பணி நேரம் முடிந்து இரயில் ஏறுவதற்கிடையில்…


படிக்கட்டுகள் அங்கே கொஞ்சம் உயரமாக இருக்கும். கீழிருந்து மேல் ஏறும்போது கொஞ்சம் காலை எட்டிவைத்தும், மேலிருந்து கீழே இறங்கும்போது சற்று ஆழம் அதிகமாகக் குதித்த மாதிரியும் இறங்கி வர வேண்டி இருக்கும். இயல்பாகவே கொஞ்சம் சிரமத்தோடு ஏறி இறங்கும் படிக்கட்டுகளில், அன்று வேலை முடித்து அயர்ச்சியில் இருந்த நான் எலிவேட்டர் பயன்படுத்தாமல் எதற்காகப் படிக்கட்டுகளில் இறங்கி வந்தேன் என்பது எனக்குச் சரியாக நினைவில் இல்லை.

Photo by Timothy Wolff on Unsplash

என்னுடைய அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. அங்கிருந்து மாலைவேளை அலுவல் முடிந்தப் பின் இறங்கி வந்தேன். இறங்கி வந்ததும் அந்தப் பெரிய “பிளாஸா” வகை கம்பெனிக் கட்டிடத்தின் தாழ்வாரத்தில் மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் சற்றே இடைவெளி விட்டு நின்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அந்தத் தாழ்வாரத்தைத் தாண்டி, அலுவல் முடிந்துச் செல்லும் அனைவரின் முகத்தையும் ஒருவர் முகம் விடாமல், “இவரா? இவர். இல்லை இவர். இவர் நிச்சயமாக…” என்று மனக்கண்ணால் கூர்ந்து கவனித்துச் சரியான நபர்களைப் பிரித்தெடுத்தனர். அந்த வடிக்கட்டலில் தேடுபவர்களிடம், ‘சர். ஒன் மினிட். கேன் ஐ டாக் டு யு ஃபார் எ ஃபைவ் மினிட்ஸ் ப்ளீஸ்?’ என்று வலிந்துத் தாமாகவே ஒரு சின்ன அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து விளக்கிக் கொண்டிருந்தனர். இது ஒரு புறம். சற்றே தள்ளி, கம்பெனி வளாகத்தின் முக்கிய நுழைவில் செக்யூரிட்டி உடன் ஒருவர் நின்றுக்கொண்டு, கையில் ஒரு சின்ன இரும்புத்தகரப் பெட்டியைக் குலுக்கிய படி, ‘சர். பிளீஸ் டொனேட் அஸ் சர். ஈவன் எ சிங்கிள் ருப்பீ கவுண்ட்ஸ் சர்’ என்று எவர் முகத்தையும் தேர்வுச் செய்ய நேரமின்றி ஏதோ ஒருவரின் கருணையில் நிதிக் கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்பை மட்டும் சுமந்துக் கொண்டுத் தகரப்பெட்டியைக் குலுக்கிக் காட்டி நிதிக் கேட்டார்.

எனக்கு இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடிப் பார்ப்பது வழக்கம். நான் என்னால் இயன்ற நிதியை அவ்வப்போது தந்து நகரக் கூடியவன் தான். இருந்தும், கம்பெனி வாசலில் தினமும் இப்படி வந்து நிற்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கும் அளவுக்குப் பெரிய சம்பளக் காரன் இல்லை.

அதை மனதில் தெளிவாக வைத்துக்கொண்ட எனக்கு அந்த மூவர் (ஒரு ஆண் – பெரும்பாலும் கல்லூரி மாணவனாக இருக்கலாம்; இரண்டுப் பெண்கள் – அவரில் ஒருவர் நிச்சயம் தொண்டு நிறுவனத்தின் நேரடிப் பொறுப்பாளர். இன்னொருப் பெண்ணும் கல்லூரி மாணவியாகத் தான் இருக்கக் கூடும்.) மனக்கண்ணில் “இவரா? இவர். இல்லை இவர். இவர் நிச்சயமாக…” என்று ஊகித்துத் தேர்வுச் செய்யும் நபரில் “இவர் நிச்சயம் இல்லை” என்று அவர்கள் முடிவுசெய்வதற்கு ஏற்ற நடையோடு, “எனக்கே ஆயிரம் வேல. இதுல இவங்க வேற” என்ற நினைப்போடுக் கொடுக்க மனமில்லாத ஆளுடையத் தோரணையை அணிந்துக் கொண்டேன். (இத்தனை நாட்களாய் பல முறையும் முடிந்தும் முடியாமலும் உதவிநிதிகளைக் கொடுத்தப் பின்னர் இந்தத் தோரணையை அணியக் கற்றுக் கொண்டேன்).

அந்தக் “கொடுக்க மனமில்லாத ஆள் தோரணையோடே” நான் முக்கிய நுழைவாயிலில் சின்னத் தகரப்பெட்டியைக் குலுக்கி, ‘சர். பிளீஸ் டொனேட் அஸ் சர். ஈவன் எ சிங்கிள் ருப்பீ கவுண்ட்ஸ் சர்’ என்றுக் கூறிக் கூறி வலிக்கும் தொண்டையோடுத் தேய்த்து வெளிவந்த அந்தக் குரலையும் கல்மனதோடே நான் கடந்துவந்தேன்.

முதலில் அந்த மூவரைக் கடந்து வருவது ஒரு தொந்தரவிலிருந்துத் தப்பித்த விடுதலையைக் கொடுத்தது. ஒரு பக்கம் அவர்கள் அந்தச் சின்ன அட்டையைக் காட்டி வசூலிக்கும் நிதி, மனித உரிமைக் காப்புத் தொண்டு நிறுவனத்துக்கான உதவி நிதி என்பது தெரிந்தும் கூடத் தாண்டி வந்ததில் சிறு வருத்தம் இருந்தாலும், அந்த மூவர் எவர் நிதித் தருவார்? தர மாட்டார் எனத் தெரிந்து நயமாய் அண்டி முதலில் அழகாய் ‘ஹௌ மச் டு யு ஸ்பென்ட் ஃபார் ஸ்நாக்ஸ் இன் எ டே?’ என்றுக் கேட்க ஆரம்பித்து, ஒரு மாத ஸ்நாக்ஸ் செலவுக்கு கணக்குப் போட்டு பில் தருவது போல, ‘மினிமம் மனி டு டொனேட் இஸ் ருபீஸ் ஃபைவ் ஹன்ட்ரெட் சர். வி டோன்ட் கலெக்ட் இட் அஸ் கேஷ். ஒன்லி த்ரூ ஆன்லைன் பேமெண்ட்’ என்று வம்படியாய் பணம் இருந்தாலும் இல்லையென்றாலும் வழிப்பறி போல் பணம் பெறுவார்கள். அவர்களிடமிருந்து ‘கொடுக்க மனமில்லாதத் தோரணையோடுத்’ தப்பிவந்தச் சாமர்த்தியம் மனதுக்கு ஒரு இலக்கத்தைத் தரவே செய்தது.

ஆனால், கம்பெனி முக்கிய நுழைவாயில் பக்கத்தில் இருந்த வாலிபன் குலுக்கிய உண்டியலுக்குச் சிறு நிதியேனும் தராமல் நகர்ந்து வந்தது எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. எனக்குத் தெரியும் அந்த வாலிபனைப் போன்றோர் மருத்துவ உதவிக்குப் பணம், ஏழைக் குழந்தையின் அவசர அறுவை சிகிச்சைக்குப் பணம், நண்பனின் பெற்றோர் விபத்தில் அடிப்பட்டதால் அவசரத்துக்குத் தேவைப்படும் உதவி பணம் போன்ற நிறுவனம் சாராதோரின் அவசர அவசியத் தேவைக்கு நிதி வேண்டுவோர் என்று.

நான் ஒரு பத்து ரூபாயேனும் என் சார்பாக அந்தச் சிறு தகர உண்டியலில் போட்டிருக்கலாம். ஏனோ போடாமலே நகர்ந்துவிட்டேன். ஒருவேளை அந்த மூவர் நின்ற இடத்திலிருந்து இந்த வாலிபன் நன்றாகத் தள்ளி நின்றுக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். தொண்டு நிறுவனத்துக்கு நிதிச் சேர்க்கும் மூவரைச் சாமர்த்தியமாகக் கடந்துவந்த நான், உடனடியாக “கல்மனத் தோரணையைக்” களைத்து அந்த மூவரின் கண்களில் பணம் வேண்ட நிச்சயமாக சரியான ஆள் இவர் என்று என்னை நானே காட்டிக் கொடுத்துக் கொள்ள பயந்து நகர்ந்து வந்துவிட்டேன்.

கம்பெனி வளாகத்தைவிட்டு வெளிவந்ததும் நீண்ட “தார் சாலை”. கம்பெனி இருக்கும் இடம் மிகப் பரபரப்பான ‘கிண்டித் தொழிற்பேட்டை பகுதி’. தார் சாலை நெடுக உணவுக் கடைகள், பழச்சாறுக் கடைகள், சாட் சிற்றுண்டித் தள்ளுவண்டிகள் சிறு வியாபாரிகளால் போடப்பட்டிருக்கும். நான் வெளிவந்த நேரம் இருள்படர்ந்த நேரம். அப்போது தான் சின்ன மழைப் பெய்து நின்றதால் வானமும் முன் நேரமாய் மூடிக்கொண்டது. பின் மாலை நேரங்களில் எந்த உணவுக் கடைகளும், பழச்சாறுக் கடைகளும் இருக்காது. அங்கு இருக்கும் அத்தனைக் கடைகளும் காலையில் கடைப் போட்டு அன்றன்றே வியாபாரப் பொருளையும் கட்டி எடுத்துச் செல்லும் சாலையோரக் கடைகள். அந்த வியாபாரிகள் என்னைப் போன்ற எத்தனையோ வீட்டைவிட்டு வெகுதூரம் தள்ளி வந்து விடுதியிலும், தனியறைகளிலும் தாமே சமைத்தும், சமைக்கச் சிரமப்பட்டும், சாப்பிட்டும், சாப்பிடாமலும் பரபரப்பாய் வேலைக்குப் புழுதிப் படர்ந்தப் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் பகலின் புழுதி நிறைந்த நகரச் சாலைகளைக் கடந்து வரும் “பேச்சுலர்களை” மட்டுமே நம்பி இயங்கும் கடைகள்.

அந்தப் பின் மாலைப் பொழுதின் இருட்டில் அங்குமிங்குமாய் மீதமிருக்கும் இரவுநேரப் பணியாளர்களுக்காய் எரியும் கம்பெனிகளின் ஒளிவிளக்குகளுக்கிடையில் பளிச்சென சாலையோரத் தள்ளுவண்டியிலிருந்து வருகிற ஒளி, தார் சாலையின் நிறம் கருப்புத் தான் என மீண்டும் அந்த இருட்டில் ஒளிவீசிக் காட்டிக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்தது. தள்ளுவண்டியின் வெளிச்சம் படும் இடமாய் ஒரு கருப்புச் சிலேட்டில் மசால் பூரி – ரூ.20, பானி பூரி – ரூ.20 முதல், காளான் – ரூ.25 என்று வெள்ளைச் சுண்ணாம்பில் எழுதப்பட்டிருந்தது.

அந்த நீண்ட நாளின் தொய்வைப் போக்க அந்தத் தள்ளுவண்டியின் ஒளி, சூழல், மழை முடிந்து வீசும் மெல்லிய ஈரக்காற்று என எல்லாம் கூடிச் சிற்றுண்டி சாப்பிட அழைத்தது. கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்த இடமும் வியாபாரத்துக்கு ஏதுவாய் அமைந்திருக்க, நீண்ட நேரமாக… “அண்ணா. அண்ணா..ணா…” என்று இடைவெளி விட்டு விட்டுத் தயக்கத்துடனும் ஏக்கத்துடனும் கடைக்காரரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான் ஏறத்தாழ ஒரு எட்டு வயதுடைய சிறுவன். அந்தச் சிறுவனின் ஏக்கக் கூச்சல் கடைக்காரருக்கு வியாபாரச் சங்கடத்தை உண்டுச்செய்தது. அதையும் மீறி அந்தச் சிறுவனைக் கண்டுக்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து வந்தார்.

எப்போதும் கடைக்காரரின் மனைவியும் அவருடனே இருந்து, குடத்திலிருந்து குடிநீர் கேனில் தண்ணீர் ஊற்றி வைப்பது, சிற்றுண்டிப் பரிமாறும் தட்டுகள் சாப்பிட்டு முடித்தவர் தர தரத் தண்ணீர் தொட்டியில் போட்டு கழுவி எடுப்பதென இதர வேலைகள் செய்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் அவரின் ஒரே மகளும் (சிறிய பள்ளிக்கூடச் சிறுமி பள்ளிச் சீருடையுடனே) அங்கு ஒரு சின்ன இருக்கையில் அமர்ந்திருப்பாள். அவள் அன்று அங்கு இல்லை. அந்த மூன்று பேரும் சேர்ந்தது தான் அவர் குடும்பம்.

ரொம்ப நேரமாக நின்றிருந்தச் சிறுவன் “கிடைக்காது போலிருக்கிறதே” என்ற ஏமாற்றத்தோடு நகர்ந்து விடாமல் அவன் ஏக்கம் காலத்தின் மீது நம்பிக்கை வைத்துக் காத்திருந்தது. இதை அந்தக் கூட்டத்தின் கடைசி ஆளாய்ப் போய் சேர்ந்த நான் உன்னித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடைக்காரர் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கவனிக்க இன்னும் ஓரிரு நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில், பெரிய ‘லொட லொடா’ சட்டைப் போட்ட அந்தச் சிறுவனை அருகே வரச் சொல்லி, ‘ உனக்கு என்ன வேணும்’ என்று கேட்டேன்.

‘எனக்கு அது வேணும்‘ என்று மசால் பூரியைச் சுட்டிக் காண்பித்தான். அதைக் கேட்டுக் கொண்ட நான் ‘சரி’ என்று கூறிக் கடைக்காரருக்கு அருகே நகர்ந்துப் போய் ‘இரண்டு மசால் பூரி கொடுத்திருங்க’ என்று எனக்கான ஆர்டரைச் சொல்லி வந்தேன். அந்தச் சிறுவன் என்னருகே நிற்பதைக் கண்டுக்கொண்டக் கடைக்காரர் இரண்டு மசால் பூரிக்கானக் காரணத்தைக் புரிந்துக் கொண்டு, ‘இரண்டு நிமிஷம்’ என்று கூறிவிட்டு மீண்டும் வாடிக்கையாளர்களைக் கவனிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து வந்தச் சிறுவன் தன் கையிலேயே இறுக்கிப்பிடித்திருந்த பத்து ரூபாய் பணத்தை என்னை நோக்கி நீட்டினான். அப்படி நீட்டியதின் அர்த்தம்: நான் சும்மா கேட்கவில்லை. ஆனால், பண்டத்தின் விலை இருபது ரூபாய். என்னிடம் உரிய பணம் இருந்திருந்தால் முழுப் பணம் கொடுத்தே வாங்கியிருப்பேன் என்பது.

அந்தப் பணத்தைக் கையில் வாங்கிய நான் சிறிய புன்னகை அன்போடுப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் சட்டைப்பையிலே வைத்துவிட்டேன். ‘எனக்குப் பணம் வேணாம். உன்கிட்டயே இருக்கட்டும்’, வாங்க மறுத்தச் சிறுவன் மனமில்லாமலேயே சின்ன ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டான்.

இருவரும் சாப்பிட்டோம். அந்தச் சிறுவன் என்னைப் பார்த்துக்கொண்டே பசியோடும், ருசிக்குறையாமல் சூட்டோடே வேகவேகமாய் சாப்பிட்டான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் நான் இருவருக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்தேன். அவர் சரியாக இருக்கிறது என்று தலையை அசைத்துக் காட்டினார். நாங்கள் இருவரும் தள்ளுவண்டியில் இருந்து தள்ளிச் சாலைக்கு வந்தோம்‌. அந்தச் சிறுவன் ஏதோ பேச நினைத்தான். ஆனால், அதைச் சரியாக வார்த்தையால் விளக்கமுடியாததைப் புரிந்துக் கொண்டு சில நொடிகள் ஒன்றும் பேசாமல் நின்றான். ‘நீ எங்க இருந்து வர்ற, வீடு எங்க, அம்மா அப்பா யார், அண்ணன் தங்கச்சி இருக்கா’ என்ற எல்லாக் கேள்விகளுக்கும் ‘ கிட்ட தான். அப்பா கொளுத்துவேல. அம்மா வீட்ல. அண்ணா இருக்கான். வெளாட போய்டான்’ என்று வரிசை மாறித் தனக்குச் சொல்ல வந்தது போல் சொல்லிவிட்டு, ‘வர்றன்ன்…’ என்று சொல்லி அந்த இருட்டில் காலணி இல்லாதக் கால்களோடு தார் சாலையில் வேகமாய் ஓடினான். கொஞ்சம் தூரம் ஓடியவன் ‘அப்பா.. அப்பா…’ என்று கத்திக்கொண்டே ஒரு கட்டிடத்தின் பக்கம் வளைந்தான்.

அங்கு அந்தச் சிறுவன் கண் மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அந்தப் பையன் மறைந்ததும் அவன் ஓடிய எதிர் பக்கம் திரும்பி, நீண்ட சாலையில் இரயில்வே நிலையம் நோக்கி நடந்தேன். என்னை மறந்து பாதித் தூரம் நடந்து சென்றேன். என் கால்கள் தரையில் படும் உணர்வு அந்த நேரத்தில் இல்லை. பேன்ட் பாக்கெட்டில் இருந்த எனது போன், அழைப்பு வருவதற்கானச் சத்தம் போட்டு என்னுடைய கால்கள் பூமியில் இருப்பதை உணர வைத்தது. என் அம்மா அழைத்தார்… ‘கண்ணு எங்க இருக்க? ரூம்க்கு வந்துட்டியா?’ என்று பேச ஆரம்பித்தார்… பதில் கொடுத்துவந்த நான், இப்படியாக ஒரு சிறுவனும், நானும், கடைக்காரரும் மூன்றுப் புள்ளிகளாய் நின்றிருந்த நிகழ்வைப் பகிர்ந்தேன். அம்மா மிகவும் ஆனந்தப் பட்டார்.

இதைக் கேட்டு முடித்து அம்மா சொன்னார்: ‘பையன் பாவம்ல. அப்பப்போ நானும் நெனக்கிறது தான், ஆசிரமம் அப்படி ஏதாச்சும் உதவி செய்யலாம்னு. பண்ணலாம்… அந்தக் கடைக்காரர் மட்டும் என்னப் பண்ணுவாரு? பாவம். ஒரு பையனாச்சேனு கொடுத்தா எத்தனவாட்டி எத்தன பேருக்குத் தர முடியும் சொல்லு!’

அம்மா பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். நான் பேசிக்கொண்டே இரயில்வே நிலையத்துக்குள் நுழைந்துவிட்டேன், அந்த இடைப்பட்ட நேரத்தில். இரயில் நடைமேடை அடைய படிக்கட்டுகள் ஏறி வந்தேன். இந்த முறை படிக்கட்டுகள் ஏறும்போது களைப்பும் அயர்ச்சியும் என்னைவிட்டு அகன்றிருந்தது. இரயிலுக்குக் காத்திருந்தேன்‌. சில இரயில்கள் இரண்டுப் பக்கமும் வந்துச் சென்றது‌. அங்கும் அந்த இரயில்களில் வரும் பயணிகளின் ஈதலை நம்பி இருக்கும் எத்தனையோ மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். சில திருநங்கைகள், ஆதரவற்ற முதியோர், பார்வை, நடை, உடை இழந்த மாற்றுத் திறனாளிகள்… அந்த நேரத்தில் என் கண்களில் அவர்கள் எவருமே படவில்லை. ஏதோ சில கட்டிடங்களின் அரவணைப்பை எதிர்பார்த்தும் சில மனிதர்களின் அன்பை நினைத்தும் இரவைக் கழிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“ச்சே! நான் அந்தக் கம்பெனி வளாகத்தில் இருந்த வாலிபருக்கு ஒரு பத்து ரூபாயேனும் கொடுத்திருக்க வேண்டும்” என்று மனது நச்சரித்துச் சொன்னது. பின், என்னைப் போலவே கொடுக்க மனமில்லாத் தோரணையை அணிந்திருந்தக் கடைக்காரர் நினைவுக்கு வந்தார். என் நிலைமை தான் அவர் நிலைமையும். சிறுவனின் ஏக்கம் ஒரு மனமில்லாதத் தோரணை உடுத்தியவனின் தோரணை கழன்றவிடத்தில் தீர்ந்தது போல, நான் செய்யாமல் விட்டு வந்த ஈதலுக்கெல்லாம் கொடுக்க ஒருவர் இருப்பார் என்று நினைத்து அமைதி அடைந்தேன்… எனக்கான இரயில் நான் அமைதிக் கொண்டதும் வந்தது. ஏறிக்கொண்டேன்!

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *