காய்ந்த இலைச் சருகுகள் (ஒப்பம் நாவல், அதி. 5)

Featured Image

ஒரு இரும்பு கேட்டு கொண்ட குள்ள காம்பவுண்ட் சுவர், எதிர்வீட்டு பசுக்களையும் கன்றுகளையும் உள்ளே நுழையவிடாமல் தடுத்தது. ஒரு கையால் இல்லை; இரண்டு இரும்புக் கதவுகொண்டு இரு கையால் தடுத்தது. காம்பவுண்டுக்குள் இரண்டு வீடுகள் ஒன்றோடொன்று ஒட்டியபடி அமைந்திருந்தன… ஒன்று பிரவீன் குடியிருந்த வீடு. மற்றொன்று வீட்டு உரிமையாளருடையது. 

வீட்டின் ஜன்னல் கண்கள் தெருவை பார்த்திருந்தன. அவற்றின் இமைகள்மூடி திறக்கும் ‘சிக்.. சிக்..’ இரவில் தூங்க மூடிக்கொள்ளும். பகலில் கண்திறந்து கிராமத்தைப் பார்க்கும். சில நேரங்களில், தூக்கமில்லாமல் விடிய விடிய கண்விழிக்கும், வேலை கிடைக்காத பின் இருபதுகளின் ஆண் மகனாய்! பெற்றோருக்கு பாரமாய்.
பொறுப்பற்றவனாய்.
மனதில் வலியோடு.
மழைபெய்து ஓய்ந்த நேரத்தில், இரவு முழுதும் காதல் தோல்வியில் கண்ணீரில் நனைந்து கிடக்கும், தலையணைத் திண்ணைகள். 

மண்டையில் ஒன்றுமே இல்லையென்று கூச்சமின்றி நேர்மையாய் காட்டும் மொட்டைமாடி. ஒரு மூலையில் பால் வெள்ளை பிளாஸ்டிக் வாட்டர் டேங்க். அருகே ஒரு பெரிய முருங்கை மரம். பக்கத்தில், ஒரு சின்ன முருங்கை மரம். அனாதை ஆகிடாமல் அம்மாவின் கைபிடித்த பாக்கியசாலி குழந்தை முருங்கை அது! 

முருங்கை மரங்களை ஒட்டி அமைந்திருந்தன, மொட்டை மாடி படிக்கட்டுகள். அங்குதான் காய்ந்துபோன, பிய்ந்த இறகுகளுடன், சங்கு ஊதப்படாமல், பறையில்லாமல், அடக்கம் செய்ய ஆளில்லாமல், இழவுக்குச் சொந்தங்கள் யாரும் வராமல், தனியாய் கிடந்தது அனாதைப் பிணம். சிதைந்துபோன உடம்போடு பருந்தால் விருந்துண்ணப்பட்ட கோழி. நடுரோட்டில் நடந்த கோரக் கொலையாக. பயத்தில் அண்டாதக் கூட்டத்துக்கிடையில் கிடந்த தனிப் பிணமாக. அப்பாவி மஞ்சள் குஞ்சு தன்னைக் கொஞ்ச அம்மா இல்லாமல், நின்ற இடத்தைவிட்டு நகராமல், சிதைந்த சடலத்தின் பக்கத்திலேயே தவித்திருந்தது. பிரவீன் அருகிலேயே கீழ்ப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். நெடுங்கம்பட்டில் அவன் கலந்துகொண்ட ஒரேயொரு இழவு நிகழ்ச்சியது. மனதில் உருக்கத்தோடு பங்கேற்ற நிகழ்ச்சி. கண்ணீர் சிந்தாமல் செலுத்திய மவுன அஞ்சலி! 


குஞ்சு அழுதிருக்கலாம். கோர வெயிலில் காய்ந்த கோழிக்குஞ்சின் கண்ணீர், வெளிவருவதற்குள் காய்ந்துவிட்டிருக்கும். அஞ்சலியோடு சேர்த்துக் குஞ்சுக்கும் பிரார்த்தனை செய்தான். பிரார்த்தனைப் பழக்கம் அவனுக்கு இல்லாவிட்டாலும், குஞ்சுக்காக மட்டும் சில நிமிடம் தேவைப்பட்டது. 

பெரிய முருங்கை மரமே, உனக்கு இனி இரண்டு பிள்ளைகள். சின்ன முருங்கையும், அப்பாவி மஞ்சள் குஞ்சும். 

தினமும் ஒருவர் தவறும் கிராமம். பறை சத்தம் வானை, வெளியை, பூமியை, உயிரை, உயிரற்றதையெல்லாம் அறையும். அறையும் பறை. அதீக வயதானோரைக் கொண்ட கிராமம். கொச்சையாய், கிழடுகள். மரியாதையாய், முதியோர். அறிவாய், நம் நாளை! 

ஜன்னல் திண்ணைதான் பிரவீனின் எழுத்துக்கள் உருவெடுக்கும் இடம். அம்மாவுக்கும் பிரவீனுக்கும் ஆற, அமர அமைந்த மாலைநேர நாற்காலி. ஊர் நாய்களுக்கு சோம்பல் முறிக்கும் மெத்தை. வீட்டுக்கு அது திண்ணை. 

மாலைப்பொழுதொன்றில், பழுப்பு-வெள்ளை கலந்த நாய் இடது பின்னங்காலில் புண்ணோடு நொண்டி நொண்டி வீட்டுத் திண்ணையின் முன்னிருந்து தோட்டத்துப் பக்கம் ஓடியது. மெல்லிய காற்றுவந்து திண்ணையில் அமர்ந்திருந்த பிரவீனின் முகத்தில் மெல்லிய துணிபோல் போர்த்தியது. அது சிந்தனைக்கு உகந்த நேரம். தயிர் கடையும்பொழுது மேலெழுந்து வரும் வெண்ணெய்யாய், மூளைக்கு சிந்தனைகள் துள்ளிவரும் நேரம். 

பிரவீன் கையில் வைத்திருந்த காகிதத்தில், பேனாவின் கருநீலக் கையெழுத்து சில வரிகள் படைத்தது:

அவை 

காய்ந்த இலைச் சருகுகள் — 

வேண்டப்படாதவை. 

அவற்றால் பயனில்லை. 

பச்சையம் பழுப்பாகிவிட்டது. 

தன் சொந்த மரத்தால் 

கைவிடப்பட்ட அனாதைகள். 

காற்று வரும்போதெல்லாம் 

அந்த மரம் 

தாங்கிப் பிடித்தது, 

பச்சையத்துக்காக. 

இப்போது, 

அனாதையாய் காற்றில் 

அலைக்கழிக்கப் படுகின்றன 

அந்தச் சருகுகள். 

அந்தச் சருகுகள் 

சொல்ல வைத்திருக்கும் 

கதைகள் ஏராளம். 

அதைக் கேட்கத்தான் 

ஆளில்லை. 

அவை 

தினம் மண்ணில் 

புதைந்து வருகின்றன. 

சருகுகள் 

அந்த மரத்தையே 

ஏக்கத்தோடு பார்க்கின்றன! 

சருகுகளின் கண்ணீர் 

மண்ணில் 

ஈரச் சொட்டுகளாய் 

விழுந்து நனைக்கிறது.

சருகுகள் 

நன்றி வேண்டுவதில்லை. 

வெறுமனே 

ஏக்கத்தோடு பார்க்கின்றன. 

நெஞ்சில் நெருஞ்சில் முள்ளாய் குத்தியிருந்த அனுபவங்கள், கருநீல கையெழுத்தில் காகிதத்தில் ஒட்டிக்கொண்டது. பேனாவின் நுனி சாயம், ஒரு அஞ்சல் விழிப்புணர்வு கவிதையை படைத்தது. அதற்கு “தள்ளாத காலத்தில் தனக்கென சேமிப்பு வைத்திருப்பது அவசியம்” என்று விழிப்புணர்வு வாக்கியம் அமைத்தான். 

அந்தக் கவிதையை அஞ்சல் துறையின் சேமிப்பு விழிப்புணர்வுக்காக அலுவலக தகவல் பலகையில் எழுதிவைக்கலாம் என்று பிரவீனுக்கு யோசனை தோன்றியது. கிராமத்தில், பிரவீனுக்கு பாட்டிகள் அருளிய அனுபவத்தில் பூத்த எழுத்து அது. அங்குத் தாத்தாக்களைக் காட்டிலும் பாட்டிகளின் எண்ணிக்கை, அஞ்சலக வருகை, சேமிப்பு பழக்கம், புலம்பல், அல்லல், துயர், பாடு, அரட்டை, சாமர்த்தியம் அத்தனையும் அதிகமாக இருந்தது. 

பழுப்பு-வெள்ளை நாய் நொண்டிச் சென்று, வீட்டின் பின்னே இருக்கும் வாழைக் கன்றில் சிறுநீர் கழித்தது. காலில் புண்ணிருந்தாலும், ஓட சிரமப்பட்டாலும், தன் குணம் மாறாத நாய்… ஒரு காலைத் தூக்கிக்கொண்டு, வாடியிருந்த வெய்யில் நேரத்து வாழைக் கன்றுக்கு அனுதாபத்தில் மழை பெய்த்தது. வாழைக் கன்றுக்கு அருகே கறிவேப்பிலை செடிகள் குடும்பம் குடும்பமாக கூடியிருந்தன. குழந்தைச் செடிகள் இன்னமும் புது உலகத்துக்குப் பழகாமல், குட்டி அழுமூஞ்சிகளோடு இருந்தன. 

‘இங்கவே வா ஊடெடுத்து தங்கி இருக்கீங்க?’, புங்கைமரத்தடியில் தாயம் விளையாட அமரும் தாத்தா பாட்டிகளில் இருந்து, அஞ்சலகம் வந்துபோகும் அத்தனைப் பேரும் பிரவீனைக் கேட்கும் ஒற்றைக் கேள்வி. 

‘ஆமா. பழைய மாதா கோவில் பின்னாடி’, இப்படி ஏகப்பட்ட பேருக்கு பதிலளித்திருக்கிறான். 

‘சாப்பாடு சமையலெல்லா?’ தவிர்க்க முடியாத கேள்வி. 

‘கூட அம்மா இருக்காங்க’ 

‘அது சரி… அப்போ பிரச்சன இல்ல’ கேள்வியின் இறுக்கம் இளகிவிடும். 

‘அப்பா?’ அடுத்த இறுக்கம். 

‘அப்பா அங்க ஊருலயே இருக்காரு, அவர் தொழில பாத்துக்குட்டு.’ 

‘அப்பாவ யார் பாத்துப்பா?’ தவிர்க்க முடியாத மற்றொரு கேள்வி. 

கிராமத்து நெஞ்சங்கள் கருணை மிக்கவை. ‘கொஞ்சம் அப்பாவ பத்தியும் யோசிக்கலாம்’, சத்தமில்லாமல் மனக்குறைப்பட்டுக் கொண்டது, கிராம நெஞ்சங்களின் ஆதங்கம். 

அவ்வப்போது இரவு நேரங்களில்…

பிறக்கும்போதும் அழுகின்றாய்… 

இறக்கும்போதும் அழுகின்றாய்… 

ஒரு நாளேனும் கவலையில்லாமல் 

சிரிக்க மறந்தாய் மானுடனே… 

இரவில் மென்சோகப் பாடகனாய் மாறி, தூங்கும் வரை கச்சேரி செய்யும் எதிர்வீடு. பூத்-பங்களா என்றே தோன்றவைக்கும் வீட்டின் கட்டட அமைப்பு!

சந்திரபாபு பாடல்கள் என்றால் பிரவீன் அம்மாவுக்கு மிகவும் விருப்பம். சில நேரங்களில், அம்மாவுக்கு வேண்டிய பாடல்களையும் பூத்-பங்களா பாடும். அதோடு, பங்களாவே ஒரு ராட்சத அளவிலான வானொலியாய் மாறி, பல கீதங்களை பங்களா உரிமையாளர் – செவிட்டு அங்கிளின் காதுகளில் முழங்கும். அவரும், அவர் மனைவியும் மட்டும் பூத் பங்களாவின் வெளியே, தனித்தீவின் ஜுவன்களாய் இராத்திரி நிலவின் குளுமையை மொத்தமும் அனுபவித்துக்கொண்டு பங்களாவின் முற்றத்தில், கட்டிலில் தன்னை மறந்த நிலையில் அங்கிளும், கோரைப் பாயில் அவர் மனைவியுமாக படுத்திருப்பார்கள். தொழுவத்தில் மாடுகளும் தங்கள் கால்களை மடக்கித் தரையில் படுத்தபடி, அசைபோட்டுக் கொண்டே இசை கேட்கும். இருட்டில் அணைந்துபோன மஞ்சள் மின்பல்புகளாய், மரத்தில் எலுமிச்சைகள் தொங்கும். காலையில் உயிர்வந்து எரியும் அந்த மஞ்சள் குண்டு பல்புகள்! 

ஒரு காலைவேளையில் மஞ்சள் மின்பல்பு எலுமிச்சை மரத்தருகில் பிரவீன் வீட்டு வாசலில் காத்திருந்தார், மக்கள் நலப்பணியாளர் பிரகாசம். பிரவீனைக் கண்டதும் தன் குறுஞ்சிரிப்பை வெளியிட்டார். சிக்கிடாமல் தப்பித்துக்கொள்ள வேண்டிய சிரிப்பு அது. அசட்டை செய்ய வேண்டிய சிரிப்பு அது. 

முதன்முதலில், மக்கள் நலப்பணியாளர் பிரகாசத்தை பிரவீன் சந்தித்தது, புதிதாய் வந்திருந்த துணை அஞ்சல் அலுவலரை வரவேற்க அவன் மணம்பூண்டிக்குச் செல்லும் வழியில்தான். அன்று அதிகாலையிலேயே ஆறு மணிபோல் அழைப்புவர, படுக்கைக்குப் பக்கத்தில் ‘வைப்ரேஷன் மோடி’ல்  இருந்த அலைபேசி அதிர்வில் அதன் இடத்தைவிட்டு நகர்ந்துபோனது. 

‘வேண்டாம், வேண்டாம். எடுக்காதே!’ என்கிற முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலோ என்னவோ! 

அலுவலக அழைப்புகள் அப்படி எடுக்காமல் விட்டுவிட முடியாதவை. 

‘ஹலோ பிரவீன். நான் அண்ணா பேசுறேன்’, திவாகரன் அண்ணாவின் சூப்பர் சீனியர் குரல். ‘இன்னக்கி சப்-போஸ்ட் மாஸ்டர் சார் புதுசா அப்பாய்ண்ட்மென்ட் ஆவுறாரு. ஷார்ப்பா நைன் ஓ க்ளாக் வந்துரு, சரியா?’ 

‘சரி ணா. வந்துடுறேன்’. 

‘ரைட்? சர் தானே? ஷார்ப் நைன். ஓகே?’, அண்ணன் வாய் ஆங்கிலத்துக்கே தனி அழகு. 

கருப்பு பைக்குக்கு பொருத்தமாக, பிரவீன் கருப்பு ஹெல்மெட் அணிந்துகொண்டு மணம்பூண்டிக்கு விரைந்தான். மடம் சிற்றுந்து (பேருந்துகள் எதுவும் பெரும்பாலும் வருவதில்லை!) நிறுத்தத்தில், காலில் வெள்ளைக் கட்டுபோட்டுக் கொண்டு, செருப்பணியாமல் ஒரு உருவம் பைக்கை கைகாட்டி இடைமறித்தது. ஏதோ வீட்டு மாடியின் கொடியில் காயப்போட்டிருந்த துணிமட்டும் தனியாய் வந்து சாலையில் நிற்பதுபோல, துணியோடு துணியாக  ஒட்டியிருந்தது தேகம். மீசையை மழித்திருந்த சந்தன வெள்ளையில், பழுத்த மஞ்சளாய் இருந்தது முகம். 

வண்டியை நிறுத்தியதும், ‘சார். கொஞ்சம் அத்திப்பாக்கம் வரைக்கும் லிஃப்ட் கெடைக்கும்ங்களா?’ வழுவழுப்பான முகபாவனையுடன் வெளிவந்தன   வார்த்தைகள். 

இப்படியே சாலைகளும் வழுவழுப்பாக இருந்தால், அந்த சந்தோஷத்துக்காகவே எத்தனைப் பேருக்கும் லிஃப்ட் தரலாம். 

‘உக்காருங்க’, உடனடிச் சம்மதம் கிடைத்தது. 

பைக்கின் வலப்பக்கம் நின்றவர், கால் ஊன்றி இடப்பக்கம் வந்து அடிதாங்கியில் கட்டில்லாத கால் பாதத்தை வைத்துவிட்டு, ‘டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா வேணாம். சாரி… டிஸ்டர்ப் பண்ணலன்னா ஏறிக்கிறேன்!’ பிசுபிசுப்பான எச்சில் மிட்டாய்மொழி பேசினார். 

‘பரவால்ல, உக்காருங்க’, பிசுபிசுப்பில் ஒட்டிவிடாமல் தப்பிவந்தன வார்த்தைகள். 

ஏறி உட்கார்ந்து கொண்டு கேட்டார்: ‘தப்பா நெனக்கலனா, தோள்ல கை வச்சிக்கலாமா?’ அந்த நேரத்துக்கெல்லாம் அவர் தோளில் கை வைத்திருந்தார். வைத்த கைகளுக்கு, ‘வச்சிக்கோங்க’ என்று அனுமதி தந்தான் பிரவீன். 

‘கால் சரியில்ல பாருங்க… அதான் — ஸ்லிப் ஆகுது. வேணாம்னா கை வைக்கல’, பிசுபிசுப்பு சற்று கூடியது. 

பிரவீன் பக்கம் பதில் இல்லை. 

‘நான் இங்க தான்…  மக்கள் நலப்பணியாளர் பிரகாசம்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும்… எல்லா நம்ம ஏரியாதான்.’ 

ஓடுகிற வண்டியின் எதிர்காற்றில் போராடும் சொற்களோடு அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தலையை மட்டும் பிரவீன் அசைத்துக்கொண்டான். 

ஹெல்மெட் அணிந்துகொண்டு பேசுவது கடினம். அதுவே, தலையை ஆட்டித் தப்பித்துக்கொள்ள லாபக் காரணமும் ஆகியது. 

‘நீங்க என்ன விஷயமா இந்தப் பக்கம்?’ 

‘போஸ்ட் மாஸ்டரா இருக்கன்’, ஹெல்மெட் சிரமத்தை மீறி பதில் சொன்னான். 

‘ஓ! புது போஸ்ட் மாஸ்டர்’, இழுத்த குரலில்… ‘என்ன ஹெல்ப்னாலும் கூச்சப்படாம என்ன கேளுங்க. ஏறுன எடத்துக்குப் பக்கத்துல இருந்த வாட்டர் டேங்க் ஆப்போசிட்தான் என் வீடு’, மக்கள் நலப்பணியாளர் நலப்பணிக்கு முன்வந்தார். 

அத்திப்பாக்கம், அருகிலேயே இருந்தது நல்லதாயிற்று. பிரகாசத்தை வேண்டிய இடத்தில் இறக்கி, புன்னகை செய்துவிட்டு பிரவீன் விடைபெற்றுக் கொண்டான். அவன் புன்னகையை அவருக்குப் போய்ச்சேராமல் தடுத்துக்கொண்டது, கருப்பு ஹெல்மெட்! 

மணம்பூண்டி அலுவலகத்தில் நுழைந்ததும், ‘வணக்கம் சைமன். இவர் மடம் பிரான்ச் போஸ்ட்மாஸ்டர் பிரவீன்’, சூப்பர் சீனியர் பிரவீனை புது சப்-போஸ்ட் மாஸ்டருக்கு அறிமுகம் செய்துவைத்தார். 

பிரவீனும், புது சப்-போஸ்ட் மாஸ்டரும் வணக்கம் பரிமாறிக்கொண்டார்கள்.

‘நம்ம பையன்தான் சைமன்… நல்ல பையன்’, சூப்பர் சீனியர் நற்சான்றிதழ் கொடுத்தார். தன் சீனியாரிட்டிக்குப் பப்ளிசிட்டியாக பிரவீனுக்கு ஒரு அறிமுகம்! இதற்கு முன்னிருந்த சப்-போஸ்ட் மாஸ்டர், குருமூர்த்தி சார். கூச்ச சுபாவமுள்ள வெறும் முப்பது வயது இளைஞன். புது சப்-போஸ்ட்மாஸ்டர், உருவத்தில் சிறியவரானாலும், மீசையை முறுக்கி கம்பீரம் தேடுகிறவராய் தோற்றமளித்தார்.  

மணம்பூண்டி போஸ்ட் ஆஃபீஸ், ஒரு வீட்டில் வாடகைக்கெடுத்து அமைக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளரே இஞ்சி டீ, சுக்குமல்லி டீ, ஸ்பெஷல் டீ, புதினா டீ, பால், காப்பி எல்லாவற்றுக்கும் ஆர்டர் எடுப்பார். 

ரோட்டோரம் ஒட்டியிருந்த அவர்களின் சொந்த கடையைக் குடும்பத் தலைவர் பார்த்துக்கொள்வார். நோட்டுப் புத்தகங்கள், சாக்கலேட், பிஸ்கட், மற்ற மளிகைப் பொருட்கள் விற்கும் சின்னக் கடை அது. ரோட்டின் மறு புறமிருக்கும் இரும்புக் கடை மற்றும் பிற கடைகளையும் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்கள். 

மின்னல் சுறுசுறுப்பில் காப்பி, டீ ஆர்டர் எடுப்பார் குடும்பத் தலைவி. பிரவீனைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே அவர் கேட்டார்: ‘இந்தச் சம்பளத்துக்கு ஏன்பா வந்த? இந்த வேலையில பெருசா ஒன்னும் தேராதே.’ 

குடும்பத் தலைவியின் கணக்கெல்லாம் ‘கன்’ போல இருக்கும். அவருடைய மின்னல் சுறுசுறுப்பு வேலைகளால் வீசும் எதிர்காற்றில், எளிதில் பறந்துவிட கூடியன, பிரவீனின் கொஞ்சூண்டு சம்பளத் தாள்கள்! 

குழந்தை ஊதிய இராசயனக் குமிழிகளாய்,
அந்தரத்தில் அலையும் பல வர்ண தாள்கள்… 

வண்ண வண்ண குமிழிகளாய்.

ஐம்பது, நூறு, ஐநூறு, இரண்டாயிரம் தாள்கள். 

காற்றிலே உடைந்துவிடும் கணநேர மகிழ்ச்சி. 

சிலன, தரையில் பட்டதும் உடையும். 

அலுவலகத்தில் புது சப்-போஸ்ட் மாஸ்டர் வருகையை முன்னிட்டு டீ, காப்பி, பால் விருந்து நடந்தது. 

எல்லோருக்கும் ஒவ்வொரு கோப்பை. 

பாரபட்சமின்றி. சமத்துவமாய். 

பிடிக்காததைத் திணிக்காமல். 

பால் வேண்டியவருக்கு பால். 

காப்பி வேண்டியவருக்கு காப்பி. 

டீ வேண்டியவருக்கு பல வகைகளில் டீ. 

யாருக்கும் மனக்குறைவின்றி. 

சப்-போஸ்ட் மாஸ்டர் சைமனுக்கு ஒரு கப். 

சூப்பர் சீனியர் திவாகரனுக்கு ஒரு கப். 

சீனியர் பாலுசாமி சாருக்கு ஒரு கப். 

மடம் பி.பி.எம் பிரவீனுக்கு ஒரு கப். 

அத்திப்பாக்கம் ஏ.பி.பி.எம் நிர்மலாவுக்கு ஒரு கப். 

மடம் ஏ.பி.பி.எம் மகாலட்சுமிக்கு ஒரு கப். 

மணம்பூண்டி மெயில் பேக்கர் கலாவுக்கு ஒரு கப். 

மணம்பூண்டி போஸ்ட்வுமன் விந்தியாவுக்கு ஒரு கப். 

இரண்டாவது முறை, பிரவீன் மக்கள் நலப்பணியாளரைப் பார்த்தது, ஒரு புதன்கிழமையில். ரேஷன் கடையின் வரிசை ஒழுக்கமாய் அமைதி காத்து நீண்டிருந்த அரிய தருணத்தில். 

மடம் அஞ்சலகம், இரண்டு பக்க ஜன்னல்களைக் கொண்டிருந்தது. ஒருபக்க ஐன்னல்வழி பார்த்தால் புங்கைமரம், ஏரிவேலை முடித்துச் செல்லும் பெண்கள், கொளுத்துவேலை செய்துவரும் ஆண்கள், மாடுமேய்த்து வயலுக்குச் செல்லும் தளர்ந்துவிடாத முதியவர்கள், பிரேமா அக்கா வீடு, அவர் வீட்டு வெளியில் துணி துவைக்க வைத்திருக்கும் குட்டி ஸ்டூல், துணி காயப்போடும் கொடிகம்பி, அலுமினிய அன்னக்கூடையில் தண்ணீர், வீட்டு முன்னிடத்தில் வைத்திருக்கும் தையல் மெஷின், புங்கைமரத்தடியில் சாயங்கால நேரங்களில் குண்டு விளையாடும் தம்பிகள், மாட்டுவண்டியில் ஏறி விளையாடும் பொடிசுகள், வெறுமனே மரத்தடியில் ஓய்வெடுக்கும் வண்ண அன்டர்வேர்கள் தெரிய குத்துக்கால் போட்டு தரையில் அமர்ந்திருக்கும் தாத்தாக்கள், கால் நீட்டிப் போட்டுக்கொண்டு தரையில் அமர்ந்திருக்கும் பாட்டிக்கள் என அத்தனைப் பேரும் தெரிவார்கள். 

இன்னொரு பக்க ஜன்னலில், இரண்டடியில் நியாய விலைக் கடையின் பக்கச்சுவர் தெரியும். அந்த இரண்டடி அகலமும், அலுவகப் பக்கச் சுவர்களின் நீளமும் விட்டுவைத்த கொஞ்சம் இடமே பக்கத்து இடங்களின் குப்பையைக் கூட்டி எரிக்கும் இடமாகியிருந்தது. அப்பக்க ஜன்னலுக்குக் கதவுகள் கிடையாது. கிடைமட்டக் கம்பிகளோடு கூடிய பெரிய ஜன்னல் அது. அரைச்சாண் இடைவெளி கம்பிகளுக்கிடையில் தெரியும், அவசர உதவியின் காட்சிகள். 

ஆண்கள், சிறுவர்கள், ஆயாக்கள் அனைவருக்கும் அவசர உதவி புரிந்தது, அந்த இடம். அங்கே குப்பையாய்க் கிடக்கும் பிளாஸ்டிக் பேக்கட்டுகளும், காய்ந்துபோன இலைச் சருகுகளும் தம்மீது பீய்ச்சப்படும் வேண்டப்படாத சுடுநீருக்கு, சலசலச் சத்தமிட்டுப் போஸ்ட் மாஸ்டரிடம் புகார் செய்யும். 

புங்கைமர ஜன்னல் பக்கம் சுத்த தெளிவில் சத்தமானக் குரல் ஜன்னல் கம்பிகளுக்கிடையே பாய்ந்து வந்தது.

 ‘சார், வணக்கம்’ 

‘வணக்கம் ஐயா, வாங்க’, அலுவலுக்கிடையில் பிரவீன். 

‘எங்க — ஃபர்ஸ்ட் இருந்த சார் போயிட்டாரா?’ 

‘எந்த சார் சொல்றீங்க?’, புரியாமல் பிரவீன். 

‘இல்ல சார். முன்ன ஒருத்தர் இருந்தாரே — நல்லா ஒயரமா!’

பிரவீனுக்குப் புரிந்துவிட்டது. அவர் கேட்பது கருப்பு ஹெல்மெட் அணிந்திருந்த சாரை. அவர் பேசிக் கொண்டிருக்கும் தற்போதைய சார், ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருக்கிறார். ஒருவேளை, ஹெல்மெட்டோடு அலுவல் பார்த்தால் கண்டுபிடித்திருப்பார். 

‘சார்… நான்தான் சார் அது. ஏற்கெனவே என்னதான் பாத்தீங்க. நான்தான் அத்திப்பாக்கத்துல உங்கள ட்ராப் பண்ணேன்.’ 

‘அச்சோ! சாரி சார். உங்கள போய் மறந்துட்டேன் பாத்தீங்களா? மன்னிச்சிக்கோங்க’, பிசுபிசுப்புக்கான அறிகுறி. 

‘சார். ஒரு சின்ன ஹெல்ப். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?’ மெதுவாக வந்தன, பதுங்கும் புலி வார்த்தைகள். 

‘சொல்லுங்க’, வாய்ப்பு தரப்பட்டது. 

ஜன்னல் வெளியே நின்றிருந்தவர் அலுவலகத்துக்குள் வந்தார். 

‘ஹை-யோ! நெஜமா என் பையன் மாதிரியே இருக்கீங்க’, ஆச்சரியம் காட்டிவிட்டு, ‘இப்போ திருப்பூர்ல இருக்கான்’, விவரத்தைக் கூட்டிச் சொன்னார். 

பேசவிட்டுக் கேட்டுக்கொண்டான் பிரவீன். 

‘உங்கள பாத்தா என் புள்ள ஞாபகந்தான் வருது… விடுங்க — நீங்களும் எனக்கொரு ‘சன்’ தானே!’ 

முகத்தில் போலிச் சிரிப்பை ஒரு பேட்ச் போல் குத்திக்கொண்டான், பிரவீன்.

‘ஊர்ல எல்லாரும் சொல்றாங்க. தம்பி நல்லா வேல செய்யுது, மரியாதையா நடத்துதுனு. நீங்க நல்-லா இருக்கணும்’, பிரவீன் முகத்தைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார், ‘என்ன இருந்தாலும் படிச்சவங்க, படிச்சவங்க தான்.’ 

‘தம்பி, ஒன்-னு சொல்றேன். மனசுலயே வெச்சிக்கோ, சரியா?’ சைக்கிள் டயரில் பிடிங்கிவிட்ட காற்றின் சத்தத்தில் பேசினார்.

‘உன்கிட்ட சொல்லலாம்னு தோணுச்சு… ஜோசஃப் இல்ல? எக்ஸ் போஸ்ட் மாஸ்டர் ஜோசஃப்? ஊர்ல பூரா கெட்ட பேரு… ஊர்ல யாருக்கும் போஸ்ட் ஆஃபீஸ் மூலையமா கவுர்மெண்ட் காசு வந்துற கூடாது — தரமாட்டான்… எடுத்துவச்சிக்கிட்டு பொறாம புடிப்பான். கேக்க ஆளில்லனா அப்படியே ஏமாத்திருவான்… இந்தப் போஸ்ட்மேன் அந்தோணி? — சரியான குடிகாரப் பய. குடிச்சிட்டு லெட்டர வீடு மாத்திப்போட்டுப் போயிருவான்… இப்போதான் ஊருக்கே விடிவு… நீங்க வந்துருக்கீங்க’, முடிக்கும்போது சத்தத்தின் தடிமன் அதிகமாகி இருந்தது, வீங்கிய தொண்டை போல. 

இந்த முறை, போலிச்சிரிப்பும் போதும் என்று கழற்றி வைக்கப்பட்டிருந்தது. 

‘ரேஷன்ல சாமான் வாங்க வந்தன் தம்பி. சோப்பு குடுக்குறாங்களாம். இப்போதான் சொன்னாங்க… பணம் எடுத்துட்டு வரல’, பார்த்து பார்த்து வந்தன வார்த்தைகள். ‘அம்பது பணம் இருக்குமா? சனிக்கெழம தந்துடுறேன்’. 

கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, நிச்சயம் சனிக்கிழமை திரும்ப தந்துவிடும்படிச் சொன்னான். 

‘சனிக்கெழம ஆஃபீஸ் இருக்கும்ல?’, பிரகாசம் உறுதிப்படுத்திக் கொண்டார். 

ஒரு நீலக் குமிழி, குழந்தை ஊதிய இராசயன திரவியத்திலிருந்து அவரோடு போனது‌. எங்கு உடையுமோ! 

அந்தக் காலை வேளையிலேயே, மஞ்சள் மின்பல்பு எலுமிச்சை மரத்தருகில் பிரவீனுக்காக பிரகாசம் காத்திருந்ததன் காரணம், அவர் பிரவீனைக் கண்டதும் சிரித்த சிரிப்பின் பிசுபிசுப்பில் தெரிந்தது.

‘குட் மார்னிங் பிரவீன்’, பழுப்பு மஞ்சள் முகம் பிரகாசித்தது. 

‘குட் மார்னிங்… சொல்லுங்க. என்ன விஷயம்?’ அணுகுமுறையில் கடுமையேறியிருந்தது. 

‘தப்பா நெனக்கலனா ஒரு ஃபிப்டி ருபீஸ் கேஷ் கெடைக்குமா? அர்ஜென்ட் செலவுக்குத்தான்’ 

‘பழைய அம்பத குடுத்துட்டு வாங்கிக்கங்க’, அதே கடுமையோடு. 

‘அதுவும் சேத்து நூறா குடுத்துடுறேன். இப்போ ஹெல்ப் பண்ணலாமே’, ஒட்டாத பிசுபிசுப்புக்கு ஒட்டுப்போட்டு. 

‘இப்படியே எவ்ளோ நாளைக்குங்க? திருந்துறதா எண்ணம் இல்லயா? வீட்ட பத்திலாம் யோசிக்க மாட்டீங்களா?’ இந்தக் கேள்விகள் பிரகாசத்துக்கு புதிராகியது. 

‘சாரி தம்பி’, கவரிமானாக விடைபெற்றுக் கொண்டார். 

அந்தப் புதிருக்கான விடை, அவர் கையில் பிடிபடாமலே போயிற்று. 

முதல் நாள், பைக்கில் ஏறும்போது பிரகாசம் சொன்னதை வைத்து, லிஃப்ட் கொடுத்த இடத்தின் வாட்டர் டேங்க் எதிர்புறத்தில், எந்த வீடு பிரகாசம் வீடென தேடிச் சென்றிருந்தான், பிரவீன். உறுதியளிக்கப்பட்ட சனிக்கிழமையைத் தாண்டி, ஒரு நாள் விடுமுறையடுத்து வந்த திங்கள் கிழமை அது. மக்கள் நலப்பணியாளர் என்ற விலாசம் வேறொரு இளைஞனின் வீட்டுக்கு இட்டுச் சென்றது. இளைஞன் சொன்னதை வைத்துதான் பிரவீனுக்குப் பிரகாசம் ஓய்வுபெற்ற மக்கள் நலப்பணியாளர் என்பதே தெரியவந்தது. 

‘பு-து போஸ்ட் மாஸ்டர்…! சரியா போச்சு’, உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, ‘இன்னமும் ஊர்- – – பழக்கம் வேணும்’, என்று ஒரு அதிகாரியின் தொனியில், நெடுங்கம்பட்டு பிரவீன் காதில் சொன்னது. இளம் மக்கள் நலப்பணியாளர் காட்டிய வழி, வெள்ளைப் பூசிய சின்ன மாடி வீட்டுக்கு பிரவீனை அழைத்து வந்தது. 

‘சார்… சார்…’, கதவைத் தட்டிக் கூப்பிட்டான். பதிலில்லாத உம்முனா மூஞ்சியாக இருந்தது வீடு. யாருமே வீட்டில் இருந்து வரவில்லை. 

தெருவில் எருமுட்டை கூடையைத் தலையில் எடுத்துச்சென்ற அக்கா நின்று கேட்டார், ‘யார்பா வேணும்?’ 

‘இங்க பிரகாசம் சார் வீடு, இதானே?’ 

‘ஆமா. மாடியில இருப்பாங்க கூப்புடு’, கூறிவிட்டு, அவரே முன்வந்து உரக்கக் கூப்பிட்டார். 

‘மேரி… மேரி…’, கிராமத்தின் நாட்டுக் குரல். 

மாடியில் இருந்து கீழே வருவதற்கு அறிகுறியாய்ச் செருப்பு மாட்டும் சத்தம் கேட்டது. செருப்பு சத்தம் அருகில் வரும் இடைப்பட்ட நேரத்தில் எருமுட்டைக் கூடை அக்கா கேட்டார், ‘என்ன விஷயம்பா?’ தெரிந்தவரிடம் கேட்கும் உரிமையான கேள்வி. அவருக்குப் பிரவீனை முன்பாகவே தெரிந்திருந்தது. 

‘ஒரு லெட்டர் வந்திருக்கு இவர் பேர்ல. அட்ரெஸ் சரியா இல்ல. அதான்கா, இவருதானு கேட்டுட்டுப் போவ வந்தன்.’ 

‘சரி சரி. இதோ வருது பாரு. அவர் பொண்டாட்டி — அவட்டக் கேளு’, சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

செருப்பு சத்தத்தோடு மாடியிலிருந்து இறங்கிவந்தவர், சகாயமேரி. அதிர்ச்சிப் பிரவீனைத் தூக்கி அடித்தது. அவர் நெருங்கிய போஸ்ட் ஆஃபீஸ் பழக்கம். கணவனுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளுக்குப் பணம் சேர்க்கும் பெண்மணிகளில் ஒருத்தி. 

கிராமத்து போஸ்ட்மாஸ்டர் பதவி, பொறுப்பான பதவி. கணவனைத் தாண்டி, குடும்ப பொருளாதாரத்தின் உதவியாளர், கிராம போஸ்ட்மாஸ்டர். கிராம மக்களுக்கு உயிருள்ள உறவு தான் போஸ்ட் ஆஃபீஸ். ஆனால், ‘வர்ற வர்ற போஸ்ட் ஆஃபீஸ் சரியே இல்ல’ என்ற குற்றச்சாட்டையும் சேர்ந்தே சுமக்கும் உறவு. 

பெரிய முன்பற்களோடு ‘வாங்க’ என்று குறுஞ்சிரிப்புடன் வரவேற்றார் சகாயமேரி. 

‘லெட்டர் பத்தி விசாரிக்கலாம்னு வந்தன்மா. அவர் வீட்ல இல்லையா?’ 

‘அவர் இந்த நேரத்துக்குலாம் வீட்டுக்கு வரமாட்டாருங்க. 

‘உங்ககிட்ட பணம் வாங்கியிருந்தாராம்மே! என்ன குடுத்துற சொன்னாரு’, பிரவீன் வந்த காரணமும் அறிந்தவராய், வீட்டிலிருந்து பணம் எடுத்துத்தர, முந்தானையில் கட்டி இடுப்பில் செருகி வைத்திருந்த கீழ்வீட்டுச் சாவியை எடுக்கப்போனார். 

‘இல்லமா, அவரயே பாத்துக்குறேன். உங்ககிட்ட பணம் வாங்க வரல,’ வீட்டிலிருந்து வேறு ஆளும் வருவார்கள் என்று யூகிக்காமல் வந்துவிட்டிருந்தான். வாழ்க்கையில் முதல்முறை கடன் வசூல்! 

‘நான் எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிட்டேன் தம்பி. அவர் பணம் கேட்டா தராதீங்கனு. நீ புதுசு. உன்கிட்ட இன்னும் சொல்லல. இனி குடுக்காத. பணம் தரேன், இரு.’ 

‘இப்போ வேணாம் மா. அவரே எடுத்துட்டு வரட்டும்’, பணம் வாங்க மறுத்துவிட்டான். 

‘இப்பயே வாங்கிக்க தம்பி. அவர் கையில காசுகுடுத்தா குடிச்சிட்டு வந்துருவாரு. ஊரெல்லாம் கடன் வாங்கி ஒரே குடி’, பலவீனமான குரலில் துவண்ட புழுவாய் வெளிவந்தன சகாயமேரியின் வார்த்தைகள். 

‘சுகர் இருக்கு. குடிச்சிட்டு கீழ விழுந்து கால்ல காயம் பண்ணிக்கிச்சு… ஆறவே மாட்டுது’ 

பிரவீன் திரும்பிவிட்டான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *