“கேஸ்ட் அவே (2000)” வில்சனும், இரண்டாம் கருத்தின் அவசியமும்!

நான்குத் திரைப்படங்கள் என் முகநூல் நண்பர் ஒருவரின் பதிவில் பரிந்துரையாக எழுதி வந்தது. வந்து இரண்டு வருடங்கள் இருக்கும்.

இவை நான்குமே அந்தப் படங்கள்:

1. செவன் பௌன்ட்ஸ் (2008) ஆங்கிலம்
2. சார்லி (2015) மலையாளம்
3. கேஸ்ட் அவே (2000) ஆங்கிலம்
4. ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் (1993) ஆங்கிலம்

(இவற்றில் Schindler’s List திரைப்படம் மட்டும் முன்பே கண்டிருந்தேன்.)

ஆழமான சினிமா அறிவு உள்ளவர் அந்த முகநூல் நண்பர். எனவே, அந்தப் பதிவைப் பார்த்து, ஒரு ஏட்டில் அந்தப் படங்களின் பெயர்களை அப்போது எழுதி வைத்துக் கொண்டேன். அவருடைய எழுத்து எப்போதேனும் அந்தப் படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணத்தைத் தூண்டியது. அதில் மிக முக்கியமானது Cast Away திரைப்படம். காரணம், படத்தின் முக்கிய கதாபாத்திரம் Chuck Noland-ஐ ஏற்று நடித்திருந்தவர் டாம் ஹேங்ஸ். எனக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு நெருக்கமான நடிகன்.

Cast Away Wilson
சக் நோலண்ட் மற்றும் வில்சன்.

இரண்டு வருடங்களாகப் பார்க்க முடியாமல் போன Cast Away திரைப்படத்தை நான் கண்டதும், சில நாட்களிலேயே என்னுடைய கல்லூரி நண்பனுடன் ஐந்து நாட்கள் அவனுடைய அறையிலேயே தங்க வேண்டி இருந்தது. (படத்துக்கும் அவனுக்கும் இடையில் ஒட்டிக் கொண்டிருந்தத் தொடர்பு எனக்கு அப்போது தெரியாது!)

சில மாதங்களாக, தன்னுடைய அறையில் தனியாகவே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகத் தனியாக அறையெடுத்துத் தங்கியிருந்தான். அறையில், உடன் இருந்த நண்பரும் இரண்டு மாதமாக உடல்நலம் சரியில்லாமல் சொந்த ஊருக்குப் போயிருந்தார்.

ஒன்பது மணி நேர வேலை. ஃபோன் பேசுவான் வைப்பான். எடுப்பான் பேசுவான் வைப்பான். இப்படியே மதியம் 1.30 மணியிலிருந்து 10.30 மணி வரை நேரம் போய்விடும். உடனே தூங்கி விடுவான். வீட்டிலிருந்தே செய்யும் படி வேலை. தனியறையில் தனியாக. தொற்றுக் காலங்களிலும்…

தனிமை அவனைப் பாதிக்காதவாறே வேலை நேரம் இருந்தது. ஆனால், அவனோடு நான் சென்றுத் தங்கியிருந்த நாட்கள் வரும் வரை மட்டுமே.

நான் சென்றிருந்த நாட்களில், வேலையிலிருந்து அவனுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளத் தோன்றியது. இரவு பதினொரு மணிக்கெல்லாம் எப்போதும் தூங்கி விடுபவன், நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும், அதைத் தாண்டியும் கூட என்னோடு பேசிக் கொண்டிருந்தான்.

இருவரும் சேர்ந்து ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று இரவு பன்னிரண்டு மணிக்குக் கேட்டான்… எதைப் பற்றியாவது பேச வேண்டும், கலந்துக்கொள்ள வேண்டும் என்னும் அவனுடைய ஆர்வம் வெளிப்பட்டது.

‘நீ வரலனா எப்படி இருப்பேன்னு யோசிச்சேன்டா… ரோபோ மாதிரி வேல பாத்துட்ருந்துருப்பன்’ என்று கூறிச் சிரித்துக் கொண்டான். இருவரும் நள்ளிரவில் படம் பார்த்தோம். விடியற்காலை வரை படம் நீண்டது.

படத்தைப் பற்றி என்னுடைய பார்வையை முதலில் கேட்டான். பின், மெல்ல தனக்குள்ளேயே கிடங்காய் போட்டு வைத்திருந்த தன்னுடைய எண்ணங்களை ஒவ்வொன்றாய் என்னோடுப் பகிர்ந்துக் கொண்டான். என்னுடைய கருத்துகளைக் கேட்டான். பேசினோம். விவாதமாகியது. குரல்கள் உயர்ந்தன. பின், அடங்கியது.

‘எனக்கு செகண்ட் ஒப்பினியன் வேணும். நீ என்ன நெனக்கிற’ என்று தினம் ஒரு காரணத்தோடு அழைக்க ஆரம்பித்தான். ஐந்து நாட்கள் கழித்து, அவன் அறையிலிருந்து நான் வந்துவிட்டப் பிறகு தான் முன்னெப்போதுமில்லாதப் புது உறவு எங்களிடையே ஏற்பட்டது. நான் அவனை விட்டு வந்ததும் தன் தனிமையை உணர்ந்திருந்தான்…

கடிகாரத்தின் நொடிகளைக் கூட கணக்கிட்டு, வீணாக்காமல் வேலைச் செய்யும் கார்கோ டெலிவரி கம்பெனி FedEx-இன் இன்ஜினியரான Chuck Noland, அலுவல் காரணமாக மலேசியா செல்லும்போது விமான விபத்தில் சிக்கி, பசிபிக் பெருங்கடல் பகுதியின் ஒரு ஆளில்லா தீவில் ‘வீண்’ சிந்தனைகளுக்கு இடமின்றி, நான்கு ஆண்டுகள் தனியாய் மாட்டிக் கொண்டுப் படும் பாடும், அதன் தொடர் விளைவுகளும் தான் படத்தின் கதை.

விபத்தான விமானத்தில் இருந்து தன்னைப் போலவே கரையொதுங்கி வரும் டெலிவரி செய்ய வேண்டிய சில பொருட்களில், ஒரு பொருளாகக் கரையொதுங்கி வந்த ‘வாலி பால்’ தான் வில்சன்.

மனிதனின் தனிமை எப்படித் தனக்கென ஒரு துணையை நாடுகிறது என்பதை வில்சன் எப்படி Chuck Noland-ன் நான்கு ஆண்டுகள் தனிமையில் துணையாக நிற்கிறான் என்னும் கதையில் ஊடாக அறிவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் Cast Away திரைப்படம் அழகுற கடத்தியிருக்கும்.

கரையொதுங்கி வரும் வாலிப் பந்தை உபயோகமில்லாததாய் நினைத்து, சற்றும் பொருட்படுத்தாமல் கரையின் மணல் மேட்டில் அனாமத்தாய்ப் போட்டு வைத்திருப்பார் Chuck Noland. பிறகு, சமைப்பதற்காகத் தீ மூட்டும் முயற்சியில், மூங்கில் கையைக் கிழித்துவிடும். இரத்தம் வரும் வலியில் கோபமடைந்து, கையில் கிடைத்த வாலிப் பந்தை ஓங்கி ஒரு பாறையில் வீசுவார்… கோபம் தணிந்து வந்துப் பார்க்கும்போது, அவர் உள்ளங்கையின் இரத்தக் கறையும் விரல்களோடு அந்த வெள்ளை வாலிப் பந்தில் பதிந்திருக்கும். எச்சில் தொட்டு இரத்தக் கரையில் கண், மூக்கு, வாய் வைக்கிறார். சாதாரண வில்சன் கம்பெனியின் ‘வாலி பால்’ அங்கிருந்து Chuck Nolandன் உயிர் நண்பன் வில்சன் ஆகிறான்.

அதே போல, என் நண்பனின் இரண்டு மாதத் தனிமையும், தன் ரோபோ வாழ்க்கை தந்த அயர்ச்சியும் அவன் அறைக்கு நான் சென்ற போது, எனக்கு கண், மூக்கு, வாய் வைத்துத் துணையாக்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறது.

மனிதன் தான் சரியான பாதையில் தான் போகிறோமா என்று தன்னைத் தானே பல முறை கேள்விக் கேட்டுக் கொள்கிறான். முதல் கருத்து தனக்குள்ளாகவே தோன்றினாலும், இரண்டாம் கருத்தையும் கேட்டு, அதிலுள்ள சாதக பாதகத்தை வென்றெடுக்கும் போதே ஒரு செயலைச் செய்வதற்கானத் துணிவு பிறக்கிறது.

தன்னுடைய முடிவுகள் பொது பார்வையில் சரியாகப் பட்டாலும், தவறாகப் பட்டாலும், தனக்கு ஏற்றார் போல ஒரு துணையை அல்லது ஒரு நட்பைத் தேடுகிறான்.

Chuck Noland போல் உயிருக்கே ஆபத்தானச் சூழலில் இருப்பவனும் கூட நீடித்துச் செயல் படுவதற்கு, ஒரு துணையைத் தேடுகிறான். பேசாத, உயிரற்றப் பொருளுக்குத் தானே ஒரு உணர்வைக் கொடுத்தாவது தன் கருத்துக்குத் துணையும், சவாலும் உருவாக்கி, அதில் வெல்வதன் மூலம் தனக்குத் தானே வலுவாகவும், உறுதியாகவும் இருப்பதாய் உணர்கிறான். இந்த அடிப்படைத் தான் சமுதாயத்தையும் உண்டுச் செய்கிறது.

அதே போல, தனக்கென ஒரு கம்பெனி வேலையில் இருக்கும் நண்பனும் சில அடிப்படை எண்ணங்களைத் தனக்குள்ளே கிடங்காக்கித் தான் வைத்திருக்கிறானே தவிர, அதைப்பற்றி பேச, ஆமோதிக்க, முரண்பட ஆளில்லாத வரைத் தன் எண்ணங்களைச் செயல்படுத்தாமல் முடங்கிக் கிடக்கிறான். தன் எண்ணங்கள் முடங்கிக் கிடந்ததிலிருந்து வெளிவர முடியும் என்பதறியும் போது அந்த அடிப்படை உணர்வை அலாதியாய் அனுபவிக்க அவனுடைய வில்சனாக என்னைத் தேர்வு செய்கிறான்!

தன்னைத் தானே உறுதிப் படுத்திக் கொள்ளாமல் நம்ப அச்சப்படுகிறது மனம். சிந்தனைக்குள்ளிருந்து முதல் பாதுகாப்புத் தோன்றுகிறது. அது கருத்துகள் மோதி வரும் தெளிவிலிருந்துக் கிடைக்கிறது. பாதுகாப்புக்கான உறுதிப்பாடு ஒரு நண்பனிடமிருந்து வரும் இரண்டாம் கருத்தில் தொடங்குகிறது.

தன் எண்ணங்களை ஒரு வௌவால் போல் கத்திப் பார்த்து, அதிலிருந்து வரும் எதிரொலிகளைச் சேகரித்து தான் தனக்கான உலகத்தை அவன் உணர்ந்துக் கொள்கிறான். அதனால் தான், ஒரு சுவரேனும் துணையாகத் தேவைப்படுகிறது.

அடிப்படையில், மொத்த உலகத்தைப் பற்றிய நம்முடைய புரிதல்களும், நம் கருத்தில் உண்டாகும் எதிரொலிப்புகளின் சேகரமே என்பதை, இரண்டாம் கருத்தை எதிர்ப்பார்க்கும் மனத்தின் அடிப்படைத் தேவையிலும், அதற்கானத் துணையை நாமே தேர்ந்தெடுப்பதில் அமைந்திருக்கும் உரிமையிலும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

(பி.கு) நீங்கள் இன்னும் Cast Away(2000) படம் பார்க்காதவராக இருந்தால், நிச்சயம் பார்த்து விடுங்கள்.

எழுத்து: ருபீன் பிரவீண்
நாள்: 06-04-2021

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *