தம்முடைய தேவைகள்
எங்கிருந்து நிறைவேறுகிறது
என்பது
தெரியாதவர்கள்தாம்,
சுயநலமின்மையைப்
போற்றுவார்கள்.
உயிரும் சுயமும் ஒன்று கலந்தவை:
உயிருள்ள வரை சுயம் இருக்கும்
சுயமுள்ள வரை உயிர் இருக்கும்.
சுயம்
தன்னைத் தானே
அழித்துக்கொண்டால்,
உயிர் ஒட்டி இருக்கும்
ஆதாரப் பாத்திரம்
இல்லாமல் போய்விடும்.
ஒரு உணர்ச்சியை
அனுபவிப்பதும்
வெளிப்படுத்துவதும்
ஆராய்வதும்கூட
சுயத்தின் தேவைதான்.
ஆராயும் போது,
உணர்ச்சியை
அறிவால்
உணர்ந்து கொள்ளலாம்.
அந்த
உணர்ச்சியைத்
தவிர்த்துக் கொள்ளலாம்.
முற்றிலும்
சுயத்திலிருந்து
விலகிக் கொள்ள முடியாது.
உணர்ச்சியில் இருக்கும்
சுயத்தின்
மயக்கக் குணம் போய்,
ஆராய்வது அறிவு குணம்.
அதுவும்
சுயத்தை விட்டு
அகலாத நிலையே.
சுயம்
சுருங்கினாலும் நோய்
வீங்கினாலும் நோய்.
பெறுவதில் மட்டும் சுயம் இல்லை.
தருவதிலும் சுயம் உண்டு.
சுயமில்லாதவர் தருவதில்லை.
உயிரை அழிக்காமல்
சுயத்தை அழிக்க முடியாது.
உயிர்
சுயத்தின் இயக்கத்தை
ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது.
அதனால்
தொழில் பிறக்கிறது.
சுயம் தான்
நம் இருத்தலை
உறுதி செய்கிறது.
சுயத்தையும் உயிரையும்
பிரித்து வைப்பது
வேதனை மட்டுமே அளிக்கும்.
நம் தேடலே
சுயத்தின் இயக்கத்தால்
பிறக்கும் தொழில் தான்.
அந்த இயக்கத்துக்கு
நாமே ஆதாரம் இல்லை.
அது
நம் தோள்களில்
நாம்
விரும்பியும் விரும்பாமலும்
சுமப்பது.
அந்த சுயம்
நம் பிரக்ஞைத்
தொடங்கிய இடத்திலிருந்து
உணரப்படுவதாலும்,
அந்தப் பிரக்ஞை
என்பது
சுயத்தின் இயக்கம்
சேமித்து வைத்திருக்கும்
அகமுக, புறமுக
அனுபவங்களின் கிடங்கு
என்பதாலும்,
அனுபவத்தில் நின்றுக்கொண்டு
இயக்கத்தின் தேவையையும்
காரணத்தையும் தேடுவது
காணாத நிகழ்வுக்கு
சாட்சி சொல்வது
போலாகிறது.
சுயத்தை
நம் விருப்பத்துக்கேற்ப
எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
கடவுளோடு.
உலகோடு.
இயற்கையோடு.
பிரபஞ்சத்தோடு.
சுயமற்ற நிலை —
காடு, வீடு, கோயில்
ஆசை, அமைதி, விருப்பம்
இருத்தல், இறப்பு, இறை
இவை எதையும் தேடாது.
தேடுவது சுயத்தின் குணம்.
சுயம் இருப்பதில்
உன்னதம் மழுங்கிவிடாது.
சுயம் அகன்றதாக
எண்ணுவது தான்
பிரமையின் வெளிப்பாடு.
‘இருத்தல்’ என்னும் சொல்,
‘எங்கு இருத்தல்?’,
‘எதில் இருத்தல்?’
போன்ற கேள்விகளை
உண்டு செய்யும்.
சுயத்தில் இருந்து மேற்கொள்ளும்
தொழிலோடு,
பிரக்ஞைகளின்
எதிரொலிகளோடும்
உயிர் இயக்கத்தோடு இருத்தல்
என்று வைத்துக் கொள்ளலாம்.
சுயம் உயிரோடு
ஒட்டியிருந்தாலும்,
உயிர்
தனக்குத் தானே
தோன்றாமல்,
விதையிலிருந்து
உருவாகிறது.
இங்கு
விதையிலிருந்து
உருவாகுவதென்பதை,
பெற்றோரிடமிருந்து
என்று
புரிந்து கொள்வோம்.
சுயம்
நமக்குச் சுயமாவதற்கு முன்பே
விதைத்தவனுள் சுயமாக
இருந்திருப்பது புரிகிறது.
அப்படியானால்,
நாம் நம்
பிரக்ஞையால்
கண்டுகொண்ட சுயம்
பிரக்ஞையின் முன் நிலையில்
கண்டுகொள்ளப்படாத
மூலமாய் இருந்திருக்கிறது.
மூலம்
பொருளில்லாமல்
அமைய வாய்ப்பில்லை.
அந்தப் பொருள்
எத்தன்மையதாகவும்
இருக்கலாம்.
ஆனால்,
முன் சொன்னது போல்
சுயம்தான்
உயிரின் இயக்கத்தைக் கொண்டு
தொழிலை உருவாக்குகிறது
என்பதை
அடிப்படையாக வைத்து
ஊகித்தால்,
இந்த மூலத்தின் இயக்கம்
சுயமில்லாமல் சாத்தியமில்லை.
சுயமில்லாத மூலத்துக்கு
இயக்கம் அநாவசியம்.
அப்படி சுயம் இருந்தால்,
அது மூலம் இல்லை.
அதன் விதை தேட வேண்டும்.
இந்தத் தேடல் ஒரு தொடர்ச்சி.
இந்தத் தேடலும்
நம் சுயத்தால் அமைவது.
சுயம்
நாமே அணிந்து கொண்டதன்று,
அதைக் கழற்ற முடியாது.
அது ஆரம்பித்ததன்று,
அதை முடிக்க முடியாது.
அது ஆக்கிக்கொண்டதன்று,
அதை அழிக்க முடியாது.
தன் வாலைத்
தானே விழுங்கும்
பாம்பு போல்,
தன்னைத் தானே
விழுங்கிக் கொள்ளும்,
சுயத்தை அழிக்கும்
தேடலும்.
இதுபோன்று, மேலும் பல படைப்புகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற, இந்த வலைப்பக்கத்தில் உங்கள் மெயில் ஐடியைத் தவறாமல் பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
பொருள் பொதிந்த படைப்பு! சுயத்தைப் பற்றி அனைவருமே ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்! சுய’நலம்’ பேணாதவனால், பிறர் நலத்தின் முக்கியத்துவத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? அருமை!