இரவு, நான், ஒரு நீண்ட பயணம்

Night Train

ஒரு இரவு என்னைக்
கைப்பிடித்து கூப்பிட்டுச்
செல்கிறது.

ஓராயிரத்து ஒரு
இரவுகளுக்கும் இங்கே
கவிதை வழிய
காத்துக்கிடக்கிறது

ஒரு கூடை இரவில்
வழிந்து நிறையும்
கவிதைக் கனிகள்
அடைந்து கிடக்கிறது

இரவும் இல்லாமையும்
ஒன்றுபோல் தெரிகிறது.
அதில்படரும் ஒளிதான்
இங்கே உலகமாய்
பிரம்பஞ்சமாய் விரிகிறது.
இதனால் தான்
இரவுக்குள் ஏதோ
இருக்கிறது.
அதன் இல்லாமை
எனக்குப் பிடித்திருக்கிறது.

என் மனம் இப்படித்தான்
கவிதையைத் துப்பி வைக்கிறது.
அதைத் துடைப்பதில்லை நான்.

ஒரு நாயின்
வாலாய் நிமிராமல்
வளைந்தே இருக்க
விட்டுவிடும் கவிதைக்குள்
இயல்புத்தன்மை
அதிகம் இருக்கிறது.
அந்த வளைந்த
நாய் வாலில்
கவிதைக்குச் செலுத்தும்
நன்றி இருக்கிறது.

பொய்களைச் சொல்லும்
கவிதைகள்
உளவியலாளர்கள்
போல வம்புப்பேசி
மனதின் உண்மையை
அம்பலப்படுத்துகிறது.
அந்த வம்பில்தான்
பொதிந்து கிடந்த
உண்மைகள்
பீய்த்து அடிக்கின்றன.

என்னமோ…
இந்த இரவு என்னைக்
கைப்பிடித்து
கூப்பிட்டுச் செல்கிறது.

ஒரு இரயிலுக்குள்
நானும் இரவும் மட்டும்
தனியாய் அமர்ந்து கொண்டு
வழிதெரியா உலகத்துக்குள்
போய்க்கொண்டே இருக்கிறோம்.

இருட்டின் நிசப்தத்தில்
சடக்.. சடக்..
சடக்.. சடக்..

என் நெஞ்சில்
படக்.. படக்..
படக்.. படக்..

இரவின் நெஞ்சில்
சத்தமில்லை…
ஒருவேளை
இரவு பிறக்காமலோ
இல்லை
இறந்துபோயோ
இருக்கலாம்.
இரவின் இல்லாமைதான்
எனக்குப் பிடித்திருக்கிறது

இந்த
இல்லாத இரவுகளோடு
பேசிச் செல்லும்
கதைகள் ஏராளம்…
அந்தக் கதைகளைப்
பதிவு செய்த
ஒலிநாடாக்கள்
சுற்றிவைக்கப் பட்டுள்ள
சக்கரங்களும்
இரயில் சக்கரங்களும்
ஒன்றுபோல் சுழல்கின்றன.

நாடாக்கள் முழுதுமாய்
சக்கரத்திலிருந்து பிரியும்
நேரம் வரைச் சுற்றும்,
ஒலிநாடா சக்கரமும்
இரயில் சக்கரமும்.
இப்படியாகவே
ஆயிரத்தொரு இரவுகளும்
இரவுகள் பேசும் கதைகள்
ஒலிநாடாவில் கவிதைகளாய்
பதிவேறுகிறது.

இந்த இரவின்
கூடை நிறைய
கவிதைக் கனிகள்.
அதைத்தான்
நாங்கள் இருவரும்
பயணத்தின் முடிவு வரை
உண்டு தீர்க்கிறோம்.
அவன் கூடையில்தான்
பழங்கள் உள்ளன;
இருந்தும்,
அவன் எனக்குத் தருகிறான்…

இரயில் சக்கரங்கள்
சுழலும் வரை தீராது,
இந்தக்
கவிதையும் நட்பும்…

நாள்: 27-08-2020

‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!

ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy! 

(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)

Leave a Reply