எங்கோ போகும் பயணம்… (மொழிபெயர்ப்பு கதை) — ‘நாட்சுமே சோசெகி’யின் ஜப்பானிய கதைத் தமிழில்.

ஒரு பெரிய கப்பலில் அப்போது இருந்தேன்.

கரும்புகை மூட்டத்தைத் தள்ளியபடி அலைகளைக் கிழித்துக்கொண்டு, இடையறாமல் பகலிரவு பல கடந்து அந்தக் கப்பல் போய்க் கொண்டிருந்தது. பெரிய கர்ஜனையோடு போய்க் கொண்டிருந்த கப்பலின் இலக்கு எதுவென தெரியவில்லை. அலைகடலின் அடியிலிருந்து இரும்பு பிழம்பாய் தோன்றியெழுந்து, உயரிய பாய்மரக் கம்பத்தின் உச்சியில் சில பொழுது அமர்ந்து, மறுபடி உடனே ஓடி அடியாழத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும் ஆதவன் மட்டுமே நான் தெரிந்து வைத்திருந்த எல்லாமும். ஒவ்வொரு முறை அப்படி அமிழும்போதும், தூரத்து நீல அலைகள் சிவந்தப் பழுப்பாகிக் கொதித்தெழுகிறது. கர்ஜித்துக்கொண்டே அந்த வெய்யோனை வீணாய்த் துரத்துகிறது கப்பல்.

நாட்சுமே சோசெகி (மூலம்: விக்கிப்பீடியா)

ஒருமுறை ஒரு சக மாலுமியைப் பிடித்திழுத்துக் கேட்டேன், “கப்பல் மேற்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?”

சந்தேகத்தோடு என்னைக் கண்ட அவன், “ஏன்?” என்று தாமதமாகக் கேட்டான்.

“இல்லை, மறையும் சூரியனை நோக்கித் தானே போகிறோம். அதான்.”

கேலிச்சிரிப்பொன்று சத்தமாய்ச் சிரித்துக் கேட்டான், “மேற்கே மறையும் சூரியன் கிழக்கே சேருமோ? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உறங்குமோ?
இது உண்மையா, இல்லை அது உண்மையா?

அலைகளிலே உடலை விட்டு,
சுக்கானைத் தலைக்கு வைத்து,
திரிகின்றேனே நானும்
அலைகளிலே திரிகின்றேனே!”

தடித்தக் கொடிக்கயிற்றை ஒட்டி மண்டிக்கிடந்த மாலுமிக் கூட்டத்தைத் தாண்டி, கப்பலின் முகப்பு பகுதிக்கு வந்தேன்.

மீண்டும் எப்போது கரையை அடைவேன் என்றறியாமல் ஊக்கமிழந்திருந்தேன். கப்பல் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வழியேதுமில்லை. கப்பல் விடும் கரும்புகையையும், அது கிழித்துச் செல்லும் கடல் அலைகளையும் மட்டுமே பார்த்திருந்தேன். ஓயாமல் அந்த நீலக் கடலலைகள் நீண்டு கொண்டே போனது. சில நேரங்களில், கொஞ்சம் ஊதா நிறம் அதில் கலந்திருந்தது. பீறியடித்து பாய்ந்த கப்பலை தூய வெண்நுரை கவ்விச் சூழ்ந்தது. என் மனம் மேலும் ஊக்கமிழந்திருந்தது. கப்பலை விட்டு எகிறி குதித்துவிடத் தோன்றியது.

என்னோடு சக மாலுமிகள் பலர் இருந்தனர். பல வகை வதனங்களோடு இருந்தாலும், அவர்கள் மேற்கத்தியவர்களாகவே தெரிந்தார்கள். கடுமையான கடலைக் கொண்டிருந்த மேகமூட்டம் அதிகம் இருந்த நாளொன்றில், ஒரு பெண்மணி வேலியில் சாய்ந்தவாறு, சமாதானப்படுத்த முடியாதபடி அழுதுக்கொண்டிருந்தாள். அவள் கண்ணீரைத் துடைக்க பயன்படுத்திய கைக்குட்டை வெள்ளையாக இருந்தது. அச்சிடப்பட்ட பருத்தி உடையை அவள் அணிந்திருந்தாள். அவளைப் பார்த்தபோது, துயரம் எனக்கு மட்டுமானதில்லை என்பதை உணர்ந்தேன்.

ஒரு மாலை, கப்பல் தளத்தில் நின்று விண்மீன்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மேற்கத்திய ஆள் வந்து, எனக்கு வானவியல் பற்றி எதுவும் தெரியுமா என்று கேட்டான். எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு என் வெறுமையிலிருந்து விடுபட எண்ணினேனே தவிர, வானவியலில் எந்த ஆர்வமும் இல்லை. அவனுக்கு நான் பதிலளிக்கவில்லை. இருந்தும்கூட, தொடர்ந்து அவன் டாரஸின் கிரீடத்திலுள்ள ஏழு விண்மீன்கள் சேர்ந்து உருவாக்கும் ‘பெரிய டிப்பர்’ பற்றிச் சொல்லலானான். பிறகு, விண்மீன்களும் கடலும் கடவுளின் படைப்புகள் என்று கூறினான். இறுதியாக, எனக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டான். நான் வானத்தைப் பார்த்தேன், பதிலேதும் சொல்லவில்லை.

ஒரு தருணத்தில், நான் வரவேற்பு கூடத்துக்குள் நுழைந்தேன். மிடுக்காக உடையணிந்திருந்த ஒரு இளம்பெண் முதுகுப்புறத்தைக் காட்டியபடி, பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். உயரமான, அழகான ஆண் ஒருவன் அவள் அருகில் நின்று பாடினான். பெரிய வாய் திறந்து சத்தமாகப் பாடினான். எதையுமே பொருட்படுத்தாதவர்களாய் அவர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து அவர்களுக்குள்ளாகவே மூழ்கியிருந்தார்கள். அவர்கள் தாம் இருவரும் இருப்பது கப்பல் என்பதைக் கூட மறந்து போயிருந்தனர்.

என்னுடைய வெறுமை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனது. இறுதியாக, எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தேன். ஒரு மாலை, யாரும் இல்லா நேரத்தில் எனக்கு நானே தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு, கடலை நோக்கிக் குதித்துவிட்டேன். ஆனால், கப்பல் தளத்தை விட்டு கால் விலகிய அந்தத் தருணத்தில், கப்பலுடனான என் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது, வாழ்க்கை உடனடியாக இழக்கக்கூடாத மதிப்புடையதாகத் தோன்றியது. ஆனால், மிகவும் தாமதமாகி இருந்தது. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, ஆனால் அப்போதெல்லாம் நான் கடலில் விழுந்து கொண்டிருந்தேன். அது உயரமான கப்பல். என் கால்கள் கப்பலில் இல்லாதபோதும், தண்ணீரையும் வந்து தொட்டு விடவில்லை. பற்றிப் பிடித்துக்கொள்ள எதுவும் இல்லாமல் தண்ணீர் வந்துகொண்டே இருந்தது. கால்களைப் பின்னிழுத்துக்கொள்ள இனி வாய்ப்பில்லை. தண்ணீரின் நிறம் கருப்பாக இருந்தது.

கப்பல் எப்போதும் போல கரும்புகையைத் தள்ளிக்கொண்டுத் தொடர்ந்து பாய்ந்தது. முதல்முறையாக இப்போது தான் எனக்கு உறுதியாகத் தெரிந்தது, கப்பல் நோக்கிப் போகும் இலக்குத் தெரியாவிட்டாலும் கப்பலிலேயே இருப்பது தான் சிறந்தது என்று. இந்த உறுதிப்பாடு இப்போது கிட்டியும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அளவில்லா பயத்தோடும், விசனத்தோடும் அந்த இருண்ட அலைகளில் அமைதியாய் வந்து விழுந்தேன்.

நாள்: டிசம்பர் 1, 2021

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *