ஆராரோ ஆரிராரோ…
கண்ணே நீ கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ…
என் கண்ணே கண்ணுறங்கு
அடித்தாரைச் சொல்லி அழு…
ஆக்கினைகள் செய்து வைப்பேன்…
ஆராரோ ஆரிராரோஒஓஓஓ…
ஒஓஓஓ என்ற அழுகைச் சத்தம்
தலைக்குள்ளே அழுதுக்கொண்டே இருக்கிறது,
இரவெல்லாம்!
உன்னைப் பாடச் சொன்னேனா?
தூங்க விடு!
ஆராரோ ஆரிராரோஒஓஓஓ…
ஒஓஓஓ என்ற அழுகைச் சத்தம்
மண்டைக்குள்ளே ஊளையிடுகிறது.
எப்படித் தப்பிப்பது?
விட்டுவந்துவிட்டப் பொருள்கள்
நினைவுக்கு வரும்வரை
உண்மையில் தொலைவதில்லை.
நினைவின் தேவைக்கு
அண்டிவரும் நியாபகங்கள்
தொலைந்துப் போனத் தடயத்தை
விடாமல் போவதில்லை.
தேடிப்போனக் கேள்விகளே
மறந்துப்போனப் பின்,
வாழ்வின் கூடாத நேரத்தில்
விடை கிடைத்து
நினைவுகளைக் கொறிக்கிறது.
அடித்தாரைச் சொல்லி அழு…
தெரியாமல் தான் தவிக்கிறேன்
யார் என்னை அடித்ததென்று.
கூடாத நேரத்தில்
அடித்தவரின் அடையாளம்
கிடைக்காமலே
காற்றோடுப் போகட்டும்.
அறியாமையே அடைக்கலமாய்
ஆகட்டும்.
பூமியின் கவிஞன்
அதிகம் கவிப்பது
வானத்தை தான்…
ஏனென்றால்,
அவனுக்குத் தெரியும்.
ஆசைப்பட்ட வானத்தில்
அவனால் என்றுமே
நடக்க முடியாது!
பெறமுடியாத வானத்துக்குத் தான்
அத்தனை நேசமும்!
சொந்தமில்லாததற்குத் தான்
மனதின் அத்தனைக் காதலும்!
நழுவிவிடும் கடைசிநூலின்
நுனியில் தான்
மொத்த ஏக்கமும் குவிந்து இருக்கிறது
விட்டுவந்த உலகத்தை எண்ணி
பிறக்கும்போது அழுகிறோம்
விட்டுச் செல்லும் உலகத்தை எண்ணி
இறக்கும்போதும் அழுகிறோம்
தாலாட்ட எனக்கொரு தாய்
எப்போதுக்கும் இல்லையோ?
நினைவுகளை
அதன் வலியை
சுமந்திடத் தான் இவ்வாழ்வா?
ஆராரோ ஆரிராரோ…
கண்ணே நீ கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ…
என் கண்ணே கண்ணுறங்கு
அடித்தாரைச் சொல்லி அழு…
ஆக்கினைகள் செய்து வைப்பேன்…
ஆராரோ ஆரிராரோஒஓஓஓ…
தூங்க விடு! தூங்க விடு!
யாரடித்தாரோ போகட்டும்
எவரடித்தாரோ போகட்டும்
தாலாட்டே தூங்க விடு
அழுகாதே, தூங்க விடு!
எழுத்து: ருபீன் பிரவீண்
நாள்: 07-09-2020
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)