கை சட்டையோடு கையுயர்த்தினார் நடுவரிசையில் ஒருவர். அவர் சீனியர்களின் நண்பர், ஜீனியர்களின் சீனியர்.

‘கேளுங்க’, உற்சாகப்படுத்தினார் இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ். ‘எல்லாரும் அவருக்கு ஒருமுற நல்லா கைத்தட்டுங்க’

இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் மிகவும் ஜோவியலான ஆளு.

கைத்தட்டல் சத்தம் ஓய்ந்ததும் அந்த சீனியர் கேட்டார். 

‘சார். அக்கவுண்ட் எண்ணிக்கைல டார்கெட் தரர்த விட, அமௌன்டா தந்துரலாம்ல. கௌன்டிங்ல கொண்டு வரர்து கஷ்டமா இருக்கு’ 

கையில் வைத்திருந்த மைக்கில் சத்தமில்லாமல் குறுநகை செய்துவிட்டு, ‘நாம கவர்மெண்ட் எம்ளாயிஸ்தான். ஆனா, நம்ம கவர்மெண்ட் வேலைல இல்ல’, அவர் சொன்ன சஸ்பென்ஸ் ஜோக்குக்குச் சின்ன குலுங்கல் சிரிப்பு சிரித்தார்… 

‘என்ன சார்? புரியலையே சார்னு சொல்றீங்களா?’ மைக்கைத் தூரவைத்து உதட்டில் நாதடவி விட்டுத் தொடர்ந்தார், ‘நாம கவர்மெண்ட் எம்ளாயிஸ்-ஆ இருந்தாலும், போஸ்ட் ஆஃபீஸ் கவர்மெண்ட் ஓடதா இருந்தாலும், நாம கவர்மெண்டுக்கு ஒரு ஏஜெண்ட் முறைலதான் வேல செய்யறோம். கவர்மெண்ட் பொறுத்தவரைக்கும் நாம எத்தன பேருக்கு வேல செய்யறோம். எத்தன மக்கள போய்ச் சேருறோம்தான் கணக்கு. அத வச்சித்தான் போஸ்ட் ஆஃபீஸ் ஓடுது. அதுக்குத்தான் நமக்கு கவர்மெண்ட் கமிஷன் தருது, ஒரு அக்கௌண்ட்க்கு இவ்ளோனு. அதனால கணக்குப் புடிச்சித்தான் ஆகணும்’. அரங்கத்தின் மூலை வரைக்கும் அவர் குரல் பாய்ந்தது. 

‘சரி. நீங்க கொஷின் கேட்ட மாதிரி, நான் உங்கள கேக்குறேன்,’ கூடியிருந்தோர் இடம் கேட்டார். ‘என்ன வேணாமா?’

‘வேணாம் சார்’, கூட்டத்தின் கடைசியிலிருந்த கடைசி பெஞ்ச் மாணவர்களின் கோரஸ் சத்தம்.

‘சும்மா. டெஸ்ட் பண்ணுவோம்’, வகுப்பறையை விளையாட்டு மைதானமாய் மாற்றத் தெரிந்த ஆசிரியர்.

கூடியிருந்தோரின் விரிந்திருந்த கால்கள், தொடை ஒட்டி ஒழுக்கமாய் மாறிக்கொண்டன.

‘எந்த வருஷத்துல பி.எல்.ஐ ஸ்டார்ட் ஆச்சு? ஸ்டார்ட் பண்ண வருஷம்…’

‘சார். ஃபிப்ரொரி ஒன். நைன்டீன் எய்ட்டீ ஃபோர்’, கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்தது மகாவின் குரல். பிரவீனின் பக்கத்து நாற்காலியில் இருந்து.

‘கரெக்ட்’, படக்கென்று விடையை பிடித்தார் ஐ.பி சார்.

‘கிளாப் பண்ணுங்க இந்தப் பொண்ணுக்கு… நல்லா கிளாப் பண்ணுங்க…’ உற்சாகமாகிவிட்டார் ஆசிரியர். மாணவியின் பதிலில்.

‘இந்தப் பொண்ணு பேரு மகாலக்ஷ்மி’, சரியாக நினைவு வைத்துக் கூறினார். ‘புதுசா வந்தப் பொண்ணு பதில் சொல்லுது. நமக்குத் தெரிலனா என்ன அர்த்தம்? நம்ம சரியா வேல பாக்குறதில்ல! அதானே?’ 

அவர்கேட்ட கேள்வியில் வாடின, மாணவச் செல்வங்களின் முகங்கள்.

அடிக்கடி மேளாக்கள் நடக்கும். இந்த மேளா, தலைமை அஞ்சல் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில், திருமண நிகழ்வு இல்லாத நாளொன்றின் மாலை வேளையில் நடந்தது.

மீண்டும், அஞ்சல்வாரத்தைக் கொண்டாட ஒரு வாரம் முழுக்க மேளா நடக்க இருந்தது. அதற்குத்தான் மெயில் ஓவர்சீயர் பாண்டுசார் நூறு கணக்குகள் டார்கெட்டை நிர்ணயித்திருந்தார்… 

‘என்ன மகா… மடத்துல அக்கவுண்டா வந்து விழுகுது, சாக்குப்பைல கட்டி எடுத்துட்டுப் போறாங்கனு தெரிஞ்சவங்க சொன்னாங்க. அப்படியா?’ சின்ன கிண்டல் கலந்த வழக்கமான நகைச்சுவையோடு, சீனியர் பாலுசாமி சார்.

‘சார்… அதெல்லாஆம் இல்ல ஸேய்ர்ர்’, கிண்டலுக்கு வெட்கப்படும் குரலில்.

‘அன்னைக்கி ஐ.பி சார்கிட்ட பதில்லாம் சொன்னீங்களே, அக்கவுண்டும் அதே மாறி புடிச்சி இருப்பீங்கனு நெனச்சேன்’

‘அதெல்லாம் இல்ல சேய்ர்’, சின்ன வலியுடன் சோர்ந்த பதில். 

‘நெஜமாவா?’

‘நெஜமாவே இல்ல ஸேய்ர்ர்’

அந்தச் சத்தம் சீனியரை நம்பவைத்தது. மேலும், அவருக்கு பொறுப்பையும் தந்தது.

‘சரி, பின்ன இப்படி பண்ணுங்க! டெலிவரிக்குப் போறப்ப கூடவே அக்கவுண்ட் ஓபனிங் ஃபார்ம் எடுத்துக்கங்க. போற வழியில தெரிஞ்சவங்க கிட்ட பேச்சுக் குடுங்க. அக்கவுண்ட் பத்தி எடுத்துச் சொல்லுங்க. உடனேலாம் ஒத்துக்க மாட்டாங்க… நாலு நட நடந்தா தான் கெடைக்கும். ஓகேனு சொன்னாங்கனா உடனே டக்குனு ஃபார்ம் எடுத்து அங்கேயே ஃபுல் அப் பண்ணி கையெழுத்து வாங்கிருங்க. ஃப்ரீ டைம்ல உங்க பி.பி.எம் கூட்டிட்டு கேன்வாசிங் போங்க. அவர் ஆஃபீஸ் வர்றவங்க கிட்ட பேசுவாரு. நீங்க லெட்டர் குடுக்குறப்ப பேசுங்க’, தன்னுடைய அனுபவத்தைப் பொறுப்பாகப் பகிர்ந்துகொண்டார். 

கல்லு குழியெல்லாம் குதித்தேறிப்போனது, மகாவின் சைக்கிள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அரசுத் தரும் மானியத்தில் ஸ்கூட்டி பெற அவள் விண்ணப்பித்திருந்தாள். அது வந்ததும், சைக்கிள் அவசரங்கள் குறைந்துவிடும். மடத்தெரு வழியாக அருள் கடையைத் தாண்டி வந்தாள். மாரியம்மன் கோவில் தெருவின் முச்சந்தி, பெரிய வாட்டர் டேங்க் எல்லாம் தாண்டி கிழக்குத் தெருவை நோக்கிச் சென்றது, மகாவின் சைக்கிள். 

முச்சந்தியில் கிழக்குத் தெருவில்தான் ஃபாஸ்ட் ஃபுட் நூடுல்ஸ் கடை. சைவம்/அசைவம் இரண்டும் சமைத்து வழங்குவார், நூடுல்ஸ் கடைக்காரர். முன்னொரு முறை அவர் தன் பெயரில் பத்தாயிரம் ரூபாய் அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணம்போட வந்தப்போது, அவருடைய மகளுக்குச் செல்வமகள் திட்டத்தில் கணக்குத் துவங்குமாறு பிரவீன் கேட்டிருந்தான். அப்போது, அவர் தன் மகளுக்கு ஒன்பது வயதென்றுதான் சொல்லியிருந்தார்.

செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம், பெண்கள் கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவிடும் வகையில் பெண்கள் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம்.  அதிக வட்டி விகிதத்தோடு, முதலை சேர்த்து தரும்  நீண்ட காலத்துக்கான திட்டம். நெடுங்கம்பட்டு மற்றும் கொழுந்திராம்பட்டு மக்களின் விருப்பத் திட்டம். 

‘இப்படிப் பசங்களுக்கும் இருந்தா ஒன்னு என் மவன் பேர்ல போட்டுவுடு’ என்று கிராம மக்கள் விரும்பிக் கேட்கும் திட்டம்.

இரண்டு முறை நூடுல்ஸ் கடைக்கு நடந்துவந்த பின்னர், அவர் அளித்த மகளின் பிறப்புச் சான்றிதழ், அவர் மகளுக்கு பதினொன்று வயதானதைச் சொன்னது. தன் மகளுக்கு ஒரு நல்லத்திட்டத்தில் பணம் செலுத்த முடியாமல் போனதில்  அப்பாவாக அவர் ஏமாந்ததைவிட, அக்கவுண்ட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைத்து பிரவீன் ஏமாந்தது அதிகம். செல்வமகள் திட்டம் பத்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே.

அந்த ஏமாற்றத்தோடுதான் அதே தெருவில் அந்த நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பெண் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தான் பிரவீன்.

‘நீ என்ன கிளாஸ் படிக்கிற?’ அந்தப் பாப்பாவின் உயரத்துக்கு குனிந்து கேட்டான். குண்டு குண்டு கருப்பு கண்கள். மூக்கும் முழியுமாய் இருந்தாள் பாப்பா.

‘ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட்’

அந்த நேரத்துக்கு அவன் தயாராக வந்திருக்கவில்லை. ஏதேச்சையாய் சட்டைப் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த தபால் திட்ட விழிப்புணர்வு நோட்டீஸை எடுத்து நீட்டினான்.

‘இத உங்க மிஸ் கிட்ட குடு. அத…’ 

‘நான் எதுக்கு குடுக்கணும்? உள்ள என்ன இருக்கு?’ அவன் முழுதாய்ப் பேசி முடிப்பதற்குள் குறுக்கில் புகுந்தன கேள்விகள்.

‘குடுத்து உங்ககிட்ட படிச்சிக்காட்ட சொல்லு. உங்க அப்பா அம்மாக்கிட்டயும் சொல்ல சொல்லு. போஸ்ட் ஆஃபீஸ்ல குடுத்தாங்கனு சொல்லு‌. சரியா?’ சொல்லி முடித்தான்.

‘ஓ! போஸ்ட் ஆஃபீஸா? நான்கூட லவ் லெட்டரோனு நெனச்சேன். அப்போ குடுங்க’

பிரவீனைத் திகைப்போடு சிரிக்க வைத்தது அவளுடைய பேச்சு. 

நூடுல்ஸ் கடையைத் தாண்டி, மகாவின் சைக்கிள் கடிதங்கள் கொடுக்கப் போனது. அடுத்த லெட்டர், பால்ராஜ் சார் வீட்டுக்கு!

‘ஏன் சார்? இப்போ டிவைஸ்லாம் சரி ஆயிருச்சா?’ ஜன்னல் வழியாக பிரேமா அக்கா கேட்டாள். 

‘சரி ஆயிருச்சி மா… ரெண்டு நாளாதான் ட்ரெய்னிங் முடிஞ்சி வேல ஆரம்பிச்சி இருக்கு! சரியா சிக்னல் கெடைக்க மாட்டேங்குது’

‘ஆமா சார். முன்ன இருந்த லேடிகூட இன்னக்கி வாங்குற புக்கலாம் நாளக்கிதான் தருவாங்க.’

‘ஆமாம்மா. ஆஃபீஸ்க்குள்ள சிக்னல் இல்ல. வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்தான் பணம்போட்டு எடுத்துட்டுவர மாதிரி இருக்கு’

‘பாத்து சார். மக்க காசு — கவனமா பண்ணுங்க. காசு தவற உட்டுட்டா உங்களுக்கும் தான நஷ்டம்…’

‘சொல்லி இருக்கன்மா, ஆஃபீஸ்ல. இன்ஸ்பெக்ஷன் வந்தப் பிறகு, போஸ்ட் ஆஃபீஸ் ஷிஃப்ட் பண்றது பத்தி பாத்துக்கலாம்னு சொல்லி இருக்காங்க.’

‘ஏன் சார்? இங்க இருந்து எங்க ஷிஃப்டிங் பண்ணுவீங்க?’

‘எங்க வீட்டுக்குத் தான்மா.’

‘அங்க சிக்னல் நல்லா கெடைக்குதுங்களா?’

‘ஊர்ல எல்லா எடமுமே டல் தான். வீட்ல பரவால்ல’

‘அது சரிதான் சார். இங்கயே இருந்தீங்கனாகூட டிபார்ட்மெண்ட்ல சொல்லி, ஜன்னலுக்கு ஒரு கதவுபோட்டுத் தரச்சொல்லுங்க. இராத்திரி பூரா திண்ணைல ஒக்காந்து குடிகாரனுவ ஒரே குடி. பக்கத்து சந்துல ஒன்னுக்கடிக்க வர்றேன்னு எவனாச்சும் சிகரெட்ட உள்ள போட்டுட்டுப் போயிட்டான்னா… பிரச்சினையில்ல? மக்கப் பணம், சும்மாவா?’

பிரேமா அக்காவுக்குப் பிரவீனிடம் பேசி விபரம் அறிந்துகொள்ள ரொம்பவும் பிடித்திருந்தது. சார் என்ற வார்த்தையையே குடும்ப உறவுபோல கூப்பிடுவாள்,  அவளுக்கு அவ்வளவு பிரியம் அதில்.

‘நீங்க நல்லா வெவரம் சொல்றீங்க சார்… பொறுமையா நின்னு நிறுத்தி வெளக்கமா பதில் சொல்றீங்க. இதுக்கு முன்னலாம் எந்த வெளக்கமும் யாரும் சொல்லாதுங்க… நிக்க உடாம தொரத்துங்க. நீங்க இப்படி வெளக்கமா அய்யா, அக்கா, அம்மானு பேசவும் ஜனங்களுக்கு ஒங்கள புடிச்சிக்கிச்சி. அதான் இப்ப போஸ்ட் ஆஃபீஸ்க்கு எதுக்குப் பாத்தாலும் கூட்டம் வருது’

லெட்டர் கொடுத்துவிட்டு சைக்கிளில் வந்த மகா, ஒடிந்துபோன உடல்மொழியோடு அலுவலகத்துக்குள் நுழைந்தாள். கண்களின் ஓரத்திலிருந்து கன்னங்களில் ஈரம் வழிந்திருந்தது.

‘என்னம்மா ஆச்சு? ஏன் சோகமா இருக்க?’ பிரவீன் கேட்டான்.

அந்தக் கேள்விக்காகவே காத்துக்கொண்டிருந்தவளாய், உடனே கூறினாள்.

‘அந்த பால்ராஜ் சார் இருக்காருலண்ணா?’

‘எந்த பால்ராஜ் சார்?’

‘எல்ஐசி ஏஜெண்ட் பால்ராஜ் சார். அந்த மாதா கெபி பக்கத்துல’

‘தெரியலையே யாருன்னு’

‘அவர் வைஃப் ணா…’

‘ஏன்? என்ன சொன்னாங்க?’

‘லெட்டர் குடுக்கப் போயிருந்தண்ணா… பாலு சார் லெட்டர் குடுக்கும்போதே அக்கவுண்ட் கேன்வாசிங் சேத்துப் பண்ண சொன்னாருல — அதான் அவங்ககிட்ட அக்கௌன்ட் போடுங்க டீச்சர்னு கேட்டன்… செம்மையா திட்டி அனுப்ச்சிட்டாங்க.’

‘ஏன் திட்டுனாங்க?’ கோபத்தோடு கேட்டான்.

‘பொண்ண அனுப்பிவிட்டா வேலய முடிக்காம நடக்கவிட்றீங்க. அக்கௌன்ட் கேக்க மட்டும் சும்மா சும்மா வந்துட்றீங்க. கவர்மெண்ட் வேலைக்கு வரவரைக்கும் தான் உங்க ஒழுங்கெல்லாம். அப்றம் அசால்ட் ஆயிட்றதுனு சொல்லி செம்மையா திட்டிட்டாங்கண்ணா…’

‘எந்த பொண்ணு… எப்போ வந்தாங்க?’

‘எனக்கும் தெரியலண்ணா’

‘ஆஃபீஸ் பிரச்சனைய பத்திப் பேசுனா, அவங்ககிட்ட என் ஃபோன் நம்பர குடுத்துட்டு வரச் சொன்னன்ல’

‘மறந்துட்டேன் ணா’.

‘அவங்க ஃபோன் நம்பராச்சம் இருக்கா?’

‘இல்லண்ணா’

‘நெக்ஸ்ட் டைம் அந்தப் பக்கம் போனா அவங்கள காட்டு’

‘ஓகே ணா. ஆனா, பிரச்சனலாம் வேணாம். இதோட விட்றலாம்.’

மடத்திலிருந்து ஐம்பத்து இரண்டு கணக்குகளோடு அஞ்சல்வார மேளா முடிந்தது. மடம் அலுவலகத்துக்குத் தாமாக விருப்பத்தில் வந்து துவங்கிய கணக்குகள், அலுவலகத்துக்கு வருபவர்களிடம் எடுத்துச்சொல்லி பிரவீன் கேன்வாசிங் செய்த கணக்குகள், அதிகாரிகளின் வற்புறுத்தலில் கணக்குகளின் இலக்குக்காக பிரவீன் அம்மா பெயரில் பத்து அக்கவுண்ட்களும், மகா அப்பா பெயரில் ஏழு அக்கவுண்ட்களுமாக போட்டு மொத்தம் ஐம்பத்தொரு கணக்குகளை மடம் அஞ்சலகத்திலிருந்து கொடுத்திருந்தார்கள். ஒரேயொரு கணக்கு மட்டும் அதில் அலுவலகத்தைவிட்டு வெளியே சென்று கேன்வாசிங் செய்ததில் கிடைத்த வெற்றிக் கணக்கு! 

Leave a Reply