கட்டிப் போடாமல்
தரையில் பரவியது
ஈரக் குருதி.
தன் போக்குக்கு.
ஒரு கயிற்றின் பிடி
இனியும்
இழுத்துப் பிடிக்கப் போவதில்லை
மரச் சட்டத்துக்குள்
அடைத்தச்
சாமிப் படத்திடம்
சிறுமி வேண்டுகிறாள்:
“ப்ளீஸ். லக்கிக்கு
எதுமே ஆவக்கூடாது
ஐ நீட் லக்கி”
“பொட்ட நாய
வளக்காத —
வீட்ட வுட்டுத் தொறத்தியடி மொதல்ல”,
ஒரு குண்டுக் குரல்.
அதிலிருந்து அம்மா
எட்டிப் பார்க்கிறாள்.
பாதுகாப்பாக.
மார்கழிக் குளிரில்
தீட்டுத் தெரியாமல்
காய்ந்து விட்டாள்
லக்கி.
நயா
பிரார்த்தனையின்
பதிலுக்காக வேண்டி
நிற்கிறாள்.
நேற்று இரவில்
இருந்து
இன்னமும் வடிகிறது.
வடிவத்துக்குள்
அடங்காத
சிவப்பு அமீபா.
நயா பிரார்த்தனையோடுச்
சேர்ந்து வீங்குகிறது
சிவப்பு அமீபா.
நயா கைகள்
இறுகிக் கும்பிடுகிறது.
எங்கிருந்து பரவுகிறது
ஈரக் குருதி?
லொட்
லொட்
ச்சத்த்…
கட்டையிலிருந்துச்
சத்தம்!
கையில்
இறுக்கிப் பிடித்திருந்தாள்
நயா.
கட்டையில்
ஈரம் இல்லை.
சிவப்பு அமீபா
இருட்டில் ஒளிந்திருந்தது.
தெரியாமல் செய்த
தப்புக்குச்
சாமி தண்டனைக்
கொடுக்காது.
நயாவுக்கு
லக்கியைப்
பிரிய வேண்டாம்.
இனி லக்கிக்குக்
கர்ப்பம் இல்லை.
தீட்டு இல்லை.
லக்கி வீட்டிலேயே
இருக்கட்டும்.
அம்மா துரத்த மாட்டாள்.
நயா
பிரார்த்தனைக்குப்
பதில் வேண்டி
நிற்கிறாள்.
கைகள் இறுகக்
கூப்பி நயா…
மரச் சட்டத்துக்குள்,
கண்ணாடிக்கு
அந்தப் புறத்தில்
சிறுமிப் பேச்சுக்
கேட்காமல்
வாயசைவை மட்டும் காண்கிறது
அடைப்பட்டச் சாமி!
எழுத்து: ருபீன் பிரவீண்
நாள்: 01-04-2021
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)