ஆழ ஆழத்
தோண்டி வரும்
பூமிநீராய்
உன் காதல்!
முதல் நாட்களை விட
ஆழம் போகப் போக
அதிகம் பெருகுகிறது.
மழைத் துளியாய் தேன்சொட்டாய்
முதல் நாட்களின் காதலெல்லாம்
பெருங்கடலாய் பூமி நீராய்
நாட்கள் ஆக ஆகத்
தோன்றுகிறது.
வயிற்றில்
கிச்சுகிச்சு மூட்டாமல்
வெறும் கிளர்ச்சி
மட்டும் கூட்டாமல்
என் பாலைவனத் தோட்டத்துக்குப்
பூட்டிவைத்தப் பூட்டாய் நீ.
சாவிகளைத் தேடிவரும்
கானலுக்குத் தீட்டாய் நீ!
உயிரே! உறவே!
கனியே! காதலே!
என்றதில்லை.
பேச்சின் நுனிநாவில் சுரந்துவரும்
எச்சில் இல்லை
இந்தக் காதல்.
கடும் குளிரும்
சுடும் வெயிலும்
சூறைக் காற்றும் தாக்கிடாத
ஆழ ஆழத்
தோண்டி வரும்
பூமி நீராய்
உன் காதல்.
அறிவென்பதே உனக்கில்லை.
அதனால் தான்
சோர்ந்து விடாமல்
சிரிக்கிறாய்,
உன் முட்டாள் தனமானக்
காதலோடு.
நீ நிச்சயம் முட்டாள்.
உலகத்தின் பெரும் காதலை
அடைந்துவிட்ட
எண்ணம் உனக்கு.
எழுதப்படாதக் காவியத்தை
எழுதுகின்ற
நினைப்பு உனக்கு.
நான் தெருவோரத்தில்
எரியும்
சாதாரணத் தெருவிளக்கு.
அதுபோதும் எனக்கு
என்று
ஆனந்தம் அடையும்
ஏழைத் தெரு நீ!
விளக்கின் கம்பத்தைக்
கட்டியணைத்துக் கொள்.
கூச்சம் இருந்தால் சொல்,
அணைத்து விடுகிறேன்.
அணைத்துக் கொள்.
விளக்குக்கும்
இருட்டுப் பிடிக்கும்
உன் போன்றவள்
உடன் இருந்தால்.
காதல் நாள்காட்டியின்
தேதித் தாள்கள்
குறித்து வைத்த
‘பைத்தியங்களின் நாட்கள்’
எத்தனை?
காண முடியாத நாட்களில்
காணப் பைத்தியம்.
கண்டுவிட்ட நாட்களில்
கண்ட பைத்தியம்.
வைத்தியமே இல்லாதக்
காதல் பைத்தியம்.
கோபமாய். வீம்பாய்.
திமிராய். அசட்டையாய்.
அத்தனையும் சுதந்திரமாய்.
உடையாதக் கண்ணாடியாய்
உருகாத மெழுகாய்ப்
பொய்க் காதல்
வளர்த்ததில்லை.
காதலின் மெய் ஆழம்
எவ்வளவு?
மர்மப் புன்னகையை
ஓரம் தள்ளும்
வெட்கமில்லாத உன்
சப்தச் சிரிப்பு!
உண்மையைச் சொல்லி
அறைந்துக் கொண்ட
காயங்கள் —
அவை கற்பனைகள்
களவாடாதக்
காதலின் பொழுதுகள்.
நாள்குறிப்பில் இடம்பெற்ற
பிடித்த நாட்கள்
எவை?
நிச்சயம்
நாள் பிடித்து
நாம் இல்லை.
நாள் பார்த்து
வராதக் காதலில்
ஒருநாள் இருநாள்
குறிப்புக்கு இடமில்லை.
ஆள்பார்த்து வந்தக் காதல்…
ஒரே ஒரு ஆள்!
உனக்கும் எனக்கும்.
ஒரு ஆளோடுக் கழிக்கும்
அத்தனை நாளும்
ஆழத்துப் பூமி நீரைக்
கண்டுவிடத்
தோண்டியது தான்.
ஆழ ஆழத்
தோண்டி வரும்
பூமிநீராய்
உன் காதல்.
பூமி நீரின் ஆழத்தைக்
கடந்து விட்டோம்
என்றால் மட்டும்
காதலை
நிறுத்திக் கொள்ளலாம்.
இந்தப்
பூமிப்போல்
பூமி மண் போல்.
நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
மண்ணோடு மண்ணாய்…
எழுத்து: ருபீன் பிரவீண்
நாள்: 25-09-2020
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)
அருமையாக இருக்கிறது..
‘விளக்குக்கும் இருட்டுப் பிடிக்கும்
உன் போன்றவள்
உடன் இருந்தால்…’
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை!