உள்ளும் வெளியும் (ஒப்பம் நாவல், அதி. 2)

Featured image

நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நபர்கள் வருவதற்கு முன்நேரமாகவே, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தின் முற்றத்தை நிரப்பியிருந்தன நாற்காலிகள். வெய்யில்பட்டுத் தேகம் சூடாகி இருந்தன. 

சற்றுநேரத்தில், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நபர்களும்,  அவர்களின் பெற்றோர்களும் அலுவலக முற்றத்தில் இருந்த அசட்டை நாற்காலிகளில் வந்து நிரம்பினார்கள். நாற்காலிகளின் தேகச்சூடு பயணிகளின் முதுகுகளுக்கும் மெல்ல பாய்ந்தது.  

நேரம் கடந்தது. நேர்முகத்தேர்வு தொடங்கவில்லை. காத்திருப்பும் வெய்யிலுமாய் காய்ந்துபோயினர்.  

முற்றம் முழுதும் நிறைந்திருந்த மௌனத்தை, தன் முதல் வார்த்தையால் மெல்ல கிழித்தார், மெலிந்த தேகம்கொண்ட கருப்பு-வெள்ளை கலந்த ஒல்லி மீசைக்காரர். 

‘தம்பி…’, அந்த வார்த்தைப் பிரவீன் கவனத்தை இழுத்ததும், அவர் அடுத்து தொடர்ந்தார்… ‘என்ன ஊரு?’ பள்ளமான கண்களும், கோடுவிழுந்த முகவாய்க் கட்டையும், கஷ்டங்களில் அடிப்பட்ட சிரிப்புமாய்க் கேட்டார். 

‘துருகம்’, சிறு சப்த இடைவெளியில் சின்னதாய், சட்டெனச் சொன்னான். 

‘என்ன ஊரு?’ காதில் விழாததால், மறுபடி கேட்டார். 

‘துருகம்… தியாகதுருகம்’, கூரான உச்சரிப்பில் சத்தமாய்ச் சொன்னான். 

‘எந்த ஊருல போஸ்டிங்?’ 

‘மடம்’ 

‘ஊரெல்லாம் பாத்தாச்சா?’ 

‘இல்ல. இனிதான்’, பணிவோடு. 

‘என்ன படிச்சி இருக்கீங்க?’ 

‘ப்ளஸ் டூ… ’ 

‘ஏன் காலேஜ் படிக்கலையா?’

‘படிச்சேன். பி. ஏ இங்கிலீஷ். ஃபர்ஸ்ட் இயரோட நிறுத்திட்டேன்’ 

‘ஏன்? வேல கெடச்சிட்டதாலயா?’ பதிலும் தெரிந்தே கேட்பவர் போல கேட்டார். 

வேலை கிடைப்பதற்கு முன்பாகவே படிப்பை நிறுத்திவிட்டதைப் பிரவீனுக்குச் சொல்லத் தோன்றவில்லை. இயல்பாகவே அந்நியர்களிடம் குறைவாகப் பேசும் பழக்கம் இருந்தது. எனவே உண்மையை மறைத்து, ‘ஆமாம்’ என்று எளிய பதிலைத் தந்தான். 

‘இவங்க உங்க பொண்ணா?’ இருவருக்கும் இடையே நுழைந்தார் பிரவீன் அப்பா. 

‘என்ன படிச்சி இருக்காங்க?’ பதில் அளிப்பதற்கு இடைவெளி விடாமல் தொடர்ந்து கேட்டார். 

ஒல்லிமீசைக்காரருக்கு பிரவீன் மீதிருந்த கவனம், அவன் அப்பா மீது திரும்பியது… ‘ஆமா. என் பொண்ணு. பி.இ. சிவில்… திருப்பூர்ல படிச்சா. வேல வந்துட்டதால படிப்ப நிறுத்திட்டோம்’, ஒரு படி பதில் அதிகம் தந்தார். 

ஒரு முழுங்கு நேரம்விட்டு, ‘வேல கெடக்கிறதே கஷ்டம் — சென்ட்ரல் கவுர்மெண்ட் வேல வேற! மொல்ல படிச்சிக்கலாம்… வேலக்கிப் போயிரட்டும், என்ன சொல்றீங்க?’ மனதில் பட்டதைப் பேசி, தன் நிலைப்பாட்டுக்கு இருக்கும் ஆதரவை எடைத்தட்டில் வைத்துப் பார்த்தார், ஒல்லி மீசைக்கார அப்பா. 

பதில் தருவதற்கு முன்னிருந்தே தலையாட்டிவந்தவர், ‘ரைட்டு! அதான் சரி, வேலக்கிப் போயிரணும்’ என்று கூறி, ஒல்லி மீசைக்காரரின் நிலைப்பாட்டுக்கு எடைக்கூட்டிவிட்டு, தொடர்ந்து சொன்னார்: ‘எங்கப் பாத்தாலும் லஞ்சம்ங்க‌… டீச்சர்ங்களுக்குப் பத்து லட்சம் ரூவா கேக்குறானுங்க கவர்மெண்ட்ல… கெட்டுப்ப் போச்சிங்ங்க — சுத்-த்-தமா நாடு கெட்டுப்ப்ப்போச்சி… இப்பவே இந்த வேலக்கி போயிட்டா, அப்றம் பரிச்ச கிரிச்ச எழுதி புரமோஷன்ல போயிருவாங்க. இந்தக் காலத்துப் பசங்கலாம் டேலண்ட்டுங்க!’ 

புது நண்பர்கள் இருவரும் தங்களின் கஷ்டங்கள், நாட்டு நிலவரம், தந்தைமையைப் பொறுப்பாக பகிர்ந்துகொண்டார்கள். பெரியவர்களின் உரையாடல் இப்படித்தான் இருக்கும். உடனே பழகிவிடுவார்கள். ‘இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு பழகுவதில் என்னத்தான் தேள் கடிக்கிறதோ!’ என்பது பெரியவர்களின் வருத்தம்… 

உள்ளே இருந்து அலுவலகத்தார் ஒருவர் வந்தார். முற்றத்து மக்களை நோக்கி ஏதோ சொல்ல முனைந்தார். அவர் கைகள் அந்தரத்தில் இருந்தன. கூட்டம் சில வினாடிகள் சத்தத்தை அடக்கியது. பின் டிராப் சைலண்ட்! அலுவலகத்தின் அறைக்குள்ளிருந்து கரடுமுரடானக் குரல்: ‘ஏப்பா, கிருஷ்ணா! இங்க வா’ அவசரமாய் ஒலித்தது குரல். டப்பென்று அந்தரத்துக் கைகளைக் கீழே போட்டுவிட்டுப் புற்றுக்குள் போகும் பாம்பாக ‘விஸ்க்’கென உள்ளே போய்விட்டார் கிருஷ்ணன். கூட்டத்தின் எதிர்பார்ப்பு மலை உச்சியில் இருந்து விழுந்து நொறுங்கியது. 

‘எவ்ளோ நேரம்?’, ‘ஏன் இப்படி?’, ‘எப்போதான் கூப்பிடுவாங்க?’, ‘எப்ப முடிப்பாங்க?’ கூடியிருந்த பெற்றோர்கள் பொறுமை தொலைக்கத் தொடங்கினார்கள். 

அந்த நேரத்துக்கெல்லாம், பிரவீன் தன்னுடைய அம்மாவின் பின்னங்கை சதையைத் தன் உள்ளங்கையால் பிடித்துக்கொண்டு, அவளுடைய முழங்கையில் நெற்றியை அமர்த்திக் கண்களை மூடிக்கொண்டிருந்தான். அம்மாவின் முழங்கை, நாற்காலியின் கைகளில் இருந்தன. அம்மா யாரோடும் பேசவில்லை. பெரியவர்களின் உரையாடலில் அவளுக்கு பழக்கம் இல்லை… அவள்  “பழகத்தெரியாதவள்”, “பழக்கங்கொள்ளாதவள்” என்று பெரியவர்களின் ஏச்சுப்பேச்சுக்கு ஆளானவள். அவள் மௌனி. 

யாரோடும் அவள் அதிகம் உரையாடுவதில்லை. அருகே இருப்பவர்கள் எவ்வளவு பேசினாலும், எவ்வளவு கேள்வி கேட்டாலும், பேசுவதையெல்லாம் கேட்டுக் கொள்வாள்… கேட்டதற்கெல்லாம் ஒரு சொல்லிலிருந்து ஒரு வாக்கியம் வரைதான் பதில் சொல்வாள். ஒரு சின்ன புன்னகையை வைத்தே பெரும்பாலும் ‘வணக்கம்’, ‘உங்களைக் கண்டுகொண்டேன்’, ‘சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று அனைத்தையும் வெளிப்படுத்துவாள். அறிமுகமில்லாதவர்களுக்கு அவள் புன்னகை மட்டும் அறிமுகப்படுத்தப்படும். நன்றி சொல்ல மட்டுமே அறிமுகமில்லாதவரிடமும் வாய் திறக்கும். மற்றபடி, அவள் குரல் இந்த உலகத்தில் மிகவும் குறைந்த அளவில் ஒலிக்கப்பட்டக் குரல். அதிகமாக பலரால் கேட்கப்படாத குரல். அவளுடைய சத்தம், சாலை நெரிசலில் அலறும் பெரிய வாகனங்களின் ஹாரன்களுக்கிடையில் அடிக்கப்படும் பழுதான சைக்கிள் பெல்! 

புற்றிலிருந்து மெல்ல வரும் பாம்பாய், மீண்டும் தலைக் காட்டினார் கிருஷ்ணன். ‘உங்களோட டி.சி, டென்த் மார்க் ஷீட், கம்யூனிட்டி செர்ட்டிஃபிகேட், ரெண்டு ஃபோட்டோ, ஸ்டாப்ளர், பேட் எடுத்துக்கோங்க… எடுத்துவச்சிக்கிட்டு ரெடியா இருங்க… உள்ளயிருந்து பேரு கூப்டுவோம். ஒவ்வொருத்தரா வாங்க, சரியா?’ மொத்த கூட்டத்துக்கும் ஒற்றைக் குரலில் ஓங்கி ஒலித்தார். சொல்லிவிட்டு, இரண்டு வினாடிகள் பொறுமைக் காத்து, எவரேனும் ஐயத்தில் உள்ளாரா என்று கவனித்தார்… 

‘சரிங்க சார் சொல்லு’, ‘சரிங்க சார் சொல்லு,’ ‘சொல்ல்லு…’ முன்பல்லைக் கடித்துக்கொண்டு, அருகிருந்த தன் மகளின் முழங்காலை ஆட்டிச் சொல்லிக்கொடுத்தார் ஒல்லி மீசைக்கார தந்தை. ‘ஏன்பா இப்படி?’ என்கிற உள்ளெண்ணம் வெளியே தெரியும்படி, சிரமத்தோடு ஒரு பார்வை பார்த்தாள், மகள். 

வளைந்துநெளியும் அசௌகரியம் அவள் கண்களில் எட்டிப்பார்த்தது. அப்பாவின் சட்டைப் பேன்டிலும், அவளின் சுடிதாரிலும் ஏழ்மையின் கறை ஒட்டி இருந்தது. அவர்களுக்குப் பிடிக்காமலே அது ஒட்டியிருந்தது… துடைத்தாலும் அது போகாது! 

வரிசையாய் ஒவ்வொருவர் பெயரும் வந்தது. அவரவர் இருக்கையிலிருந்து எழுந்துசென்று, நேர்முகத்தேர்வு முடித்துத் திரும்பினார்கள். தேர்வென்றால், கிட்டதட்ட சான்றிதழ்களை ஒப்படைத்து வந்துவிட்டால் போதுமானது. தேர்வுக்கான நபரைப் பற்றிய ஓரிரு கேள்விகள். அதற்கான பதில்கள். அதுபோதும்! நேர்முகத்தேர்வில் வெற்றி… 

பிரவீன் நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு வெளிவரும்போதெல்லாம், வெறும் நாற்காலிகள் மட்டுமே இருந்தன. ஆட்கள் யாரும் இல்லை. 

‘எப்படி பண்ண?’ பிரவீன் அப்பா கேட்டார். 

‘செர்டிஃபிகேட்ஸ் சப்மிட் பண்ற வேலதான்’. 

‘சுஜா எப்படி பண்ணுச்சி? ஏதாச்சும் பதில் தெரிஞ்சுச்சா — இல்ல பெக்க பெக்கனு முழுச்சுச்சா?’ 

‘யாரு சுஜா?’ பிரவீனுக்கு புலப்படவில்லை.

‘அதான், கருப்பா வத்தலும் தொத்தலுமா ஒன்னு இல்ல? பி.இ. சிவில் இன்ஜினியரிங்!’ தன்னியல்பில் இருந்து சற்றும் விலகாமல் அவர் கேட்டார். 

‘எல்லாரும் பாஸ்தான். யாரும் முழிக்கல’.  

‘என்ன எஸ்.சியா?’ பிரவீனிடமிருந்து பதில் வரவில்லை. 

‘அதெல்லாம் பாஸ் பண்ணிவிட்ருவாங்க. இப்போ எல்லா வேலக்கும் அதுங்கதான் மொதல்ல — ஈயினு இளிச்சான் பாத்தியா? — அவங்கப்பன் பேசும்போதே தெரியும்!’ முற்றத்து நாற்காலிகள்போல் பிரவீன் அசட்டையாகிப் போனான். 

ஒரு கணம் பிரவீன் அம்மாவைப் பார்த்துக்கொண்டான். அந்த நேரத்தில், அவன் பசி உயிரை விட்டிருந்தது. சாயங்காலம் ஆகியிருந்தது. 

பெரியவர்களின் உரையாடல் இப்படித்தான் இருக்கும். உடனே பழகிவிடுவார்கள். ‘இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு பழகத் தெரியவில்லை’ என்பது பெரியவர்களின் வருத்தம்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *