‘பல்குரல் உத்தி’ கொண்டு யதார்த்தத்தின் ஆழத்தைத் தோண்டும் “கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி”! 

தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய குறிப்பேடுகளில் இப்படிக் குறித்து வைத்திருந்தார்: ‘நான் ஒரு உளவியலாளனென்று அழைக்கப்படுகிறேன். அது உண்மையல்ல. உயரிய பொருளில் நான் ஒரு யதார்த்தவாதி’.

தஸ்தயேவ்ஸ்கி ஒரு குற்றவியலாளர், மனநோயியலாளர், உளவியலாளர், ஆன்மவியலாளர், தத்துவவியலாளர் என்று இவை எல்லாமாகவும் அறியப்படுகிறார். 

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

எனக்குத் தெரிந்த நண்பர்கள் ஓரிருவர் அவரைக் கம்யூனிச எதிர்ப்பாளராகவும், கிறித்துவ மதப்பற்றாளராகவும் மட்டுமே புறமுகமாக ஆழமில்லாமல் அறிந்து கொண்டு, முதுகலை இலக்கிய ஆய்வுக்குக் கூட அவரைப் புறக்கணித்துவிட்டு நாத்திக நோக்குடைய எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். 

ஆனால், தஸ்தயேவ்ஸ்கி எதைத் தேடினார்? தன்னுடைய எழுத்தை எதை நோக்கி காலம் முழுக்கத் தீட்டினார் என்று பார்த்தால் யதார்த்தத்தின் ஆழத்தைத் தேடி தான். 

சரி, எது யதார்த்தம்? 

சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அதைப் பற்றிய எண்ணக் குறிப்புகளும் மட்டும் தான் யதார்த்தமா? 

யதார்த்தத்தின் வஸ்து வெறும் புறவய நிகழ்வுகளால் ஆனதா? மனிதனின் சிரிப்பு, அழுகை, கோபம் எல்லாம் யதார்த்தத்தில் அடங்குமா? ஒரு வேளை கண்களுக்குத் தெரியும் சிரிப்பு, அழுகை, கோபம் எல்லாம் யதார்த்தம் என்றால், கண்ணுக்குத் தெரியாத பிரக்ஞைக்கு யதார்த்தத்துக்குள் இடம் கிடைக்குமா? அந்தப் பிரக்ஞைக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை அறுத்து விடாமல் யதார்த்தத்தில் இருந்து உளத்தையும், பிரக்ஞையையும் பிரிக்க முடியுமா? அப்போது, மனிதனில் இருந்து புறமுகமாக எவ்வளவு தூரம் பிரிந்தது இந்த யதார்த்தம், எவ்வளவு தூரம் மனிதனுக்குள் அகமுகமாக ஒன்றியது யதார்த்தம்? 

ஒருவேளை, ஐம்புலன்களால் உணரப்படுவது மட்டும் தான் யதார்த்தமா? யதார்த்தம் என்ன மனித உள்ளுணர்வுகளிலிருந்தும், நம்பிக்கையிலிருந்தும் அவ்வளவு தனித்துவிடப்பட்டதா? நம்பிக்கைகள் யதார்த்தம் இல்லையென்றால், என் நம்பிக்கை என்னை நிகழ்த்த வைக்கும் செயல் மட்டும் யதார்த்தம் ஆகிவிடுமா? அந்த நம்பிக்கையில் நிகழ்ந்துவிட்ட புறமுக நடவடிக்கைக்கு யதார்த்த வகைமையில் இடம் உண்டா? நம்பிக்கைக்கும் செயலுக்குமான தொடர்பைத் துண்டித்துவிடும் யதார்த்தம் போய் சேரும் இடம் தான் என்ன? 

இந்தக் கேள்விகளுக்குள் கலை ரீதியாக பயணித்து முத்துக் குளித்தவர் தான் தஸ்தயேவ்ஸ்கி. அந்த உயரிய யதார்த்தத்தை அடைய தஸ்தயேவ்ஸ்கி கண்டடைந்த உத்தி தான் “பல்குரல்” கட்டமைப்பு. 

பல்குரல் கட்டமைப்பை முழுமைத் தன்மையுடன் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்த்திய பெருமை தஸ்தயேவ்ஸ்கியை மட்டுமே சேரும் என்பது ரஷ்ய இலக்கிய திறனாய்வாளர் மிகைல் பக்தின் உடைய வாதம். அதை அவர் தன்னுடைய “Problems of Dostoevsky’s Poetics” நூலில் முன் வைக்கிறார். வெறும் ஐந்தே அத்தியாயங்களாலான சற்றே பெரிய நூலில் ஒரு முழு அத்தியாயத்தையும் “Dostoevsky’s Polyphonic Novel and its Critical Interpretation” என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார். அந்த பல்குரல்(Polyphony) பற்றிய அத்தியாயம் தான் நூலின் முதல் அத்தியாயமும் கூட.

Problems of Dostoyevsky’s Poetics by Mikhail Bhaktin.

அந்த அத்தியாயத்தில் இந்த ‘பல்குரல் உத்தி’ தஸ்தயேவ்ஸ்கியுடைய சமகாலத்தவர்கள் யாராலும் (லியோ டால்ஸ்டாய் உட்பட) கையாளப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். இலக்கிய வரலாற்றில் டான்டே, ஷேக்ஸ்பியர், ரபலேஸ், செர்வான்டெஸ், பால்சாக், கிரிம்மல்ஷாசன் முன்னிட்டோர் சற்றே முயன்றிருந்தாலும் கூட, தஸ்தயேவ்ஸ்கி மட்டுமே அந்த உத்தியின் உச்சத்தைப் பயன்படுத்திய சீரிய கலைஞன் என்பதையும் குறிப்பிடுகிறார். 

இந்தத் திறனாய்வாளரின் வழிகாட்டுதலில் புரிந்துகொள்ளும் பல்குரல் பண்பின் முக்கியத்துவம் தான் தஸ்தயெவ்ஸ்கியின் யதார்த்தவாதத்தை நிறைவு செய்வதாகக் கருதுகிறேன். அதனால், அவருடைய பார்வையைத் தான் இந்தக் கட்டுரை பெரிதும் சார்ந்திருக்கிறது. 

தஸ்தயேவ்ஸ்கியின் புனைவுகளில் எந்த வரியையும் தத்துவமாகவோ, அறிவுரையாகவோ ஒரு வழிகாட்டுதல் கண்ணோட்டத்தோடு எடுத்துக்கொள்ள முடியாது. புனைவில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல்களும் கருத்துகளும் துளியும் ஆசிரியருடைய நேரடி ஆதிக்கத்துடனோ ஆதரவுடனோ எழுதப்படாதவை என்பதைப் புரிந்துகொள்பவர்களுக்கு, ஏன் தஸ்தயேவ்ஸ்கியை வரிகளில் தேடுவது அறிவார்ந்த செயல் ஆகாது என்பது விளங்கும். தஸ்தயேவ்ஸ்கி நிச்சயம் அறிவுசார் மேற்கோள்களுக்கான ஆசிரியர் இல்லை. தஸ்தயேவ்ஸ்கியின் புனைவுகளைக் கூறுகளாய்ப் பிளந்தோ, உடைத்தோ புரிந்துகொள்வது அந்தக் கலைஞனின் சீரிய படைப்பை முழுமையாய் புரிந்துகொள்வதாகாது. புனைவின் ஐக்கிய முழுமையில் மட்டுமே கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி அடைய நினைக்கும் கலையுச்சத்தை உணர்ந்துகொள்ள இயலும். தன் புனைவின் கலை முழுமையிலிருந்து உண்டாகும் ஐக்கியத்தின் மூலம் அடையும் உயரிய யதார்த்தத்தை நிறுவுவதற்கு, ஆழத்தில் ஒளிந்திருக்கும் யதார்த்தத்தைத் துழாவிக் கண்டடைய தஸ்தயேவ்ஸ்கி தேர்ந்து, முழுமையாய் வளர்த்தெடுத்த முக்கிய உத்தி தான் “பல்குரல் பண்பு”.

‘பல்குரல் உத்தி’ என்பது என்ன? 

அதற்கு அவ்வளவு எளிதில் பதில் கிடையாது என்பது தான் உண்மை. மிகைல் பக்தின் குறிப்பிடும் முதிர்ச்சிபெற்ற, முழுமையடைந்த பல்குரல் உத்தியைப் புரிந்து கொள்வதற்கான உதாரணமே தஸ்தயேவ்ஸ்கியிடம் தான் தொடங்குகிறது. அதை எளிதில் புரிய வைப்பது கடினம் என்பதால் தான், திறனாய்வாளர் மிகைல் பக்தினுக்கு நாற்பதுக்கும் கூடுதலானப் பக்கங்கள் தேவைப்படுகிறது. அந்தப் பக்கங்களில், தனக்கு முன்பு தஸ்தயேவ்ஸ்கியைத் திறனாய்வு செய்த மற்ற திறனாய்வாளர்கள் பலரின் புரிதலில் விடுபட்ட மிச்சத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்களுக்குத் தஸ்தயேவ்ஸ்கியின் பல்குரல் உத்தியின் மீதான புரிதலில் எஞ்சி இருக்கும் தவறுகளைத் திருத்துகிறார். சில இடங்களில் மற்ற திறனாய்வாளர்களின் கருத்துகளோடு விவாதிக்கிறார். இப்படியே படிபடியாய் பல்குரல் உத்தியின் மீதான புரிதலின்மையைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் அவ்வுத்தியின் பங்கு தஸ்தயேவ்ஸ்கியைப் பற்றிய புரிதலில் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறார். 

“தஸ்தயேவ்ஸ்கி முதலில் ஒரு கலைஞன். தத்துவவாதியோ, விளம்பரதாரியோ இல்லை என்பதை அவரின் விமர்சகர்கள் மறந்துவிடுகிறார்கள்” என்று நூலின் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார்.

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பில் பல்குரல் பண்பின் முக்கியத்துவமாக, ரஷ்ய திறனாய்வாளர் மிகைல் பக்தின் எடுத்துரைக்கும் காரணங்கள் சில பத்திகளில் பின்வருமாறு:

(நூலின் மூல வார்த்தைகளின் சாரத்திலிருந்து அகலாமால் கட்டுரையின் அமைப்பு கருதிச் சுருக்கி வரைகிறேன்) 

தஸ்தயேவ்ஸ்கியின் கதாநாயகர்கள் ஆசிரியருடைய பிரக்ஞையின் ஆதிக்கத்தில் சுருங்கிவிடாதவர்கள். அந்தக் கதாநாயகர்கள் ஆசிரியருடைய தத்துவத்தையும், ஒற்றையியல் சித்தாந்தத்தையும் வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட சுதந்திரமற்ற கதாநாயகர்கள் அல்லர். அவர்கள் தன்னிச்சையாக தங்கள் உள்ளுணர்வின் படி இயங்கும் சுதந்திரம் கொண்டவர்கள். [1]

முரண்பாடுகளும், எதிரிணைகளும் படைப்பில் ஒலிக்கும் குரல்கள் அனைத்திலும் அமைகின்றன. [2] 

நாவலில் அமைந்திருக்கும் உள்ளுணர்வுகளின் ஒன்றிடாத பன்மைத் தன்மை, மற்றும் கருத்தியல் செல்லுமையில் முழுமையடைந்த குரல்களின் பன்மைத் தன்மையும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பு நோக்கால் மட்டுமே சாத்தியமாகிறது.  

மேலுள்ள சுருக்கத்தைக் கட்டுரைக்கு ஏற்றபடி மீள் உருவாக்கம் செய்வது கட்டுரையின் நோக்கத்துக்கு அவசியமாகிறது: 

தஸ்தயேவ்ஸ்கியின் கதாநாயகர்கள் கருத்தியல் செல்லுமையில் முழுமைப் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தனி ஆசிரியர் போன்று தம் உலகைத் அவர்தம் உள்ளுணர்வால் தாமே விரித்துக்கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளார்களாக இருக்கிறார்கள். ஒரு குரல் இன்னொரு குரலோடு சம அளவில் முரண்பட்டும், இடைச்சார்புடையதாகவும் உடனிருக்கிறது. தனிக் குரல்கள் தன்னளவில் முழுச் செல்லுமைப் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த குரல்களின் பன்மைத் தன்மையோடு நாவலாக கட்டமைக்கப்பட்டு ஒலிக்கப்படும்போது மட்டுமே முழுமைப் பெறுகிறது. அந்த முழுமையிலேயே நாவலின் புறவய யதார்த்தம் எட்டப்படுகிறது. 

இதில், கதாநாயகர்களின் உள்ளுணர்களிருந்து தேடும் வெளிப்பாடுகளாக அமைவது தான் நாவலில் காணப்படும் தத்துவமும், உளவியலும், ஆன்மவியலுமே தவிர அவை நாவலின் நோக்கம் இல்லை. அவை நாவலின் நோக்கத்தை எட்டுவதற்கான வழிமுறை மட்டுமே. 

நாவலின் களமான ரஷ்ய சமூகமும், சூழலும், அரசியலும் இந்தத் தன்னிச்சையானக் கதாநாயகர்களின் உள்ளுணர்வுகளில் ஏற்படுத்தும் பாதிப்பும், அந்த உள்ளுணர்வுகளின் ஒன்றிணையாத பன்மைக் குரல்களில் உருவாகும் ஒன்றோடொன்று உடனிருந்து உறவாடும் முரண்பாடுகள் மற்றும் எதிரிணைகளின் தன்மையும் நிறைந்த படைப்புலகமே தஸ்தயேவ்ஸ்கி கண்டடையும் ஆசிரியரிடமிருந்து முற்றிலும் விலகிய புறவய யதார்த்தம். அந்த யதார்த்தம் ஆசிரியரின் உள்ளுணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. கதாநாயகர்களின் உள்ளுணர்வுகள் அகால நிலையில் முழு சுதந்திரம் பெற்று ஓங்கும் வெளியில்(space) மட்டும் கட்டப்பட்டது தஸ்தயேவ்ஸ்கியின் உலகம். மூன்றாம் நபர்(படர்க்கை) பார்வைப் புள்ளியிலிருந்து சொல்லும் கதை என்பதற்கு நாவலில் எங்குமே இடமில்லை. கதை முழுதுமே கதாநாயகர்களின் முதல்நிலை அனுபவங்களாக வெளியாகுபவை. காலக் கட்டுமானத்திலிருந்து அவிழ்ந்து அனுபவிக்கும் அகால அனுபவங்கள் உருவாக்கும் படைப்புலகம் ஆசிரியரின் சொந்தப் பார்வையையும், பிரக்ஞையையும் விட்டு விலகி நிற்கிறது. அதன் காரணமாகவே, ஒற்றையியல் அந்தஸ்தை மீறிய தனி ஆசிரிய அந்தஸ்து எட்டப்படுகிறது. [3]

இப்படியாக, தன் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த படி ‘உயரிய பொருளின் யதார்த்தவாதி’ ஆகிறான் “கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி”! 

இதையும் படிக்க: அவன் தஸ்தயேவ்ஸ்கி! — மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை. 

குறிப்புகள்:

குறிப்பெண்களிடப்பட்டிருந்தப் பத்திகளின் மேலதிகப் புரிதலுக்கு கீழுள்ள Problems of Dostoevsky’s Poetics by Mikhail Bakhtin (Edited and Translated by Caryl Emerson, Eighth Printing 1999. ISBN 0-8166-1227-7) நூலிலிருந்து தரப்பட்டுள்ள நேரடி வரிகளைப் படிக்கவும். 

(Excerpt from the book [1]: This relative freedom of a hero does not violate the strict specificity of the construction, just as the specificity of a mathematical formula is not violated by the presence of irrational or transfinite quantities. This new placement of the hero is achieved not through the choice of some abstractly formulated theme (although, of course, the theme is of some significance), but is achieved rather through an entire accumulation of special artistic devices for constructing a novel-device Dostoevsky was the first to introduce.) 

(Excerpt from the book [2]: Here is how Kaus characterizes this extraordinary multi-sided and multi-leveled quality of Dostoevsky: Dostoevsky is like a host who gets on marvelously with the most motley guests, who is able to command the attention of the most ill-assorted company and can hold all in an equal state of suspense. An old-fashioned realist can with full justification admire the descriptions of forced labor, of the streets and squares of Petersburg, of the arbitrary will of the autocracy; but a mystic can with no less justification be enthusiastic about coming into contact with Alyosha, with Prince Myshkin, with Ivan Karamazov who is visited by the devil. Utopians of all persuasions will take delight in the dreams of the “Ridiculous Man,” or the dreams of Versilov or Stavrogin, and religious people can fortify their spirit by that struggle for God waged in these novels by saints and sinners alike. Health and strength, radical pessimism and an ardent faith in redemption, a thirst for life and a longing for death- here all these things wage a struggle that is never to be resolved. Violence and goodness, proud arrogance and sacrificial humility-all the immense fullness of life is embodied in the most vivid form in every particle of his work. Even being as strict and as critically conscientious as possible, each reader can interpret Dostoevsky’s ultimate word in his own way. Dostoevsky is many-sided and unpredictable in all the movements of his artistic thought; his works are saturated with forces and intentions which seem to be separated from one another by insurmountable chasms.) 

(Excerpt from the book [3]: Not a single element of the work is structured from the point of view of a nonparticipating “third person.” In the novel itself, non-participating “third persons” are not represented in any way. There is no place for them, compositionally or in the larger meaning of the work. And this is not a weakness of the author but his greatest strength. By this means a new authorial position is won and conquered, one located above the monologic position.) 

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

1 thought on “‘பல்குரல் உத்தி’ கொண்டு யதார்த்தத்தின் ஆழத்தைத் தோண்டும் “கலைஞன் தஸ்தயேவ்ஸ்கி”! ”

  1. Pingback: அவன் தஸ்தயேவ்ஸ்கி! — மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை.  - உயிர் காகிதம் - எழுத்தும்

Leave a Reply