அமெரிக்க இலக்கியத்தில் ரொமான்டிச இயக்கத்தின் முக்கிய ஆளுமையான எட்கர் ஆலன் போ பிறந்தது ஜனவரி 19, 1809ல், அவர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்தது அக்டோபர் 7, 1849ல். கவிஞராகவும், சிறுகதையாசிரியராகவும், பதிப்பாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் அறியப்படும் போ அமெரிக்க சிறுகதை வடிவத்தின் முன்னோடிகளில் ஒருவர். நன்கு அறியப்பட்ட பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களில் இவரே முதன்முறையாக எழுத்தையே முழு நேர தொழிலாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்த முன் வந்தவர். அதனாலேயே வாழ்க்கை முழுவதும் பண நெருக்கடிகளால் அவதிப்பட்டிருக்கிறார்.
அவருடைய சிறுகதைகள் அமானுஷ்ய, மர்மத்தன்மைக்கும், அதன் திகில் தன்மைக்கும் பெயர்பெற்றவை. துப்பறியும் புனைவு வகைமையை உருவாக்கியவராக கருதப்படும் போவின் பங்கு அறிவியல் புனைவுகளிலும் பெருமளவு அமைந்துள்ளது.
சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் Tamberline and other poems என்கிற தலைப்பில் ஒரு நாற்பது பக்க கவிதைத் தொகுப்பைத் தன் பதினெட்டாம் வயதில் வெளியிடுகிறார். அது முறையான வரவேற்பைப் பெறவில்லை. மீண்டும் இருபது வயதில் Al-Araf and other minor poems என்கிற கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடுகிறார். எதிர்பார்த்த கவனத்தை அதுவுமே ஈர்க்காததால் பின்னர் கதை வடிவத்தில் தன் கவனத்தைக் கொடுத்து சிறுகதைகள் படைத்து இதழ்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கிறார்.
போ-வால் கவர்ந்திழுக்கப்பட்ட ஆளுமைகள் பலர் இருந்தாலும் அதில் மிக முக்கியமாக தஸ்தயேவ்ஸ்கி நடத்திய ‘வ்ரெம்யா'(காலம்) இலக்கிய இதழின் முதல் ருஷ்ய பதிப்பிலேயே போவுடைய மூன்று சிறுகதைகளான The Tell-Tale Heart, The Black Cat, The Devil in the Bellfry இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sherlock Holmes மர்ம-துப்பறியும் நாவல் தொடர்களை எழுதிய சர் ஆர்தர் கொனன் டாய்ல் “போவுடைய ஒவ்வொரு கதையையும் மூலவேராய்க் கொண்டு முழுமையான துப்பறியும் இலக்கியம் வளர்ந்தெழுந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரசித்திப்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் போவைப் பற்றி இப்படிக் கூறுகிறார், “எனக்கு எட்கர் ஆலன் போவைப் படிப்பதில் இருந்த ஆர்வம் தான், என்னை சஸ்பென்ஸ் திரைப்படங்கள் எடுத்திட காரணமானது”.
1845ல் வெளியான ‘Raven‘ என்கிற கவிதை தான் அவரை கவிதை உலகின் புகழ் உச்சிக்கு எடுத்துக்கொண்டு போனது. தான் ‘ரேவன்’ கவிதையில் பயன்படுத்திய இலக்கிய முறைப்பற்றி “The Philosophy of Composition” என்கிற கட்டுரையில் விளக்கி எழுதியிருக்கிறார்.
ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு பிரபல கவிஞரும் இலக்கிய விமர்சகருமான டி. எஸ். எலியட் கூறுகையில், “கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் படி கணக்கிட்டு கவிதையை வரையறுத்திருக்கிறாரா என்கிற எண்ணம் அக்கவிதையைப் படிக்கும்போது கேள்வியாக எழாமல் இல்லை. இன்னும் கூடுதலாக அவர் சிரமப்பட்டு உழைத்திருக்கலாம்: அப்போது அவர் வெளியிட்ட இலக்கிய முறைக்கு உரிய மதிப்பைச் சேர்ந்ததாக அமைந்திருக்கும்” என்று தன் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தன் இறுதிகாலத்தில் அவர் வெளியிட்ட மிக முக்கியமான அறிவியல் பேசும் கலைக் கட்டுரையாக அமைகிறது போ-வின் Eureka: A Prose Poem. பிரபஞ்சத்தின் இயந்திரத் தொகுதியை கலையாய்வு செய்யும் ஒரு பிரயத்தனத்தின் நிகழ்ச்சியாய் இந்த நூற்று நாற்பது பக்கங்கள் கொண்ட கட்டுரை, அறிவியலில் அபுனைவு நூலாய்த் தனித்தன்மையோடு நிற்கிறது.
பல வருட காதல் எல்லாம் நிமிடத்து வெறுப்பில் மறைந்து போகிறது.
எட்கர் ஆலன் போ.
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)