புதிய இந்தியாவின் பழைய தொழில்நுட்பத்தோடு மலர்ந்தது, அடுத்த நாளின் பொழுது. புங்கைமர நிழலில் ஒற்றைக்காலில் சாய்ந்துநின்ற பேஷன் ப்ரோவில், பிரவீன் தர்பன் கருவிக்குச் சிக்னலை வேண்டி சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தான். சனிக்கிழமை என்பதால், அன்று பள்ளி விடுமுறை. பழைய மாட்டுவண்டியில் விளையாடிக் கொண்டிருந்த பொடிசுகள், சட்டென்று வந்து பிரவீனை சுற்றுபோட்டுக் கொண்டார்கள்.
‘அண்ணா. இது என்ன ஃபோனா?’, ஒரு ஜிட்டுப் பாப்பா கேட்டாள்.
‘இல்ல மா. இது போஸ்ட் ஆஃபீஸ் கணக்கு மிஷின்’.
‘இதுல என்ன பண்ணுவீங்க?’ ஜிட்டுப் பாப்பாவின் தம்பி காக்கி டௌசர் கேட்டான்.
‘பணம் போடுறது, எடுக்குறதுலாம் இதுலதான் பண்ணனும்’
‘இதுல எப்படி எல்லா பணமும் போடுவீங்க?’ அதே காக்கி டவுசர். சட்டையை வீட்டிலேயே பத்திரமாக மாட்டி வைத்துவிட்டு வந்திருந்தான்.
‘போன் பேசுவதான?’ பிரவீன் திரும்ப கேட்டான்.
‘ஆமா. எங்கப்பா பெரிய போன் வச்சிருக்கு!’
‘அதுல எப்படி நீ பேசுறது பூரா தூரத்துல இருக்கவங்களுக்கு கேக்குது?’
‘போன்ல கேக்குமே!’ ஏன் கேக்காது? எங்க போன் நல்ல போனு என்கிற தொனியில் பதில் சொன்னான்.
‘இதுலயும் பணம் போடலாம். நூறுனு அழுத்துனா நூறு ரூவா ஏறிக்கும்’
‘ஓ!’ அக்கா ஜிட்டுப் பாப்பாவும், தம்பி காக்கி டௌசரும்.
போஸ்ட் ஆபீசுக்கும் பிரேமா அக்கா வீட்டுக்கும் இடையில் இருக்கும் பாதைதான் ஏரிவேலைக்கு செல்பவர்களுக்கான முக்கிய வழி! அந்தப் பாதையில் பிரவீனின் அபிமானி ஒருவர் மாடுமேய்த்து வந்தார்.
‘என்ன சார்… ஏன் வெளிய நிக்குறீங்க?, அவரை இழுத்துக்கொண்டு போன மாட்டை அவர் இழுத்துப் பிடித்தபடி கேள்வி கேட்டார்.
‘சும்மாதாங்க ஐயா. ஆஃபீஸ்குள்ள சிக்னல் இல்ல. அதான்.’
பிரவீன் பணியில் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள்… அலுவலகத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தான். பாழ்நிலையில் சில விரிசல்களோடு இருந்த அலமாரி சுவர் மழையில் ஊறியிருந்தது. அதில் அடுக்கி வைத்திருந்த அலுவலக ஆவணங்களும், பல அஞ்சல் கணக்குப் புத்தகங்களும் சேர்ந்தே நனைந்திருந்தன. பல மாதங்களாய் சுத்தம் செய்யாமல் விட்டிருந்ததில், ஆவணங்களை கரையான் அரித்தும், எலிகள் கொறித்தும் வைத்திருந்தன. எலிப் புழுக்கைகள் தூள்தூளாய் சுற்றிலும் கொட்டியிருந்தது. அவற்றுக்கிடையில்தான் மாடுமேய்த்துச்சென்ற பிரவீன் அபிமானியின் தொடர்வைப்பு கணக்குப் புத்தகமும் கிடந்தது. முழுவதும் எலி கொறிக்காமல், ஈரத்தில் வீணாகாமல் தப்பியிருந்த சில கணக்குப் புத்தகங்களில், அவர் புத்தகமும் ஒன்று.
எத்தனையோ வருடங்களாக காணாமல் போயிருந்தது, அவர் புத்தகம். அவர் புகாரளித்தும் முந்தைய மடம் கிளை அஞ்சல் ஊழியர்கள் செவிசாய்க்கவில்லை. அதை பிரவீன் அவருக்கு வீடுதேடி டெலிவரி செய்தான். அங்கிருந்து உண்டானது, அவருக்கு பிரவீன்மீதான அபிமானம்! பிரவீன் கண்டுபிடித்து கொடுத்தபோது, அந்தக் கணக்குப் புத்தகம் காலாவதியாகியிருந்தது!
தர்பனுக்கு சிக்னல் வேண்டி பிரவீன் புங்கைமர நிழலில் காத்திருந்தான். இதோ சிக்னல் வந்துவிடும். இப்ப வந்துவிடும். இன்னும் கொஞ்சம் நேரம்!