Featured Image

பெய்யும் பனியில் சட்டை ஈரமாகி, சில்லிட்ட உடம்பில் ஒட்டியிருந்தது. அவன் மூச்சுக்காற்று மட்டும் சூடாக வந்தது. மூச்சுக்காற்றின் வெப்பம் குளிரில் பரவி, கரைந்தது…

அந்நேரம் இரவு உறங்கிக் கொண்டிருந்தது. சத்தமில்லாமல், முன்செல்லும் தவளையின் பின்னே, இன்னொரு தவளையும் தொடர்ந்து போனது. முறையாக முன்னிருக்கும் தவளை இரண்டு குதி தாவியதும், பின்னுள்ள தவளை பாதை மாறாமல் இரண்டு குதி தாவித் தொடர்ந்தது… இரண்டும் இரகசியமாய் இரகசிய இடத்துக்கு நகர்ந்து போயின. முகம் தெரியாத இருட்டுக்கு. 

பிரவீன் பார்த்தான்.

சமையலறை கழிவுநீர் வாய்க்காலில் அவை குதித்துவிடும் என்று ஊகித்தான். மிதக்கும் அந்தப் பிணப் பாசியில். அந்த உயிரற்ற கருப்பு பாசியில். இரண்டும் வாய்க்காலைத் தாண்டி குதித்தன. ஒன்றையடுத்து ஒன்று. அம்மா நட்ட தக்காளிச் செடியை நோக்கி…

எட்டாம் வகுப்பு உயிரியல் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தது பிரவீன்  நினைவுக்கு வந்தது:

ஃப்ராக்ஸ் ஆர் ஆம்ஃபிபியஸ். தே செக்ஷ்யுவலி ரிப்ரோடியூஸ் இன் வாட்டர். மேல் ஃப்ராக்ஸ் ஹேவ் டூ இன்டீரியர் டெஸ்டிக்கில்ஸ் அன்ட் ஃபீமேல் ஃப்ராக்ஸ் ஹேவ் ஓவரீஸ்.

ஆனால், வாய்க்காலில் இருக்கும் நீரைத் தாண்டி ஏன் அவை எங்கோ ஓட வேண்டும்?

அவை செடிகளின் புதரில் எங்கோ போய் மறைந்துகொண்டன. மறைவாய். இரகசியமாய்…

பிரவீன் பார்த்தான்… பேருந்து நெரிசலில் மற்ற பயணிகளைக் கசக்கிக்கொண்டு கடைசி நேரத்தில் தங்கள் நிறுத்தத்தில் இறங்குபவர்களோடு தானும் ஒருவராய், தளர்ந்த, சாம்பல் வண்ண கால்சட்டை அணிந்திருந்தவர், அலையோடு அலையாய் மோதிவந்து பச்சை புடவை பெண்மணி பக்கத்தில் நின்றதை அவன் பார்த்தான்.

கழன்றுவிடாமல் தன் கீழுடுப்பை இரண்டு கைகளாலும் ஏற்றிவிட்டுக் கொண்டார். தொந்தியின் இடைவெளிதான் அந்தப் பெண்மணியிடத்திருந்து அவரைப் பிரித்து வைத்தது. அந்தப் பெண்ணின் கழுத்தை உற்றுப்பார்த்தார். ஐநூறு ரூபாய் பணத்தைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்து, ஒரு காக்கி வெடிபோல் அதைச் சுருட்டினார். அந்தக் காக்கிச் சுருட்டை எடுத்துபோய் சீட்டின் கம்பியில் கைவைத்து நின்றிருந்த பச்சை புடவை பெண்மணியின் புறங்கையில் இரகசியமாய் சொறிந்தார். அவள் அந்தக் காக்கிச் சுருட்டை சட்டென உள்ளங்கையில் இழுத்துக்கொண்டாள். 

‘அடுத்த ஸ்டாப்பிங்…’ சாடை காட்டிவிட்டு, பேருந்தின் முன்படிக்கட்டுக்குச் சென்றுவிட்டார். அவருடைய கீழ்சட்டை பாக்கெட்டில் வெளிச்சம் மின்னியது. ரிங்க்டோன் இல்லை. சைலண்ட் மோட்! வைப்ரேஷன் அதிர்வில் தொடைவரை பாக்கெட்டில் கைவிட்டு, கைபேசியை எடுத்தார். கைபேசி திரையில் பத்து பன்னிரண்டு வயது மதிப்பிடத்தக்க பட்டுப் பாவாடை சட்டை அணிந்த ஒரு பெண் குழந்தை படம் இருந்தது. அவர் அலைபேசியில் தன் மகளோடு கொஞ்சிக் குலாவினார். 

நிறுத்தம் வந்ததும் பச்சைப் புடவை பெண்மணி, சாம்பல் கால்சட்டைக்காரரின் கண் சமிக்ஞையில் இறங்கிக்கொண்டாள். அதே நிறுத்தம்தான் பிரவீனுக்கானதும். இராமாபுரம் நிறுத்தம். மியாட் மருத்துவமனையை அடுத்த இராமாபுரம் சிக்னல்.

இரவு விளக்குகளின் ஒளியில் தூரத்தில் சாலை ஓரங்களில் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தன, சிவப்பு-நீல அவசர எச்சரிக்கை விளக்குகளுடனான காவல் ஊர்திகள்.

அன்றும் வேலை கிடைக்கவில்லை. தியாகதுருகம் விட்டு சென்னைக்கு வந்து நாற்பது நாள் ஆகிவிட்டிருந்தன. அன்று சென்றிருந்த இன்டர்வியூவும் அவுட்!

தந்தை விடுத்த எச்சரிக்கை, காவல் ஊர்திகளின் அவசர எச்சரிக்கை விளக்குகளோடு சேர்ந்து மின்னியது. அவர் சாபம் பிரவீனைச் சுற்றிவளைத்தது.

வேலைக்கான மினிமம் குவாலிஃபிகேஷன்: எனி டிகிரி.

பிரதீப் மட்டும் பி.இ குவாலிஃபிகேஷனோடு இராமாபுரத்துக்கு அருகிலேயே டிஎல்எஃப் வளாகத்தில் ஒரு நிறுவனத்தில் ப்ராசஸ் அசோஷியேட் பொறுப்பில், உலகத்தோடு ஒட்டி ஒழுகிக் கொண்டிருந்தான்.

சகோதரர்கள் இருவர் தங்கிக்கொள்ள மட்டுமே இராமாபுரம் வீட்டில் வசதி இருந்தது. அம்மாவையும் தங்கவைக்க சற்றே பெரிய வீடு பார்த்தாக வேண்டும். சென்னையின் வீட்டு வாடகை, வசிப்பவனை எளிதில் மூழ்கடித்துவிடும். பிரதீப்பின் ஒற்றைத் துடுப்பில் நகர்ந்தது ஓடம். அம்மாவையும் அதில் ஏற்றிக்கொள்ள, பிரவீன் விரைவில் துடுப்பு போட்டாக வேண்டும் என்ற நிலையிருந்தது.

அந்த நாட்களில், வறுத்த நிலக்கடலை அவ்வப்போது காலை உணவானது… ஐந்து ரூபாய் முட்டை, வயிறு காயாமல் பார்த்தது… ஒரு வேலை உணவு மட்டும் பிரவீன் உயிரைக் காத்தது.

தனக்கென அடையாளம் இல்லாத நகரத்தில், காவல் ஊர்திகளிடம் இருந்துகூட   தள்ளி நடந்தான். தலை தூக்காமல், போலீஸ் முகம் காணாமல், போலீஸ் பூட்ஸ் மட்டும் பார்த்து நடந்தான். 

அடையாளம் இல்லாமல், பெருநகரத்தில் இருப்பது அச்சுறுத்தல்களுக்கு அடிகோலுவது. 

தனக்கென ஒரு வேலை கிடைக்க வேண்டும். அம்மாவுக்கும் சேர்த்து வீடு பார்க்க வேண்டும். அவளை துருகத்திலிருந்து அழைத்துவர வேண்டும். விரைவில் ஒரு கம்பெனியில் தனக்கான அடையாள அட்டையை பெற வேண்டும். சென்னையோடு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். நெருக்கடிகள் பிரவீனை நிர்பந்தித்தன. 

பிடித்துக்கொள்வதற்கு ஆதரவான வார்த்தைகள் இல்லாமல் தவிக்கும் நெஞ்சம் பேரச்சத்தால் பீடிக்கும்; உளைச்சலில் சிக்கிக்கொண்டு பரிதவிக்கும்.

அச்சம், மலைப் பாம்புபோல் கொஞ்சம் கொஞ்சமாய்  விழுங்கும்போது, கனவுகள் களைந்துவிடும். ஒவ்வொரு எலும்பும் நொறுங்கும். உடல் வெப்பத்தில் கொதிக்கும்; தேவையின்றி நடுங்கும்.

அடையாளமிழந்த விளிம்பின மக்கள், சொந்த நாட்டு மக்களாலே சூறையாடப்படும் வீடியோ காட்சிகள் தூங்கவிடாமல் மிரட்டின. கண்ணைத் திறந்தால் உலகம் இருட்டாகவும், மூடினால் அலறல் காட்சிகள் கண்முன் விரிந்தும், கொஞ்சம் கொஞ்சமாய் வதைசெய்து வந்தன.

பிரதீப், பிரவீனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அடுத்த அடுத்த சந்திப்புகளுக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லை. சிகிச்சை தொடர முடியவில்லை. 

மேனகா பிரவீனுக்காக அழுதாள். அவன் உடைந்துபோன விதம் புரியாமல், பொறுக்க முடியாமல் கலங்கினாள். தன் கடவுள்களுக்கு விரதம் இருந்தாள். அவ்வப்போது, பிரதீப்புக்கும், அவனுக்கும் உணவுசெய்து எடுத்து வந்தாள். அவனுடைய தேய்ந்த தேகத்துக்கு வருந்தினாள், ஆறுதல் சொன்னாள், கோபித்தாள்…

வேலை தேடலுக்கு விடை கிடைத்தது. அவனுக்குள்ளிருந்த எழுத்தாளன் கனவு புதைந்தது. காலத்தின் புயல், கப்பலைக் கண்டபடி திருப்பிப் போட்டது. 

கம்பெனி தந்த அடையாள அட்டை, சென்னையோடு பிரவீனை இணைத்துக் கொண்டது… தந்தை, அருகே இல்லாதச் சென்னை மாநகரம். துருகத்தின் லோக்கல் போலீஸ் அங்கு இல்லை. புதிதாக தொடங்கியது, ஒரு கஸ்டமர் செர்வீஸ் எக்சிக்யூட்டிவ் வாழ்க்கை!

அம்மா சென்னை வந்தாள். சென்னையின் புழுதியும் வெப்பமும் அவளுக்கு தோல்நோயை தந்தது. சென்சிடிவ் பாடி, அலெர்ஜிக் டு ஹீட் & பொல்யூஷன்!

வானத்தைக் கிழித்துக்கொண்டு கொட்டிய எரி கற்கள், மறைந்து போய்விட்டிருந்தன. நள்ளிரவு முழுக்க பிரவீன் தூங்கவில்லை… விடியும் நேரம் வந்துவிடும்.

வெள்ளை குண்டு விளக்கு அமர்த்தப்பட்டுவிட்டது. ஒரு சின்ன குவளையில் தண்ணீர் பருகினான். பிரவீன் பனியில் ஊறியிருந்த சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு, பாய் விரித்து படுத்துக்கொண்டான். படுத்த இடத்திலிருந்து அம்மாவின் முகம் மித விளக்கொளியில் தெரிந்தது. அமைதியான ஆரஞ்ச் ஒளி.

அம்மா தூங்கும்போதுவரும் மென் குறட்டைச் சத்தம், அவன் படுத்திருந்த தூரம்வரை கேட்டது. தூக்க மாத்திரைகள் இல்லாமல் அவள் தூங்கினாள். 

தவளை ஜோடியும், ஈர நத்தையும் வெளியில் இருந்தன.

அந்தத் தவளைகள் குதூகலிக்கும் தோட்டம்தான், அவளுடைய உலகம். தன் ஐம்பதாவது வயதில்தான் அவளுடைய விருப்பத்தை அடைந்தாள். அவளுடைய சின்ன நெடுங்கம்பட்டு, அந்தத் தோட்டம். அந்தத் தோட்டத்தின் அப்பா, அம்மா, செவிலி, காவலாளி, போஸ்ட் மிஸ்ட்ரெஸ் எல்லாம் அவளே!

அவளுக்கு வாழ்க்கை விடிந்து வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *