பழைய தேவாலய மடம் (ஒப்பம் நாவல், அதி. 3)

Featutred Image

புலரும் காலையை ஊருக்குக் கூவி அழைக்கும் சேவல்களும், ஓட்டை வேலிவழித் தோட்டத்தில் நுழைந்து சிறுநீர் கழித்துச்செல்லும் நாய்களும், இரவிலும் காலைப் பனியிலும் குதித்துக் கும்மாளமிடும் ஈரத்தவளைகளும், இன்னமும் தொடரும் ஜூராசிக் ஓணான்களும், தொழுவத்திலும், வீட்டுவெளியிலும் அசைப்போட்டுக் கொண்டே கிராமத்தை எண்ணி வாழும் பசுமாடுகளும் கன்றுகளும், ஒருநாளுக்கு ஊரை உறவாடும் நிரந்தரமில்லா பூச்சிகளும், வீடுகளுக்குள் தங்கும் ஊர்மக்களும் சுவாசிப்பது அந்தத் தேவாலய அன்னை இழுத்துவிடும் மூச்சுக் காற்றைத்தான். 

அன்னையின் சுவாசப்பை முழுக்க காற்று நிரம்பி, பின் மெல்ல வெளியேறும் தியான வாசத்துடனான காற்று. அமைதியின் நறுமணம் மௌன கீதமாய் காற்றில் கலக்கும். அதனாலேயே, மரக்கிளையில் மோதும் காற்றும் மௌன ஸ்வரங்களை மீட்டுகிறது. 

அன்னையின் மூச்சுக்காற்றில் ஒரு வரலாற்று நெடியும் கலந்தே வீசும். பிரிவின் மென்மையான கார நெடியோடும், அரிந்த வெங்காயத்தின் குத்தல் நெடியோடும் அன்னையின் நெஞ்சம் மௌன ஸ்வரங்களின் தொண்டைக்குழி கீதமொன்றை பாடும். 

முப்பதுக்கும் மேற்பட்ட பக்கத்துக் கிராமங்களின் உறவைச் சுமந்தவள். தன் கையால் அத்தனைப் பிள்ளைகளுக்கும் சோறூட்டியவள். தலைமை அன்னையவள். திருவிழா நாட்களின் மொத்த மகிழ்ச்சிக்கும் ஒற்றைக் காரணி. பேரப் பிள்ளைகளின் பாட்டி வீடு அவள். பாசத்துக்கு குறைவில்லாமல் அத்தனை வீட்டுப் பிள்ளைகளையும் தன் மார்பில் அணைத்தவள். இன்றைய ‘மடம்’ அஞ்சல் கிளையின் பெயருக்குக் காரணமாகிய செவிலிகள் மடத்தைக் கொண்டு, வானத்தின் உயரத்தில் எரிந்த மெழுகுவர்த்தி அவள்! 

பழுதில்லாத தார்சாலை, தேவாலயத்தை மடத்தெருவிலிருந்து குறுக்கே பிளந்துப் பிரித்திருந்தது. ஒரு மேனாட்டுக் கவிஞன் அந்தச் சாலையைப் பார்த்திருந்தால், நிச்சயம் ஒரு பெண்ணின் நீண்ட கூந்தலாக அதை வர்ணித்து பாடியிருப்பான் என்று பிரவீனுக்கு அடிக்கடித் தோன்றும். எப்போதோ அவனுடைய பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் திரு. மனோ மதிவாணன், ஒரு ஆங்கிலக் கவிஞன் தன் காதலியின் கூந்தலை வைத்தே பாடிய கவிதையை வகுப்பில் படித்துக் காட்டிய ஞாபகம் அவனுக்கு… 

அந்த வகையில், பழுதில்லாத தார்சாலை, சுருளில்லாத கோரைக் கூந்தலுடையவள். மாறாத கருப்புநிறக் கூந்தல் கொண்டவள். அவள் கூந்தல் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம். ஒரு பதினைந்தடியேனும் அகலம். அத்திப்பாக்கத்திலிருந்து நெடுங்கம்பட்டு வரை நீண்ட கூந்தல். கின்னஸ் சாதனைக்கு வளர்த்த கூந்தல்! இப்படியான காதல் கூந்தலின் கவர்ச்சிகர கருப்புக்கு நேர்மாறாய், வெள்ளை அங்கியில் அன்னைத் துறவில் நிற்கிறாள்… பிள்ளைகளின் சண்டையில், பேரப்பிள்ளைகளையும் பிரிந்து மனம் வலித்து தியானத்தில் அமர்ந்தவள், இன்னமும் அப்படியே ஆழ்ந்து இருக்கிறாள்… அமைதி நறுமணம் கமழும் மௌன கீதத்தோடு! துறவுக்குப் பின், அவள் மனதில் அலைகளில்லா அமைதி நீரோடை சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 

தேவாலய அன்னையின் அருகிலேயே இருக்கும் திருச்சபையினர் விடுதியில்தான் ஓய்வுபெற்ற போஸ்ட்மேன் திரு. அந்தோணி ஐயாவுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நல்ல விதம் நடந்தது. வண்ண ஸ்ட்ராபெர்ரி விளக்குகள், விடுதி முழுதும் ஒளிர்ந்தன. சாலையிலிருந்து தொடங்கி விடுதிக்குச் செல்லும் பாதையில், பந்தல் கழிகள் நடப்பட்டிருந்தன. விடுதி வரை கயிறு கட்டி, அதில் ஸ்ட்ராபெர்ரி கொடிப் படரவிடப் பட்டிருந்தது. சில ஸ்ட்ராபெர்ரிக்கள் மட்டும் பெட்ரோல் தீர்ந்த வண்டித் துப்புவது போல் ஒளியைத் துப்பி மின்னியது. சந்தனத்தில் கரைத்தச் சாக்கலேட்டாய் திருமண வரவேற்பின் ஈரப்பாதை நிறம்… பாதையின் இரு பக்கங்களும் வெட்டிக்கிளிப் பச்சையில் புல்தரை. விசேஷத்துக்கு வந்திருக்கும் தாவரப் பூச்சிகளும் சில ஊர்வனவும் பச்சை ஈரத்தில்… மாலைநேரத்தில் ஓய்வுக்காக ஒளிமங்கியிருந்த வானம், தூரல் சொந்தங்களை வரவேற்புக்கு அனுப்பி வைக்க தயார் செய்துகொண்டிருந்தது. 

வரவேற்பு பந்தலிலிருந்து தள்ளிச் சாலையை ஒட்டி பிரவீனும், மடம் கிளையின் துணை அஞ்சல் அலுவலர் மகாலட்சுமியும் நின்றுகொண்டு, அத்திப்பாக்கம் கிளை அஞ்சல் அலுவலர் திரு. பாலசுவாமி சாருக்காக கொஞ்சம் அதீக நேரமாய்க் காத்திருந்தார்கள். பாலுசுவாமி சார் இருபது வருடத்துக்கும் மேலாக, ஒரு தலைமுறையின் காலம் அத்திப்பாக்கத்தின் அஞ்சல் அலுவலராய் இருப்பவர்… சீனியர்! பிரவீன் மடம் கிளையின் அஞ்சல் அலுவலர். நேற்றுவந்த பையன். இராத்திரி பெய்த மழையில் முளைத்த ஜூனியர்! அத்திப்பாக்கத்தின் துணை அஞ்சல் அலுவலர் நிர்மலா அன்று வேறொரு விசேஷத்துக்கு சென்றுவிட்டதால், திருமண வரவேற்புக்கு வர இயலவில்லை. 

மடம் அலுவலகத்தில் இரண்டு ஜூனியர். அத்திப்பாக்கம் அலுவலகத்தில் ஒரு சீனியர், ஒரு ஜூனியர். அத்திப்பாக்கம், மடத்தைக் காட்டிலும் பெரிய ஊர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த ஊர், அத்திப்பாக்கம். அத்திப்பாக்கம் அலுவலகமும், மடம் அலுவலகமும் மணம்பூண்டி துணை அஞ்சல் அலுவலகத்தின் கிளைகள். இரண்டு கிளைகளோடு மட்டுமே இயங்கும் மணம்பூண்டி, ஒரு சின்ன துணை அலுவலகம். மணம்பூண்டியிலிருந்து அத்திப்பாக்கத்துக்குக் கடிதங்களை எடுத்துவரும் பணியைச் செய்பவர் மெயில் கேரியர் திவாகரன். ஸ்வஸ்த் உடம்புக்காரர்!

பிரவீனிடம் அவர் அவ்வப்போது சொல்வார்: ‘ஒடம்பெல்லாம் ஒரே ஸ்வஸ்த் ஆயிப்போச்சு பிரவீனு… வேல இல்லாமயே பழகிடுச்சா — இப்ப வேலக்கி ஒடம்பு பழக மாட்டிங்குது… எப்படி?’  ‘எப்படி?’க்குப் பதில் எதிர்பார்ப்பார். பிரவீன் திரும்ப பதில் சொல்ல வேண்டும்: ‘ஸ்வஸ்த் ஆயிப் போச்சு ணா…’ சூப்பர் சீனியருக்கு, ஜூனியர் தந்தாக வேண்டிய குறைந்தபட்ச மரியாதை அது.

காற்றின் துணையோடு தன் பாய்மர எக்ஸலில் வந்திறங்கினார் பாலுசாமி சார். முழுக்கை வெளிர்நிறச் சட்டையோடு, இஸ்திரி களையாமல் வந்தார். தனக்காக எதிர்பார்த்திருந்த பிரவீனையும், மகாலட்சுமியையும் அழைத்துக்கொண்டு போய், கொஞ்சம் நேரம் பந்தல் அடியில் விசேஷத்தில் பங்கெடுத்தார். சற்றுநேரத்தில், பந்தியில் நுழைந்து மகாலட்சுமியும், பாலுசுவாமி சாரும் சிக்கன் பிரியாணியைப் புசித்தார்கள். பிரவீனுக்கு சைவ உணவுப் பழக்கம். அவன் பந்தலிலேயே அமர்ந்துகொண்டான்.  

அருகிலேயே பெரிய டபராக்களில் பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது. ஐயப்பந்தாங்கல் டீக்கடையின் ஆவிப் போலில்லாமல், டபராவிலிருந்து எழுந்த ஆவி, ‘என்ன புதிய முகம் போலிருக்கிறதே!’ என்று பிரவீனைப் புருவம் சுருக்கி அடையாளம் கண்டுகொண்டு, மெல்ல ஏறி மேகத்தைச் சேர்ந்தது. பணியில் அமர்ந்து இத்தனை நாளாகியும், பிரவீன் அருகில் கண்டிராத தேவாலயம், பந்தல் ஓரத்திலிருந்து மிக அருகிலேயே தெரிந்தது. அழகிய ஊரின் சொர்க்க தோட்டமாய் விரிந்த புல்வெளியின் நடுவிலே ஒரு பிரம்மாண்ட தேவாலயம்!

இறுக்கமான வேலை நாட்களுக்கிடையில், அந்த அமைதி வெளியில் உலவி மகிழாமல்விட்ட சங்கடம், பிரவீன் மனதின் கீழடுக்கை அறைந்தது. அந்தக் கொஞ்சம் நேரம்… சமையல் விறகின் எரி தீ… மேலெழும் ஆவி… தூரலிட காத்திருக்கும் மாலைநேர வானம்… தேவாலய அன்னையின் ஆழமான மூச்சு… அவையே நெடுங்கம்பட்டு வாழ்வின் அஞ்சல் சுவடுகளுக்கு அர்த்தமளித்த கொஞ்சூண்டு நேரம்! 

தேவாலய அன்னையின் சலனமில்லா அமைதி நீரோடைக்குள் மூழ்கிச் சிறுமீன்களாய் நீந்தும் நேரம் அது. தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடப்பதில்லை. அது பழைய தேவாலயம் ஆகிவிட்டது. காலை, மாலைநேரப் பூசைகள் இருப்பதில்லை. தேவாலயத்தின் பரப்புக்குள்ளேயே இடது ஓரமாய்ச் சின்ன மழலையர் பள்ளியொன்று இருந்தது. பள்ளியின் நித்திய கல்யாணி பூக்கள்தான், விடுமுறை நாட்களில் திண்ணையில் சிரிக்கும் பள்ளிக் குழந்தைகள்… 

‘சேரிக்காரங்களுக்கும், ஊர்காரங்களுக்கும் நடுவுல சாமிக் கும்புடுறதுல சண்டைங்க. ஊருக்குள்ள சேரிக்காரங்க வரக்கூடாதுனு’, சொல்லிவிட்டு, ‘நாங்க ரெட்டியார்தான். எங்க மாமியார் காலத்துலதான் கிறிஸ்டின் ஆனோம்’, ரொம்பவும் ஜாக்கிரதையாக தான் திருடவில்லை என்பதைச் சொல்வதுபோல், தான் சேரிக்காரி இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லி பதிய வைத்தாள் பேச்சியம்மா… 

‘இஹும்… வேணாம். அந்த பக்கம் வீடு வேணாம்ங்க. சேரிக்காரங்க வீடு அந்த பக்கம்லாம்… உங்களுக்கு வீடுதான வேணும்? சூப்பர் வீடுலாம் நான் காட்டுறன்’, பிரவீன் பெற்றோரிடம் பேச்சியம்மா சொன்னாள். நோய் பரவ முடியாத, தூய்மையான இடத்தில் வீடுகாட்டித் தருவது போன்றதொரு தொனியில் சொன்னாள். 

பேச்சியம்மா வழியாகத்தான் பழைய தேவாலயம் கிராம மக்களால் கைவிடப்பட்ட கதை, பிரவீனுக்கு தெரிய வந்தது. ஊரின் வேறொரு பக்கத்தில், மற்றொரு தேவாலயம் பூசைக்கும் வழிபாட்டுக்கும் இருப்பதும் கூடவே தெரிய வந்தது. மக்கள் ஒன்றாகாததால் இரண்டாயின தேவாலயங்கள்… 

வந்துசென்ற உறவுகள் வரவை நிறுத்தியதாலும், பிள்ளைகள் தன்னைப் புறந்தள்ளித் தூரம் சென்றதாலும் தனிமைப்படுத்தப்பட்ட பழைய தேவாலயம் பிரிவின் ஆரம்ப நாட்களில் சோகத்தில் ஆழ்ந்திருந்தது… இன்னமும்கூட ஆலயத்தின் படிகளில் அமர்ந்து, அதன் ஆன்மாவோடு உரையாடுபவர்களுக்கு அந்தச் சோகத்தின் வலியும், தனிமையின் துடிப்பும் புரியும். தாங்கிக்கொள்ள முடியாத வலியை ஏந்திக்கொண்டுதான் துறவியாகி நிற்கிறாள் அன்னை. அவளைக் கண்ணீரில் விட்டுவிட்டு, மண்டியிட்டு அழுது வேண்டுகிறார்கள். அவள் கண்கள் துடைக்காமல், தங்களின் கண்கள் துடைக்கவே கேட்கிறார்கள். 

அன்னையின் மனவோடையில் பிரவீன் சிறுமீனாய் நீந்திக்கொண்டிருந்தான். 

போலி பூமத்திரேகையொன்று ஊரை இரண்டாய்ப் பிரிப்பதை ஆலய அன்னையின் உச்சிக் குடிலுக்குள் நின்றிருக்கும் மேரி மாதாவும் விரும்பவில்லை. அவள், குழந்தையின் மழலையை இரசிப்பவள்… பெரியவர்களின் விளையாட்டுக்குள் நுழையாதவள். அவள் குழந்தைக்கும் அது ஆகாது. 

முதல்துளித் தூரல் பிரவீனுடைய காதுமடலில் விழுந்தது. வானத்திலிருந்து விழும் ‘தூரல் பூக்கள்’ அவை. அங்கும் இங்குமாய் யாரையும் தொந்தரவு செய்யாமல், பூத்துளிகளைத் தூவி மகிழ்ந்தாள் வானமகள். சிறகடித்து தூரல் பூக்களை உதறிக்கொண்டன, சிறு தும்பிகள். அவை கிராமத்துக் குழந்தைகளின் ஹெலிகாப்டர் தும்பிகள். ஒவ்வொரு புல்லுக்கும் அமர்ந்து எழும் குட்டி ஹெலிகாப்டர்கள் அவை. 

எறும்பு, வண்டு, தும்பி, தட்டான், தவளை, தூரல் பூக்கள் எல்லாம் வந்திருந்த திருமண வரவேற்புக்கு, வராமல் தவிர்த்தனர் மாசற்ற குடியானோர். அவர்கள் கூழாங்கல்லைப் போன்று வழுவழுப்பானவர்கள். பளிங்கு கற்கள் போன்று அப்பழுக்கற்றவர்கள். இந்த வரவேற்பில் கலந்துகொள்ளும் வெளியூர் உறவுகளை, அந்தப் பளிங்குவீட்டு ஜன்னல் மனிதர்கள், இனமறிந்து வைத்துக் கொள்வார்கள். 

உண்டுமுடித்து பாலுசாமி சாரும், மகாலட்சுமியும் பந்தியின் வெளியே வந்தனர். பிரவீன், மகாலட்சுமி, பாலுசாமி சார் மூவரின் மொய் பணமும் பாலுசாமி சார் கையிலிருந்தே மரியாதையாய்ப் புதுமணத் தம்பதிகளிடம் சேர்க்கப்பட்டது. இருட்டுவந்து கவ்விக்கொள்வதற்குள் பாலுசாமி சாரும், மகாலட்சுமியும் உடனே வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்கள். பாலுசாமி சார் திருக்கோவிலூருக்கும், மகாலட்சுமி கள்ளக்குறிச்சிக்கும்… 

கள்ளக்குறிச்சிக்கு அத்திப்பாக்கத்திலிருந்து ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பேருந்து பயணநேரம். கவிஞனின் காதல் கூந்தலில் தன்னுடைய எக்ஸலில் பாலுசாமி சாரும், சைக்கிளில் மகாலட்சுமியும் அத்திப்பாக்கம் வரை சென்று, நெடுஞ்சாலையைச் சேர்ந்ததும் வலமெடுத்து விரைவார்கள்… சைக்கிளை அத்திப்பாக்கம் அஞ்சலகத்துக்குப் பக்கத்தில் பூர்ணிமா அக்கா வீட்டில் பத்திரமாய் நிறுத்திவிட்டு, பின் பேருந்தில் பயணம் போவாள் மகா. 

பழைய தேவாலயத்துக்குமுன் இருக்கும் தார்சாலையோரத்தில்தான் சிற்றுந்துகளும், பள்ளி வாகனங்களும் வந்துநிற்கும். அதுதான் மடம் பேருந்து நிறுத்தமும். மாலைநேரத்தில், பொம்மைக் குழந்தைகள் கால்முளைத்து ஓடும் இடம் அது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அள்ளி அணைத்து முத்தமிட்டு, கைப்பிடித்துக் கூப்பிட்டுச் செல்லும் இடமும் அது. மஞ்சள் பள்ளிப் பேருந்து, குழந்தைகளுக்கு டா-டா பை-பை சொல்லிச் செல்லும் இடமும் அது.

மாதாவின் குழந்தை இன்னும் பள்ளிச்செல்லும் வயதை எட்டவில்லை. வளர்ந்ததும், மாதா தன் குழந்தையையும் பள்ளிக்கு அனுப்புவாள். மாதாவிடம் சேர்த்து வைத்த பணம் அதிகம் இருந்தால், அவள் குழந்தை மாலைநேரங்களில் மஞ்சள் பள்ளிப்பேருந்தில் வந்திறங்கும். மாதா, வேகமாய் ஓடித் தன் குழந்தையை முத்தமிட்டு, அணைத்துக் கைப்பிடித்து அழைத்துவருவாள். ஒருவேளை ஏழைமாதாவின் கையில் பணமில்லை என்றால், அவள் குழந்தை நிச்சயம் உள்ளூர் அங்கன்வாடிக்குத்தான் போய்வர வேண்டியிருக்கும். 

உள்ளூரிலேயே அவள் குழந்தையைச் சேர்த்துவிட்டால், அவள் குழந்தையும் பள்ளியிலிருந்து, மற்ற பிள்ளைகளோடே தோளில் நிற்காமல் இறங்கி ஓடும் பள்ளிப்பைகளைச் சரிபடுத்திக் கொண்டே வீடுவரைக்கும் நடந்து வந்துவிடும்; பேருந்துக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. வீட்டுக்கு வந்தபின், நிதானமாய் தன் குழந்தையை முடிந்த நேரத்தில் முத்தமிட்டுக் கொள்ளலாம். 

பாலுசாமி சாரும் மகாலட்சுமியும் வீடு திரும்பிய பின்னர், ஆலயத்தின் அமைதி எண்ணங்களில், லேசான மனதோடு, காற்றில் தரைத்தொட்டலையும் காகிதமாய்… தன்னை மறந்து பிரவீன் வீடு திரும்பினான். இரு நிமிட நடைதூரத்தில் அவன் வீடு இருந்தது.

Leave a Reply