எங்கள் குரல்கள்
ஒடுக்கப்படவில்லை;
எங்களுக்கே குரலில்லை
நாங்கள் ஊமைகள்!
நாங்கள் மிச்ச மீதிகள்…
அழுக்கான ஆபத்தான
ஆண்சமுதாயத்தால்
பாதிக்கப்பட்டவர்கள்!
போலிப் பெண்ணியம் பேசி
பெண்களின் நண்பன்போல்
சமூகத்திலும் வலைத்தளத்திலும்
நடிக்க வெட்கப்படுபவர்கள்.
நாங்கள்
‘நடிக்கும்’ கோழைகள் இல்லை;
சூழலால் ஊமைகள்!
கண்மூடித் தனமாகக்
கத்திக் கூச்சலிடும்
காலத்தின் மோகத்தில்
விளைந்த போராளிகள்
இல்லை.
நாங்கள்
“இயக்கத் தொடர்ச்சிகள்”
இல்லை…
நாங்கள்
நான்காம் பாலினத்தவர்கள்!
எங்களுக்கும்
எதிர்ப்பால்மீது
ஈர்ப்பு உண்டு!
கலவி நீங்கிய
கண்டத்தவர்கள்
இல்லை நாங்கள் – அதை
உடம்பின், உணர்வின்
சூறையாய் கறப்பவர்
இல்லை நாங்கள்!
என் அப்பா
இறந்துப்போனாரே
அப்போது!
என் தங்கையும்
நானும்
பிஞ்சுகளாய் இருந்தோமே
அப்போது!
உறவினன்
என்ற பெயரிலே
ஓநாய்ப் போல்
ஒருவன், என்
அம்மாவைக் கொதறக்
காத்துக் கிடந்தானே
அப்போது!
என்
அம்மாவின் ஆடைத் தான்
அந்த ஓநாயின்
வெறிக்கானக் காரணம்
என்று
அந்தச் சின்ன வயதில்
நான் நினைத்ததில்லை…
இப்போதும் நினைக்கவில்லை!
அந்த நாள் முதல்
என் தங்கை
என்னோடு பேசுவதில்லை
அந்த நாளில்
அவளை
மிகவும் துன்பப்படுத்திய
பல சாதாரண,
கேவலமான
மனிதர்களோடு
நானும் ஒருவனானேன்…
“இந்த மார்புகள் தானே…
இதனால் தானே
இவ்வளவும்!…
இந்த
இச்சைக்கான இழிசதையை
அறுத்துவிட்டால்
இனி சுதந்திரம் தானே”
என்று
கோபப் பொறிகளைக்
கக்கினாள்…
இன்றுவரை
என்னோடு அவள்
இயல்பாகப் பேசுவதில்லை.
இதனால் தான்
நாங்கள்
நான்காம் பாலினம்
ஆனோம்!
எத்தனை முறைகள்
எங்கள் ஆணுறுப்புகள்
அறுத்தெறியப்பட்டிருக்க
வேண்டும்!
எத்தனை முறைகள்
பொதுக் கழிப்பறையில்
வாலிபமும் நரைவயதும்
சிறுநீர் கழிக்கும்
சொற்ப மணித்துளியில்
உற்றுப்பார்த்துத்
திருட்டுத் தனமாய்
விழியலைவார்கள்!
சிலர்
‘காட்டு’ என்பதுபோல்
கூச்சமின்றிக்
கூர்ந்திருப்பார்கள்!
இடுப்பின் உடுப்பளவில்
ஆணுக்கு ஆணே
தற்காத்து நிற்கும்
கழிப்பறைச் சங்கடங்கள்!
ஒன்றா? இரண்டா?
முறைகள் முடியாது.
தங்கையும் தமையன்
உளை அறிவாளா?
தனிநேரங்கள்
கருக்கின் பொழுது:
அந்தக் கருக்குக்
குத்தும்
அந்தப் பொழுது
கருக்கும்
தனிப் பொழுதுகள்:
கருக்கிருட்டில்
ஊளையிட்டு அலையும்
மிருகங்கள் நேரம்
பொதுக் கழிப்பறைகள்
இங்கே கழிப்பதற்கு
மட்டுமானதாய் இல்லை;
விளம்பரங்கள் செய்ய
தோதானத் தளங்கள்!
கழிப்பறைச் சுவரொட்டிகளின்
விளம்பரங்களில்
கலவி அறியும்
இரகசிய கல்வி நிலை!
இங்கே தான்
கொடுமகனின் கொடுமனது
சில பொழுதில்
தனித்த எனக்கு,
உடுப்பை உறித்து,
காமம் தெறிக்க…
முகமுழுதும் பாலையாய்
நீருக்குக் காய்ந்து
நிற்கும்
வியர்வைத் துளிகளோடு
என்னை இரையாய்
பார்த்தது…
ஒவ்வாமையும்,
அச்சமுமாய்
அங்கிருந்து
ஓடிவந்ததை
என் தங்கைக்கு
நான் இன்னும் சொல்லவில்லை!
எத்தனை முறைகள்
அறுத்திருக்க வேண்டும்
ஆணுறுப்பை!
உறுப்புகளின் பின்
இருக்கும் உண்மைகள்
இங்கே சூழல்கள்!
என் மகள்,
என் தங்கைபோல்
என் அன்னைபோல் இன்றி,
நான் தந்துச் செல்லும்
உலகத்தில் இன்பமாய்
வாழட்டும்…
எங்களுக்குத் தந்திருக்கும்
உலகத்தில்,
நாங்கள்
நான்காம் பாலினத்தவர்கள்!
துருத்தித் தெரியாமல்
இறுக்கம் இல்லாமல்
உடையணியச் சொல்லி,
என் மகளுக்கும்
நான் சாதாரணக்
கேவலமான
மனிதனாய்
கண்ணில் பட வேண்டாம்!
அவள்
எப்போதும் என்னோடு
பேசாமல் போக
வேண்டாம்!
நான்காம் பாலினத்தவர்களாய்
சங்கடங்களுக்கிடையே
நாங்கள்!
கவிதை: ருபீன் பிரவீண்
நாள்: 26-07-2020
‘ஒப்பம்’: ஒரு அறிமுகம் (நாவல் வாங்கி படிப்பதற்கான இணைப்போடு)!
ஒப்பம் நாவலைப் பெற, கிளிக் செய்யவும் 👉: Get Your Kindle Copy!
(Note: As an Amazon Associate I earn from qualifying purchases.)