முதல் பாட்டி!

இந்த வாழ்க்கையில் பலருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் காரணங்கள் நம் வாழ்வில் ஏக போகமாக வழிந்தும் கூட, அதை அங்கீகரிக்கவும் நேரமில்லாமல் தொடரோட்டம் ஓடி, கடைசியில் சாதிக்கப் போவதும் எதைத் தான் என்று எனக்குப் புரியவில்லை…

Uyirkaagitham-Muthal-Paati

உண்மையில் ஒரு மனிதனுக்கு வேண்டியதுதான் என்னே? அது கிடைத்ததும் அதோடு நின்றுவிட வேண்டியதில்லை… ஆனால், அங்கீகரிப்பது அவசியம் தானே? அந்த அங்கீகாரம் செய்யும் நிமிடங்கள் தானே புண்ணிய நிமிடங்கள்.

நான் ஒரு கிராமிய தபால் அலுவலராய் பணியாற்றி வருகிறேன்… பல முகங்களையும் தினம் பார்ப்பதும் பல கதைகளையும் கேட்பதும் வழக்கமாகிவிட்டது.

அவள் முகத்தில் வறுமை வாட்டம் வீசுவதில்லை, அவள் சிரிப்பில் மட்டுமே வறுமை வாட்டம் வீசும்… அந்த 60 வயது முதியவள் பெயர் மோசஸ் மரி. அவள் என்னிடம் டைம் டெபாசிட் செய்ய வந்திருந்தாள்… ஐந்து வருடத்திற்கு செய்ய வந்த டைம் டெபாசிட்… மொத்த பணம் 13000 ரூபாய் தான். இது தான் அவள் முழு வயதிற்கும் சேர்த்த பெரிய பணம். ஐந்து வருடம் அதை எண்ணி மனம் அமர்வாள். அதைச் சேர்த்ததில் அவள் கொள்ளும் மகிழ்ச்சி, அதைப் பத்திரப் படுத்துவதில் அவளின் அதீதப் பொறுப்பு, அதன் முக்கியத்துவத்தை என்னிடம் கூறும் எண்ணற்ற முறைகள் எல்லாமே எனக்குப் பாடம் தான்… என்னுடைய மாதச்சம்பளம் அவளுடைய மொத்தச் சேமிப்பை விட அதிகம். ஆனால், என் மாதப் பணம் எனக்குத் தரும் சந்தோஷத்தை விட அவளுடைய 13000 அவளுக்கு ஆயிரம் பங்கு அதிக சந்தோஷம் தரும்.

ஆனால், அவளொன்றும் இத்தனை வயதிற்கும் மன அழுத்தத்தில் உயிர்விட்டுவிடவில்லை. தூரத்தில் இருக்கும் பிள்ளைகளுடனும் ஆசையாய் கைபேசியில் பேசுகிறாள். அவளுக்கும் வாழ்க்கைப் புன்னகையைத் தர மறுப்பதில்லை. அவளும் சிரிக்கிறாள்… பல் தெரிய சிரிக்கிறாள். அவளுக்கும் நாளை மீதான பயம் இருக்கிறது. எனக்கும் இருக்கிறது. அவள் வயதுக்கு அவள் கண்ட வாழ்க்கையை நானும் புதிதாய் வித்தியாசப்படுத்தி வாழ்ந்துவிடப்போவதில்லை… என்ன தான் உண்மையில் மனிதனுக்குத் தேவை?

மகிழ்ச்சியென்பதெல்லாம் அங்கீகரிப்பதில் தான். தேடலின் அர்த்தம் கிடைப்பதில் இல்லை. கிடைத்ததை உணர்வதில் தான்… அங்கீகார உணர்வு தான் இங்கு மங்கிக் கிடக்கிறது என்கிறாள் இந்த முதல் பாட்டி… எனக்கு விவரம் தெரிந்த நாளில் என் பாட்டி யாரும் உயிரோடில்லை. நான் உறவாடியதுமில்லை. ஆனால், இன்று அநேக பாட்டிகள் என் வாழ்க்கையில் பாடம் பதிக்கிறார்கள்…

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply