ஓரமாய் ஓய்வெடுத்தது தர்பன். அதிகாலை எழுந்து செய்ய பரிவர்த்தனைகள் எதுவுமில்லை. ஊரில் கூட்டம் சேரும் இடங்கள் இல்லை. தேவாலயங்களில் காலை மாலை பூசைகள் நடைபெறவில்லை. கடந்த ஒரு வாரமாக பழைய தேவாலய அன்னையின் தனிமையை உணர்ந்து கொண்டிருந்தது, புது தேவாலயம்.
உலகம் முழுக்க உயிர்கள் பலியாகி வந்தன. நாளுக்கு நாள் மரணம் அதிகமாகிக்கொண்டே போனது. மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவும் இல்லை. உலகமே பயத்தில் முடங்கிக் கிடந்தது. உணவுக்கும், அத்தியாவசிய பொருட்களுக்கும் தவிர, எந்தக் காரணத்துக்காகவும் வெளியில் செல்ல தடை. ஒரு பக்கம், மருத்துவர்களும், பிரபலங்களும் விழிப்புணர்வு அளித்து நம்பிக்கையூட்டி வந்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்வந்த ஸ்பேனிஷ் காய்ச்சல் பற்றிய செய்திகளைச் சமூக வலைத்தளங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் பேசிவந்தன. நோயின் முழு உக்கிரம் கணிக்கப்பட முடியாமல் இருந்தது. நிமோனியா நோய் போல் நுரையீரலை அந்த நோய் பாதித்தது. விஞ்ஞானிகள் வைரஸின் ரகம் கண்டுபிடித்து, கோவிட்-19 (கொரோனா வைரஸ் டிசீஸ் 2019) என்று தொற்றுநோய்க்கு பெயர் சூட்டினார்கள்.
இந்தியா மொத்தமும் முழு அடைப்பில் இருந்தது. மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை அஞ்சல்துறை விடுமுறை அறிவித்தது.
பிரவீன், பழைய தேவாலயத்து பள்ளித் திண்ணையின் நித்திய கல்யாணி பூக்களோடு அமர்ந்திருந்தான். காற்றில் நடனமாடும் பிங்க் நிறப் பூக்கள், பிரவீனுக்குத் துணையாய் பேசிக் கொண்டிருந்தன.
அந்தப் பூக்களில் இருக்கும் அமைதியைத்தான் மனம் எப்போதும் தேடியது.
தொடர்ந்து துரத்திவந்த பயத்தின் கிரீச்சொலிகள் நின்று போய்விட்டிருந்தன. தூக்க மாத்திரைகள் தராத தூக்கம், அம்மாவை இனிமையாக தழுவ தொடர்ந்திருந்தது. அவளுக்கான தோட்டம், அவளுக்குக் கிடைத்துவிட்டிருந்தது. எல்லாம் கிடைத்தபின் மீண்டும் எடுக்கும் ஒரு முடிவால், கிடைத்ததனைத்தையும் சூன்யமாக்கிவிட்டு, மீண்டும் ஓட்டத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியாகிவிடும்.
அந்த முடிவு அவசரமானதா?
‘இப்பயும் ஒன்னும் கெட்டுடல. லெட்டர்தான் அனுப்பலல்ல… ஜாப்ல கன்டினியூ பண்ணிக்கிறேன் சார்னு சொல்லிடு… அப்டே நைசா சொல்லிடு,’ அப்பாவுக்கு கொக்கு கலர் காரும், கவர்மெண்ட் உத்தியோகமும் ஒன்றுதான்.
‘கரோனாவும் வந்துருச்சு. இருந்த வேலையும் வேணாம்ன்ட. என்னைக்குத்தான் யா என் பேச்ச நீ கேக்கப்போற?’ மேனகாவும் தளர்ந்துவிட்டாள்.
ஒரு வேதாளம்போல் தன் மகனுக்கு தான் பாரமாகிவிடக்கூடாது என்ற எண்ணம், அம்மாவை பிரவீன் முடிவில் அதிகம் தலையிடாமல் தடுத்தது. உள்ளூற அவளுக்குள் ஒரு பயம்… என்ன செய்வான் தன் மகனென்று. எந்த முடிவுக்கும் ஒரு மனம் இருக்கட்டும் என்று தன்னைத் தயார் செய்துகொண்டாள்.
பிரவீனும் நிறைந்த அனுபவத்தில் அந்த முடிவை எடுக்கவில்லை. தனக்குள்ளும் இருக்கும் சந்தேகங்களை வெளிக்காட்டிக் கொண்டால், கிடைத்த சுண்டுவிரல் இடைவெளி கொண்டு முழு ஆளையும் இஷ்டத்துக்கு இழுத்துவிடும் இந்தச் சமூகம் என்று எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.
எவ்வளவு காலம் அவசரம்? எவ்வளவு காலம் விரைவு?
எவ்வளவு காலம் பொறுமை? எவ்வளவு காலம் தாமதம்?
யாரிடத்தில் பதிலுண்டு?
யாருடைய அனுமதியும் கேட்காமல், அந்த மணல் கடிகாரம் இரகசியமாய் வந்து அலுவலக மேசை மேல் ஏறிக்கொண்டது. தொடர்ந்து மணல் இறங்கிக்கொண்டே இருந்தது.
விடுமுறை முடிந்து அலுவலகம் திரும்பியபோது, புங்கைமர நிழலில் சில பாட்டிமார்களும், தாத்தாமார்களும் கூடியமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த நோய்த்தொற்றுக்கு அஞ்சியவர்களாக தெரியவில்லை. அரசு ஆணைப் படி, அவர்கள் எந்தச் சமூக விலகலையும் கடைபிடிக்கவில்லை. பயமின்றி தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
‘ஏன் கண்ணு? குர்ரூனாக்கு கவர்மெண்டல பணம் போடுறாங்களாமே? போஸ்ட் ஆஃபீஸ் மூலையமாவா வருது?’ அதில் ஒரு தாத்தா கேட்டார். வேட்டி, அவர் இடுப்பில் ஒரு கச்சைபோல் சுருண்டிருந்தது. கரும்பச்சை அன்டர்வேர் தரையில் அவரோடு அமர்ந்திருந்தது.
‘ஏரிவேலைக்கும் கட்டட வேலைக்கும் போஸ்ட் ஆஃபீஸ் வழியா பணம் வரும். மத்தபடி வரதெல்லாம் ரேஷன் கடைல வாங்கிக்கலாம்’ பிரவீன் சொன்னான்.
‘சேரி, நான் பின்ன பணம் குடுத்தாங்கன்னா அத எடுத்துட்டு வரேன். ஒரு அக்கௌண்ட் போட்டுத் தாயேன்,’ அதே தாத்தா கேட்டார்.
‘எடுத்துட்டு வாங்கய்யா. அந்தப் பாப்பா இருக்கும் போட்டுக்கலாம்’
‘ஹேன். நீயே முன்ன இருந்து சீக்கிரம் புக்க வரவெச்சி குடு!’
‘இந்த மாசத்துல நான் போயிருவேன் தாத்தா வேலைய உட்டு. நீங்க முன்னாடியே வந்துட்டா போட்டுத் தர்றேன். இல்லனா பாப்பா போடும்’
‘ஏன்?’ இழுத்துக் கேட்டார். ‘ஏன் வேலைய உட்டுப் போற?’
‘வேற எடத்துல வேல வந்துருக்கு தாத்தா. அதான்’, அடுத்த சமயோஜித பொய்.
‘சென்னைலியே வா மறுபடி?’ அவரே கேட்டுக்கொண்டார்.
‘ஆமா. அங்கதான்…’
தீக்ஷா, கதவு மூடாமல் திறந்திருக்கும் தன் வீட்டுக்கூடத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில், கால்மேல் கால் போட்டுக்கொண்டு, கைகளைத் தலைக்கு வைத்து படுத்திருந்தாள்.
கதவைத் திறந்ததும், அலுவலகம் முழுக்க எலிப்புழுக்கை நாற்றம் வீசியது. தரையெங்கும் மண் கொட்டியிருந்தது. ஜன்னலில் சிலந்தி, வலைப் பின்னியிருந்தது.
தரையைப் பெருக்கி ஒட்டடை அடித்துவிட்டு வந்து, நாற்காலி அருகில் மேசையை இழுத்துக்கொண்டு பிரவீன் அமர்ந்ததும், டிராவரின் வலப்பக்க ஓட்டையில் இருந்து ஒரு எலி அவனுடைய புறங்கை மேலேறி ஓடியது.
டிராவருக்குள்ளும் மற்ற இடங்களிலும் இருந்த சில முக்கிய ஆவணங்களில், எலி ‘குறுநீர்’ பெய்து வைத்திருந்தது. பக்கத்தில் அவசர இடத்தில் போய்க்கூட பெய்யாமல், அவசர அவசரமாய் ஆவணங்களில் பெய்து வைத்திருந்தது. சில நோட்டுகளையும், தாள்களையும் கொறித்து வைத்திருத்தது. நல்ல வேளை முக்கிய ஆவணங்கள் தப்பித்திருந்தன. தட் மஸ்ட் பி ‘த ஃபினிஷர்ஸ் லக்’! பணி விலகும்போது இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி பணியைவிட்டு விலக்காமல் இழுத்தடிக்க முடியும். பிரவீன் எஸ்கேப்ட். பட், திஸ் டைம், வித்தௌட் எனி பிரிகாஷன்!
அஞ்சலகம் இயங்க ஆரம்பித்திருந்தாலும், வேலையொன்றும் அதிகம் இல்லை. போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததால், கடிதப்பையும் சரிவர வருவதில் சிரமம் இருந்தது. அதையே காரணமாக்கிக் கொண்ட பேப்பர் ராக்கெட், விடுமுறைக்கு வீடு சென்றதிலிருந்து அலுவலகம் திரும்பவில்லை. ‘பெண்’ என்ற சலுகையில் அலுவலகம் வராததற்கு காரணம் கூறி, இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸிடம் சம்பளம் குறையாமல் அந்தச் சூழலைத் தனக்கு சாதகம் ஆக்கிக் கொண்டாள்.
பிரவீனே அவ்வப்போது வரும் கடிதங்களையும் கொடுத்துக்கொண்டு, அலுவலக வேலையும் சேர்த்து கவனிக்க வேண்டியதாயிற்று.
நோய்த்தொற்று சூழலில் பணியாளர்களை வற்புறுத்தி அழைக்க முடியாமல் இருந்த அஞ்சல்துறை, ‘கிராம அஞ்சல் ஊழியர்கள், தாங்கள் பணிசெய்யும் அந்தந்தக் கிராமங்களில்தான் தங்க வேண்டும்’ என்ற அடிப்படை விதிமுறையைக் கொண்டு, அனைத்து பணியாளர்களும் அலுவலகத்துக்கு வந்தாக வேண்டும் என்று ஆணையிட்டது.
திருக்கோவிலூர் அஞ்சல் உட்கோட்டமும், முதியோர் பணம் எக்காரணத்தை முன்னிட்டும் ஒத்திவைக்கப்படக்கூடாது, உரிய நேரத்தில் மக்களிடம் அவரவர் வீடுகளிலேயே, அந்தந்தத் துணை கிளை அஞ்சல் அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என்ற அவசர ஆணையைப் பிறப்பித்தது.
வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியிருந்த தினக்கூலிகளின் வாழ்க்கை அல்லலுக்கு உள்ளாகியிருந்தது. அரசு தரும் உதவிப் பணத்தை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘ஏம்பா… மகா வந்துட்டாளா வேலக்கி?’ பேச்சியம்மா சரியான நேரத்துக்கு ஃபோனடித்தாள்.
‘இன்னும் இல்லயே மா’
‘அவ வரலைன்னா நீ ஒன்டியா எப்டி குடுப்ப ஒஏபி காச? அறுவது ஒஏபி யாச்சே! சைமன் வேற ஒரே நாள்ல டெலிவரிக் காட்டணும்னு காச்-மூச்னு கத்த மாட்டான்? புதுசா வந்துட்டு வேல தெரியாம நம்மள எழவெடுப்பான்பா… நாங்க வேணும்னா ஹெல்புக்கு வரட்டுமா?’
ஆடு நனைவதை நினைத்து நரி வருந்தியது.
‘தேவனா சொல்றேன்மா,’ வலுக்கட்டாயமாக வந்த சகாயத்துக்கு நோ, தேங்க்ஸ் சொல்லியது மனம்.
மகாவுக்கு, பிரவீனே ஃபோனடிக்க நினைத்த நேரத்தில், அவளிடமிருந்து ஃபோன் வந்தது.
‘அண்ணா. குட் மார்னிங் ணா,’ புதிதாக ஆரம்பித்தாள் அந்தக் காலையை.
‘சொல்லுமா. குட் மார்னிங்.’
‘அண்ணா. இங்க அப்பாகிட்ட இப்போ வண்டி இல்லணா. எப்படிணா நான் வரர்து?’
‘வேற யார் வண்டிலையாவது வா மா.’
‘அப்படி யாரும் இல்லண்ணா… அதான் பாக்குறேன். அப்ளை பண்ண ஸ்கூட்டி வந்துருந்துச்சினாகூட இந்நேரம் வந்துருப்பேன் ணா’
‘சரி. அப்ப என்ன பண்ணலாம்னு இருக்க. நீயே சொல்லு.’
‘அதான்ணா. கஷ்டமா இருக்கு சார் வர..னு சைமன் சார்ட சொன்னேன். அவர் உங்களையே ஒ.ஏ.பி சேத்து பாத்துக்கச் சொன்னாருணா,’ அவளின் சின்ன பிள்ளைக் குரலில்.
‘ஓ! அப்படியா? சரி. சரி… அவர் எனக்கு இன்னும் எதுவும் சொல்லல. எனக்கு அவர் கால் பண்ணட்டும், பேசிக்கிறேன். அதுவரைக்கும் நீ இன்னைக்கு லீவுனு ரிமார்க் எழுதிக்குறேன்’
‘ஏன் ணா? அட்ஜஸ்ட் ஏ பண்ணமாட்டிக்றீங்க. முடியாதப்பதான ஹெல்ப் கேக்குறேன்?’
‘உன்ன லீவ் போடக்கூடாதுனு நான் தடுக்கலையே’
‘உங்களுக்கென்ன ணா? — நீங்க ஓ.ஏ.பி குடுக்க மாட்டீங்க, அதான? நான் பேச்சியம்மாவ குடுக்க சொல்றேன். நீங்க சும்மா இருந்தா போதும்.’
‘சரி. அப்போ அதுல பேயிங் அத்தாரிட்டி கையெழுத்து உனக்கு லீவ் அப்ரூவ் பண்ணவர போடச்சொல்லு’
‘ஏன்ணா இப்படி பண்றீங்க?’ மரியாதை வார்த்தைக்குள் எரிச்சல் தலையை முட்டிக்கொண்டது.
‘அவங்க கையால குடுத்தாலே அம்பது ரூவா வாங்காம தரமாட்டாங்க — இதுல பேயிங் அத்தாரிட்டில அவங்க கையெழுத்தில்லாம ஒரு வேலைய பண்ணச் சொல்லுவ. அவங்க குடுத்தாங்களா இல்லயானு தெரியாம கண்ண மூடிக்கிட்டு நான் கையெழுத்து போடணுமா?’
‘சரி ணா. விடுங்க. நான் பாத்துக்குறேன்.’
‘அப்போ ஃபோன வை!’
உடனடியாக ஒரு எதிர்வினையை எதிர்பார்த்தான். எதுவும் நடக்கவில்லை. பின்னர், சப்-போஸ்ட்மாஸ்டர் சைமனிடம் இருந்து எதிர்பார்த்தபடியே அழைப்பு வந்தது.
‘பிரவீனு! ஓஏபிலாம் குடுத்துடு, ன்னா?’
‘ஏன் சார் ஏபிபிஎம் லீவா?’
‘மகா வர முடியலையாம். அதான், அட்ஜஸ்ட் பண்ணி குடுத்துரு என்னா?’
‘நெறைய இருக்கு சார். தனியா குடுத்து முடிக்க முடியாது.’
‘பேச்சியம்மாவ ஹெல்ப்க்கு வெச்சி பண்ணி முடி’
‘அப்போ, பேயிங் அத்தாரிட்டி கையெழுத்து யாரு சார் போடுறது?’
‘அதெல்லாம் பிபிஎம் நீயும் போடலாம் போடு’
‘சார். அவங்க காசு வாங்காம குடுக்க மாட்றாங்க. அவங்க லீவ் ட்யூட்டியா பாக்கலணா, அவங்க கையெழுத்து போடலனு பொறுப்பில்லாம, காசையே குடுக்காம ஏமாத்துனாலும் ஏமாத்துவாங்க. அவங்க மேல நம்பிக்கை இல்லாம நான் எப்படி கையெழுத்து போடுறது?’
‘அவங்க என்னமோ பண்றாங்க… நீ உன் வேலைய மட்டும் பாரு, புரிதா? படிச்சுட்டு வந்துட்டோம்னு பெரிய புடுங்கி மாதிரி பேசிக்கிட்ருக்காத. வயசுக்கேத்த மாதிரி பேசணும் — எல்லாம் உன் வயச தாண்டி பாத்துட்டுத்தான் வந்துருக்கோம். சைன் போடுனா போடணும், புரிதா?’
‘போட முடியாது சார்’.
‘என்னது?’ அதட்டினார்.
‘சைன்லாம் போட முடியாது சார்’, சத்தமாக.
‘நீ ஃபோன வை. நான் பாத்துக்குறேன்,’ அச்சுறுத்தினார்.
‘முடிஞ்சத பாருங்க சார். இனி கால் பண்ணி இதயே மட்டும் திரும்ப பேசாதீங்க’, படக்கென்று துண்டித்துவிட்டான்.