பச்சையம்மாள் மற்றுமொரு பெண்ணே!

புகைப்படம்: Joshua Duneebon on Unsplash

அன்று குருபகவானுக்கான தினம், அந்தி சாயும் பொழுது. அந்தத் தெரு முழுக்க பச்சையம்மாள் பற்றிய பேச்சுத் தான். பச்சையம்மாள் இப்படி ஆவாளென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“அக்கா விஷயம் தெரியுமா…” என்று வாயெடுத்த, வாசல் பெருக்கிக் கொண்டிருந்த தேவியின் பெருவெள்ளப் பேச்சுக்கு அணைப் போடும் விதமாக, “பச்சையம்மா பத்தி தான? எல்லாம் தெரியும்டி எனக்கு” என்றாள் பக்கத்து வாசலில் உட்கார்ந்திருந்த திலகா.

“உனக்கு எப்படி தெரியும் கா?”

“எல்லாம் ஜெயலட்சுமி அக்காவே தான் சொல்லுச்சு”

“ம்ம்.. ம்ம்ம்… பரவால எல்லாம் பெரிய ஆளுங்க மொதல்லயே சொல்லலிட்டு இருக்காங்க…”

“அட அதெல்லாம் ஒன்னு இல்லடி தண்ணி புடிக்க போனப்ப என்ன பொழுதுபோன நேரத்துல தலைக்கு குளிச்சு இருக்கியேனு கேட்ட அப்போ தான் சொல்லுச்சு” 

“அந்த ஆண்டவனுக்கு கூட தான் ஒரு மனசாட்சி வேணாமா? இப்படியெல்லாம் குடுக்கலாமானு.. ம்ம்ம்..”  விரக்தியடைந்ததைப் போல் முகஸ்துதி செய்து சலித்துக்கொண்டாள் தேவி.

“உனக்கு ஏன்டி கஷ்டமா இருக்குது? என்ன நம்மல மாதிரி இல்லாத பட்டவங்களா இல்ல அன்னாடங்காட்சிகளா? இருக்கப்பட்டவங்க தானே செய்றாங்க விடு”

“இருக்கப் பட்டவங்க இல்லாதப்பட்டவங்கனு சொல்லல திலகா அக்கா, எங்கனா நல்லா இருந்தா கூட பரவால…  இருக்குதேனு சந்தோசமா எடுத்துப்போட்டு செய்ற மாதிரியா இருக்குது சொல்லு” 

“அதுக்கு என்னாடி பன்றது நல்லா இருந்தாலும் நல்லாயில்லனாலும் பொம்னேட்டிங்க பாடு கூப்பாடு தானே” என்று சலித்துவிட்டு,

 “கொழம்பு சூட பன்ன வெச்ச , இந்த பையன் அடுப்ப ஆப் பன்னுச்சா இல்லயானு கூட தெரில தீஞ்சு கீஞ்சு போய்ட போது நான் போய் பார்குற” என்று மட மடவென்று வாசலில் இருந்து வீட்டுக்குள் நடையைக் கட்டினாள் திலகா.

அநுதாபமும் சலிப்பும் கலந்த முகஸ்துதியோடு உச்சுக் கொட்டிவிட்டு, துடைப்பக் கட்டையின் பின்புறத்தைத் தனது வலது தொடையின் மேல்புறத்தில் இரண்டு தட்டுத் தட்டி, துடைப்பக் கட்டையின் கட்டிலிருந்து உள்ளொன்றும் வெளியொன்றுமாய் வந்திருந்த குச்சிகளைச் சமன்படுத்தி வாசல் பெருக்கும் பணியைத் தொடர்ந்தாள் தேவி.

தேவி மட்டுமல்ல அந்தத் தெருவில் பச்சையம்மாளின் விஷயம் தெரிந்த முக்கால் வாசிப் பேர் கடவுளை நிந்திக்க மறக்கவில்லை. இருக்கின்ற கஷ்டத்தில் ஜெயலட்சுமிக்கு இன்னொரு கஷ்டமா என்று பலர் அநுதாபம் கொள்ள, சிலர் – “அதுக்கென்ன பெத்துட்டா செஞ்சு தான ஆகனும் இப்போ கஷ்டமுன்னு சொன்னா எப்படி? ஒன்னு அன்னிக்கே தலமுழுகி இருக்கனும் ” என்று வியாக்கியானமும் பேசினர்.

ஜெயலட்சுமியின் காதுகளில் இந்த பேச்செல்லாம் விழுந்ததோ விழவில்லயோ தெரியவில்லை அது அவளுக்கே வெளிச்சம். அவள் ஆக வேண்டிய காரியங்களைச் செய்ய ஆயத்தமானாள்.

விஷயம் அறிந்தும் சிலர், வலிக்கும் என்றறிந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளை இழுத்துப்பிடித்துக் கிள்ளியெறியும் பாலர்களைப் போல துப்புத் துலக்கி கேள்வி கேட்டனர். அவர்களுக்கெல்லாம் “எம் பொண்ணு பெரிய மனுஷி ஆய்ட்டா” என்று இயல்பாக பதிலளித்தாள் ஜெயலட்சுமி.

பச்சையம்மாளுக்குச் சராசரி பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது தான்; ஒரு பதினான்கு பதினைந்து இருக்கும். தோற்றத்தில் அவள் மெலிந்த நீண்ட கரங்கால்களும், எலும்போடு ஒட்டிய சதையும், எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் வரிசைத் தவறிய பற்களும், சதா வாயிலிருந்து ஒழுகிக்கொண்டு இருக்கும் உமிழ்நீரும், ஒத்துழைக்காத இரு கண்மணிகளும், எப்பொழுதும் படுத்தப் படுக்கையான நிலையில், ஒரு ஐந்து ஆறு வயது  குழந்தையைப் போல காட்சியளிக்கும் ஒரு சிறப்புக் குழந்தையாக இருப்பதே பலரின் அநுதாபத்திற்கும், அவள் பூப்பெய்திய செய்தி உண்மை தானா என்று தெரிந்துகொள்ளத் துடிக்கும் அவாவிற்கும் காரணம்.

அவள் பிறந்த மூன்றாவது மாதத்தில் ஏற்பட்ட பெருமூளை வாதமே அவள் சிறப்புக் குழந்தையாகக் காரணம். உற்றார் உறவினர் பலர் பச்சையம்மாளை ஏதேனும் ஒரு ஆசிரமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட ஜெயலட்சுமிக்கும் அவள் கணவன் தயாளனுக்கும் அறிவுரைக் கூறினர். ஆனால், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என எப்படி இருந்தாலும் பச்சையம்மாள் எங்கள் குழந்தைத் தான் அவள் எங்களோடு தான் இருப்பாள் என்று தயாளனும் ஜெயலட்சுமியும் முடித்துக் கூறிவிட்டனர். தங்கள் குலதெய்வமான பச்சையம்மன் பெயரையே வைத்து தங்களால் முடிந்த மட்டில் பச்சையம்மாளை அன்புடன் பராமரித்து வருகின்றனர். பார்ப்போருக்கு எப்படியோ, ஜெயலட்சுமிக்குப் பச்சையம்மாள் ஒரு அழகு தேவதை தான். அவள்  அவளுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கத் தவறியதில்லை, சீரான உடை அணிவித்துச் சிகையை வாரி பூ வைக்க மறந்ததில்லை, கைகளில் வளையல்களையும் கால்களின் கொலுசையும் அணிவித்து அழகு பார்க்கத் தயங்கியதில்லை. வீட்டின் முன்பு உள்ள வேப்ப மரத்தடியில் பச்சையம்மாளை மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “என் தங்கம், என் அம்மா” என்று கொஞ்ச மறுத்ததில்லை.

பச்சையம்மாள் பிறந்து பல வருடங்கள் ஆகியும் வேறு குழந்தை பிறக்காத நிலை கருதித் தயாளனின் தாயார் அவரை வேறு திருமணம் செய்து கொள்ள சொல்லித் தயாளன் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு குடைச்சல் கொடுத்தார். பேச்சு வாக்கில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும்போது ஜெயலட்சுமியின் கண்கள் நீர் ததும்ப தயங்குவதில்லை.

அவளின் கண்ணீரில் கடவுளின் மனம் கரைந்ததோ என்னவோ 11 வருடத்திற்கு பிறகு நன்முறையில் ஒரு ஆண் குழந்தையையும், பின்னர் இரண்டு வருடம் கழித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள் ஜெயலட்சுமி.

பச்சையம்மாள் பூப்படைவாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், அவளை ஒரு குழந்தை போல், பராமரித்து வரும் ஜெயலட்சுமிக்கு அவள் பூப்படையும் அறிகுறிகள் தென்படவே  அவள் அதற்கு ஒருவாறு ஆயத்தமாகவே இருந்தாள்.

சிறப்பு குழந்தையாக இருந்தால் என்ன, அவளும் ஒரு மொட்டவிழ்ந்து மலரப்போகும் மலர் தானே. பிற மலர்களைப் போல் அம்மலரையும் மதிப்புடனும் மரியாதையுடனும் மலரச் செய்ய தீர்மானமாக இருந்தாள் ஜெயலட்சுமி. அவளுக்கு குட்டைப் பாவாடை அணிவிப்பதை தவிர்த்தாள், அப்படியே அணிவித்தாலும் முக்கால் சட்டையை அணிவிக்க தவறவில்லை, கையற்ற மேல்சட்டையை அணிவிப்பதையும் தவிர்த்தாள், அவளது தந்தை முன்பு போல் அவளை சரளமாக தூக்குவதைத் தவிர்த்தார், தெருவில் வெட்டியாக சுற்றித்திரியும் பதின் ஆண் பிள்ளைகளை கருத்தில் கொண்டு, “யார் யார் கண்ணு எப்படி இருக்குமோ” என்று தான் இல்லாத சமயங்களில் பச்சையம்மாளை வீட்டின் முற்றத்தில் படுக்க வைப்பதையும் அறவே தவிர்த்தாள்.

இப்படியாக ஆயத்தமாக எதிர்பார்த்தபடி அவள் மலர்ந்தும் விட்டாள். தீர்மானித்தது போலவே சடங்கு சம்பிரதாயத்துடன் அவளின் மலர்ச்சி விழா எளிமையாக நடந்தேறியது. பலர் அவளும் ஒரு பெண்தானே என்று இயல்பாக புத்தாடைகளையும் மொய்ப் பணத்தையும் கொடுத்து மனதாற வாழ்த்திச் சென்றனர். சிலர் நல்லா இருந்தா செய்யலாம் இவளுக்குப் போய் என்ன என்று வயிற்றில் உணவை மட்டும் நிரப்பிக் கொண்டு சென்றனர்.

பச்சையம்மாள் மற்றுமொரு பெண் தானே?

——————————————–

எழுத்தாளர் சங்கவியை இன்ஸ்டாகிராமில் தொடர: @thebluelilac_

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply