அவன் தஸ்தயேவ்ஸ்கி! — மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை. 

ஜூன் 8, 1880-ல் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ் உச்சத்தில் இருக்கும்போது அவன் தன் முன் கூடியிருந்த மக்கட் திரளும், ருஷ்யாவின் பிரபல இலக்கிய ஆளுமைகளும், ருஷ்ய அரசியல் மேதகைகளும் வியக்கும் விதம் புஷ்கின் நினைவுச்சின்ன திறப்பு விழாவில் ஒரு பேருரை ஆற்றிக்கொண்டிருக்கிறான். 

தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஏங்கிய அந்த உயரத்தில் நின்று இப்போது முழுவீச்சில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். 

“புஷ்கின் அசாதாரணமான, தனித்துவமான ருஷ்ய ஆன்மாவின் ஒரு நிகழ்வுருவம் என்று கொகோல் சொன்னான். என் பங்குக்கு நான் இதையும் சேர்த்துச் சொல்வேன்: புஷ்கின் ஒரு தீர்க்கதரிசி. ஆம், அவன் திருவுருவில் ருஷ்யர்கள் நமக்கெல்லாம் மறுத்திடவியலாத தீர்க்கதரிசனம் கிடைக்கிறது…” என்று தன் பேருரையைத் தொடங்குகிறான். 

புஷ்கினின் தரிசனத்தையும் அவன் முக்கியத்துவத்தையும் அந்த மகாகவியின் சொற்படியே வரிக்கு வரி எடுத்துரைத்து ருஷ்யாவின் தீர்க்கதரிசி புஷ்கின் என்பதை எதிர்வாதத்துக்கிடமின்றி நீக்கமற பேசுகிறான். ருஷ்ய மக்களுக்குள் ஒளிந்தும் உறங்கியும் கிடக்கும் ருஷ்ய ஆன்மாவைத் தன்னுரை கொண்டு தட்டி எழுப்புகிறான். 

ஏழ்மை ஒருபோதும் ருஷ்யர்களை துவளச் செய்துவிட கூடாது. அறிவியல் மற்றும் பொருளாதார பலத்துக்காக மட்டும் தங்களின் ஆன்மத் தூய்மையை ஐரோப்பிய நாடுகளின் பெருமைகளில் மூழ்கடித்து விட கூடாது என்று ஐரோப்பிய பெருமைகளில் சிக்கி அலைபாய்ந்து கொண்டிருக்கும் ருஷ்ய மக்களை ஆன்மரீதியில் பலம் உணர வைத்து தன் பேருரையால் ஒன்று கட்டுகிறான்.

“புஷ்கின் மட்டும் நீண்ட ஆயுளோடு இருந்திருந்தால், நம்மிடையே இத்தனைப் போராட்டங்களுக்கும் புரிதலின்மைக்கும் மிகக் குறைவாகவே இடமிருந்திருக்கும். ஆனால் இறைவன் வேறு விதமாய் எண்ணப்பட்டிருக்கிறான். தன் படைப்பாற்றலின் முழு மலர்ச்சியில் இருந்தபோது புஷ்கின் மறைந்துவிட்டான். அதில் சந்தேகமே இல்லை, அவன் தன்னோடே கல்லறைக்குப் பல இரகசியங்களையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இன்று நாம், நம் மத்தியில் அவனில்லாமல், அவன் விட்டுச் சென்றதற்கு விடையைக் கண்டு கொண்டிருக்கிறோம்” என்று தன் பேருரையை முடிக்கிறான்.

“இன்றும் கூட தஸ்தயேவ்ஸ்கியின் வளமான இலக்கிய பாரம்பரியம் முழுமையாக மதிப்பிடப்பட்டு போற்றப்படவில்லை. புஷ்கினை ருஷ்ய இலக்கியத்தின் ரஃபேல் என்று அழைக்கலாம் என்றால், தஸ்தயேவ்ஸ்கி அதன் மைக்கேலஞ்செலோவாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.”

போரிஸ் பிரசோல், ருஷ்ய இலக்கிய விமர்சகர். 

அப்பேருரையை தஸ்தயேவ்ஸ்கி நிகழ்த்திச் சில மாதங்களிலேயே உடல்நலம் சரியில்லாமல் ஆனது. 

அவன் இப்போது இல்லை. மரணத்தின் உறைகுளிர் வெடித்து உண்மையின் பிரகாச ஒளிச்சுடரை ஜனவரி 28, 1881 அன்று அணைத்து விட்டிருந்தது. 

தஸ்தயேவ்ஸ்கியின் இறப்புச் செய்தி ருஷ்யாவின் மூலை முடுக்குகளுக்கும் மின்சாரமாய்ப் பாய்ந்தது. அங்கெல்லாம் கூடவே துயர அலையடித்திருந்தது. ருஷ்ய மக்களின் இதயங்கள் கனத்துப்போய் இருந்தது. இந்தப் பூமியில் இரக்கமின்றி மறுக்கப்பட்ட அவன் மகிழ்ச்சி நித்திய பேரானந்தமாய் சொர்க்கத்தின் தோட்டத்தில் நிறைந்து புன்னகைக்கட்டும் என்று பல லட்சம் மக்கள் பணிவோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். 

ருஷ்யா பெரு மரியாதையோடு அடக்கம் செய்திருப்பது யாருக்கு? அவன் ருஷ்ய தாயின் வெறும் பிரபலம் அடைந்த இலக்கியவாதியா? நிச்சயம் இல்லை. சவப்பேழைக்குள் உறங்குபவன் உன்னதன்; ஆசான்; சொர்க்கத்தை நோக்கிய சிகரச் சிந்தனையூக்கங்கொண்ட தீர்க்கதரிசி. நடுக்கமுற்று போராடும் மனிதனின் ஆழங்களை அளந்தவன் அவன். புயல்களையும், பாவங்களையும், புதிர்களையும், வலிகளையும், துயரங்களையும், கண்டு கொள்ளப்படாத தண்ணீரையும், கொளுந்தெரியும் வேட்கையையும் அளந்தவன். மனிதர்களுக்கு வாழவும், வருந்தவும், காதலிக்கவும் சொல்லித் தந்தவன். சகோதரத்துவத்தோடு தன் பேரன்பின் கைகளை வலிவற்றவருக்கு நீட்டியவன்.

நவீன மனிதனுக்குள் இருக்கும் மனிதத்தன்மையையும், இழந்த மனிதத்தன்மையையும் தன் இளகிய புரிதலோடும், தன் ஞானத்தைக் கொண்டும் சரிக்குச் சமமாய் அவர்களுக்கு முன் வைத்து நிற்பவன். வேதனையோடு அவதிப்படுபவர்களின் காயத்துக்கு ஆறுதல் சொல்லி ஆற்றுபவன். இப்படியாகவே பலருடைய நம்பிக்கையை மீட்டெடுத்தவன், தன் ஞானத்தின் ஜாலத்தாலும், வீறார்ந்த பார்வையாலும் பல ஆன்மாக்களை உயிர்ப்பிக்கச் செய்தவன். 

அவனுக்கு உண்மையில் மரணமில்லை. அவன் மரணமில்லாதவன். அவன் கிறித்துவை நம்பியவன். அதனால் அவன் இப்படிச் சொல்லக் கூடும்: “நீ கிறித்துவை நம்பினால், நீ எப்போதும் வாழ்வதாய் நம்புகிறாய்”.

அவன் நம்பிக்கையில் குருட்டுத்தனத்துக்கும் மூடத்தனத்துக்கும் இடமில்லை. 

அவன் தஸ்தயேவ்ஸ்கி! 

ஃபியோதர் மிக்கைலோவிச் தஸ்தயேவ்ஸ்கி அக்டோபர் 30, 1820இல் மாஸ்கோ பெருநகரில் மிகைல் தஸ்தயேவ்ஸ்கிக்கும், மரியா தஸ்தயேவ்ஸ்கிக்கும் இரண்டாவது மகனாகப் பிறக்கிறார். இளம் தஸ்தயேவ்ஸ்கியின் கல்வி ஐந்து வயதிலேயே தொடங்கி விடுகிறது. மாலைகளில் அவன் தந்தையார் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் கூட்டிச் சத்தமாய் கராம்சின்-இன் “ருஷ்ய நாட்டின் வரலாறு (History of The Russian State)” என்ற புத்தகத்தை வாசிப்பார். அல்லது வேறேதாவது செவ்விலக்கியங்களை வாசிப்பார். தன் பதினான்காவது வயதில் மாஸ்கோவின் மேல்நிலைப்பள்ளியில் நுழைந்தார். அங்கே தான் தஸ்தயேவ்ஸ்கியின் மூத்த சகோதரன் மிகைலும் படித்தான். உயர்நிலை வகுப்புகளுக்குப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களே வந்து பயிற்றுவிக்கும் மாதிரிப் பள்ளி அது. 

தஸ்தயேவ்ஸ்கி

முதல் பதினைந்து வயது வரை, ஏழு குழந்தைகள் உள்ள அவரின் குடும்பம் தன் தந்தையார் மருத்துவராக வேலைப் பார்க்கும் மேரி மருத்துவமனையின் பணியாளர்களுக்கான கட்டிடத்தில் தான் இருந்தார்கள். அந்த மருத்துவமனை ஏழை எளியோருக்காக இருந்ததால், பெரிய பள்ளியில் தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்க வைக்க போதிய வருமானம் இன்றி, உறவினர்கள் பலரிடம் பண உதவியை நாட வேண்டியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவனுக்குப் பத்து வயதாகும்போது தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை துலா மாகாணத்தில் சின்னதாக ஒரு நிலம் வாங்கியிருந்தார். சிறுவன் தஸ்தயேவ்ஸ்கி ருஷ்யாவின் கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்தது அங்கு தான். 

சிறுவன் தஸ்தயேவ்ஸ்கி விசித்திர தேவதைக் கதைகள் படித்தான், சர்கஸ் காட்சிகள் பார்த்தான், பொம்மை நாடகங்கள் கண்டு களித்தான். இப்படியாக ஒரு முறை அவன் மாலி அரங்கத்தில் கண்ட நாடகம் அவனுடைய ஆன்மீகக் கண்களை முதல்முறையாக திறந்து வைத்தது. அதே சமயத்தில், தந்தையின் வேலையிடத்தில் உருவாகும் துன்பியல் சூழல்களால் அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி காயங்கள் காலம் முழுவதும் அவனைத் தொடர்ந்து வந்தது. 

1837ல் தஸ்தயேவ்ஸ்கிக்கு மிக நெருக்கமான உறவாகயிருந்த அவர் தாயார் காலமாகிவிட்டார். அவர் தந்தையின் வற்புறுத்தலால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு பொறியியல் பள்ளியில் நுழைகிறான். இதுவும் மிகச் சிறந்தப் பள்ளிகளில் ஒன்று. அந்தப் பள்ளி அப்போது இருந்த பேரரசர் முதலாம் நிகோலஸின் சகோதரர் கோமகன் மிகேலின் ஆதரவில் இயங்கி வந்தது. அங்கு பல்வேறு தேர்வுகளுக்குட்படுத்தப் படுகிறான் தஸ்தயேவ்ஸ்கி. அதற்காக சமயம், ருஷ்ய இலக்கியம், அரணமைத்தல் & பீரங்கிப்படை பற்றியும், வரலாறு, ஜெர்மன், ஃபிரெஞ்சு, வரைபடம், வடிவியல், கட்டுமானக் கலை எல்லாம் படிக்க வேண்டி இருந்தது. பிறகு, அங்கேயே இராணுவக் கூடத்தின் செய்தித்தாள்களுக்குப் பதிப்பாசிரியர் ஆகிறான். கூச்ச சுபாவம் ஒருபுறம் இருந்தாலும், தினசரி மாலைநேர இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அங்கு ஏற்பாடு செய்கிறான். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏற்படுத்திக் கொடுத்தக் கலாச்சார வாழ்வு பிடித்திருந்தது. ஆனால் பள்ளியிலும் இராணுவத்திலும் மட்டும் நாட்டம் இல்லை. 

1839ல் அவன் தந்தையும் மரணிக்கிறார். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி தஸ்தயேவ்ஸ்கியை விடாமல் பிடித்தாட்டியது. 

படித்து முடித்ததும் ஒரு அரசாங்கப் பணியில் அமர்கிறான். ஆனால் அவனுடைய மொத்த மனமும் இலக்கியத்திலேயே தான் இருந்தது. அதனால் அவன், தான் இருந்த பணியை விட்டு விலகுகிறான். 

பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் உடைய “யுஜுனி க்ராண்டெட் (Eugenie Grandet)” நாவலை ருஷ்ய மொழியாக்கம் செய்கிறான். ஆனால் அந்த நாவல் வெற்றிப் பெறவில்லை. வசதியான வாழ்வு ஏற்படுத்திய செலவும், சூதாட்டப் பழக்கமும் அவனை வறுமைக்குத் தள்ளியது. அப்போது அந்த வறுமையிலிருந்து விடுபட எண்ணி தானே ஒரு நாவல் எழுதும் முடிவுக்கு வருகிறான். 

“இதை வைத்துத் தான் நான் எல்லாவற்றையும் ஈடுகட்ட வேண்டும். இதில் நான் தோற்றேன் என்றால், நான் தூக்கில் தொங்கி விடுவேன்.”

‘ஃபியோதர் மிக்கைலோவிச் தஸ்தயேவ்ஸ்கி தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய கடிதங்கள்’ நூலிலிருந்து. 

அத்தகைய நெருக்கடியில் தன் மொத்த நம்பிக்கையையும் ஒரு நாவல் மேல் வைத்து எழுதத் தொடங்கினான். அது தான் தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் ‘ஏழை எளியோர் (Poor Folk)’.

நாவல் எழுதி முடிக்கும் முன்னரே தன் சகோதரனுக்கு இன்னொரு கடிதம் 30 செப்டம்பர் 1844ல் எழுதுகிறான், “நான் யுஜுனி க்ராண்டெட் நாவலின் நீளத்துக்கு ஒரு நாவலை முடித்து வருகிறேன். இது ஒரு அசல் வேலைப்பாடு.”

மீண்டும் தன் சகோதரனுக்கு 23 மார்ச் 1845ல், “நவம்பரில் நாவலை முடித்தேன். டிசம்பரில் மறுபடி எழுதினேன். பிப்ரவரி – மார்ச் இல் மறுவேலை செய்தேன். உண்மையிலேயே எனக்கு இந்த நாவலில் முழு திருப்தியுள்ளது. இது நேர்த்தியான, தீவிரமானதொரு வேலைப்பாடு” என்று எழுதுகிறான். 

சில மாதங்களில், பிரபலமான ருஷ்ய கவிஞர் நெக்ரசோவ் ஆசிரியராக இருந்த “செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சேகரம் (St. Petersburg Collection)” என்ற இதழில் 1845ல் வெளியானது. தஸ்தயேவ்ஸ்கியின் இந்த முதல் நாவல் ருஷ்ய இலக்கிய உலகின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது உச்சத்தில் இருந்த இலக்கிய விமர்சகர் பெலின்ஸ்கியின் பாராட்டை வென்றது. 

“ருஷ்யாவின் முதல் சமூக நாவல் இது” என்று பாராட்டுகிறார் பெலின்ஸ்கி.

நாவலின் வெற்றி தஸ்தயேவ்ஸ்கிக்கு பெலின்ஸ்கியின் தனிப்பட்ட தொடர்பைத் தேடித் தந்தது. அதுவே பெலின்ஸ்கியைத் தம் தலைவரென்று ஏற்றிருந்த வட்டத்துக்குள் தஸ்தயேவ்ஸ்கியை இட்டுச் சென்றது. எந்த அனுதாபமும் அவர்களின் செயல்பாடுகளில் தஸ்தயேவ்ஸ்கிக்கு இருக்கவில்லையென்றாலும் அந்த வட்டத்து மனிதர்களோடு சேர்ந்தே பழகினான். அதைத் தொடர்ந்து தான் பெட்ரஷேவ்ஸ்கி வட்டத்தில் ஒருவரோடு பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் புரட்சி இயக்கம் முதலாம் நிக்கோலஸின் காவலாளர்கள் பார்வையில் இருந்தது. 

ஏப்ரல் 23, 1849ல் பெட்ரஷேவ்ஸ்கியின் கூட்டாளிகள் அனைவரையும் (தஸ்தயேவ்ஸ்கி உட்பட), எல்லோரையும் கைது செய்தனர். பெட்ரஷேவ்ஸ்கி சந்திப்புகளில் ஒருமுறை சத்தமாகப் படித்துக் காட்டியதாகப் புகார் சுட்டியிருந்தார்கள். ஜூன் 15, 1847ல் “நண்பர்களுடன் கடிதப்போக்கு” என்று கொகோலால் எழுதப்பட்ட கட்டுரை பற்றி பெலின்ஸ்கி முன்னவருக்கு எழுதியிருந்த கடிதத்தில் பழமைவாதக் கருத்துகள் பகிரப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

ஏழு மாதக் காலம் குற்றவழக்கு சிறையில் அடைத்து விசாரிக்கப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் சிறையிலேயே எழுதிய சிறு நீளக் கதை தான் ‘குட்டி நாயகன் (The Little Hero)’ கதை. அவன் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் மற்ற சிறைவாசிகள் சிலர் பித்துப் பிடித்துப் போய் இருந்தார்கள். ஒருவன் மனநல மருத்துவமனைக்கே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தான்.

ஏழு மாதச் சிறை விசாரணைக்குப் பின்னர், பெட்ரஷேவ்ஸ்கி வழக்குக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது: குற்ற வழக்கில் ஈடுபட்ட அனைவருக்கும் மரண தண்டனை. டிசம்பர் 22, 1849ல் செமெனோவ்ஸ்கி சதுக்கத்துக்கு மரண தண்டனைக்காகக் கொண்டுவரப் பட்டார்கள். 

இது பற்றி தஸ்தயேவ்ஸ்கி தன் சகோதரனுக்கு எழுதும்போது, இப்படிக் குறிப்பிடுகிறார்: 

“இன்று நான் முக்கால் மணி நேரம் மரணத்தை நேருக்கு நேர் எதிர் கொண்டேன். என்னுடைய இறுதி நேரத்தை அனுபவித்தேன். இப்போது புது வாழ்க்கைத் துவங்கியிருக்கிறது. வேறொரு வாழ்க்கை!” 

அன்றைய நாளிலேயே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டு, மன்னிப்பு வழங்கப்பட்டது. நான்கு வருடங்கள் கடும் உழைப்புடன் கூடிய சிறை என்று தண்டனைக் குறைக்கப்பட்டு, சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட்டார். 

மார்ச் 2, 1854ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகள் ஏழாம் சைபீரிய படைப்பிரிவில் ஒரு பிரைவேட்டாக கட்டாயப் பணிக்கு அமர்த்தப்பட்டார். 

சிப்பாயின் உடுப்புக்கு மாறினாலும், இன்னும் சிறைவாசியின் கண்காணிப்பிலேயே கட்டுப்படுத்தப் படுகிறார். இந்த வருடங்களில் தான் தஸ்தயேவ்ஸ்கி தன் வாழ்க்கையின் மிக முக்கியமானவரைச் சந்திக்கிறார். “அலெக்சாண்டர் ராங்கெல்” — அவர் தான் தஸ்தயேவ்ஸ்கியின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் மீட்டுக் கொடுக்க அயராது உழைத்தவர். தஸ்தயேவ்ஸ்கி ஒரு எழுத்தாளனாக இயங்கவும், தன் எழுத்தைப் பிரசுரிக்க வும் அவர் உரிமைப் பெற்றுத் தருகிறார். 

1862ல் வெளியான ‘மரணத்தின் வீடு (House Of The Dead)’ நாவலில் அவர் தன் அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

“மனிதன் ஒவ்வொருவனையும், நல்லவனோ தீயவனோ என்று பாராமல் — ஒவ்வொருவனையும் நான் வெறுத்த கணங்கள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் என் வாழ்க்கையை இரையாக்கி விடுவிக்கத் துடித்திடும் ஒரு கொடு மிருகத்தைக் கண்டேன். இதில் மோசம் என்னவென்றால் இப்படி இருப்பதனால் நீயே சகிப்புத்தன்மையிழந்தும், கெடுமையோடும், தரமட்டமாகவும் ஆகி, அது உள்ளுணர்விலும் ஊடுருவிக் கொள்ளும்”.

அந்த நான்கு வருடங்களில் உறவினர்கள் நண்பர்களிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. ஆனால் அந்நியர்களிடமிருந்து கொஞ்சம் அன்பும் பரிவும் கிடைத்தது. பின்னர், அழுகிய மரக் குடியிருப்புகள், அழுக்கும் கறையும் படிந்த தரை, கரப்பான்கள், புழுங்கிய நாற்றம் என்று எல்லாமும் நினைவு கூர்கிறார். 

“என் நம்பிக்கைப்படி சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட எவ்வொருவனும் கடந்தகாலத்தில் அனுபவித்த கஷ்டங்களை விட்டுவிட வேண்டி வரும். உள்ளுணர்வுகளுக்குள்ளும் நினைவுகளுக்குள்ளும் போக வேண்டும். அதைவிட மிக அழகானது, மயக்கக்கூடியது, மிக உண்மையானது, மிக அறிவானது, மிக துணிவானது, கிறித்துவைப் போன்று பரிபூரணமானது எதுவுமில்லை என்று நம்புகிறேன்”, என்று தன் சிறை அனுபவங்களைப் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் அடங்கிய ‘மரணத்தின் வீடு’ நாவலில் எழுதுகிறார். 

“மிக சமீபமாகத் தான் எனக்கு உடல்நிலைச் சரியில்லாமல் உணர்கிறேன். கொஞ்சம் மறந்து போய் இருந்தேன், மீண்டும் எடுத்துப் படித்தேன். எனக்குத் தெரிந்து இதைவிட சிறப்பான புத்தகம் நவீன இலக்கியத்திலேயே இல்லை, புஷ்கினையும் சேர்த்தே. நான் நூலின் த்வனி பற்றிக் குறிக்கவில்லை, நூல் கொண்டுள்ள பார்வைப்புள்ளியின் அற்புதத்தை — அதன் போலித்தனம் இல்லாத, இயற்கையான, முழுமையானக் கிறித்துவனாய் நிற்பதைக் குறிக்கிறேன். நல்லறிவு புகட்டும் மிகச் சீரிய நூல். நெடிய காலமாய் இல்லாத அளவில் முழு நாளையுமே கொண்டாடி மகிழ்ந்தேன். நீங்கள் தஸ்தயேவ்ஸ்கியைப் பார்த்தால், அவரிடம் நான் அவரைப் பெரிதும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்.”

 

-செப்டம்பர் 26, 1880ல் லியோ டால்ஸ்டாய் ஸ்டரகோவுக்கு எழுதிய கடிதத்தில்.

நவம்பர் 1859ல் சுதந்திர வாழ்க்கைக்கு திரும்புகிறான் தஸ்தயேவ்ஸ்கி. நேராக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்குத் திரும்புகிறார். மீண்டும் தன் அன்பு சகோதரன் மிகைலைச் சந்திக்கிறார். இருவரும் இணைந்து ‘வ்ரெம்யா’ (காலம்) என்ற இலக்கிய மற்றும் அரசியல் இதழை உருவாக்குகிறார்கள். அவர்களுடைய மொத்த உழைப்பையும் நம்பிக்கையையும் வைத்து இதழை வளர்க்கிறார்கள். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த எரி விபத்து, அவன் உடல்நிலையின் (வளர்ந்து வரும் இழுப்பு நோய்) காரணமாக, முதல் ஐரோப்பிய பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு தான் முதன்முதலில் ரூலெட் சூதாட்டத்தை முயற்சிக்கிறான். 

1859 – 1865 காலக்கட்டம் தஸ்தயேவ்ஸ்கிக்குக் கடினமான, அயர்ச்சி மிகுந்த காலமாக இருந்தது. இதற்கிடையில் தான் “அவமதிக்கப்பட்டவர்களும், அவமானப்படுத்தப்பட்டவர்களும் (Humiliated & The Insulted)” நாவலும் 1861ல் வெளியாகிறது. 

மே 1863ல் நிக்கோலய் ஸ்டரகோவ் வ்ரெம்யா(காலம்/Time) இதழில் எழுதிய ருஷ்ய/போலிஷ் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைக்காக, வ்ரெம்யா இதழ் ருஷ்ய அரசாங்கத்தால் தடைச் செய்யப்படுகிறது. தடைச் செய்யப்பட்டதும் உடனே 1864ல் தஸ்தயேவ்ஸ்கியும் அவன் சகோதரன் மிகைலும் “யுகம் (Epoch)” இதழைத் தொடங்குகிறார்கள். இந்த இதழில் தான் தஸ்தயேவ்ஸ்கியின் “நிலவறைக் குறிப்புகள் (Notes From The Underground)” நாவல் தொடராக வெளியானது. திடீரென மிகைல் அகால மரணமடையவே, யுகம் இதழும் தொடர முடியாமல் போனது. மிகைல் இறந்துபோன போது அவர் வயது வெறும் நாற்பத்து நான்கு மட்டுமே. இதழால் ஆனக் கடன் மிகைல் பங்கும் சேர்ந்து தஸ்தயேவ்ஸ்கி தலையில் விழுந்தது. 

தன் சகோதரன் மரணத்தில் இருந்து வெளிவருவது தஸ்தயேவ்ஸ்கிக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அந்தத் துயரில் இருந்து விடுபடுவதற்குள் தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி மரியாவும் இறக்கிறாள். மீள முடியாமல் தனியாகத் தவித்திருந்த தஸ்தயேவ்ஸ்கிக்கு, ஒரு தேவதையாய் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சைபீரிய படைப்பிரிவில் கட்டாயப் பணியில் அமர்ந்திருந்த காலத்தில் பழக்கமான முக்கிய நண்பர் அலெக்ஸாண்டர் ராங்கெல். நண்பரின் அழைப்பின் பேரில் கோபன்ஹேகன் செல்கிறான் தஸ்தயேவ்ஸ்கி. அங்கு கொஞ்சம் காலம் ராங்கெல் குடும்பத்தோடு இருந்த நாட்களில் இழந்த அமைதியை மீட்டு ஆசுவாசப்படுகிறான். 1865ல் ‘மரணத்தின் வீடு’ நாவல் வெளியாகிறது. 

குற்றமும் தண்டனையும்: (Crime and Punishment)

1860-களில் குற்றங்களின் வேதனைத் துடிப்பில் சிக்கிக் கொண்டிருந்தது ருஷ்யா. ஜார் மன்னர் இரண்டாம் அலெக்சாண்டரின் சீரமைப்பில் குற்றங்களுக்கு நீதி வழங்குதல், பத்திரிக்கைச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு நடந்து வந்தது. பொது மக்களின் முன்னிலையில் நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்ததில், நாடகத்துக்கும் செய்தித் தாள்களுக்கும் கருத்துச் சொல்வது போல் நேரடியாக குற்ற வழக்குகளைப் பற்றிக் கருத்துச் சொல்லும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. 

மக்கள் நாடகங்களின் வரிகளைப் படிப்பது போல, குற்றப் பத்திரிக்கைகளை வரி விடாமல் வாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். அந்த நேரத்தில் இருந்த மக்களின் ஆர்வம் “திறந்த நீதிமன்றம்” போன்ற இதழ்கள் ஏற்படக் காரணமாகியிருந்தது. ஒரு பதிப்பகத்தார் மேலும் ஒரு படி முன் சென்று, “வழக்குகள் நாவல்களை விட மேலான சுவாரசியத்தோடு இருக்கிறது” என்று கருத்துரைத்தார். 

1860-களில் ருஷ்யாவின் பத்திரிக்கைகளை வாசிக்கும்போது கைகளிலேயே இரத்தக் கறையாவது போல் இருந்தது. 

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியைக் காட்டிலும் அதிகமாக குற்றப் பத்திரிக்கைகளைச் சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 1865ல் ஜெர்மனில் ஒரு வசதி விடுதியில் தங்கிச் சூதாடி, தஸ்தயேவ்ஸ்கி தன் கையிருப்பு மொத்தத்தையும் இழந்திருந்தார். பின் விடுதிக்குப் பணம் செலுத்த முடியாமல் ஆகிவிட்டதால், விடுதி நிர்வாகத்திலிருந்து தஸ்தயேவ்ஸ்கிக்கு உணவு வழங்கும் சேவையை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. 

இரத்தத்தில் தோய்ந்த கொலை! 

ஒரு நாள் விடுதியில் ஒரு மனிதர், “சமையல்காரனையும், பாத்திரம் துலக்கும் பெண்மணியையும் கோடரியால் வெட்டிக் கொன்ற செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார். கொலைக்காரனை அந்தச் செய்தித்தாள் ‘ரெஸ்கோல்நிக்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

‘ரெஸ்கோல்நிக்’ என்பவர்கள் திருச்சபை உட்பிரிவுகளால் வளர்ந்த பதினேழாம் நூற்றாண்டின் வழிபாட்டுத் திருத்தங்களை எதிர்க்கும் பல திருச்சபை குழுக்களில் ஒரு குழுவின் நபர்கள். 

அந்தச் செய்தியைப் பார்த்த சற்று நேரத்தில், தன் பதிப்பாளர் மிகைல் கட்கோவுக்கு ஒரு கடிதத்தில் தான் ஒரு கதையை எழுதித் தருவதாகக் கூறி, அக்கதையின் சுருக்கத்தை எழுதி அனுப்புகிறார். 

ஒரு இளைஞன், பல்கலைக்கழகத்தால் விரட்டியடிக்கப்பட்டவன், ஒரு விவசாயக்கூலி — சிறு வணிகச் சமூகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன், கொடிய வறுமையில் வாடுபவன், விநோதமான, மேலோட்டமான முழுமைப் பெறாமல் காற்றில் மிதக்கும் சில சிந்தனைகளைக் கட்டிக்கொண்டு, மேலோட்ட மனத்துடன் நிலையில்லா யோசனைகளோடுத் தன் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண முடிவெடுக்கிறான். வட்டிக்குப் பணம் தரும் ஒரு வயதானப் பெண்மணியைக் கொலை செய்வது தான் முடிவு.

ஒப்பந்தத்தின் திட்டவட்டங்களைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கடிதத்தில் எழுதியிருந்தது. ஆனால் அப்போது அவருக்கு உடனடியாக விடுதிக்குக் கட்டணம் செலுத்த ஐந்நூறு ரூபிள் பணம் தேவைப்பட்டது. 

முதலில் 90 பக்க கதையாக கருக்கொள்ளப்பட்டது, பின்னர் விரிந்து ஒரு முழு நீண்ட நாவலாக மாறி ருஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடத்தைத் தஸ்தயேவ்ஸ்கிக்கு ஏற்படுத்தித் தந்தது. 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்குத் திரும்பிய பின், மீண்டும் இக்கட்டானச் சூழல் ஒன்றில் தன் நாவலை இருபத்தாறு நாட்களுக்குள் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒப்பந்தப்படி, ஒத்துக்கொண்ட அவகாசத்துக்குள் முடித்துத் தராவிட்டால், இதுவரை எழுதிய மொத்த நாவல்களுக்கான ராயல்டி உரிமமும் பறிக்கப்பட்டுவிடும் என்கிற நிலைமை. அப்போது தான் சுருக்கெழுத்தாளர் ஒருவரை நாவலை விரைவில் முடிப்பதற்காகத் தேடுகிறார் தஸ்தயேவ்ஸ்கி. அப்போது சுருக்கெழுத்தாளராக பணி செய்ய வந்தவள் தான் அன்னா. குறிப்பிட்ட அந்த இருபத்தாறு நாட்களுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே நாவலை எழுதி முடிக்கிறார்கள். அந்த நாவல் தான் ‘சூதாடி (The Gambler)’. 

சூதாடி நாவலை எழுத உடனிருந்து உதவியவளே மார்ச் 1867ல் தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி ஆகிறாள். 

திருமணமான கொஞ்சம் நாட்களிலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்கள். அங்குப் போயும் தஸ்தயேவ்ஸ்கியின் சூதாட்டப் பழக்கத்தால், அன்னாவின் உடைமைகளையெல்லாம் விற்க வேண்டியதாகிறது. நான்காண்டுகள் போராடி மெல்ல கடனிலிருந்து வெளி வருகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் பல போராட்டங்களை இருவருமே சேர்ந்து சந்தித்தார்கள். அந்த நாட்களில் அவர்களின் முதல் குழந்தையும் இறந்து போனது. தஸ்தயேவ்ஸ்கியின் பிணி, தொடரும் பணப் பற்றாக்குறை, ரூலெட் மீதான தஸ்தயேவ்ஸ்கியின் மோகம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகள். அவை எல்லாவற்றிலிருந்தும் அன்னாவின் துணையோடு கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் மீண்டு வருகிறார்கள். ஒருவருக்கொருவர் நன்றியோடும் அன்போடும் ஆழத்தோடும் நிறைந்த குடும்ப வாழ்க்கையாலும் இருவரும் நெருக்கமாகிக் கொண்டே வந்ததாக அன்னா பின்னாட்களில் தன்னை நேர்கண்டவர்களிடம் நினைவு கூர்ந்தார். 1869ல் நிம்மதியான நாட்களுக்கிடையில் “அசடன் (Idiot)” நாவல் எழுதி வெளியாகிறது. தஸ்தயேவ்ஸ்கி உருவாக்கிய ‘அசடன்’ நாவலின் கதாநாயகன் பிரின்ஸ் மிஷ்கின் பூமியின் பரிபூரண அழகுடனான மனிதனாக இருக்க வேண்டும் என்று படைக்கப்பட்டவன். 1870ல் “நித்திய கணவன் (Eternal Husband)” என்கிற நாவல் ஒன்றை எழுதுகிறான். 

1870 முதல் தஸ்தயேவ்ஸ்கி ஏங்கிக் கொண்டிருந்த காலம் வாய்க்கப் பெற்றது. பெரு மதிப்பிற்குரிய எழுத்தாளனாக தஸ்தயேவ்ஸ்கி போற்றப்படுகிறான். அவனுடைய போராட்டங்களுக்குப் பலன் கிடைக்க ஆரம்பிக்கிறது. அவனுடைய புகழ் அவனது ஒவ்வொரு வெளியீட்டுக்கும் பல படி ஓங்கிக்கொண்டே போகிறது. 1872ல் “பேய்கள் (Demons)” நாவல் வெளியாகிறது. இந்தக் காலக் கட்டத்தில் எல்லாம் “ஒரு எழுத்தாளனின் குறிப்பேடு” என்கிற எழுத்துக் கலை வடிவத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். அதுகுறித்து பேரிஸ் பிரசோல் (Baris Brasol) “ஒரு எழுத்தாளனின் குறிப்பேடு” தொகுப்பு நூலின் முகவுரையில் இப்படி எழுதுகிறார்:

“தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய அரசியல் தத்துவங்களை 1873, 1876, 1877 மற்றும் 1880 – 1881 ஆண்டுகளில் வெளியான ‘ஒரு எழுத்தாளனின் குறிப்பேட்டி’ல் வெளியிடுகிறான். இந்த இலக்கிய உருவாக்கம் மிகத் தனித்துவமானது. இதற்கு இணையானதொரு உருவாக்கம் உலக இலக்கியத்திலேயே இல்லை. வாசகர்களோடும், விமர்சகர்களோடும், கடிதத் தொடர்பாளர்களோடும் அவ்வப்போது சில அந்தரங்கமானத் தலைப்புகள் பற்றி முறைசாரா சம்பாஷணை செய்ய மேதையின் துணிவோடு செய்த முயற்சிகளில் ஒரு பகுதியான உருவாக்கம் முன் நிறுவப்பட்ட எல்லா அழகியல் இலக்கிய மாதிரிகளிலிருந்தும் விடுபட்டு அமைகிறது”.

இந்த உருவாக்கத்தில் ருஷ்யாவின் கொளுந்தெரியும் பிரச்சனையில் ஒன்றான விவசாயக் கூலிகளின் விடுதலைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கிறார். 

ருஷ்யாவின் எதிர்காலம் பற்றியும் சிலேவிய மக்களின் பிரச்சனைகளுக்கான இறுதி தீர்வு பற்றியும் அதிகம் எழுதுகிறார். அக்குறிப்பேட்டில் பெரும்பங்கு அரசியல் விசாரணைகளுக்கும் கேள்விகளுக்குமாகத் தான் ஒதுக்கப்பட்டிருந்தது. 

1878ல் பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டரால் தன் அரசக்குடும்பத்துக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்கு அழைக்கப்படுகிறான். நூற்றுக்கணக்கானோருக்கு பொதுவெளிகளில் சொற்பொழிவு ஆற்றுகிறான். அவனுடைய உயரிய படைப்புகளை பெருநகரங்களின் இலக்கிய கூட்டங்களில் சத்தமிட்டுப் படித்துக்காட்ட அழைக்கப்படுகிறான். இவை எல்லாவற்றுக்கும் காரணமாக, அவனுக்குரிய பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தந்து, அவனுடைய தேவதையாக, பரிசுத்த ஆவியாக உடனிருந்தாள் மனைவி அன்னா. அப்போது கடன் எதுவும் இல்லை. அவன் வாழ்க்கை முழுவதற்கும் ஏங்கி நின்ற அன்பு அவனை அரவணைத்திருந்தது. அவன் படைப்பூக்கத்தின் உச்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்கிறது. தனக்குக் கிடைத்திருந்த மன நிம்மதியான சிறு பகுதி வாழ்க்கையை பயன்படுத்தி டிசம்பர் 1880ல் “கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov)” நாவலை எழுதி முடிக்கிறான்.

1880ல் தான் புஷ்கின் நினைவுச் சின்னத் திறப்பு விழாவில் நிகழ்த்திய பேருரைக்கு இன்னமும் குறைந்து முடியாமல் பொழியப்பட்டு வரும் அன்புக்குப் பாத்திரமானவனாய் தன் “ஒரு எழுத்தாளனின் குறிப்பேட்டில் (A Writer’s Diary)” புஷ்கின் பற்றிய உரைக்கான விளக்கத்தை எழுதி வெளியிடுகிறான். 

சில மாதங்களாக வலிப்பு வராமல் இருந்தது. சில தினங்களாக ஜனவரியின் இறுதி நாட்களில் இரத்தப்போக்கு மோசமாகி உடல்நிலை பழுதானது. அது அவனை எதை நோக்கி அழைத்துப் போய்க் கொண்டிருந்தது என்பதை அறிந்து வைத்திருந்தான். 

அவன் மனைவி அன்னா, மகன் ஃபியோதர், மகள் லியூபாவை தனது படிப்பறைக்குள் ஒன்றுக் கூடும்படி அழைத்தான். பழைய ருஷ்ய காலெண்டர் படி ஜனவரி 28, 1881ல் 20.38க்கு அவன் மண்ணுலகை விட்டுப் பிரிந்திருந்தான்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் அலெக்சாண்டர் நெவ்ஸ்கி மடாலயத்தில் இறுதிச் சடங்கு நடக்கவிருந்த மூன்று நாட்களில் தஸ்தயேவ்ஸ்கியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரள் அவன் வீட்டில் கூடியிருந்தது. பத்தாயிரத்திற்கும் மேலானோர் மடாலயம் வரை அவன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

பலத்தரப்பட்ட ஆண்களும் பெண்களும் இறுதிச் சடங்கில் இருந்தனர். உயரிய பதவிகள் வகித்த அரசியல் மேதகைகளிலிருந்து அடித்தட்டு விபச்சாரிகள் வரை கலந்துகொண்டனர். படிப்பறிவில்லாத விவசாயக் கூலிகளிலிருந்து புகழ்பெற்ற இலக்கிய மேதைகள் வரை கலந்துகொண்டனர். இராணுவ அதிகாரிகளும் விஞ்ஞானிகளும், ஐயப்பாடற்ற மத குருக்களும், அவ நம்பிக்கைக்குரிய மாணவர்களும் — யாவரும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்கள். 

வீறார்ந்த விசாரணையாளன்: (The Grand Inquisitor)

தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய இறுதி பெரும் படைப்பான கரமசோவ் சகோதரர்களில் முக்கிய கதை மாந்தர்களில் ஒருவனான இவான் கரமசோவ் அலெக்ஸியை நோக்கி வினவும் ஒரு கூறுரைக் கவிதை போல் அமைகிறது. இடையிடையே கவிதையோடு உரைநடையும் பிண்ணி வருகிறது. கிறித்துவ சமயவியலின் மிக முக்கிய நம்பிக்கையான கிறித்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிப் பேசுகிறது. 

அதில் கிறித்துவின் இரண்டாம் வருகை முன்னமே நிகழ்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது: 

கிறித்து பலநூறு வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினுக்கு மீண்டும் வந்தார் — கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போதெல்லாம் கிறித்துவுக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து அவ்வமைப்பு அதன் சித்தாந்தத்தை நிறுவியிருந்தது. 

கிறித்து மன்னிப்பையும் உலகளாவிய அன்பையும் போதித்திட வந்திருந்தான். ஆனால், நினைத்துப் பாராதது நடந்தது; மிகப் பலம் வாய்ந்த மதத் தலைவன் — வீறார்ந்த விசாரணையாளன் — கிறித்துவைச் சிறையில் அடைத்து விட்டான். 

இரவு நேரத்தில், வீறார்ந்த விசாரணையாளன், கிறித்துவைச் சிறைக்குள் சென்று சந்தித்து, கிறித்துவைப் பூமியில் வேலைச் செய்ய அனுமதிக்க முடியாது, அது சமுதாயத்தின் சமநிலைக்கு ஆபத்து விளைவிக்கும் என்று விளக்கினான்.

மீத் தூய்மையோடும், மிகப் பரிபூரணமாகவும் கிறித்து அதிலட்சியத்தோடு இருப்பதாக அவன் குற்றம் சாட்டினான். மனிதக்குலத்தால் இப்படிச் சாத்தியமில்லாத குறிக்கோள்களை வைத்துக்கொண்டு வாழ முடியாது என்பதை விளக்கினான். உண்மையில், கிறித்துவின் வழிகாட்டுதலுக்கேற்ப மனிதர்களால் வாழ முடிவதில்லை — கிறித்து தன் தோல்வியை ஒத்துக்கொண்டாக வேண்டும், மீட்சிக்கான சிந்தனைகள் தவறான வழிகாட்டுதலால் வந்தவை என்கிறான். 

ஸ்பெயினில் தோன்றிய கிறித்து தன் இரண்டாம் வருகைக்குப் பின் மீண்டும் தோன்றினாரா? 

அவர் மாஸ்கோவில் தோன்றினாரா? 

அவன் மரணமில்லாதவன். அவன் கிறித்துவை நம்பியவன். அவன் இப்படிச் சொல்லக் கூடும்: “நீ கிறித்துவை நம்பினால், நீ எப்போதும் வாழ்வதாய் நம்புகிறாய்”.

அவன் நம்பிக்கையில் குருட்டுத்தனமும், மூடத்தனமும் இல்லை.

அவன் தஸ்தயேவ்ஸ்கி! 

தஸ்தயேவ்ஸ்கி சுவரோவியம்.

அன்னாவுடைய மரணத்துக்கு ஓராண்டு முன்பாக அன்னாவின் பதிப்பகத்தார் லியோனிட் க்ரோஸ்மன் அன்னா நேர்காணலில் கூறியதாகப் பதிந்தது:

“நான் இருபதாம் நூற்றாண்டில் வாழவில்லை. நான் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலேயே தான் இன்னமும் இருக்கிறேன். ஃபியோதரின் நண்பர்கள் தான் என் உறவுகள். நான் இன்னும் ஃபியோதரின் காலமான நண்பர்களோடு பிணைந்திருக்கிறேன். ஃபியோதரின் வாழ்க்கையையோ, படைப்புகளையோ பயில்பவர்கள் எவராக இருந்தாலும், அவரும் என்னுடைய நெருங்கிய உறவு”.

நன்றி அன்னா. இந்தக் கணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நானும் உன்னுடைய உறவே! 

அன்னா இறக்கும் வரையில் தஸ்தயேவ்ஸ்கியுடனானத் தன் நினைவுக் குறிப்புகளை முப்பது ஏடுகளில் பதிவு செய்திருந்தாள். தஸ்தயேவ்ஸ்கி நினைவாக ஆயிரம் நினைவுப் பொருட்களைக் கொண்டு ஒரு நினைவுச் சேகரத்தையே உண்டு செய்திருந்தாள். 

இதையும் படிக்க: “பல்குரல் உத்திக் கொண்டு யதார்த்தத்தின் ஆழத்தைத் தோண்டும் கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி”

தஸ்தயேவ்ஸ்கியின் முக்கிய படைப்புகள்:தஸ்தயேவ்ஸ்கியின் முக்கிய படைப்புகள்:

Poor Folk (1846)
The Double (1846)
The Landlady (1847)
Uncle’s Dream (1859)
Humiliated and Insulted (1861)
The House of the Dead (1862)
Notes from Underground (1864)
Crime and Punishment (1866)
The Gambler (1867)
The Idiot (1869)
The Eternal Husband (1870)
Demons (also titled: The Possessed, The Devils) (1872)
The Adolescent (1875)
The Brothers Karamazov (1880)
A Writer’s Diary.

கட்டுரைக் குறிப்புகள்:

  1. தஸ்தயேவ்ஸ்கி நூல்கள்
  2. Cradle Magazine – “I love you — therefore you will not die” by Natasa Dinic.
  3. From “A Writer’s Diary: Preface by Boris Brasol , Pushkin: A Sketch by Dostoevsky”
  4. The Dostoevsky’s Favorite Murder, Jenifer Wilson, The New Republic.
  5. 200yearsofdostoevsky.info website
  6. Leisure: Literature on Dostoevsky, Schooloflife.com
  7. Wikipedia References & Citations.

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

1 thought on “அவன் தஸ்தயேவ்ஸ்கி! — மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை. ”

  1. Pingback: 'பல்குரல் உத்தி' கொண்டு யதார்த்தத்தின் ஆழத்தைத் தோண்டும் "கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி"!  - உயிர்

Leave a Reply