ஒரு நான்கு வருடங்கள் இருக்கும்… நான் முதன் முதலில் “பிரமிள்” என்னும் கவிஞனின் வரிகளை என் தமிழாசிரியர் வாய் வழிக் கேட்டபோது. அவரும் நானும் கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கவிஞர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அடிக்கடிச் செல்லும் நீண்ட உரையாடல்களில் ஒன்றாக அமைந்தது. அவர் இரண்டு கவிஞர்களை எனக்குப் பரிந்துரைத்தார். முதலாமவர், பிரமிள். இரண்டாமவர், தேவதேவன். இருந்தும், என்னைக் கவர்ந்தது முதலாமவருடைய பெயர் தான். காரணம், அவருடைய வரிகளை மட்டும் தான் எனக்கு என் ஆசிரியர் சொன்னார். கீழ்வரும் வரிகள் தான் அவை.

Pramil

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

இந்த வரிகளைக் கேட்டதும் ஏதோ ஒரு மென்மை என்னை வருடிச் சென்றது. அதில் சின்ன வலியும், வாழ்வின் உண்மையும் கலந்து இருப்பது போல் எனக்கு அன்று தோன்றியது. உடனே, அவரை அறிந்துக்கொள்ள வேண்டுமென்று நான் கூகுளில் தேடினேன். ஒரு புகைப்படமாவது கிடைக்குமா என்று பார்த்தேன். பிரமிள் இலங்கையின் மிகப் பெரிய கவிஞர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவ்வளவு பெரிய கவிஞர் பற்றி விக்கிப்பீடியாவில் கூட அன்று செய்தி இல்லை. வெறும் ஏமாற்றத்தோடு விட்டுவிட்டேன். எனக்கு அவரின் வரிகள் பின்னாளில் மறந்துபோய் விட்டது. ஆனால், இறகு காற்றின் பக்கத்தில் எழுதிச் செல்வதாக மனதில் பதிந்த காட்சி மட்டும் அவரை எண்ணும் போதெல்லாம் மனதுக்குள் வந்துக்கொண்டே இருந்தது.

இன்று புரிகிறது எதனால் அவர் படிமக்கவிஞர் என்று. (படிமம் = image) அவர் ஏற்படுத்திய படிமம் மட்டும் அர்த்தத்தோடு மனதில் நின்றுக்கொண்டது.

பூவின் இதழ்ச் சுவரில் வண்டுக் குரல் ஒலிகள்

பரிதி புணர்ந்து படரும் விந்து

விடிவு பூத்து இருளில் வாடும்

வானத்து இருள் மரத்துப் பூமிப் பூவில் தேனுறிஞ்சும் நாக்குகளா ஒளிக்கதிர்கள்

வெளிவானம் எரிகல்லில் கிழிபட்டுத் தெரிகிறது.

இந்த வரிகள் பிரமிளிடமிருந்து வெடித்துத் தெறிப்பதாக “கைப்பிடி அளவுக் கடல்” கவிதைத் தொகுப்பின் அறிமுகத்தில் சி.சு.செல்லப்பா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

உயிர் காகிதத்தில் என்னுடைய இலக்கிய படைப்புகளை மட்டுமே பகிர்ந்து வந்த நான், பிரமிள் பற்றி முதலாக எழுத நினைத்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதைக் கூறுவதற்கு முன், ஒரு இன்பச் செய்தி! இந்த முறை, இந்தப் பதிவை எழுதுவதற்குப் போய் கூகுளிலும் செய்தி திரட்டச் சென்ற போது, தமிழிலியே பிரமிள் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதி இருந்தது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நன்றிகள்…


வெறும் வரிகளின் கோர்ப்பு கவிதை ஆகாது.

மொழிப்புலமை வேறு, கவிப்புலமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

ஓசை மயக்கம் பாடல் செய்யலாம். கவிதை செய்து விடாது.

இப்படி பல எண்ணங்கள் என் மனதில் அடிப்படையிலேயே இருந்தது. இவற்றை அழுத்தமாகப் பகிர ஒரு தமிழ் கவிஞர் சில தசாப்தங்களுக்கு முன்பே “இறங்கி வேலைப் பார்த்திருக்கிறார்” என்பதே கவிஞர் பிரமிளை நான் பதிவுக்கு முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம்.

[இனி இலக்கியம், சினிமா, உளவியல், தத்துவம் முதலிய தலைப்புகளிலும் பதிவுகள் போடலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக நம்மவர் பிரமிளின் பதிவு]

பிரமிளை ஏன் “நம்மவர்” என்கிறேன்? ஏனென்றால், மீவியற்பியலைத் தொட்டுத் தமிழில் எழுதும் நானறிந்த முதல் கவிஞர் பிரமிள் மட்டுமே. அதிலும், மீவியற்பியலின் பிதற்றல்களில் சிக்காமல் அவர் தெளிநடையோடு எழுதுவதாகவே நான் உணர்கிறேன். எனக்கும் மீவியற்பியலில் ஆர்வம் அதிகம்.

சரி… மீவியற்பியல் என்பது என்ன? மீவியற்பியல் — தத்துவத்தின் ஒரு பகுதி. பௌதிக அதீதவியல் என்னும் மற்றுமொரு நல்ல தமிழ்ப் பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் “மெடாஃபிசிக்ஸ்” என்கிறார்கள். பூத உடலுக்கு அப்பாற்பட்ட “உயிர் என்றால் என்ன? உணர்வுகள் எப்படியானவை?” போன்ற தொடுப் பொருள்களுக்கு அப்பாற்பட்ட அகமுகக் கேள்விகளைக் கேட்கும் தத்துவப் பிரிவே மீவியற்பியல்.

தன் கவிதைகள் உருவாகும் இடத்தை இப்படியாகப் பிரமிள் தானே கூறுகிறார்:

“இந்த வகையில் என்னை எழுதத் தூண்டியது, எனது metaphysical perplexity என்று தான் கூற வேண்டும். பௌதிக யதார்த்தங்களை மீறிய நிதரிசனங்களைப் பற்றிய அறிவின் விசாரமயமான பிரமிப்புகளையே இங்கே metaphysical perplexity என்று கொள்கிறேன்.”

தன்னைப் படிமக் கவிஞராக அடையாளம் கொள்பவர்களுக்கு படிமம் உவமையிலிருந்து வேறுபட்டுப் படிமம் என்ற தகுதியை எப்படிப் பெறுகிறது என்பதைக் கீழ்வருமாறு கூறுகிறார்.

“வெறும் வெளித்தோற்றத்தின் ஒற்றுமையை உணர்த்தும் அழகியலோடு நின்றுவிடாமல், அர்த்தங்களோடு எதிரொலித்துச் செல்கிறபோது வெறும் உவமையாகிடாமல், படிமம் என்ற தகுதியைப் பெறலாம்”.

அவருக்கு கவிதைகளின் வெளிப்புற அலங்காரத்தின் மீதுள்ளான அவநம்பிக்கையும் வெறுப்பும் அவர் வசனக்கவிதைப் பற்றித் தன் கருத்தை வெளியிடுவதிலேயே வெளிச்சம் ஆகிறது:

“சப்தத்தை மட்டுமே கொண்டு புறமுக அம்சத்தால் நயம் என்று கொண்ட விளைவு வசனம் கவிதையாவதெல்லாம்” என்று கூறி வசனக்கவிதை வசனத்துக்கும், கவிதைக்கும் கீழ்நிலையை அடைகிறது என்கிற கருத்தைப் பதிவிடுகிறார் பிரமிள்.

பிரமிளின் மீதான பிரமிப்பு எனக்குத் தொடங்கும் இடம், மொழிப்பற்றுக்குள் மாட்டிக் கொண்டு மொழியை மட்டுமே செய்து இலக்கியம் என்று நம்பிக்கொண்டுச் சீரிய திறனாய்வுக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத பல எழுத்தாளர்களுக்கு மத்தியில் திறனாய்வின் முக்கியத்துவத்தை அவர் மொழியைத் தாண்டி நின்று கவிதைகளைப் பற்றிக் கூறும் இடத்தில் அவர் மனதில் உள்ள இலக்கியத்துக்கான இடம் பதிவாகிறது.

மொழியின் மகத்துவம் சிந்தனைகளைத் தெளிவுற வெளிப்படுத்துவதற்கும், சிந்தனையை வளர்ப்பதற்குமாகத் தான் இருக்க முடியுமே தவிர, தனக்குள்ளாகவே மூழ்கி சிந்தனையை ஓரம் தள்ளும் தனிப்பெருமையோடு இருப்பதில் அமையாது.

இலக்கியம் மொழியை மிகுதியாய்ச் சார்ந்திருப்பதாலும், நம் தமிழ்மொழிக்குத் தனிப்பெருமைகள் பல இருப்பதாலும், மொழிச் செய்தலே இலக்கியம் செய்தல் ஆகிவிடாது என்ற புரிதல் பலருக்குள் வராமல் இன்னும் தடைப் பட்டிருக்கிறது.

இந்தப் புரிதலுக்கு நமக்கெல்லாம் முன்னோடி நம் மொழியிலேயே இருந்திருக்கிறார் என்பதைக் கொண்டாடி எழுதும் பதிவு தான் இந்தப் (பிரமி!)ள்

இப்படிப்பட்ட கவிஞர், சிந்தனையாளரின் படைப்புகள் அடங்கிய பட்டியல் தமிழ் விக்கிப்பீடியாவியிலிந்து எடுக்கப்பெற்று கீழே தரப்பெற்றுள்ளது.

1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).
2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்).
4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).
5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).
7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
10. யாழ் கதைகள். 2009. (லயம்).
11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).
13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).
14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)
15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)
16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி
19. மார்க்ஸும் மார்க்ஸியமும் – பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி
18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம்
19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம்
20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம்
21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம்
22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம்
23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம்

எழுத்து: ருபீன் பிரவீண்
நாள்: 02-04-2021

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

Oppam Novella Book Cover

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

Leave a Reply