“அந்தக் கிணற்றுக்குச் சொந்தக்காரர் தோலுவாயர், கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே இரண்டு ஃபர்லாங் தூரத்தில் இருந்து வருகிறார். நல்ல வேளை, கிணற்றில் குதித்து விளையாடுவது தம் பிள்ளைகள் தான் என்பதை அறிந்ததும் அமைதியடைகிறார். அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள் மற்றவர் யாரும் இந்த நீரில் கலந்துவிடக் கூடாது அவ்வளவு தான். தம்பிள்ளைகள் கிணற்றில் குதித்து விளையாடி விட்டு வெளியேறியதும், தண்ணீர் குடிக்கப் படிக்கட்டில் இறங்கினார் தோலுவாயர். கிணற்றின் ஆழத்திலிருந்து யாருக்கும் தெரியாதென்று இரண்டு பேர் கழித்த மலங்கள் கீழிருந்து மேலாக அடையாக மிதந்து வந்தது. தோலுவாயர் இப்பொழுது மிகுந்த சத்தமாய்ச் சகிக்கவே முடியாதக் கெட்ட கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அவர் பிள்ளைகளைத் திட்டிக்கொண்டிருந்தார்.”
மேலுள்ள வரிகளில் அமையும் கலைக் கூர்மையும், எழுத்து நுட்பமும், இயல்பும், லொள்ளும், நக்கலும் தான் ஆசிரியர் சி. முத்துகந்தனின் “இயல்பால் அறிவோம்”.
இந்நூல் தனக்கான வாசகனை, தன் உரையாடலுக்கு உகந்தவனைத் தானே தேடுகிறது. நூல் சொல்லும் கதையொன்றும் இல்லை. கூறும் அறிவுரைகள் இல்லை. கருத்தை சாமானியர்களின் இடத்தில் அமையும் இயல்பிலிருந்து கேள்வியாய் தான் முன் வைக்கிறது. அந்தக் கேள்விகளும் வெறும் உரையாடலாகத் தான் அமைகிறது. யாரோடு உரையாடுகிறது என்றால், ஒரு நேரம் ஆசிரியரின் அனுபவம் வாசகனின் அனுபவத்தோடு. இன்னொரு நேரம் நம் புத்தியோடு நம்மையே உரையாட வைக்கும் உத்தியாகத் தான் ஆசிரியர் ‘நாம்’ என்னும் பொதுத் தன்மையில் பல இடங்களில் எழுதுகிறார். அதில் ஆசிரியர் மேதாவி, வாசகன் முட்டாள் இல்லை. பொதுப் புத்தியைக் கேள்வியிடும் பொதுவானவர்கள் அனைவருமே கலை இலக்கிய அரசியலின் பங்களிப்பாளர்கள் என்கிற புரிதலில் இயங்குகிறது நூலின் மொழி.
நூலின் பாணி சோதனை முயற்சியாக இருக்கிறது. அந்தப் பாணி தனக்கென தன்னியல்பைத் தேடிக் கொண்டே போகிறது.
சில இடத்தில் கதைப் போல் சில நிகழ்வுகளைத் தெளிப்பார். சில இடங்களில் மனதில் பதிய கதைச் சொல்வார். பல இடங்களில் சுய விமரிசனம் செய்யச் சொல்லி பல முனைகளிலிருந்தும் கலை இலக்கிய அரசியல் நிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
ஒரு வாசகன் வெறும் பையாக வந்து நூலிலிருந்து அள்ளிப் போட்டுக்கொள்ள சரக்குகள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் இந்நூலோடு உரையாட தமிழ்க் கலை இலக்கிய அரசியல் சூழல் பற்றிய விழிப்பும், கொஞ்சம் பயணமும் இருத்தல் சிறப்பு. பொதுப் புத்தியைக் கிளறுவதில் அதிக கவனம் கொண்டிருந்தாலும் இந்நூல் முழுதும் பொது வாசகனுக்கு இல்லை என்பேன். (என்னுடைய பரிந்துரை – ஒரு பொது வாசகன் தலைப்பு 6,7-ஐ முதலில் படித்துவிட்டு, பிறகு தலைப்புகள் 1,2,3,4,5 -ஐ படிப்பது புரிதலை எளிமையாக்கும்.)
பொறுக்கத் தெரிந்த வாசகனுக்குப் பல முத்துக்கள் கிடைக்கும். நூலின் பாணி முத்துக்களைத் தன் போக்கில் சிதறவிட்டிருக்கிறது. அணியாத இயல்பின் அழகுக்குக் கோர்க்காத முத்துக்களாய் இருக்கட்டும் என்று தெரிந்தே சோதனை முயற்சியில் தன் பாணியைக் கையாள்கிறார் ஆசிரியர்.
இதைத் தான் ‘பழகாதத் தடத்தில் பயணிக்கும் எழுத்து’ என நூலின் அணிந்துரைக்குத் தலைப்பாகத் தேர்ந்து, தம் அணிந்துரையை வழங்கியிருக்கிறார் சென்னைக் கிறித்தவ கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. டேவிட்பிரபாகர்.
நூல் மொத்தம் ஏழு தலைப்புகளில், தலைப்புக்கு எட்டுப் பகுதிகளாகப் பிரித்து ஐம்பத்தாறு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் முகவுரையில், அவை வாசிப்பின் வசதி கருதியே அப்படி பிரிக்கப் பட்டிருந்தாலும் அவையாவும் பிரிக்கப் பட வேண்டிய வகைமைகளாக தனித்து நில்லாதவை. நூல் பேசும் கருத்துக்கு அவையாவும் தலைப்புகளைக் கடந்து பொதுமையாய் நிற்பவை என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
முகவுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் மிக முக்கியமான ஒப்புதல், நூலைப் புரிந்துகொள்ள தூண் போன்ற முப்புள்ளி பார்வையை வழங்குகிறது.
“இங்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை (2011 – 2013) மாணவர்களுக்கும் சென்னைக் கிறித்தவக் கல்லூரி (2013 – 2021) மாணவர்களுக்கும் நாம் நன்றி கூறல் அவசியம். குறிப்பாகப் பல்கலைக்கழகத்தில் ‘படைப்பாக்கம்’ (Creativity) வகுப்பும் கிறித்தவக் கல்லூரியில் ‘உளவியல்’ (Psychology) மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாடு (Personality Development) இதற்கான (இந்நூல் எழுதுவதற்கான) களத்தை நமக்கு அமைத்துத் தந்தது. காரணம் அவர்களுடனான இப்பத்தாண்டு கால உரையாடலின் நினைவுகளே இதற்குச் சாட்சியம்”
ஆசிரியர் கூறியது போல் இந்நூலின் பேசு பொருள் தமிழ்க் கலை இலக்கிய அரசியல் களமாக இருந்தாலும், ஆசிரியருடைய தனித்துவ பாணி படைப்பாற்றல், உளவியல், ஆளுமைத்திறன் மேம்பாடு ஆகிய முப்புள்ளிகளிலிருந்தே வாசகரோடு உரையாடுகிறது.
படைப்பாற்றல் புள்ளியில் இருந்து வாசகனுக்கும் படைப்பாற்றலின் ஆரம்ப பயிற்சிகளை இயல்பாக வழங்குகிறார். உளவியல் புள்ளியில் இருந்து வாசகனின் கதைக் கேட்கும் உளவியலோடு விளையாடுகிறார். ஆளுமைத்திறன் மேம்பாட்டு புள்ளியில் இருந்து தமிழ்ச் சமூகத்தின் கலை இலக்கிய அரசியல் பொதுப் புத்தியை விமர்சனம் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார். விமர்சனங்களை இயல்பாய் கையாளும் இடங்களில் ஒரு ஆசிரியரின் அனுபவக் கோர்ப்பில் மட்டும் நின்றுக் கொள்ளாமல் ஒரு நல்ல எழுத்தாளன் அந்தஸ்துக்கு உயர்ந்தும் நிற்கிறார்.
மனிதன் அடிப்படையிலேயே நல்லியல்பு கொண்டவன். எனவே, தன்னியல்பில் அவன் தேடும் அறிவு ஒருபோதும் மானுட நல்லறத்தை விட்டு நீங்காமல் இருக்கும் என்கிறது ‘இயல்பால் அறிவோம்’.
சொல்லிய சொல் விலகாது கடைப்பிடிக்கத் தேடிய ஒரு புது பாணியின் முயற்சி வடிவம் தான் இந்த நூல்.
இந்நூல் பேசும் மானுட நல்லறம் அடிப்படையிலேயே ஆதரவற்றவர்க்கும், உரிமை மறுக்கப்பட்டவர்க்குமானக் குரலாக ஒலிக்கிறது. ஒரு சாமானியனின் இயல்பு ஆசிரியருடையது.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது: ஒரு சாமானியன் எந்த நேரத்திலும் சாமானியத்தைத் தாண்டிப் பல கேள்விகள் பாய்ச்சுவான். அதே நேரத்தில், ஒரு சாமானியன் பல நேரங்களிலும், ஆவேசத்தாலும், சொந்த விருப்பு வெறுப்புகளாலும், தன் உணர்ச்சிகளுக்குக் கட்டுபட்டே தான் இருக்கிறான்.
மிக முக்கியமான நில உரிமை முதலான கேள்விகளையும் நூல் கேட்டுள்ளது. ஆனால், எல்லா முக்கிய கேள்விகளையும் மீண்டுமொரு முறைக் கேள்வியளவில் கேட்டுவிட்டு, மேலும் துழாவாமல், அந்தக் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றும் பிறரின் அசட்டைத்தனத்தை மட்டுமே விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அவ்வகையில், இந்நூல் புதிதென யாதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் முன் வைக்கவில்லை. ஆயினும், நூல் ஆங்காங்கே செய்யும் நாசூக்கான கிண்டல்களும், நகைச்சுவைகளும் மிக முக்கியமானவை. நூல் எதையோ புதிதாகச் சொல்வதற்கு மட்டுமானதில்லை. பழைய பிற்போக்குத் தனங்களை உடைத்தெறிவதும் அதன் முக்கிய வேலை தான்.
மீண்டும் சொல்கிறேன்,
அந்தக் கிணற்றுக்குச் சொந்தக்காரர் தோலுவாயர்… அவர் கதையில் வரும் உருவகம் எதைச் சுட்டுகிறதோ அது தான் நூலுக்கான மைய நோக்கம்.
நூலைப் படித்து விட்டு, இயல்பால் அறிவதைத் தோலுவாயர் நிகழ்வு எப்படி இயல்பாகச் சொல்கிறது என்பதை வாசகரும் கூறிவிட்டால், இந்நூல் செய்ய நினைத்த வேலை பெருமளவில் நடந்தாகிவிட்டது என்பேன்.
நூலாசிரியர் அறிமுகம்:
சி. முத்துகந்தன் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர். கதை, கவிதை, ஆய்வு, இதழியல் என்று பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். ‘செந்தலைக்குருவி’ என்னும் பன்னாட்டுக் கலை இலக்கிய ஆய்விதழை நடத்தியவர். பேராசிரியர் கோ. பழனி அவர்களின் நெறியாள்கையில் ‘தமிழ்க் கலை வரலாறு – வடதமிழகம்’ எனும் தலைப்பில் முனைவர் பட்டம் மேற்கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டார் வழக்காறு, ஆய்வு நூல்களென இதுவரை 17 நூல்களைத் தந்துள்ளார். கலை இலக்கியம் குறித்து 15 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது “யாரடா வெண்மணி தூணிலே நரசிம்மா (2014)” எனும் கட்டுரை கேரள மாநிலத்தில் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக் கல்லூரிகளில் ‘படைப்பாக்கம்’ குறித்து மாணவர்களுக்குப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.