அழுகை நதிக்கரையில்
அமர்ந்து,
சாவகாசமாய் கல்வீசி
நீர்வளையத்தின் அழகை
இரசிக்கும்
உயிர்களும் இங்குண்டு!
கரையிலே கழற்றிவிட்டுப்
பறவையோடே திரியவிடும்
மீன்கொத்தி மனங்களும்
ஏராளம்…
வட்ட வட்டமாய்ச் சுற்றிவரும்
மீன்குஞ்சுகளின் விளையாட்டாய்
ஆகிப்போனப்
பழைய நினைவுகளின்
வளையங்கள்…
அருகே அமர்ந்திருக்கும்
அருமை நதி,
தோழமையாய் அழைக்கும்
ஆரத்தழுவ!
நிமிடமுள் குத்தும்
நேரங்காலம் இடைஞ்சல் செய்யும்
நதிக்கரையிலே கரைந்து
மண்ணோடு மக்கத் தோன்றும்
சூழும் இருட்டைத் தள்ளி
நாளையோடு வைக்கத் தோன்றும்
மாலை நேரம் மட்டும்
மனம் வேண்டும்!
கூடவே மூச்சு விடும்
மௌனத்தை அனுசரிக்கும்
கொஞ்சமாய்க் கலங்க விடும்
கண்ணீரை ஒழுக விடாது…
முத்தங்கள் பல தரும்
முனுமுனுப்பாய்க் கதைச் சொல்லும்
துவண்ட மனம் தேற்றும்.
இளமனதை உள்ளங்கையில்
வருடிக் கொடுக்கச்
சொல்லித் தரும்.
கேட்காதப் பாடல்களின்
இசைக் கேட்கும்
புதுத்தெம்புப் பிறக்கும்
அதிகம் வலித் தாங்கும்
பழிகளைப் புறந்தள்ளும்
ஆயுள்வரை அன்புச் செய்யும்.
தேடாதப் பொருள் கிட்டும்
தேடலுக்கு விடிவுக் கிட்டும்…
ஓடாத நதிக்கரையில்
மீன்கிடைத்த நிறைவோடு
மீன்கொத்தியோடே
வண்ணங்களாய் மனம் பறக்கும்!
கவிதை: ருபீன் பிரவீண்
நாள்: 23-07-2020
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!