Featured Image

‘என்ன? நைட்டு நான் தூங்குன பிறகு டெக்ஸ்ட் பண்ணியிருக்க?’

‘ஆமாம். கால் பேசணும்’

‘ஓகே. நான் காலேஜ் கெளம்பிட்டேன். பஸ் ரஷ்… ஈவ்னிங் கால் பண்றேன்’ 

‘ஓகே. டேக் கேர்’, அன்சீன் மெசேஜ்.

பிரவீன் அலுவலகம் கிளம்பும் நேரம். ஃபோனை வைத்துவிட்டு, குளிக்கச் சென்றான்.

மனதுக்குள்ளேயே மேனகாவிடம் பேச வைத்திருந்ததைப் பேசி ஒத்திகைப் பார்த்துக்கொண்டே குளித்தான். கதகதப்பான புது போகினி தண்ணீர். குழாயில் பிடித்த அன்றைய தண்ணீர். கதகதப்பான குளியல், யோசனைக்கு உகந்தது. ஸ்நான நேர தியானம்!.

தேவையானபோது வந்துவிழாத விளக்கங்கள், துண்டு துண்டாகி விலாசம் இல்லாமல் போய்விடும். கரை சேராமல் வீணாய் அலைந்து, குழப்ப மனோநிலையை மட்டுமே தக்கவைத்துக் கொள்ளும்.

துண்டாகிவிடாமல், தோன்றுவதையெல்லாம் அவள் ஒருத்தியிடமாவது சொல்லிவிட அசைப்போட்டது, அவன் மனம்.

தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்

தேடுங்கள் கிடைக்கும் என்றார்…

எதிர்வீட்டு ஒலிப்பெருக்கியின் பாடல் கேட்டது.

சற்றுநேரத்தில், சிந்தனையை ஓரம் தள்ளிவிட்டு, பாடல் வரிகள் வந்து மண்டையில் முணுமுணுப்பாய் ஏறிக்கொண்டது.

தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்

தேடுங்கள் கிடைக்கும் என்றார்…

பிரவீன் அதையே முணுமுணுத்தபடி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். 

‘அண்ணா’, அந்தப் பையன் கூப்பிட்டான்.

பிரவீன் ஜன்னலுக்கு வெளியே நின்ற பையனைப் பார்த்தான். இதற்குமுன் அவனைப் பிரவீன் பார்த்ததே இல்லை.

‘சொல்லுடா தம்பி’

அந்தப் பையன் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நெளிந்தான்.

‘சொல்லு…’ மென்மையாக கேட்டான்.

உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தயங்கினான்.

பிரவீன் கொஞ்சம் நேரம் அவனையே கவனித்தான்.

‘இத வாங்கிக்கிறீங்களா?’ கையில் ஒரு சிற்றேடு வைத்திருந்தான்.

‘என்னது அது?’

‘குலுக்கல்’

‘என்ன குலுக்கல்?’

‘கிறிஸ்மஸ் குலுக்கல்’

‘சரி. நான் என்ன பண்ணனும்?’

‘பத்து ரூவாதான். வாங்கிக்கிறீங்களா?’

‘என்ன என்கிட்டயே கேன்வாசிங்கா?’ சிரித்துக்கொண்டே விளையாட்டாய்க் கேட்டான்.

ஒரு வகையில், ஜன்னல், கண்ணாடிபோல தெரிந்தது. ஜன்னலுக்கு வெளியில் இருந்த பையன், பிரவீனுக்குத் தன்னைப் போலவே தெரிந்தான்.

‘எனக்கு நீ கரெக்டா பதில் சொன்னா வாங்கிக்கிறேன். ஓகே வா?’

‘ம்ம்’, தலையாட்டினான்.

‘எனக்கு குலுக்கல் பத்தி தெளிவா சொல்லு!’

சிற்றேட்டைத் திறந்து காட்டிச் சொன்னான்: ‘பத்து ரூவா குடுத்தீங்கனா, உங்களுக்கு ஒரு பக்கம் கிழிச்சிக் குடுப்பன். உங்களுக்குப் ப்ரைஸ் உழுந்தா நீங்க இதுல எழுதித்தர போன் நம்பருக்கு கூப்புட்டுக் குடுப்பாங்க’.

‘என்ன பிரைஸ் குடுப்பாங்க?’

ஆர்வத்தோடு திறந்துகாட்டி, சீட்டில் இருக்கும் படத்தைக் காண்பித்து விளக்கினான்: ‘இதுல பாருங்க. ஃபர்ஸ்ட் ப்ரைஸ்க்கு குக்கரு. செகண்ட் ப்ரைஸ்க்கு தோசக்கல்லு. தேர்ட் பிரைஸ்க்கு ஃப்ளாஸ்கு’

மதிய வேளை முடிந்து நீண்டுபோன அலுவல் நேரம்… பிரவீனுக்கு ‘திடீர் பையன்’ துணையாய் இருந்தான். அவனோடு பேசுவதில் பிரவீனுக்கு சின்ன உற்சாகம் கிடைத்தது.

‘சரி. உனக்கு யாரு இத விக்க குடுத்தது?’

‘ஸ்கூல்ல’

‘ஸ்கூல்லயா? ஸ்கூல்ல எதுக்கு?’

‘குடுப்பாங்க’, எளிதாய்ச் சொன்னான்.

‘நீ என்ன கிளாஸ் படிக்கிற?’ ஆர்வத்தில் பிரவீன் கேட்டான்.

‘செவன்த் ஸ்டாண்டர்ட்’

‘உங்க வீடு எங்க? உன்ன பாத்ததே இல்ல நானு!’

‘பக்கத்து தெருலதான்’

‘அப்பா என்ன பண்றாரு?’

‘அப்பா இல்ல’

‘அம்மா?’

‘அம்மா இருக்காங்க…’

‘அப்பாக்கு என்ன ஆச்சு? அம்மா என்ன பண்றாங்க?’

‘அப்பா செத்துட்டாரு. போன மாசம்தான்’

‘அம்மா?’

‘அம்மா எல்லா வேலையும் செய்யும்‌. வீட்டு வேல. கொல்லிக்குப் போவும். எல்லா வேலையும் செய்யும்‌’

துயரம் இம்மியளவும் இல்லாமல் ஒரு மாதத்துக்குமுன் அப்பா இறந்ததை அவன் அவ்வளவு இயல்பாக சொன்னது, பிரவீனுக்கு ஆச்சரியம். அம்மாக்கள் மட்டும் இருந்து வளரும் குழந்தைகள், தந்தையை இழந்த வலி பெரிதும் தெரியாமல் வளர்ந்துவிடுகிறார்கள். அம்மாக்களால் மட்டும் எப்படி..? ஒரு கணத்தில் திடமான உணர்வு உள்ளுக்குள் நுழைந்துவிட்டு மனம் இயல்பானது.

‘சரி. ஸ்கூல்ல எதுக்கு விக்க சொல்றாங்க?’ பிரவீன் தொடர்ந்தான்.

‘கிளாஸ்ல எல்லாருக்குமே தருவாங்க. இருக்கர்துலியே அதிகமா வித்தவங்களுக்கு லஞ்ச் பாக்ஸ் பிரைஸ் தருவாங்க’

‘ஒருத்தருக்கு மட்டுமா?’

‘இல்ல. ஃபர்ஸ்ட் மூணு பேர்க்கு’

‘குடு!’, குலுக்கல் சிற்றேட்டை பிரவீன் வாங்கிப் பார்த்தான்.

‘என்ன, முப்பது சீட்டுக்கு மேல வித்துட்ட போல’

‘ஆமாம். அதுல ஏழு சீட்டுக்கு நான்தான் காஸ் போட்டேன் — எழுவது ரூவா’

‘எதுக்கு அப்படி போட்ட? பேர்லாம் வேறையா இருக்கு?’

‘ஆமா. நெறையா முடிச்சாதான் லஞ்ச் பாக்ஸ் கெடைக்கும்!’

‘பேரெல்லாம் வேறையா இருக்கே. உன் காசுனு சொல்ற?’

‘ஆமா. சித்திப் பாப்பா, ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் பேர்லலாம் போட்டன்’

லஞ்ச் பாக்ஸைவிட அதிக பணம் செலவு பண்ணி நாலு பேருக்கு முன்னாடி பிரைஸ் வாங்குறதுல என்ன இருக்கு? நினைத்தாலும், அந்தக் கேள்வியை சிறுவனிடம் கேட்க, பிரவீன் மனம் மறுத்தது. ஒருவேளை, அவன் குழந்தைத் தனத்தை அந்தக் கேள்வி குலைத்துவிட்டால்? பணம்தான் முக்கியம் என்று அவன் நினைத்து விட்டால்? பிரவீன் எதுவும் கேட்கவில்லை.

பிரவீன் குலுக்கல் சீட்டொன்றில் தன் விலாசத்தையும், ஃபோன் நம்பரையும் நிரப்பினான். 

‘சரி, எனக்கு ஒன்னு மட்டும் சொல்றியா?’

‘ம்ம், கேளுங்க’ அந்தப் பையன் குலுக்கல் சீட்டு நிரப்பப்பட்டதில் குஷியாகி வேகமாய்த் தலையசைத்தான்.

‘உனக்குத் தர லஞ்ச் டப்பா நூறு ரூவா இருக்குமா?’

‘இருக்கும்.’

‘இப்பவே நீ எழுவது ரூவா செலவு பண்ணிட்ட. இன்னும் ஜெயிக்கணும் ஜெயிக்கணும்னு நெனச்சி மேல மேல உன்னோட காசையே போடுவ.  அப்படிதான?’ 

‘இல்ல’ என்று தலையசைத்தவன், மெல்ல ‘ஆமா’ என்று தலையாட்டினான்.

பிரவீன் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கிவிட்டு, பிறகு தன்னுடைய குலுக்கல் சீட்டைக் கிழித்துக்கொண்டு பத்து ரூபாய் கொடுத்தான்.

சிறுவன் இடக்கையில் சிற்றேட்டை வாங்கிக்கொண்டு, வலக்கையில் பணம் வாங்கி, தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். 

‘இப்போ நீ எழுவது ரூவா செலவு பண்ற… அப்றம் கூட இருக்கவங்கள முந்தணும்னு இன்னும் அம்பது ரூவா போடுவ! நூத்தி இருவது ரூபா செலவு பண்ணி அந்த நூறு ரூவா லஞ்ச் பாக்ஸ் வாங்க போறியா? 

‘ஒருவேள நீ ஃபர்ஸ்ட் மூணுல வரலனா, உன் பணம் நூத்தி இருவது ரூவா போயிடும். நீ வேல செஞ்சதுக்கு என்ன குடுப்பாங்க?’

‘ஒன்னும் குடுக்க மாட்டாங்க’

பிரவீன் இன்னொரு பத்து ரூபாய் கொடுத்தான்.

‘எதுக்கு?’ குலுக்கல் பையன் கேட்டான்.

‘இது உனக்கு.’

சிறுவன் வாங்கிக்கொண்டான்.

‘இதையும் குலுக்கல்ல போடப்போறியா?’

ஒரு அதிர்வின் வேகத்தில் இல்லையென்று தலையாட்டினான். 

‘நிச்சயமா?’

‘ம்ம்’ என்று உறுதியாய் தலையசைத்தான். 

‘நீ தேவையில்லாம உன் காசு செலவு பண்ணாம இருந்தா, லஞ்ச் பாக்ஸ் மட்டுமில்ல. எல்லாமே வாங்கலாம்!’

சிறுவனுக்கு ஏதோ புரிந்தது. ஒரு அமைதியான புன்னகையோடு நின்றான்.  

ஒரு ரூபாய் கொடுத்து வாங்கும் மிட்டாய், அந்த ரூபாய்க்கு தகுந்தால் மட்டுமே இனிக்கும். ஒரு ரூபாய் மிட்டாய்க்கு, பத்து ரூபாயை இறைத்துவிட்டால், மிட்டாய் இனிக்காது. 

மிட்டாய் இனிக்காவிட்டால் பரவாயில்லை; வாழ்க்கை கசக்க கூடாது. பிரவீனுக்கு தன் உளச்சான்றின் மதிப்பு எதைக்காட்டிலும் அதிகமாகப்பட்டது. 

அமலூரின் மழலைக்குமுன் நிமிர்ந்த தலையோடு இருப்பது எளிது. அவளுடைய அறியாமை அப்படிப்பட்டது.

ஆனால், மனக்கண்ணாடியின் கேள்விகளுக்குமுன் குனியாத தலையும் கட்டாத கைகளுமாய் இருப்பது தானே சுதந்திரம்? மனசாட்சியின்முன் வளையும் முதுகு, கூனாகி விடும். அந்தக் கூனோடு வாழ்வது லூர்துமரி கிழவியின் கூன் வாழ்க்கையைவிட மிகக் கடினமானது.

பொழுது சாய்ந்திருந்தது…

மேனகா அனுப்பியிருந்த வாட்சப் செய்திகள் கவனிக்கப்படவில்லை. செய்திகளைக் கண்டதும், பிரவீன் அவளை அழைத்தான்.

‘ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு?’

‘ஒன்னும் இல்ல. அப்படியே இருக்கு’

‘சொல்லு. ஏதாச்சும் பிரச்சனையா?’

பிரவீன் ஒத்திகைப் பார்த்த சொற்கள் சோர்வில் கிடந்தன. சட்டென்று ஒப்பிக்க முடியவில்லை.

‘கால் பண்ணனும்னு சொல்லிட்டு பேசாம இருந்தா எப்படி? என்ன ஆச்சு?’

‘இல்ல… உன்ன பாக்க வர்ரலாமானு தோணுது’

‘அப்போ வா’

‘ஆனா, இங்க பண்றதுலாம் புடிக்கவே மாட்டேங்குது. ஒரு நாள் ரெண்டு நாள் லீவுக்குள்ள எல்லா பிரச்சனையும் பண்ணி வெச்சிட்றாங்க’

‘அப்போ வர்லயா?’ குரல் இறங்கிவிட்டது.

‘தெரியல. டென்ஷன் ஆகுது’

‘எப்படியும் பாத்துதான ஆகணும்.’

‘என்னது?’

‘எப்படியும் இந்த வேல பாத்துதான ஆகணும்! நீ என்ன பாக்கவர முடியலங்குறது கஷ்டமாதான் இருக்கு. நான் தயங்குனப்பவே இந்த வேலக்கி வந்த. ஜஸ்ட் மூணு வருஷம் இந்த வேலைல இரு. அப்றம் நானும் கூட ஹெல்ப் பண்றேன்.’

‘ஏது? மூணு வருஷமா!’

‘பின்ன? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு. எங்க அப்பாகிட்ட உன்ன பத்தி என்னனு சொல்றது?’

‘அதெல்லாம் ஏதாவது பண்ணிக்கலாம். இப்போ பண்ண ஆரம்பிச்சாகூட ப்ளாகிங் பிக்அப் ஆயிடும் — தேவனா, கன்டென்ட் ரைட்டிங் பண்ணிக்கிறேன்’

‘அதெல்லாம் இப்போ ஒன்னும் வேணாம். இடைலயே நம்மள பத்தி வீட்ல தெரிஞ்சிடுச்சினா நீ யாருனு சொல்றது? — ஜஸ்ட் த்ரீ இயர்ஸ் எனக்காக இதே ஜாப்ல கன்டினியூ பண்ணு… புடிக்கலனா போஸ்டல் அசிஸ்டன்ட் எக்சாம் எழுதி பாஸ் பண்ணி, அப்டியே ப்ரமோஷன்ல போயிடு.’

‘ஹே! எனக்கு இங்க எதுவுமே புடிக்கல. எத வச்சி மூணு வருஷம்? என்னயும் தப்போட அட்ஜஸ்ட் பண்ண சொல்றியா?’

‘எனக்கு மட்டும் பி.டி.எஸ் புடிச்சா படிக்கிறேன்? நான் படிக்கல? விதியேனு… இந்தக் கருமம் புடிச்ச காலேஜ்ல… உனக்கென்ன?’

‘இதுல எனக்கு புடிக்கிறது, புடிக்கலைங்கிறது மட்டும் இல்லனு உனக்கு ஏன் புரியல?’

‘எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணு. செல்ஃபிஷா இருக்காத.’

‘நான் எப்படி இதுல செல்ஃபிஷ்?’

‘உன்ன பத்திமட்டும் யோசிக்கிற? அப்போ மட்டும் அம்மாக்கு வில்லேஜ் சைட் ஒத்துவரும். சம்பளம்கூட வரும்னு வந்த? இப்போ அம்மா, நான்லாம் கண்ல படலையா?’

பிரவீன் பதில் தரவில்லை.

‘ச்ச… ஏதாச்சும் ஒன்னு சொன்னா ஒடனே சைலண்ட் ஆயிரு’, அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அந்த அமைதி பரவ ஆரம்பித்தது. அந்த அமைதியில் அவன் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நேரத்தில்தான், சப்-போஸ்ட்மாஸ்டர் சைமனிடமிருந்து அழைப்பு வந்தது. 

முதியோர் பணம் பெற்றவர்களின் கடந்த மூன்று மாதங்கள் டெலிவரியான ஓ.ஏ.பிகளின் பதினாறு இலக்க எண்ணை, ஓ.ஏ.பி ரெஜிஸ்டரைப் பார்த்து தேதியோடு சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். சப்-ஆஃபீஸில் முறைப்படி முடிக்காத அலுவலகக் கணக்குகளை, விரைவில் ஒழுங்குபடி முடிக்கச்சொல்லி கோட்ட அலுவலகத்திலிருந்து ஆணை. சைமன் தள்ளிவைத்த அலுவலுக்கு, ஏறிவந்தது நெருக்கடி!

ஊர் முழுக்க மின்வெட்டு. கையில் ஒரு கை மின்விளக்கையும், அலுவலக சாவியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *