மனிதர்கள் மிருகங்களைத் தமக்கு அடிமைப் படுத்துவதற்கும், பழக்கப் படுத்துவதற்கும், மிருகங்களின் மொத்த சிந்தனைகள், போக்குகள், செயல்பாடுகள், குணங்கள் அனைத்தையும் அறிந்து வைத்துக் கொள்ளும் தேவை இருந்தது.
காலத்தின் துணையோடு அதிகாரத்தின் அடுக்குகளில் படிப்படியாய் ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டான். சிம்ம ஆசனம் என்ற சொல்லே மனிதன் தட்டிப் பறித்தது அதிகாரத்தின் மேலடுக்கில் சிங்கம் பெற்றிருந்த இடத்தை தான் என்று கூறும்.
அதிகாரத்தின் மேலடுக்குக்கு மனிதனும் வந்துவிட்டான். இப்போது, மிருகங்களைக் காட்டிலும் தன்னுடைய வளத்தில் அதிகம் பங்குக் கேட்பவன் இன்னொரு மனிதனாகவே தான் இருக்கிறான். மனிதர்களுக்குள் மீண்டும் ஒரு அதிகார அடுக்கின் கட்டமைப்பு வந்து புகுந்துக் கொள்வதற்கு, இந்த ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது. அப்படியானால், இப்போது தான் மனிதனுக்குள் பாகுபாடா இதுவரை இருந்ததில்லையா என்று கேட்டால், வேளாண் சமுதாயத்தின் தொடக்கத்துக்கு முன் இருந்த வேட்டையாடி மனிதனுக்கும் இதே பிரச்சினை இருந்தது. ஆனாலும், முக்கிய எதிரிகளாக, முக்கிய போட்டியாளர்களாக பிற உயிரினங்களே பெரும்பாலும் இருந்திருக்கிறது.
இப்போது உபயோகத்தில் இருக்கும் மிகவும் வசதிபடைத்த இணையத் தொழில்நுட்பம், “வலை” என்றும் பெயர் வைக்கப்பட்டிருப்பதில் ஒரு காரணம் இருக்கலாம் போலிருக்கிறது. சிலந்திகள் இங்கே யாராக இருக்கிறார்கள், அந்த வலையில் சிக்குபவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பது தான் இந்தக் கட்டுரையின் மொத்தக் கருவுமே.
உதாரணமாக, கன்ஸ்யூமர் சைக்காலஜி என்று வழங்கப்படும் “நுகர்வோர் உளவியல்” மனித உளவியலை தனித்தனியே தொடர்ந்து ஒரு பெரிய உளவியல் அட்டவணையை உருவாக்கி வைத்துக்கொள்ளும் அத்தனை வல்லமையும் படைத்தது. பெரிய அட்டவணை என்றால் உலகின் மூளைமுடுக்கில் உள்ள அனைத்து மனிதர்களின் விருப்பு-வெறுப்பு, கோபதாபம், ஆசை-நிராசை, சொந்தபந்தம், ஊர்-பேர், கடந்துவந்த பாதை முதல் அனைத்துமே விளக்கமாய் உரிய இடத்தில் சேகரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
வெறும் நுகர்வோர் உளவியலில் ஆரம்பிப்பது எப்படி ஒட்டுமொத்த தனிமனிதனின் உளவியலையும் கவ்விக் கொள்கிறது என்பதைச் சொல்வதற்கு முன் மிக சமீபத்தில் என் பேராசிரியர் ஒருவர் தன் முகநூலில் பதிவிட்டிருந்த நிகழ்வை பகிர்ந்துவிடுகிறேன்.
என் பேராசிரியர் சில காப்பி பொருட்களை ஒரு இணையவழி காப்பி கடையிலிருந்து வாங்கினாராம். வாங்கிய நாள் முதல் அவருடைய அத்தனை சமூகத் தளங்களிலும் காப்பி விளம்பரங்கள் அவரைத் துரத்தியிருக்கின்றன. அதில் இருக்கும் காரணம் அவருக்குப் புரிந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் மனைவியின் சமூகத் தளங்களிலும் ஏன் விளம்பரங்கள் வர வேண்டும், இத்தனைக்கும் தான் ‘மணமுடிந்தவர்’ என்றும் தன்னைப் பற்றிய விவரத்தில் கொடுக்கவில்லை. அவ்வளவாக தன் மனைவியை அவர் தன் பதிவுகளில் ‘டேக்'(சுட்டிக் குறித்தல்) செய்தது கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதில் எனக்குத் துளி ஆச்சரியமும் இல்லை. நம்முடைய விவரப் பட்டியல் எல்லாம் மூன்றாமவருக்கு காட்ட தான் எழுதுகிறோமே தவிர, அதனை அடிப்படையாகக் கொண்டு நமக்கு விளம்பரங்கள் வருவது இல்லை. அந்த விவரங்கள் மட்டுமே நம்மிடம் இருந்து கறக்கப்படுவதும் இல்லை. நம்முடைய இ-மெயில், அலைபேசி எண் மட்டுமே சகல சௌகரியங்களுக்கும் அவர்களுக்குப் போதுமானது. அதற்கு மேல் நாம் தரும் விவரங்கள் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் இணைப்புகள்.
இதுவரை நுகர்வுக்காக மட்டும் பின் துரத்தும் விளம்பரங்கள், நம்முடைய பொருளாதாரம், தொழில், விநியோகம், பணப்பரிமாற்றம் வரை இணைய வழியில் மாற்றுவதன் மூலம் நம்முடைய மொத்த வாய்ப்புகளின் தளத்தை புரட்டி, நம்முடைய விவரங்களையும் அடையாளங்களையும் உலகின் மூலை மனிதனுக்கும் கேட்கும்படி கூவச் செய்வதே நாம் தொழிலிலோ மற்ற துறையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதனாகவோ நிலைப்பதற்கான அடிப்படை வாழ்வமைப்பாய் மாற்றியிருக்கிறது.
இணையத் தொழில்நுட்பத்தை நிச்சயம் ஒரு பேய் கதை போல் நான் கூறப்போவதில்லை. இணையத் தொழில்நுட்பம் விரட்டியடித்த சோம்பேறி, ஏமாற்றுக் கடைக்காரர்கள், ஏய்த்துப் பிழைக்கும் சேவை நிறுவனங்கள் ஏராளம். நிச்சயம் ஒரு சுறுசுறுப்பான, பரந்த பொருளாதார வாய்ப்புக்களைத் தான் இந்தத் தொழில்நுட்பம் ஈட்டித் தந்திருக்கிறது.
பிரச்சனை தொடங்குவதே தான்தோன்றிப் போல ஆல்காரிதங்களைச் சித்தரிக்கும் நிறுவனங்களால் தான். இந்த ‘ஆல்காரிதங்கள்’ கணினிக்கு மனிதத் தேவைகளைப் புரிய வைக்கும் அடிப்படைக் கணிதங்களே.
தள்ளிவிட்டது நான் தான், தவிரவிட்டது நான் தான், மோதியது நான் தான் என்பதை அழகாய் மறைத்து கீழே விழுந்துவிட்டது, மரத்தில் மோதிவிட்டது என்று தானாய் பொருள்களே இயங்கி கொண்டது போல் தப்பித்துக் கொள்ளும் மனிதப் புத்தி தான், ஆல்காரிதங்களைக் காரணமாக்கி, அதன் பின் ஒளிந்துக் கொள்ளும் முதலைகளைக்கும் துணை!
இந்த ஆல்காரிதங்கள் தனி ஒருவரால் எழுதிமுடித்துவிட இயல்பவை அல்ல. பெரிய நிறுவனங்களின் ஆல்காரிதங்களுக்குப் பின் ஆயிரமாயிரம் மூளைகள் உள்ளன. இவை ஒரு அணு ஆயுதத் தயாரிப்பு போல் கூட்டு முயற்சியில் உருவானவை. அதே அளவுக்கு ஆபத்தானதாகவும் மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது. இப்படி கோடானு கோடி மக்களின் மொத்த உளவியலையும் சேர்ந்தே புரிந்துக் கொண்டு வேலை செய்யும் அதித்திறன் இந்த ஆல்காரிதங்களுக்கு இல்லை. இதனால் தான் செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் வளர்த்தெடுக்கப் பெற்று வருகிறது. ஒரு செயற்கை தொழில்நுட்பத்தின் வருகை, அதிகார மேலடுக்கில் அமர்ந்திருக்கும் மனிதர்களுக்குப் பிறரின் உளவியலைப் புரிந்துக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கும். நான் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியிருந்தேன் எப்படி மிருகங்களை வென்று அரியாசனம் அமர நாம் அவற்றைப் பின் தொடர்ந்து, செயல்பாடுகள், குணங்கள், போக்கைப் புரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று. நாம் பொறுப்பற்று இருந்தால், நாமும் அதிகாரத்தின் கீழ் விலங்குகள் போல் அடிப் பணியும் சாத்தியம் உண்டு.
ஆனால், இப்போதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வைத்து நான் அச்சுறுத்தவில்லை. நம்முடைய வசதிகளின் பால் உண்டான ஈர்ப்பு நம் அறிவை மிஞ்சி இருக்க வாய்ப்பு தருவது தான் அபாயத்துக்கு அடிக்கோலுகிறது. இங்கே அறிவு தான் ஆயுதம். அந்த அறிவு நுகர்வோருக்கும்- பயனாளிகளுக்கும், விற்பனையாளர்களுக்கும்- சேவையாளர்களுக்கும் இருக்கும் அறிவுக்குச் சம அளவில் இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, இப்போது இருக்கும் ஆன்ட்டி-மால்வேர்கள் போல, வைட்- ஹேட் ஹேக்கர்கள் போல செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தையும் சமாளிக்கும் தொழில்நுட்பம் வேண்டும். அந்தத் தொழில்நுட்பம், நம்முடைய அத்தனைத் தகவல்களையும் பூட்டிச் சாவியை நம்மிடமே தந்துவிட வேண்டும். அதாவது, வீட்டில் திருட்டுக்குப் பயந்து வங்கிகளில் வைத்தப் பொருளை, அங்கேயும் பூட்டி வைப்பது போல. இதனால், செயற்கை தொழில்நுட்பம் நம்முடைய தகவல்களைக் கண்ட வழியில் பயன்படுத்த முடியாமல், அநேக சோதனைகளையும் நுகர்வோர் பக்கம் செயற்கை அறிவு முடித்துக் கொண்ட பின், வேண்டிய தகவலை மட்டுமே அது பெற வேண்டும். இதுவும் சாத்தியம் தான். ஆனால், இது நுகர்வோர் பக்கமும் யோசிக்கும் மூளையால் மட்டுமே உண்டாக்கச் சாத்தியம். இந்தக் காப்புத் தொழில்நுட்பம் வெற்றி அடையாமல், செயற்கை தொழில்நுட்பம் வந்து சந்தைக்குள் இறங்க வாய்ப்பு வழங்கப்படக் கூடாது.
பேஸ்புக் அல்காரிதங்களில் ஒன்று – பேஸ்புக்கிலேயே பெரும்பான்மை நேரத்தைச் செலவழிக்க வைக்கும் அரட்டைக்கு ஏதுவான பதிவுகள் மட்டுமே பலரைச் சென்றடையும் என்பது. அந்தப் பதிவில் ஏதேனும் வளர்ச்சி சார்ந்த விஷயம் அமைந்துவிட்டால், குறிப்பாக பொருளாதார வாய்ப்புக்கு இடமிருந்தால் கட்டணமின்றி அந்தப் பதிவு யாரையுமே சென்றடையாது. வீண் அரட்டை, விவாதம் போன்ற பதிவுகள் சமுதாயத்துக்குக் கேடு என்றாலும் பேஸ்புக்கில் கழிக்கப்படும் நேரத்தைக் கருதி பலரிடையே சென்றடையும். பேஸ்புக்குக்கு நாம் வீண் அரட்டையில் மங்குவது பிடித்திருக்கிறது. அது அத்தகைய பதிவுகளை அதிகம் பகிர்கிறது. நாம் முட்டாள் சண்டைகள், வெட்டிப் பேச்சுகள், வீண் அரட்டைகள் செய்வதை அதிகம் உற்சாகப் படுத்துகிறது.
அறிவு தான் ஆயுதம். ஆல்காரிதங்கள் நம்மை இயக்கிட வாய்ப்புத் தராமல் ஆன்டி பையோட்டிக்-களில் சிக்காத வைரஸ்கள் போல் தொடர்ந்து அறிவால் உருமாறி இருப்போம்.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
Awesome