அடுத்தடுத்த நாட்களில் எல்லாம் விரக்தி அதிகமானது. அலுவலகம் அசிங்கமாய்த் தெரிந்தது. கதவில்லாத ஜன்னல்கள் கொண்ட அலுவலகத்துக்குள்ளும் காற்று புகாமல் நெஞ்சடைத்தது. மனசாட்சி, பூஞ்சை படர்ந்த கருப்பு ‘பன்’னாகி இருந்தது. அதைத் தலைவிரி கோலத்துடன் பிய்த்து தின்று கொண்டிருந்தது, பிழைப்பு.
ஒட்டுமொத்தமாக எல்லாம் கசந்தது. கெஞ்சி நிற்கும் வயிற்றுக்காக, உணவைத் தேடிப்போன பிழைப்பு, மீன்போல் தூண்டிலில் மாட்டிக்கொண்டு துடித்தது. ஆட்டிவைத்தால் ஆடும் கைபொம்மையாக மாறுவது பிடிக்காமல் சிந்தனை குமட்டியது. பிழைப்புகாக ஏய்ப்புகளை வழக்கப்படுத்திக்கொள்ள வற்புறுத்தும் வாழ்வு, அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தது.
பெரிய, கரும்பழுப்பு மரப்பெட்டியைத் திறந்து, அதிலிருந்து ஐந்து அங்குல தடிமன் ஏட்டை எடுத்துக்கொண்டு, பெட்டியின் மீதே அமர்ந்துகொண்டான். தொந்தரவு செய்யும் மனம், அவனை சோர்வுற செய்திருந்தது.
கடைசி ஆய்வு தேதிக்கு, ஏட்டின் பக்கங்களைப் புரட்டினான்.
பழைய ஏட்டின் தக்கையான பழுப்பு-மஞ்சள் தாள்களில் அதிக கோந்துடன் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது, மூன்று பக்க இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்! மூன்று பக்கங்களின் மத்தியிலும், ஓரங்களிலும் கோந்தில் ஊறியிருந்த தாள், காய்ந்து நெளிந்திருந்தது.
ரிப்போர்டின் முதல் தாளின் வலப்பக்க மேலோரத்தில் மடம் கிளையின் கூர் மழுங்கிய அஞ்சல் முத்திரையின் வட்ட அச்சு…
அதில் 21.11.19 என்ற தேதி இருந்தது.
அட்டவணை வடிவில் அந்த ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டிருந்தது.
பி.பி.எம் இஸ் இன்ஸ்டரக்டட் டு க்ளீன் த சீல் அன்ட் யூஸ், அட்டவணையின் ஒரு கட்டத்தில் அச்சடித்திருந்தது.
இதுவே 2018 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளின் வருடாந்திர இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்களிலும் அச்சடித்திருந்தது.
பி.பி.எம் இஸ் அவேர் ஆஃப் த கிவன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அன்ட் த சேம் இஸ் எக்ஸ்ப்ளெயின்ட் இன் ஹிஸ் மதர் டங், அட்டவணையின் இறுதிக் கட்டத்தில்.
பழைய கிளை அஞ்சல் அலுவலர்களுக்கேற்றவாறு, நீண்டகாலமாக மாற்றப்படாமல் அனுசரித்து நிற்கும், அறிக்கையின் பழைய தயார் முறை அது.
அந்தந்த கிராமங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு, தாய்மொழியில் ஆங்கில அறிவிப்புகளை புரியும்படி விளக்கச்சொல்ல, அஞ்சல் அதிகாரிகள் ஏற்படுத்தி வைத்த பழைய முறை அது.
திஸ் போஸ்ட் ஆஃபீஸ் ஹேஸ் டூ போஸ்ட் பாக்ஸஸ். ஒன் பாக்ஸ் இஸ் இன் குட் கன்டிஷன் அன்ட் தி அதர் பாக்ஸ் இஸ் டு பி ரிபேர்ட் அன்ட் பெயிண்டட், இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் கையொப்பத்துக்கு மேல் அச்சிட்டு அனுப்பிய பொறுப்பான கருத்துரை.
அலமாரியின் கடைசி அடுக்கில், தரையில் பதிந்திருக்கும் சிவப்பு துரு வளையங்களோடு ஒடுங்கிய வாலிபோல், மூன்று வருடங்களாய் மூச்சுப் பேச்சின்றி கிடந்தது கொழுந்திராம்பட்டு தபால் பெட்டி. ரிப்பேர் & பெயிண்டிங் சேவையை மேலிடத்திலிருந்து எதிர்பார்த்து மூன்று வருடங்களாய் காத்துக் கொண்டிருக்கிறது.
‘அதெல்லாம் இருக்கலாம்… இங்க…யே இருக்கலாம்,’ அலுவலகத்தை வீட்டில் மாற்றிக்கொள்வதற்கான உரிமையளிக்க மறுத்துவிட்டார் இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ்.
சூப்பர் சீனியரின் விளக்கத்தையும்கூட புறக்கணித்துவிட்டார்.
‘சார்… ஆமா சார்! இங்க கொஞ்சம் ட்ரபிளா இருக்கு… டிரிங்க்ஸ் பார்ட்டிங்க இங்க குடிச்சிட்டு பாட்டில ஒடச்சி வெய்க்கிறானுங்க. ஜன்னல் இல்லனா சேஃப்டி கெடையாது சார்’.
ஒரு மௌன ஆஃபீசர் பார்வையில் அதைக் கடந்துவிட்டு, தன் சிவப்பு மை பேனாவால் இன்ஸ்பெக்ஷன் டிக்குகளை அடிக்கத் தொடர்ந்தார்.
‘தம்பி… இது கவர்மெண்ட் பில்டிங். டிபார்ட்மெண்ட்ல ஆல்ரெடி கவர்மெண்ட் பில்டிங் கெடைக்குமானு தேடிட்ருக்கோம். கெடச்சத விடக்கூடாது. அட்ஜஸ்ட் பண்ணுங்க.’
‘சார். இங்க டிவைஸ்க்கு சுத்தமா சிக்னல் கிடைக்கல’
‘உங்க வீட்ல கெடைக்குதா?’ அதிகாரம் வீம்பு குரலில் ஒலித்தது.
‘அங்கதான் சார் தினம் காலைலயே பணம்போட்டு எடுத்துட்டு வர்றேன்’
‘அப்டிலாம் உங்க இஷ்டத்துக்கு பண்ணக்கூடாது. யாரக் கேட்டு அதெல்லாம் பண்றீங்க?’
‘எனக்கு முன்னாடி இருந்தவங்களும் அப்டிதான் சார் பண்ணாங்க’
‘அதெல்லாம் பண்ணக்கூடாது!’
‘அப்றம் எப்படி சார்? இங்கயும் சிக்னல் இல்ல…’
‘அதெல்லாம் கெடைக்கும் பா. கெடைக்கும்…’ உறுதியாகச் சொன்னவர், ஒரு சின்ன இடைவெளிவிட்டு, ‘இப்படிலாம் கொச்ச கொச்சனு எழுதக்கூடாது. தெளிவாப் பிரிச்சி எழுதுங்க. படிச்சப் பையன்தான நீங்க?’ அதட்டலோடு ஏட்டில் ஒரு பெரிய சுழி சுழித்தார்.
கையில் விரிந்திருந்த ஏட்டை மூடி பெட்டி மீது வைத்துவிட்டு, கண்ணைமூடி நுரையீரல் நிரம்ப ஒரு முறை மூச்சிழுத்து விட்டான். மேனகாவோடு பேச மனம் வேண்டியது. அவளுடனான பிரிவு சின்னதாய் வலித்தது. அவளை நேரில் காண வேண்டும்போல் இருந்தது. அவன் இன்னல்களைச் சொல்லி ஆறுதல் பெற வேண்டும் போல் இருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் முடியாது. ஞாயிற்றுக்கிழமைகளிலும்கூட அவனுக்கு கணக்குப் பிடிக்கும் நெருக்கடியிருந்தது. அவளால் கல்லூரி நாட்களில் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர முடியும். விடுமுறை நாட்களில் வீட்டில் சொல்லிவிட்டு அவள் வெளியே வர தகுந்த காரணங்கள் இல்லை.
கிட்டதட்ட அவளைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. பிரவீன் விடுப்பு எடுத்தால், அந்த நாட்களில் அலுவலில் குழப்பம் செய்துவந்தார்கள். அவனுடைய விடுமுறை நாட்கள் அவளுக்கும் விடுமுறை ஆனது.
‘ச்சே!’, மனம் எரிச்சலானது.
மேசையிலிருந்த சின்ன கீல்கட்டியைப் புறங்கையால் தட்டினான். வேகமாய் உருண்டோடி மேசையடியில் விழுந்தது.
கீல்கட்டியும்கூட எரிச்சலைத் தந்தது. கீல்கட்டி ஒரு வகையான தார் உருண்டை. அது, திருக்கோவிலூர் இரும்புக் கடையிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளப்படுவது. ஒழுங்குபட கோட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்படாத அரக்குக்கு அது மாற்று.
ஏற்கெனவே அரக்குக்காக அனுப்பியிருந்த பணத்தின் மணி ஆர்டர் ரசீது, மேசை ட்ராவரில் அப்படியே இருந்தது. கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அரக்கோ, அனுப்பி வைக்காததற்கு காரணமோ வரவில்லை.
அலுவலகத்தின் அடிப்படை தேவைகளுக்கு கேட்கும் கோரிக்கைகள், கிணற்றில் எறிந்த கல்லாகத் தங்கிவிடும். அலுவலகத்தின் பிஸ்னஸ் விங் மட்டும் பறந்து பறந்து அக்கௌன்ட் பிடிக்கும்.
‘இப்பல்லாம் செர்வீஸ் இல்ல, பிஸ்னஸ் ஆயிடுச்சு போஸ்ட் ஆஃபீஸ்’, பிஸ்னஸ் பறவைகளின் காலை, மாலை கீச்சொலிகள்.
இன்ஸ்பெக்டர் போஸ்ட்ஸ் எதிர்பார்த்த சில குமிழிகள் கைமாற்றப்படாததால், அலுவலகத்தை வீட்டில் மாற்றிக்கொள்ளும் உரிமையை பிரவீன் இழந்துவிட்டான். அவன் பிசினஸ் கற்றாக வேண்டும்; அதற்காக சில நேக்கு போக்குகளை கற்றாக வேண்டும்!