Featured image

‘கெழக்குப் பக்கம் போஸ்ட் ஆஃபீஸ் வச்சா, மேற்கு பக்கத்துல இருந்து ஒருத்தன், ஒருத்தி வரமாட்டாங்க…

‘வீட்டுக்குத்தான ஆஃபீஸ் மாத்த போறீங்க. மேற்கு பக்கமாவே வீடு பாப்போம்’, ஊர் பெரிய மனுஷி பேச்சியம்மாவின் அறிவுரைப்படி, மிராசுதார் ஒத்துழைப்பில் மடம் கிளையின் புதிய போஸ்ட்மாஸ்டருக்கு வீடு அமைத்துத் தரப்பட்டது.

புது தேவாலயத்தின் அடர்நீல காம்பவுண்ட் சுவரில் ட்யூப்லைட் வெளிச்சம் வீசியது. ட்யூப்லைட் வெளிச்சமும், தூரத்தில் எரியும் தெரு மின்விளக்கின் மங்கிய வெளிச்சமும் மட்டுமே இரவுக்குத் துணையாக இருந்தது. 

புது தேவாலயத்தின் முக்கிய முன்கதவை இழுத்துச் சாத்தினார், ஆலயப் பணியாளர். ரோட்டில் யாரும் இல்லா தனிமையில், குளிருக்கு குரங்கு குல்லா போட்டுக்கொண்டு அசையும் மனித உயிராய் அவர்மட்டும் அந்த நேரத்தில் பிரவீனுக்குத் துணையாய் இருந்தார்.

நடுங்கும் குளிரில் சால்வை இல்லாமல், கொட்டும் பனியில் பல்கிட்டிக் கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினான். தெருவில் சத்தமில்லாமல் மெல்ல ஓடின ஊளையிடும் நாய்கள். வெறிச்சோடிய தார் ரோட்டில் அவன் தனியாய் நடந்துவந்தான்.

முதியோர் பணம் பெற்றவர்களின் கடந்த மூன்று மாதங்கள் டெலிவரியான ஓ.ஏ.பிகளின் பதினாறு இலக்க எண்ணை, ஓ.ஏ.பி ரெஜிஸ்டரைப் பார்த்து தேதியோடு சொல்லுமாறு, அந்த இராத்திரியில் ஃபோனில் அழைத்துக் கேட்டுக்கொண்டார், சப்-போஸ்ட்மாஸ்டர் சைமன். சப்-ஆஃபீஸில் முறைப்படி முடிக்காத அலுவலகக் கணக்குகளை, விரைவில் ஒழுங்குபடி முடிக்கச் சொல்லி கோட்ட அலுவலகத்திலிருந்து ஆணை. சைமன் தள்ளிவைத்த அலுவலுக்கு, ஏறிவந்தது நெருக்கடி!

அலுவலகத்துக்கு போயிருந்த நேரத்தில் மொத்த ஊருக்கும் மின் துண்டிப்பு. கையில் ஒரு கை மின்விளக்கு, அலுவலகத்து சாவி மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான். முற்றத்தில் ஏற்றி நிறுத்திவிட்டிருந்த பைக் தேவைப்படவில்லை. அர்த்த இராத்திரியில் வந்த அலுவலக அழைப்புக்காக, மடம் அலுவலகம் வரை நடை எடுத்தான்.

கை மின்விளக்கின் ஒளியில் ஓ.ஏ.பிகளின் பதினாறு இலக்க எண்களையும், அவை கொடுக்கப்பட்ட தேதிகளையும் குறித்துக்கொண்டு, பனியில் பல்கிட்டிக்கொண்டே வீட்டின் வாசல் வந்து நுழைந்தான்.

திண்ணையில் இறந்துகிடந்த இறக்கை எறும்புகளைத் துடைப்பத்தால் கீழே தள்ளிவிட்டு, அதில் அமர்ந்துகொண்டான். எதிரில் பூத்-பங்களா வீட்டிலும்கூட அமைதி நிறைந்திருந்தது. எந்தப் பாட்டும் ஓடவில்லை. அந்தக் குளிரில் கட்டிலும்கூட வீட்டுக்கு வெளியில் இல்லை. இரவின் மயான அமைதி…

பிரவீனுக்கு உள்ளும் வெளியும் அமைதி. வெளிச்சத்துப் பூச்சிகள் அவனை மொய்க்க ஆரம்பித்ததும், வெளிவீட்டின் ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு, வீட்டுக் கூடத்துக்கு நகர்ந்தான். கூடத்தின் ஜன்னல்களில் இருக்கும் கொசுவலையின் சின்ன பொத்தல்கள்வழி தூரத்துவீட்டின் வெளிச்சத்தைக் கொஞ்சம் நேரம் கண்டபடி நின்றான். அம்மா முன்நேரத்திலேயே படுக்கையறையில் அவளுடைய இரும்புக் கட்டிலில் உறங்கியிருந்தாள். அவன், சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டே போய்த் தரையில் அமர்ந்தான். தனிமை, அமைதியை உருவாக்கியது; மெல்ல உலுக்கியது. அப்படியே காலை நீட்டிச் சுவரோரமாய்த் தரையில் படுத்துக்கொண்டான். சுவரும் சில்லென்று இருந்தது.

மீண்டும் எழுந்து தோட்டத்துக் கதவைத் திறந்தான். தோட்டத்தின் வெள்ளை குண்டு விளக்கைப் போட்டான். தோட்டத்துச் சுவரில் ஈர நத்தை இருந்தது‌. வாழ்க்கையின் சுணக்கம் போல தெரிந்தது, நத்தை. அம்மா நின்றபடி துணி துவைக்கப் போட்டிருந்த கடப்பா கல்லில் அமர்ந்துகொண்டான். ஈரத் தவளைகளின் சத்தம், இரவு பூச்சிகளின் கூச்சல் எதுவுமில்லை. உலகம் உறங்கிக்கொண்டிருந்தது. சமையலறை கழிவுநீர் போகும் தோட்டத்து வாய்க்காலின் பாசம் குண்டு விளக்கின் வெளிச்சத்தில் கருப்பாகத் தெரிந்தது. நீரில் ஊறி மிதக்கும் ஈரப் பிணங்கள் போல்…

ஏதோ இல்லை! தொந்தரவு செய்யும் தொய்வு, வாழ்வின் தடைக்கல்லாய் கனத்தது.

பெய்யும் பனியில் உள்ளங்கை சில்லிட்டிருந்தது. பின் முதுகும், காது மடல்களும் சில்லிட்டிருந்தன. அன்னாந்து வானத்தைப் பார்த்தான். நிலா இல்லாத தனி வானம். நட்சத்திரக் கூட்டம் வெளிநடப்பு செய்துவிட்ட அனாதை வானம். மொத்தமும் கருப்பாக இருந்தது. வானத்தைக் கிழித்துக்கொண்டு கொட்டும் எரி கற்கள், சட்டையில் பட்டு உடம்பில் சில தீ காயங்கள் ஆவதுபோல் தோன்றியது. சின்ன சின்ன தீ காயங்கள், சின்ன சட்டை பொத்தல்களோடு… அந்தப் பனி நேரத்தில்.

பூஜ்ஜியம் முதல் முடிவிலி வரை சாட்டை ஒன்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. சிந்தனையோடு நெருப்பு மெல்ல நகர்ந்தது.

கருவானத்தில் பாதிக்கடலில் கப்பல் உடைந்துபோய் இருந்தது. மரணக்கூச்சலோடு சிலர் மூழ்கிக்கொண்டிருந்தனர். ஒரு பகுதியில் அவசர மீட்பு பணியில் விரைவாக வீரர்கள்… கப்பல் உடைந்து உள்ளே மூழ்கியது. ஆழத்துக்குப் போனது. ஆழத்தின் ஆழத்துக்கு. கப்பலின் உடைந்த பகுதி கடலின் கடைசி ஆழத்தைத் தொட்டது. தரையின் அடி ஆழத்தில் போய்ச் செருகிக்கொண்டது.

குண்டு விளக்கின் வெள்ளொளி தோட்டத்தை நிறைத்திருந்தபோது, பிரவீன் மனதுக்குள் மட்டும் ஒளி விட்டுவிட்டு மின்னியது.

வெள்ளொளி. கருக்கிருட்டு.

வெள்ளொளி. கருக்கிருட்டு.

இப்போது. அப்போது.

புதிது. பழையது.

அரசு வேலை. தவித்த நேரம்.

பெருமை. கொடுமை.

வாழ்வு. சாவு.

பதவி. பட்டினி.

சுதந்திரம். அடக்குமுறை.

பாதுகாப்பு. வன்முறை பயம்.

இன்று. நேற்று.

பதறாமல் துடித்தது இதயம். டக் டக். டக் டக். மெதுவாய். எந்தப் பதற்றமும் இல்லாமல்.

டக் டக். டக் டக். போலீஸ் பூட்ஸ் சத்தம். டக் டக். லெஃப்ட் ரைட். டக் டக். ஒன் டூ. டக் டக். ஐநூறு, ஆயிரம். டக் டக். ஆஃபீசர் சல்யூட். டக் டக். ஊர் முக்கிய முகம். டக் டக். போலீஸ் துணை.

சதையில் விழும் மரக்கட்டையின் அடி சத்தம். பல்லை, எலும்பை மிதித்த பூட்ஸ். வயிற்றில் விழுந்த உதையில் வந்த மங்கிய உறுமல். சிமெண்டில் தேய்த்த மண்டை ஓட்டின் ஊமைச் சத்தம். துண்டிக்கப்பட்ட விலா எலும்பின் ஓரம், நுரையீரலைக் குத்திச் சுவாசத்தில் வந்த ‘கலகல’ இரத்தம். அவர்கள் அதைக் கேட்டார்கள்…

ஆதரவற்ற வெலுத்தாவின் நியாயமான மரணம், போலீஸ் பாதுகாப்பில் அரசுச் செலவில் நடத்தி வைக்கப்பட்டது.

டச்சபிள் போலிஸ்மென். அன்டச்சபிள் வெலுத்தா.

முதல் வருடத்தோடு நிறுத்திவந்த இளங்கலை ஆங்கிலம், பிரவீனுக்கு அறிமுகம் செய்துவைத்த த காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் — இன்டியன் லிட்ரெச்சர் இன் இங்கிலிஷ் வகையின் கீழ்… 

ஆதரவற்றப் பரவன். வெறும் பிக்கிள் ஃபேக்டரி தொழிலாளி வெலுத்தா.

பரவன் வெலுத்தாவுக்கு நிகழ்ந்த அதிகாரக் கொலை. கோட்டயம் காவல்துறை ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் தாமஸ் மேத்தியு மற்றும் ஆறு காவலர்கள்.

போலீஸ். பி.ஓ.எல்.ஐ.சி.இ. போலீஸ்.

பொலைட்னெஸ்

ஒபிடியன்ஸ்

லாயல்டி

இன்டெல்லிஜென்ஸ்.

கர்டஸி.

எஃபிஷியன்சி.

— கோட்டயம் காவல் நிலையத்தில் எழுதியிருந்ததாக காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் நாவல் கூறியது.

‘இது தற்கொலையில்லை. கொலை’, அம்மா தன் டைரியில் எழுதிவைத்திருந்தாள்.  

அவள் முழுங்கிய தூக்க மாத்திரைகள், அவள் உடலுக்குப் பழகிவிட்டிருந்தன. தூக்கம் பழகாத உடல், தூக்க மாத்திரைகளை பழகிக்கொண்டது. பிரவீனும் பிரிந்துபோய்விட்ட பின், ஆதரவற்ற தனியிரவுகளில் அவள் வதை அனுபவித்தாள். 

அவள் ஊமையாகவே அழுது தீர்க்கத்தான் நினைத்தாள். காரணம், பிரவீனுடைய படிப்பு வீணாகிவிடும். அவள் வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். பொத்திய கைகளின் விரல் இடுக்கில், அந்தச் சத்தம் அலறி அழைத்தது. 

விரலிடுக்கின் அலறல், கொக்கு வெள்ளைக் காரின் துணையில்லாமலே சென்னை வரை சென்றது. பலநாள் அடக்கிய குமுறல், பல மைல்கள் பாய்ந்தது…

பிரவீனால்தான் கல்லூரியைவிட முடிந்தது. பிரதீப்புக்கு கல்லூரி இறுதி வருடம். இன்ஜினியரிங் ப்ரோஜெக்ட் ஆண்டு அது.

‘காலேஜ் நிறுத்தக்கூடாது’, அப்பா ஒற்றைக்காலில் நின்றார். அவருக்கு தேவைப்பட்டதெல்லாம், ‘யாரும் கேட்க ஆளில்லாத ஒரு அனாதை மனைவி…’ 

அவள் சாபத்தை வாங்கிக்கொள்ளும், சில உறவுகள் அவருக்கு இருந்தது. இரவில் மட்டும் சேர்ந்து பழகும், முகம் தெரியாத சில உறவுகள். 

அவரை பொருத்தவரை, அவள் மௌனியாக இருக்க வேண்டும். அவள் கூப்பாடுகள், போக்குவரத்து நெரிசலில் கேட்கப்படாத, பழுதான சைக்கிள் பெல்லாக இருக்க வேண்டும். ஊரில் தன் முக்கிய முகத்துக்கு ஊறுவிளைவிக்காமல் ஊமையாக அவள் இருக்க வேண்டும். சமுதாயத்தின் மனைவியாய் அவள் இருக்க வேண்டும். சட்டப்படி மனைவியாய். 

செத்து மடிய அத்தனை உரிமையும் அவளுக்கு உண்டு. அவள் தன்னாலே செத்து மடிய வேண்டும்.

‘நான் சொல்ற பேச்சக் கேளு. படிப்ப நிறுத்திட்டா ரொம்ப கஷ்டப்படுவ’, சாபமும் எச்சரிக்கையும் கலந்து, குங்குமமும் நீருமாய் பிரவீன் நெற்றியில் தந்தை இட்ட திலகம். சிவப்பும் வெள்ளையுமாய். இரத்தச் சிவப்பு. சாம்பல் வெள்ளை…

அத்தை, மாமா, பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் ஒத்த குரலில் மொத்தமாக அம்மா காதிலே ஊதிய ஆல் இன்டியா பெர்மிட் லாரியின் மண்டை வலிக்கும் ஹாரன்: ‘புருஷனுக்கு நீ. உனக்கு புருஷன். இடைல எதுக்குப் புள்ளைங்க? அவங்களுக்கு ஃப்யூச்சர் இருக்கு…’, பேம் பாம். பேம் பாம்…

‘நாளைக்கே மருமவ வந்தா. நாம புருஷனோட இருந்துக்குறதுதான் நமக்கு மரியாத’, பேம். பேம். பேம்…

அவ்வளவு நாட்கள் ஊதாமல் வைத்திருந்ததை தூசோடு தூசாக மூஞ்சில் ஊதிவிட்டுப் போனார்கள்.

கல்லூரியை விட்டு வந்தபின், இரவுகள் கழுத்தை நெறித்தன. இரவுக்கு கொடுக்குகள் முளைத்தன. கால்கள் முளைத்தன. இரவு ஒரு விஷப்பூச்சிப் போல மாறியது. வீட்டின் இரவுக்குள் ஒளிந்திருந்த விஷப்பூச்சிகள், புற்றிலிருந்து வெளிவர ஆரம்பித்தன. எண்ணற்றக் கால்களோடு உடல் முழுக்க ஏறிக்கொண்டன, கோட்டைப் புற்றின் காவல் பூச்சிகள். ஒரு கடி. ஒரு கொட்டு‌. ஒரு பிடுங்கு.

ஆதிக்க அரியாசனம். கொடுங்கோல் கோட்டை.

விஷப்பூச்சிகள் கடித்த வீக்கம் குங்குமச் சிவப்பில் இருந்தது; இரத்தச் சிவப்பில் இருந்தது. பரவன் வெலுத்தாவின் பரங்கி மண்டை வீக்கம் போல். வெலுத்தா ஒரு பரவனாக இருந்துகொண்டு ஆதிக்கத்தை அலட்சியப் படுத்தியிருக்கக் கூடாது. பிரவீன், தந்தையை எதிர்க்க துணிந்திருக்க கூடாது. 

எ ரூல் இஸ் எ ரூல். எனிவொன் ஹூ டேர்ஸ் டு டிஸ்ஒபே த ரூல் வில் ஃபைன்ட் ஹிஸ் பனிஷ்மென்ட். சுருக்கமாக, சமூக விதி!

கருப்பாக இருந்தால் கரியாகிப் போக வேண்டும். வெள்ளையாக இருந்தால் சாம்பலாகிப் போக வேண்டும். அவர் ஆணையிடுவார். ஆணையின் நிறமே பிழைக்கும் நிறம். ஆணையின்படி நிற்க வேண்டும்.

அவன். அவர்.

பிரவீன். அப்பா.

உடையக்கூடியது. உடைக்கக்கூடியது.

அவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் கல்லூரியில் இருக்க வேண்டியவன். மாதத்துக்குக் கொஞ்சம் பணத்தைப் படிப்புக்கும், விடுதிக்கும், உணவுக்கும் வாங்கிக்கொண்டு ஒரு பிள்ளையாக நடந்துகொள்ள வேண்டியவன்.

மிக தூரத்தில்…

பல மைல்களுக்கு அப்பால்…

சென்னையில்…

கண்ணுக்கு எட்டாதத் தொலைவில்…

அவன் செவிக்குச் சேதி வராதத் தொலைவில். அவர் மனைவிக்கும் அவருக்கும் இடையே மறைத்து நிற்காதத் தொலைவில்.

அவரிடம் கொக்குநிற வெள்ளைக் காருக்கும் உரிமம் இருந்தது. தன் மனைவியைப் போட்டு அடிக்கவும், போட்டு உடைக்கவும், முழங்காலை மடக்கி அவள் நெஞ்சாங்குழியில் எத்தவும், மயங்கி கீழே விழுபவளைத் தூக்கி நிறுத்தி அடிக்கவும், சமூகத்தில் பைத்திய அந்தஸ்து ஏற்படுத்தி வைக்கவும் அவரிடம் உரிமம் இருந்தது. அந்த வருடத்திலும் சமீபத்தில் வந்த திருமண நாளன்று அவருடைய உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.

பிரவீனுடைய உரிமம் எங்கே? அவன் யார் குறுக்கில் வர? அவன் கல்லூரியில் இருக்க வேண்டியவன். 

அவள் யார்? வெறும் பொம்பளை. பொட்ட நாய். அவன்? அவன் ஆண். அதனால்தான் அவனைக் காலை மடக்கி அங்கேயே உதைத்தார். ஆண்களுக்கான பிரத்யேக வலியிடத்தில். வலி தாங்காமல் அமர்ந்துக்கொண்டான். பிறகு, தன் மனைவியை உரிமையோடு தாவி அடித்தார். அவரிடம் உரிமம் இருந்தது…

இரு அழகொழுகும் பூனைக்குட்டிகள் கூண்டில் மாட்டிக்கொண்டன. கருப்பு வெள்ளை கலந்த பூனைகள். ஒரே மாதிரி பூனைகள். காதுகளில் கொஞ்சம் கருப்பு. முதுகில் இரண்டு கருப்பு பட்டைக் கோடுகள். மென்மையான பிஞ்சுக் கால்கள் அவைகளுக்கு. அருகிருந்த பையன் கூண்டிலிருந்த பூனைகளுக்கு பழுத்த கம்பியால் சூடு வைத்தான்.

அழகான பூனைகள் அவை. ஒரே மாதிரியான பூனைகள். ஆனால், இரண்டும் வெவ்வேறு மாதிரி துடித்தன.

அவனுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. 

ஒரு கின்னத்தில் காப்பி எடுத்துவந்து கசப்பில் சர்க்கரை கொட்டி, கசப்பு போகும்வரை கலக்கினான். விரும்பிய இனிப்பு வரும்வரை, மேலும் சர்க்கரை  கொட்டிக் கலக்கினான்‌. குடித்துப் பார்த்தான். விரும்பிய இனிப்பில் இருந்தது. அதன் சுவை அளவற்றது. உதட்டில் இருக்கும் காப்பியின் மிச்ச இனிப்பை நாதடவி சுவைத்துப் பார்த்தான்.

மீண்டும், பழுக்க காய்ச்சிய கம்பியை பூனைக்குட்டிகள் மேல் வைத்தான். இரத்தச் சிவப்பில் பழுக்க காய்ச்சிய கம்பி. ஒரு பூனை கத்திக்கொண்டே விழுந்து புரண்டது. இன்னொன்று, கத்திக்கொண்டே முரைத்தது. அதன் கண்ணில் கோபம் கக்கியது. அவன் மீண்டும் மீண்டும் சூடுவைத்தான். அவனுக்கு இனிப்பு வேண்டும்.

உயிரோடு புதைக்கப்படுவது கொடுமையானது. இதயமற்றது. தன் காலில் ஷூ இருப்பதாலே, பிறர் கழுத்தை நெறிக்கலாம் என்ற எண்ணம் உடைக்கப்பட வேண்டியது. பிரவீனுக்கு கத்தியழத் தோன்றியது. நண்பர்களிடமிருந்து உதவியெதுவும் பெற முடியவில்லை. அவனுடைய நண்பர்கள் அப்போது இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள்தான். உதவியின்றி உளைச்சலில் சிக்கும் மனம் தூக்கிலேற்றியும் சாகாமல் துடிக்கும் நெரி வலியைக் கொண்டது.

வெளிவானம் தன் பங்குக்கு உதவியாய் ஒரு தூக்குக் கயிறை அந்தரத்தில் இருந்து தொங்கவிட்டது. கயிறை உபயோகித்துக் கொள்ள வற்புறுத்தியது. தன் ஆசைக் குரலில் மென்மையாய் அழைத்தது. 

அக்கம் பக்கம், முன்வீடு பின்வீடு, தெரிந்தவர் தெரியாதவர் எல்லாம் தள்ளிப் போயினர். சிலர் வேடிக்கைப் பார்த்தனர். சிலர் மட்டும் பங்கேற்றனர்.

‘போலீஸில் புகார் கொடுக்கலாமா?’ பிரவீன் யோசித்தான்.

யோசித்ததும், கண்முன்னே வந்து மிருகப் பற்களோடு சிரித்தது, தகப்பனின் தலை மட்டும். 

அவர் பெயரில் புகார் அளித்தால், முதல் தகவல் அறிக்கை அவர் தொலைபேசியில்தான் எழுதப்படும். அது பிரவீனுக்குத் தெரியும். அவர் ஊர் முக்கிய முகம். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு எத்தனை, எத்தனை ஆயிரங்கள்! அதிகாரிகளுக்கு சல்யூட் போடவும் தெரியும். கைக்குலுக்கும் நேரத்தில், கைமாற்றவும் தெரியும். டக் டக். லெஃப்ட் ரைட். டக் டக். ஐநூறு ஆயிரம். டக் டக். போலீஸ் துணை.

தன் புகார் தனக்கே ஊறு விளைவிக்கலாம்… ஆதரவற்ற மனிதருக்கு அரசுச் செலவில் மரணம். வித் ஆல் போலீஸ் ப்ரொடெக்ஷன்! வெலுத்தாவின் மரணம் போல. 

லாக்-அப் கொண்டிருக்கும் கருப்பு இரகசியங்களோடு அவனும் ஒரு இரகசியமாய்த் தொலைந்துவிட விரும்பவில்லை. 

லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பித்துக்கொண்டான். தன் பக்கமே திரும்பும் எந்தப் புகாரின் தடையமும் இல்லாமல். புகார் தர எழுந்த யோசனையை அடியோடு அழித்துவிட்டான். 

ஒரு போலீஸ்காரனின் முரட்டுத் தொடையைவிட அவரின் தொடை வலு குறைந்ததே‌. அவர் எத்திவிட்ட பிரத்யேக வலியிடத்தில் ஒரு போலீஸ்காரன் எத்தியிருந்தால், பிரவீன் செத்திருந்திருக்கலாம்.

பாதுகாப்பான இடத்துக்குத் தப்ப வேண்டும். அப்பா இல்லாத, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இல்லாத தனி இடத்துக்கு. வெகு தூரமாய்… ஒரு அமைதித் தீவுக்கு. அம்மாவோடு!

பிரவீனை நீண்ட காலம் பயத்தின் நிழல்மட்டும் துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு பேய் போல. மனநலத்தில் பட்ட ஒரு சிகரெட் தீ ஏற்படுத்திய ஓட்டைப் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *